இலக்கிய இணைய இதழ்
15 ஆகத்து 2006 - இதழ் எண் : 55

அன்புடையீர். வணக்கம்,

தமிழ்ப் பாவையில் வெளிவந்த பாவாணரின் கட்டுரை இந்த இதழில் நிறைவடைகிறது. புதினம் (இலண்டன்) இதழில் - ஸ்ரீதரன் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் நிர்வாணம் என்ற தலைப்பில் நூலாக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள கேட்கத் தவறிய அபஸ்வரம் என்ற கட்டுரை - புலம் பெயர்ந்த மக்களிடையே உள்ள போலித்தனமான இறைபக்தியை, அதன் உள்ளே மறைந்துள்ள சுயநலத்தை - உண்மைத் தன்மையோடு எடுத்துக் காட்டுகிறது. பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை எழுதலாம்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
15 - 08 - 2006



அவர்தாம் பாவாணர்
சென்ற இதழ்த் தொடர்ச்சி - பகுதி 2 - ( பகுதி 1 சென்ற வலையேற்றத்தில் ) -

(தங்கவயல் உலகத்தமிழ்க் கழகம் வெளியிட்ட சிற்றேட்டிலிருந்து)


அந்நாளில் அக்கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக விளங்கிய தி.வை.சொக்கப்பனாரின் தொடர்பு பாவாணர் தமிழ்த் தொண்டிற்குப் பெருந்துணையாய் இருந்தது.

இங்குப் பணியாற்றிய காலத்தில் பாவாணரின் புலமைத் திறத்தைப் போற்றித் தொடர்பு கொண்ட மாணவரே மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களாவார்.

சேலம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் திராவிடத்தாய் (1944) சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) உயர்தரக்கட்டுரை இலக்கணம் முதல் பாகம்(1950) உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2 ஆம் பாகம் (1951) பழந்தமிழாட்சி (1952) முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் (1953) தமிழ்நாட்டு விளையாட்டுகள் (1954), A critical Study of Madras University Lexicon (1955) ஆகிய நூல்கள் வெளிவந்தன. திராவிடத்தாய் மற்றும் A critical Study of Madras University Lexicon இரண்டும் பாவாணரின் சொந்த வெளியீடு. மற்றவை தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.

1949 இல் தக்க பணிக்கு உயர்ந்து செல்லுவதற்கு உதவியாகுவது போல் மறைமலையடிகள் பாவாணர்க்குச் சிறந்த சான்றொன்றை அளித்தார்.

கி.பி.1952

1952 இல் பாவாணர் தாமே தனியாகப் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கி.பி.1956

1956 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித் துறையில் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கும் பணியில் வாசகராகச் சேர்ந்தார்.

பாவாணர் பணியை மேற்பார்க்குமாறு வங்கநாட்டு வடமொழிப் பேராசிரியர் சுநீதிக்குமார் சட்டர்சி யைத் தலைவராகக் கொண்ட ஒன்பது பேர் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

கி.பி.1957

அண்ணாமலைப் பணிக்காலத்தில் தேராதூனில் நடந்த கோடை மொழியியற் பயிற்சிக்குப் பாவாணர் அனுப்பப்பட்டார். இப்பயிற்சி பூனா டெக்கான் மொழி நூற் பள்ளியின் சார்பாக 6 கிழமை (வாரம்) நடைபெற்றது. இப்பயிற்சியால் வண்ணை மொழி நூலின் பரப்பைக் கண்டார்.

1957 ஆம் ஆண்டு சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக 50 சொற்களுக்குப் பொருள் விளக்கமும் வேர் வரலாறும், எழுதிக் காட்டுமாறு பாவாணர் பணிக்கப்பட்டர். பின்னர் அது சட்டர்சி அவர்களால் மறுக்கப்பட்டது.

கி.பி.1959

1959 ஆம் ஆண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய இதழுக்குப் பாவாணர் தென்மொழி என்று பெயர் சூட்டினார். 1960 ஆம் ஆண்டு பாவாணர் உருவாக்கிய ஆட்சித்துறைக் கலைச் சொல்லாக்கத்தைப் பாராட்டி அன்றைய தமிழ்நாட்டரசு சார்பில் ஆளுநர் பாவாணருக்குப் பாராட்டுப் பட்டயம் வழங்கியுள்ளார்.

கி.பி.1961

அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழி நூல் துறையிலிருந்து பாவாணர் பொதுத் துறைக்கு மாற்றப்பட்டார். தனது கடும் உழைப்பும் கருத்தும் மதிக்கப்படாமை கண்டு மனம் வருந்தி - நான் தமிழ் கற்ற அளவு ஆங்கிலம் கற்றிருந்தால் எருதந்துறையில் தலைமைப் பேராசிரியனாயிருந்திருப்பேன் - என்று அவரே குறிப்பிடுவதிலிருந்து அவர் தமிழுக்காக உழைத்த தன்மை நன்கு விளங்கும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பாவாணரின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. தமிழ்ப் பணிக்கு இடமில்லாத இடத்தில் தனக்கு இடம் வேண்டாம் எனப் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறினார். இதனைக் காளமேகம் கண்ணனைப் பார்த்துச் சொன்னது போல் நான் வெளியேறினேன் தமிழும் வெளியேறியது - எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாவாணர்க்குப் பணிக்களம் ஓய்வு தந்துவிட்டது. ஆனால் உண்மை ஆராய்ச்சிக் களத்தில் பாவாணர்க்கு ஓய்வு என்பது இல்லை. அவரது ஆய்வு மனம் தொடர்ந்து பணிசெய்து கொண்டிருந்தது.

மொழிநூற் கல்வியும் ஆராய்ச்சியும் எனக்கு இன்பமான பாடத்துறை என்னும் அவரது கூற்றுக்கேற்ப அவருக்கு விருப்பமாக விளங்கிய ஆய்வுப்பணி தொடாந்ததைக் காட்டுகிறது.

பாவாணர் பணி பலதரப்பட்டது. அவர் ஒராண்டு நடுநிலைப் பள்ளியிலும் இருபத்திரண்டு உயர்நிலைப் பள்ளியிலும் பன்னிரண்டு கல்லூரியிலும் ஐந்தாண்டு அண்ணமாமலைப் பல்கழைக் கழகத்திலும் பணியாற்றினார்.

பாவாணர் இளமையிலேயே கற்றார். படிப்பு முடிநத காலத்திலிருந்து அவருக்கு 60 அகவை ஆகும் வரை தொடர்ந்து பணி செய்திருக்கிறார்.

பண்டிதர், புலவர், வித்துவான், விசாரத்து, முதுகலை ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

கி.பி.1963

1959 இல் பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் தோற்றுவிக்கப்பட்ட தென் மொழி மாதிகை இதழின் சிறப்பாசிரியராக 1963 பெப்ரவரியில் அமர்ந்தார்.

27-10-1963 அன்று எசுத்தர் அம்மையார் காலமானார். இம் மறைவால் பாவாணர் வடக்கிருக்கத் துணிந்தார். ந்ண்பார்கள் பலரும் சூழ்ந்து தடுத்துத் தமிழாய்வுப் பணியில் ஈடுபட்டுத் தமிழை உய்விக்குமாறு வேண்டினர். பாவாணரும் இசைந்தார்.

பெருஞ்சித்திரனாரை 1963 திசம்பர் திங்களில் பாவாணருக்காகப் பொருட்கொடைத் திட்டம் ஒன்றினை உருவாக்கினார். அது 6-7-64 இல் முடிக்கப்பட்டது. அந்தக் கால எல்லையில் பெறப்பட்ட தொகை உரூவா 2214-04 பாவாணர்க்கு வழங்கப்பட்டது.

கி.பி.1964

1964 ஆம் ஆண்டு மதுரையில் பேராசிரியர் சி.இலக்குவனார் தலைமையில் இயங்கி வந்த தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் பாவாணரின் தமிழ்ப் பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டி அவருக்குத் தமிழ்ப் பெருங்காவலர் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

தென்மொழி இதழில் என் அண்ணாமலை நகர் வாழ்க்கை எனும் தொடர்கட்டுரையை எழுதினார்.

கி.பி.1966

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூல் 1966 இல் திருச்சிராப்பள்ளி மாவட்டப் பொரம்பலூர் வட்டம் செட்டிக்குளம் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு உதவியால் வெளியிடப்பட்டது.

கி.பி.1967

1967 ஆம் ஆண்டு மதுரை எழுத்தாளர் மன்றம் பாவாணர்க்கு மணிவிழா எடுத்தது. விழாவில் மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டமும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. இம் மணிவிழா முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.அவர்கள் தலைமையில் பொதுப்பணித்துறையமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பாவாணர் வர இயலாமற் போனதால் பொற்கிழியை கலைத்தந்தை கருமுத்து தியாகராசனிடம் வழங்கிப் பாவாணரிடம் சோர்க்கும் பணியை ஒப்படைத்தார். பாவாணர்க்கு மணிவிழா அழைப்பிதழ் காலம் கடந்து கிடைத்தமையால் பாவாணர் விழாவில் பங்கேற்க இயலவில்லை. எனினும் பாராட்டிதழும் பொற்கிழியும் உரிய முறையில் சென்றடைந்தது.

தமிழ் வரலாறு வடமொழி வரலாறு ஆகிய நூல்களை திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்காட்டுப் பட்டி பகுதி உதவியால் வெளியிடப்பட்டன.

கி.பி.1969

வேலூரில் பெரியார் ஈ.வெ.இரா அவர்களைப் பாவாணர் அவர்கள் நேரில் சந்தித்து, தமிழையும் பதினெட்டுத் திராவிட மொழிகளையும் தமிழ் வழியிலும் ஆங்கில் வழியிலும் கற்பிக்கும் பெரியார் தென்மொழிக் கல்லூரி எனும் பெயரில் கல்லூரி ஒன்றை சென்னையில் நிறுவுமாறு வேண்டுகோள் கொடுத்துள்ள்ார். அதற்கு இறுதிவரை விடையில்லை.

உலகத்தமிழ்க் கழக முதல் மாநாடு பறம்புக்குடியில் நடந்தது. முகவை மாவாட்ட உ.த.க. அமைப்பாளராக பேரா.மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் பொறுப்பேற்று மாநாட்டை நடத்தினார். மாநாட்டிற்குப் பாவாணர் அவர்கள் தலைமையேற்றார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரா.சி.இலக்குவனார், வ.சுப.மாணிக்கனார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் குழந்தை போன்ற அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை, பாவாணர் இயற்றிய இசையரங்கு இன்னிசைக் கோவையும், தமிழ்க் கடன் கொண்டு தழைக்குமா? என்னும் கட்டுரைச் சுவடியும் உத.க.சார்பில் வெளியிடப்பட்டன. முகவை மாவட்டத்துப் பறம்புக்குடியில் நடந்த இம்மாநாடு ஒரு பெரும் அரசியல் கட்சியின் மாநாடு போல நடைபெற்றது.

நெய்வேலி உலகத்தமிழ்க் கழகக் கொடையால் மண்ணில் விண் அல்லது கூட்டுடமை 1978 இல் வெளிவந்தது.

கி.பி.1970

கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அன்றைய கருநாடக முதல்வர் வீரேந்திர பாட்டீலுக்குப் பாவாணர், வரலாற்றைச் சுட்டிக்காட்டி திறந்த மடல் ஒன்றை எழுதினார்.

பாவாணரைச் சிறப்பாசிரியராகக் கொண்டு உலகத் தமிழியக்கத்தின் திங்களிதழாக முதன்மொழி சேலத்தில் இருந்து வெளிவந்தது.

கி.பி.1971

1971 ஆம் ஆண்டு பாவாணரின் எசந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாக்கத் திட்டம் தென்மொழி மூலம் அறிவிக்கப்பட்டது. இருநூறு உறுப்பினர்கள் கொண்ட அத்திட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் மாதந்தோறும் உருவா 10 பாவாணருக்கு விடுக்க வேண்டும்.

மதுரையில் உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது மாநாடு இரண்டு நாள் நடைபெற்றது. மாநாட்டுக்குப் பாவாணர் அவர்கள் தலைமையேற்றார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேரா.கோ.நிலவழகனார், பேரா.சு.ப.அரவாணன் போன்ற அறிஞர்கள் பங்கேற்றனர்.

பறம்பு மலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் பாவாணருக்குச் செந்தமிழ் ஞாயிறு என்னும் பட்டமளித்துச் சிறப்பிக்கப் பட்டது.

கி.பி.1972

தஞ்சையில் உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில், தமிழின் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்க அறைகூவல் மாநாடு நடைபெற்றது. பெரும்புலவர் நீ.கந்தசாமி அவர்கள் தலைமையேற்றார். பாவாணர் பேருரையாற்றினார். பேரா.வ.சுப.மாணிக்கனார், பேரா.தி.வை.சொக்கப்பா, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேரா,கோ.நிலவழகனார். வீ.ப.கா. சொல்லழகனார், குடந்தை சுந்தரேசனார். ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கி.பி.1974

தமிழ்நாட்டரசு பாவாணர்க்குச் செந்தமிழ்ச் செல்வர் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

கி.பி.1981

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் பேருரையாற்றினார். அன்று உடல் நலன் பாதிக்கப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை அரசினர் இராசாசி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். 15.1.1981 இரவு 12.30 மணிக்கு பாவாணர் இயற்கை எய்தினார்.

மொழி ஞாயிறு மொழிப் பேரறிஞர், தனித்தமிழ்க் காவலர், மொழி நூற் கதிரவன், மொழிநூல் மூதறிஞர் முதலான பல பட்டங்களுக்கும் உரியவராக ஒளிர்ந்தார்.

பாவாணர் இயற்றிய நூல்கள் 35 க்கும் மேற்பட்டன. அவர் எழுதிய கட்டுரைகளும் நூற்றுக்கும் மேற்பட்டன.

பாவாணர் அறிவுத் துறையில் ஆழ்ந்த புலமை மிக்கவர் என்பது மட்டுமல்லாமல் கொண்ட கொள்கையில் உறுதி மிக்கவரும் ஆவார்.

தமிழ் குமரிக் கண்டத்தில் தோன்றிய ஞால முதன்மொழி என்றும் சமற்கிருதத்தில் ஐந்திலிருபகுதி தமிழென்றும் பிறமொழித் துணையின்றித திகழ்ந்து தனித்து வழங்கவும் தழைத்தோங்கவும் கூடும் என்றும் தமிழிற் கலந்துள்ள வடசொற்கள் எல்லாம் தேவை அடிப்படையில் விரும்பிக் கடன் கொண்டவை அல்ல என்றும் தமிழைக் கெடுத்தற்கென்றே ஆரியராற் புகுத்தப்பட்டன என்றும் தாம் கண்டறிந்த தமிழின் சிறப்பை அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தினார்.

பாவாணர் மறைந்தாலும் அவரது ஆராய்ச்சி ஆர்வலர்களைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

நன்றி : தமிழ்ப்பாவை திங்களிதழ் - சூலை 2006




கேட்கத் தவறிய அபஸ்வரம்

உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதற்காக ஐரோப்பாவில் இயங்கும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் - ஒரு நாள் ஒளிபரப்பிய - ஒரு இந்தியர் - ஒரு படித்தவர் - ஒரு பெரியவரின் பேச்சிலிருந்து ஒரு பகுதி இது.

"உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் - தமது கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் இலங்கைத் தமிழர்களுக்கு நிகர் இந்த உலகில் எவரும் கிடையாது. கடந்த வருடம்கூட இலண்டனுக்குச் சென்றிருந்த போது அங்கிருக்கும் கோயில்களின் எண்ணிக்கையையும் அவர்களின் இறைபக்தியையும் பார்த்து நான் மெய் சிலிர்த்து நின்றேன்."

பேச்சாளர் மெய் சிலிர்த்துப் பேசியபோது - மெய்விதிர்த்துப் போனார்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்த நம்மவர்கள்.

அரோஹரா - இந்த அபஸ்வரங்களுக்கு !

படித்தவர்கள் - பெரியவர்கள் - என்று நமது சமூகத்தால் கருதப்படுபவர்கள் - மதிக்கப்படுபவர்கள் - இப்படி நிறத்தை அறியாது - ஸ்வரத்தை புரியாது - தப்புத்தாளத்தில் மயங்கி - தம்மை மறந்து மெய் சிலிர்த்து ஆங்காங்கே உரையாற்றுவதால் தான் உண்மையின் சகல பரிமாணங்களையும் நமது சமூகம் தரிசிக்க முடியாமல் - அடிக்கொரு தடவை மெய்விதிர்ப்பதோடு மட்டுமே நின்றுவிடுகிறது.

ஒரு நாட்டில் - வீதிக்கொரு வைத்தியசாலை இயங்கினால் அந்த நாட்டில் நோயாளிகள் அதிகம் என்பது அர்த்தம். பார்க்குமிடமெல்லாம் மதுபானசாலைகள் தென்பட்டால் அந்த நாட்டவர் மதுப் பிரியர்கள் என்பது அர்த்தம். திரும்பும் இடமெல்லாம் கேளிக்கை விடுதிகள் நிறைந்திருந்தால் அவர்கள் உல்லாசப் பிரியர்கள் என்பது அர்த்தம்.

ஆனால் - எங்கோ பிறந்த நம்மவர்கள் எப்படி எப்படியோ வாழ்ந்த நம்மவர்கள் - காரணம் புரியாத ஒரு காரணத்திற்காகச் சொந்த நாட்டை விட்டு வெளியேறி - இன்று அந்நிய நாடு ஒன்றில் சிக்கலான பல பல பிரச்சனைகளுடன் திரிசங்கு வாழும் நம்மவர்கள் செறிந்து வாழும் இடங்களில் வீதிக்கொரு கோவில் தென்பட்டால் அவர்கள் எல்லாம் பக்திமான்கள் இறை நம்பிக்கை உடையவர்கள் - நாடு மாறினாலும் தமது கலை கலாச்சாரங்களைப் பேணிக்காப்பதில் அக்கறை உள்ளவர்கள் என்று கூறும் அந்தப் பல்லவியில் பொருளில்லை - இலக்கணமில்லை.

இன்று - இங்கியங்கும் கோவில்களுக்கும் நமது தெய்வ பக்திக்கும் முடிச்சுப் போட முனைவது - அச்சுவேலிக்கும் அந்தமான் தீவுக்கும் பாலம் அமைப்பதற்கு ஒப்பான ஒரு விடயம். காரணம் - கோவிலுக்குப் போகும் நம்மில் எவருமே - ஆதியும் அந்தமுமற்ற இந்தப் பிரபஞ்ச வினோத்தின் சூத்திரதாரி நம்மை முற்று முழுதாக ஆட்கொள்ள வேண்டுமென்ற ஆவலில் அங்கு செல்வதில்லை. அந்த பூரணத்திலிருந்து தோன்றிய நானும் ஒரு பூரணம் தான் என்ற அந்தச் சத்தியத்தை மறைக்கும் இந்த மனம் என்ற மாயையை எவ்வாறு அழிப்பது என்ற வழியை நாடி அங்கு செல்வதில்லை. புல்லாகி பூடாகி - புழுவாகி - தொடர்ந்து செல்லும் எனது பரிணாமப் பயணத்தை இந்தப் பிறவியுடன் நிறுத்தி விடு என்று மன்றாடுவதற்காக அங்கு செல்வதில்லை.

மாறாக - நாம் கோவிலுக்குச் செல்வது யாசிப்பதற்காக - வேண்டுவதற்காக - இரப்பதற்காக, இங்கு - இன்று - நமது உடல் நிலை - உள நிலை - அந்தஸ்து - வதிவிடம் - பணம் - பதவி - பிள்ளைகள் - நிகழ்காலம் - எதிர்காலம் - இப்படி எதிலெதிலெல்லாமோ நமக்குப் பிரச்சனைகள் - எங்கெங்ெல்லாமோ நமக்குப் பிரச்சனைகள் - எதற்கெதற்கெல்லாமோ நமக்குப் பிரச்சனைகள். நாளுக்கொரு கோரிக்கையுடனும் பொழுதுக்கொரு விண்ணப்பத்துடனும் - அர்ச்சனைத் தட்டுகளுடனும் , பூசை சீட்டுகளுடனும் ஏதாவது ஒன்றை யாசிப்பதைத் தவிர வேறு ஏது செய்கிறோம் நாம் கோவிலில் ? வேறு எதற்காகச் செல்கிறோம் நாம் கோவிலுக்கு ?

அந்த வடக்கு லண்டன் வைரவரை விட - இந்தக் கிழக்கு லண்டன் விநாயகர் அதிக வரம் தருவார் என்று யாராவது கூறிவிட்டால் போதும் நமக்கு அன்றிலிருந்து அந்த வடக்கில் கோவில் கொண்டிருப்பவர்க்கு மரணச் சனி ஆரம்பம். அவரது உண்டியலில் ஒரு செல்லாக் காசுகூட விழாத அதே சமயம் அந்தக் கிழக்கு வாழ் விநாயகரும் அவரைச் சார்ந்தோரும் நமது தயவால் செல்வச் செருக்குடன் வாழ ஆரம்பித்து விடுவார்கள். அந்த அயர்லாந்து முருகனைவிட - இந்தக் கேம்பிரிட்ஜ் முருகன் பலம் மிக்கவர் என்று ஊரார் பேசினால் போரும் நமக்கு அதன் பின்பு அயர்லாந்தானுக்கு மாற்றிக் கட்டுவதற்கு ஒரு கோவணம் கூட இருக்காத ஒரு வறுமை நிலையில் அவரை வாட விட்டு விட்டு கேம்பிரிஜ் முருகனுக்குப் பாட்டு பாட்டாகச் சாத்துவோம்.

எனது பிள்ளையை இந்தத் தடவை பரிட்சையில் சித்தியடைய வைத்தாயானால் உனக்கு மாபெரும் வடை மாலை ஒன்று சாத்துவேன். இந்த ேவ்ணடுதலுக்குள் மறைந்திருக்கும் மிக் முக்கியமான ஒரு விடயம். அவன் சித்தியடையாவிட்டால் உனக்கு ஒரு உப்புக்கட்டி கூட கிடையாது.

நம்மில் பெரும்பாலானோர்க்கும் தெய்வத்திற்கும் உள்ள உறவுக்குப் பெயர் பக்தி அல்ல. மாறாக அது ஒரு சிக்கலான வியாபாரம். அங்கு பேரம் ஒரு வழமை - ஒப்பந்தம் - ஒரு யதார்த்தம் மறுக்க முடியாத விடயமானாலும் கன கச்சிதமாக மறைக்கப்படும் விடயம் இது.

வியாபாரத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் இந்த ஒப்பந்தங்களையும் - பேசப்படும் இப்படியான பேரங்களையும் - இவற்றின் அடிப்படையில் இங்கு எழுந்து நிற்கும் கோவில்களையும் அடையாளம் காணாது - நாடு மாறினாலும் தமது கலை கலாச்சாரங்களைப் பேணிப்பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர்கள் - பக்திமான்கள் - இறை நம்பிக்கை உடையவர்கள் என்றெல்லாம் கூறுவது யதார்த்தத்தை மறைக்கும் ஒரு கனமான போர்வை.

துணிவாக - ஆண்மையுடன் - நாமே போர்த்துக் கொண்ட - நமக்குப் போர்த்தப்பட்ட - இது போன்ற போர்வைகள் களையப் படும்பொழுது - நமக்கு சுயதரிசனம் ஏற்படும் போது - அந்த நிர்வாணத்தை நாம் பார்க்கும் போது - அப்பொழுது நமக்குப் புரியும் நம்மிடையே பெருகி இருக்கும் கோவில்களின் அர்த்தம்.

படைத்தவனைப் பற்றிய நமது அறியாமை - நமது ஏமாளித்தனம் - நமது பித்துக்குளித்தனம் - நாம் காவித் திரியும் ஆசை மூட்டைகள் - என்றுமே தீராத நமது குறைகள் - குறைபட்ட நமது மனம் நமது ஏக்க மூச்சுகள் - இவை தான் இன்று - இங்கு - நமது கோவில்களின் அத்திவாரம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் - எப்படி ஆராய்ந்தாலும் - மீண்டும் மீண்டும் இதே பதில் தான் கிடைக்கிறது.

நமது ஏமாளித்தனத்தை, குறைகளை - பலவீனங்களை - அறியாமையை - சரியாகப் புரிந்து கொண்டு - அந்த அத்திவாரத்தின் மீது தான் இங்கு பெரும்பாலான கோவில் கற்கள் அடுக்கப்படுகின்றன - சுயநன்மைக்காக - சுயநலத்திற்காக.

இதன் விளைவு, பதவியை பறை சாற்றுவதற்குக் கோவில் - பதவியை பற்றிக் கொள்வதற்குக் கோவில், பணம் பண்ணுவதற்குக் கோவில் - சுயபுராணம் பாடுவதற்குக் கோவில் - சுயவிளம்பரத்திற்குக் கோயில் - போட்டிக்குக் கோவில் - பொறாமைக்குக் கோவில் - இச்சைக்காகக் கோவில் - இசைப்பதற்காகக் கோயில்.

இதன் முடிவு, கோவில்களுக்கு முன்னால் அழகு - பின்னால் அசிங்கம் - முன்னால் அரோஹரா - பின்னால் அராஜகம். முன்னால் பக்தி - பின்னால் பதவிப் போட்டி.

பிரம்மம் என்று அவதாரங்கள் பெயரிட்ட - இந்த பிரபஞ்சத்தின் சூத்திரதாரியை முற்று முழுதாக நம்புபவனின் பெயர்தான ஆத்திகன் என்றால் - இங்கு - இங்கு நம்மில் பெரும்பாலானோர் நாத்திகர்களே.

எல்லாம் அறிபவன் அவன் - என்று கூறிவிட்டு - அதே சமயம் - அந்த எல்லாம் அறிபவன் நமக்குக் கொடுத்தவைகளுடன் திருப்தியடையாது - மேலும் மேலும் யாசித்து - அந்த யாசனைக்குப் பெயர் பிராத்தனை என்று நாம் பிரகடனம் செய்வதனால் தான் நாம் ஆத்திகர்களல்ல - நாத்திகர்கள்.

கோவில் திருவிழாவில் ஈ மொய்க்கும் வண்ண வண்ண இனிப்புப் பண்டங்களை அறிவுக் குறைவால் தனது குழந்தை கேட்கிறதே என்பதற்காக ஒரு தாய் வாங்கிக் கொடுப்பதில்லை என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு - வாழ்க்கைத் திருவிழாவில் நமது அறியாமையால் நாம் விரும்பும் வண்ணங்களையும் - கேட்கும் வண்ணங்களையும் ஆண்டவன் அள்ளிக் கொடுப்பதில்லை என்பது மட்டும் தெரியாமல் போய்விடுவதனால் தான் நாம் ஆத்திகர்களல்ல - நாத்திகர்கள்.

நாம் திருடும் பொழுது ஒருவன் பார்த்து விட்டால் அவனுக்கும் திருட்டில் ஒரு பங்கு கொடுத்து அவனைச் சமாதானப் படுத்தப் பழகிவிட்ட நாம் - அநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்து சம்பாதித்துவிட்டு, அப்பனே உனக்குக் காணிக்கை போடுகிறேன் - என்று அததில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டு - ஆண்டவனுடன் கணக்குத் தீர்க்க முயற்சி செய்வதனால் தான் நாம் ஆத்திகர்கள் அல்ல, நாத்திகர்கள்.

எங்கும் நிறைந்தவனால் - எல்லாம் வல்லவனால் - எல்லாம் அறிபவனால் - இயக்கப்படும் இந்த வாழ்க்கை என்ற புகையிரதப் பயணத்தில் - சும்மா விருப்பதே சுகம். அடித்து - அலை மோதி - ஆர்ப்பரித்து - குதித்து - கும்மாளமிட்டு - பொங்கி - ததும்பி - பாயும் இந்த வாழ்க்கை நதியில் அலுங்காமல் அசையாமல் மிதந்து செல்வதே சுகம். காரணம் - எப்பொழுதோ முடிந்த காரியங்கள்.

இங்கு எல்லமே அவன்தான் - எல்லாமே நாம் தான். இங்கு நாயும் நாம் தான். நரியும் நாம் தான். வேசியும் நாம் தான். வீடனும் நாம் தான். இங்கு யார் கேட்பது? யார் கொடுப்பது? யார் பறிப்பது? யார் இழப்பது?

அதனால்தான் ஆண்டவனை நம்புபவன் கோயிலுக்குச் செல்வதில்லை. மதகுருமார்களின் தயவை நாடுவதில்லை. பிரார்த்தனைகய் பண்ணுவதில்லை.

இவை எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்துக் கூறப்பட்ட கருத்துத் தான். இங்கியங்கும் கோவில்களின் எண்ணிக்கைக்கும் இசைக்கும் இசையில் அபஸ்வரங்கள் அதிகம்.

போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்
அது ஒரு சத்தியம்.

நன்றி : ஸ்ரீதரன் அவர்களது நிர்வாணம் நூல் - புதினம் வெளியிடு.




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061