ஞானம் 
 
ஞானம் பெற்றது  
நீ  
உன் மண்ணில்  
பள்ளிக் கூடங்கள்  
கட்டப்பட்டதால்.  
 
நான்  
என் மண்ணில்  
பள்ளிக் கூடங்கள்  
இடிக்கப்பட்டதால்.. 
 
-  காசி ஆனந்தன் - 
நன்றி : செம்பருத்தி - சூன் 2005. 
 
 
 
உரை வீச்சுகள்
  
சம்பள நாள் 
அலுவலக வாயிலில் 
கடன்காரர்களோடு... 
மனைவியும். 
 
மரம் வெட்டின காசில் 
மின் விசிறி வாங்கினான்  
வீட்டுக்கு... 
 
தாளம் நின்ற தறிகள் 
தாளம் போடும் 
நெசவாளி வாழ்க்கை... 
 
ரத்னப்ரியனின் முதல் முகவரி நூல். 
நன்றி : சிகரம் இதழ் சூன் 2005.  
 
 
 
உணவே மருத்துவம்
  
உண்பதற்காகவே வாழாதீர் 
உயிர் வாழ்ந்திடவே நாம் உண்போம். 
உண்ணும் உணவினில்தாம் நோய்கள் 
உட்கார்ந்திருந்து நம் உயிர் பறிக்கும் 
 
மாமிச உணவைச் சமைத்தபின் 
மறுநாள் வைத்தே புசிக்காதீர் 
சாமி சத்தியமாய்ச் சொன்னேன்  
சமைத்ததை ஐந்து மணிக்குள் உண். 
 
குத்துதே குடையுதே மூட்டுவலி 
குன்மம் பித்தம் வாய்வாம் நோய் 
ரத்தசோகை பக்கவாதம் 
நரம்புத் தளர்ச்சியும் உணவால்தான். 
 
பழைய குழம்பைச் சுடவைத்தே 
பசிக்கு அடிக்கடி புசிக்காதீர் 
குளிர்பத னத்தில் வைத்தெடுத்தே 
குடலால் நோய்களை வளர்க்காதீர். 
 
யோகம் பெருகும் நல் உணவால் 
ரோகமும் போகமும் உண்பதால்தாம். 
தாகம் என்றால் பருகுவீர்நீர் 
தாறுமா றாய்மது குடிக்காதீர் 
 
பழங்கள் கீரை காய்கறிகள் 
பசுமை மாறா புதியனவாய் 
கிழங்குகள் ஈந்திடும் உயிர்ச்சத்தையும் 
சிரமமாய் உண்பதால் திடம் பெறலாம்.  
 
உணவைக் குடித்தேநீர் உண்பீர் 
உணவே மருந்தென உணர்ந்திடுவீர் 
உணவில் மருத்துவம் ஒளிந்துள்ளதே 
உறுதியாய் நம்பியே உயிர்காப்பீர். 
 
-  பெருமத்தூர் சீராளன் 
நன்றி : மூலிகை சஞ்சீவி இதழ், சூன் 2005  
 
 
 
அறிவுரை
  
என்  
மூளையைச் சலவை செய்ய 
நான்கு பேர் நாடி வந்தனர் 
 
முதலாமவர்  
எனக்கு மூளையில்லையாம் 
பார்த்தவுடன் பட்டெனத்  
திரும்பி விட்டார்.  
 
இரண்டாமவர் 
என் மூளைக் கோளாறு 
தீர்க்க முடியாதென 
உடனே ஒதுங்கினார்.  
 
மூன்றாமவர் 
கடுமையாக முயற்சித்தபின் 
என் மூளை முழுவதும் 
பழுதாகிவிட்டதாம் 
வாக்குமூலம் தந்தார். 
 
நான்காமவர்  
ஐயோ பாவம்.. 
தினமும் என் மூளையைக் கழற்றி 
வெளியே வையெனத்  
தொடர்ந்து  
தொந்தரவு செய்கிறார்
  
இப்படித்தான் பலர் 
ஒருபோதும் 
தங்களைப் பற்றிக்  
கவலை கொள்வதே இல்லை.  
 
-  ஆசுரா  -  
நன்றி : புதிய செம்பருத்தி - சூன் 2005  
 
 
 
பட்டுதிரும்
  
கல்லுக்கு மட்டும் ஓர் 
உயிர் இருந் துரைத்தால் - எம் 
கண்ணீர்க் கதைகளை அரங்கேற்றும் - செம்  
புண்ணீர்க் கைகளில் மருந்தேற்றும் 
சொல்லுக்குள் அடங்காத 
சோகக் காட்சிகளை - அழகு  
சொட்டச் சொட்டவே வரைந்து தரும் - இரத்தம் 
சொட்டிய பெருவிரல் சாட்சி சொல்லும்.  
 
இயற்கை அழைப்புகளின் 
ஒதுக்குப்பாறைகளே - நாங்கள் 
இன்றைக்கும் பணியாற்றும் வேலைக்களம் - பணி 
என்றைக்கு மாறிடும் சோலைக்களம் 
வியர்வைக் குடமுழுக்கில்  
வேகும் நேரங்களே - எம் 
வெறுமை வாழ்க்கைக்குப் பாலூற்றும் - வீட்டு 
வறுமை நுனியொடிக்கத் தேனூற்றும். 
 
ஆண்களும் பெண்களும்  
சிறுவரும் சமமாய் - கல்  
அடிப்பதில் வேற்றுமை ஏதுமில்லை - ஆண் 
ஆதிக்கம் நெஞ்சத்தின் வேரில்லை 
வீண்பழி பேசவும்  
நேரம் இல்லை - அந்த 
விண்வெளிக் கூரைக்கீழ் ஓய்வுமில்லை - இந்த 
மண்வெளி வீட்டுக்குத் தாளுமில்லை.  
 
பிள்ளைகள் அழுதிடும்  
சோதனைப் பொழுதினில் - அதை 
அள்ளி அணைத்திட முடிவதில்லை - உங்கள் 
பிள்ளைத் தமிழ்எம்மேல் படிவதில்லை.  
பள்ளிக் கனுப்பித்தான்  
படிக்க வைத்திட்டால் - எம்  
பாரம் சுமக்க வேறு ஆளுமில்லை - எங்கள்  
பாடுகள் தீர்ந்திடும் தோளுமில்லை.  
 
மண்மகள் பரிசுக்கு 
மன்னவர் வரிகளால் 
கூலியும் வளர்முகம் காண்பதில்லை - அதைத்  
கொடுத்திடக் கங்காணிக் குள்ளமில்லை.  
விண்ணகக் கற்கள் எம்  
விரல்களுக் கொருநாள் 
வேலைதரும் - விண்மீன் பெட்டகமும் - ஒரு  
காலைவரும் கவலைகள் பட்டுதிரும்.  
 
-  பழனி . சோ. முத்துமாணிக்கம் -  
நன்றி : கல் ஓசை இதழ் - சூன் 2005  
 
 
 
இரத்ததானம்
  
இது  
புத்தபூமியா கொல்லும் யுத்தபூமியா ? 
அய்யோ  
நித்தம் சத்தம் நிற்காத யுத்தம் 
நின்றது நிலைக்குமா ? 
இல்லை இனியும்  
இந்தப் புத்தம் இரத்தம் கேட்குமா ? 
தர்மமும் சரணமும் போய் 
தமிழரின் மானமும் தசையுமாய் 
மகாயாகமா கேட்கும் மகாயானம்.  
 
காதலும் மணவிழாக் கவிதையாய் வாழ்வும் 
அருவியும் தென்றலும் ஆறுடன் அடவியும் 
பனையும் பள்ளியும் பச்சைநெல் வயல்களும் 
கூவிடும் மந்திரக் கோயில்கள் கூட்டமும் 
கமழ்ந்த தாயகத் தமிழ்க்காற் றெங்கே ? 
கந்தக நெடியில் கருகிய தய்யோ. 
 
வரங்களா கேட்டோம் ?  
வாழ இடம் கேட்டோம் - அதுவும் 
நாங்கள் வாழ்ந்த இடத்தைத்தானே கேட்டோம் ? 
எத்தனை ஆண்டுகள் செத்ததெம் உறவுகள் ?  
 
-  தமிழ்நாகை -  
நன்றி : கலை இதழ் - மே 2005  
 
 
 
பயமுறுத்தலாமா பஞ்சாயத்துகள் ?
  
புதிய அமைச்சரவை பொறுப்பேற்று 
ஓராண்டுச் சாதனைகள் வெளிவந்துள்ளன. 
காஞ்சிபுரத்திலும் கும்மிடிப்பூண்டியிலும்  
இடைத் தேர்தல்களும் முடிந்துள்ளன.  
 
பீகார் சட்டசபை 
உறுப்பினர்கள் பதவி ஏற்காமலேயே 
கலைக்கப்பட்டுள்ளது.  
 
பாப்பாப்பட்டி கீரிப்பட்டி 
ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து 
பதவியேற்றத் தலைவர்கள் 
விலகிக் கொள்வதும் வழக்கமாக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய மாநில அரசுகள் 
சாதனைகளுக்கு மதிப்பெண் போட்டு 
மகிழ்ந்து கொள்ளவும் முன் வந்துவிட்டன.  
 
திராவிடநாடு திராவிடருக்கே என்று  
பிரிவினை கேட்டு கைவிட்ட இயக்கம்  
கூட்டணி அரசில் பங்கேற்கவும்  
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 
ஒரே இந்தியாவை உருவாக்க முனைவதுமாக 
இந்திய தேசிய அரசியல் வளர்ச்சிக்கு  
புதுப்புது வழிகள் பொதுமக்கள் காட்டியுள்ளனர்.  
 
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண 
பாகிஸ்தானுக்கும் பேருந்து விடுவோம். 
ஈரான். ஈராக் போரை நிறுத்த  
எங்கிருந்தாலும் குரல் கொடுப்போம். 
 
ஆழிப் பேரலை அடித்துப் போட்டாலும் 
அயல்நாட்டு மக்களின் கண்ணீர் துடைப்போம்.  
இந்தியா முழுவதும் ஒரே நாடாக்க 
தமிழ்நாடு முழுவதையும் லோக்க(ா)ல் ஆக்குவோம். 
 
இலங்கையைச் சுற்றிவரும் போக்கை மாற்ற 
சேது சமுத்திர திட்டம் அமைப்போம் 
கடல்நீரை குடிநீர் ஆக்கும்  
கனவுத் திட்டத்தையும் நினைவாக்குவோம்.  
 
இந்தியக் குடியாட்சி சாதனைக்கு  
இவையெல்லாம் கல்வெட்டு 
சான்றிதழ் ஆகலாம்.  
 
தேர்தலுக்குத் தேர்தல் கட்சியை மாற்றியும் 
கட்சியை மாற்ற முடியாதபோது 
ஆளை மாற்றியும் அதுவும்கூட முடியாத போது 
கூட்டணி அமைத்தும் தேவைப்படும்போது 
கூட்டணி மாறியும் ஆட்சியைக் கவிழ்த்தும் 
அரசியல்வாதியும் பொதுமக்களும் 
ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டி 
படுகிற கஷ்டங்கள் கொஞ்சமல்லவே. 
 
இந்தியா பொருளாதார நெருக்கடியிலும் 
வாக்காளருக்கு வருவாய் கிடைக்க 
இன்னும் ஓராண்டே இருக்கிற போதும் 
இடைத் தேர்தல்களையும் விட்டு வைப்பதில்  
உலகிற்கு ஜனநாயக உயர்வைக் காட்ட 
பொதுமக்கள் காட்டும் பொறுமைக்கு அளவில்லை.  
ஆனாலும்  
பாப்பாப்பட்டி கீரிப்பட்டி 
பஞ்சாயத்துகள் பயமுறுத்துகின்றனவே. 
 
நன்றி : கணையாழி இதழ் - சூன் 2005  தலையங்கம் 
 
 
 
கொள்ளை போகும் தண்ணீர்
  
தொலைவில் இல்லை. என ஐக்கிய நாடுகள் மாநாட்டில் ஓர் எச்சரிக்கை விடப்பட்டது. 
  
இந்தியாவில் சுமார் 6 கோடி குடும்பங்கள் பொதுக்குழாய்களில், அடி பம்புகளிலிருந்து தண்ணீர் பெறுகின்றன. 
50 இலட்சம் குடும்பங்கள் ஆறுகள், குளங்களிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றன. சுமார் மூன்றரை கோடி 
வீடுகளுக்குப் பக்கத்தில் தண்ணீர் கிடையாது. சுத்தமான தண்ணீர் கிடைக்காததால் இந்தியாவில் வயிற்றுப் 
போக்கு நேய்க்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பத்து கோடி. ஒவ்வொரு ஆண்டும் இந்த 
நோயினால் இந்தியக் குழந்தைகளில் 5 இலட்சம் பேர் இறந்து போகின்றனர். 
  
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 18 இலட்சம் கிணறுகளில் அளவுக்கதிகமாகத் தண்ணீர் எடுத்ததால் 2 இலட்சம் 
கிணறுகளில் தண்ணீரே இல்லாம்ல் வறண்டு போய்விட்டன. 2001 ன் கணக்குப்படி நம் நாட்டிலேயே தண்ணீர் 
எடுத்து நம்மிடமே விற்றதில் பன்னாட்டு நிறுவனத்திற்கு ரூ 1,10,000 கோடி இலாபம் கிடைத்துள்ளது. 
இதற்காகப் பன்னாட்டு நிறுவனம் முதலீடு செய்தது வெறும் ரூ 50 கோடி மட்டும். 
  
நன்றி : தினமணி - 22-3-2005  
இலட்சியப் போராளி இதழ் - சூன் 2005
 
  
 
தமிழால் முடியும். 
  
150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மருத்துவப் படிப்பு
  
தமிழால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழால் முடியும் என்று 
உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 
  
தமிழில் மருத்துவப் படிப்புக் கற்றுத் தரப்பட்டது. அதற்கு வேண்டிய நூல்கள் தமிழில் வெளிவந்தன. 
  
இதற்கு வழிகாட்டியவர் சாமுவேல் என்ற அமெரிக்க மருத்துவர். உடல்கூறு என்ற முதல் முருத்துவ நூலைத் தமிழில் 
எழுதியவரும் இவரே. 
  
யாழ்ப்பாணம். அமெரிக்காவிலுள்ள மாச்சூசெட்ஸ் என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு மருத்துவர். 
கிறிஸ்தவத் தொண்டரும்கூட. 
  
யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் திருச்சபை ஒன்று இருந்தது. அதில் பணியாற்ற சாமுவேல் அனுப்பப்பட்டார்.. 
  
1847 ஆம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போனார். 
அங்கு 23 ஆண்டுகள் பணியாற்றினார். 
  
தமிழ் படித்தார். 
  
யாழ்ப்பாணத்திற்கு வந்ததும், சாமுவேல் முதலில் தமிழ் படித்தார். அப்போதுதான் மக்களுடன் பழக முடியும் 
என்பதை அவர் உணர்ந்தார். 
  
தமிழ்மொழி அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உலகிலுள்ள சிறந்த மொழிகளில் தமிழும் ஒன்று - என்று அவர் 
சொன்னார். தமிழ் மீது ஏற்பட்ட காதலால் தனது பெயரை - மருத்துவர் பச்சையப்பன் - என்று மாற்றிக் கொண்டார். 
  
சாமுவேல் பிஸ் கிரீன் என்பது அவரது முழுப்பெயர். கிரீன் என்றால் பச்சை. எனவே பச்சையப்பன் என்று பெயா 
வைத்துக் கொண்டார்,. 
  
மருத்துவமனை. 
  
யாழ்ப்பாணத்தில் மணிபாய் என்ற இடத்தில் 1848 இல் ஒரு மருத்துவமனை திறந்தார். ஆசியாவில் தொடங்கப்பட்ட 
முதல் ஆங்கில மருத்துவமனை இதுதான். 
  
இந்த மருத்துவ மனையில் மருத்துவக் கல்லூரி ஒன்றையும் சாமுவேல் தொடங்கினார். முதலில் மூன்று 
மாணவர்கள் சேர்ந்தார்கள். அவர்களின் தாய்மொழியான தமிழில் பாடம் நடத்தினால் அவர்களுக்கு ந்னறாகப் 
புரியுமே என்று நினைத்தார். சாமுவேலுக்கும் தமிழ் தெரியும். எனவே மருத்துவப் பாடங்களைத் தமிழில் கற்றுத் 
தந்தார். 
  
பாடநூல்கள் வேண்டுமே. சாமுவேல் தாயர் செய்தார். ஆங்கில நூல்களை, தமிழ்ப் படுத்தினார். அவை மொத்தம் 
நாலாயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்கள். 
  
உடல்கூறு. 
  
அப்போது சென்னையில் கிறிஸ்தவ கல்விக் கழகம் ஒன்று இயங்கியது. அவர்கள் தமிழில் அதிக நூல்கள் 
வெளியிட்டனர். மருத்துவ நூல்களையும் தமிழில் வெளியிட விரும்பினார்கள். நூல்கள் எழுதித் தரும்படி 
சாமுவேலிடம் கேட்டார்கள். அவர் முதலில் உடல்கூறு என்ற மொழிபெயர்ப்பு நூலைக் கொடுத்தார். இது 
1855 ஆம் ஆண்டில் அச்சேறி வெளிவந்தது. தொடர்ந்து மேலும் ஏழு நூல்களை சாமுவேல் மொழி பெயர்த்துக் 
கொடுத்தார். அத்தனையும் வெளியிடப்பெற்றன. 
  
தமிழ் மருத்துவநூல் தந்தை
  
1873 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்று அமெரிக்காவுக்குத் திரும்பினார். பிறகு காலமானார்.
  
மாச்சூசெட்ஸ் நகரில் அவரது கல்லறை இருக்கிறது. அதில் தமிழ் மருத்துவ நூல் தந்தை. என்று 
பொறிக்கப்பட்டிருக்கிறது. 
  
அதே நகரப் பொது நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடி ஒன்று இருக்கிறது. அதன் மீது மருத்துவர் இனோகிரீன் 
அவர்களுக்கு மருத்துவர் சாமுவேல் பிஸ்கிரீன் அனுப்பி வைக்கப்பட்டது - என்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.
  
நூலின் பெயர் குணபாடல் என்பது. 148 பாடல்கள் உள்ளன. நோய்களின் அறிகுறி, அதற்கு மருந்து, அந்த மருந்து 
தயாரிக்கும் முறை ஆகியவை பாடலாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. 
  
மருத்துவக் கல்வியைத் தமிழில் கற்பிக்க முன்னோடியாக இருந்த மருத்துவர் சாமுவேல் என்ற பச்சையப்பன், 
தமிழ் மக்கள் நினைத்துப் போற்றுவதற்கு உரியவர். 
  
நன்றி : வாராந்திர ராணி - 24.4.2005 
நன்றி : சிந்தனையாளன் இதழ் - சூன் 2005.
 
  
 
முட்டாள் தமிழனே நீ எப்போது திருந்தப் போகின்றாய் ?
  
சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் - இம்மூன்று படங்களும் நமது வாழ்வியல் நூல்களோ, வழிகாட்டி நூல்களோ 
அல்ல. ஆனால் இவை மூன்றும் நமது சமுதாயத்தைச் சீரழிக்கும் சாத்தான்கள். குமுகாயத்தைக் கெடுக்க 
வந்த கோடரிக் காம்புகள். 
  
நம்மை மகிழ்விக்கவும், சில நேரங்களில் அறிவுரை கூறிடவும் திரைப்படங்கள் தேவைதான். ஆனால் திரைப்படமே 
வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. திரைப்பட நாயகர்களுக்குத் தமிழகத் தமிழர்களில் சிலர் பாலூற்றி வழிபாடு 
செய்துள்ளனர். 
  
தங்களுடைய தாய் தந்தையர் மறைந்த நாளை நினைவில் வைத்திருக்காத இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் 
ரஜினி, கமல் மற்றும் விஜயிக்கு பாலூற்றி வழிபாடு செய்வதைச் சாதனையாகக் கருதுகின்றனர். இதில் மலேசியத் 
தமிழன் மட்டும் சளைத்தவனா?  45 நாள்கள் தொடர்ந்து ஓடுகிறது சந்திரமுகி திரைப்படம். ஒரு சரக்குந்து 
ஓட்டுநர் இப்படத்தை மூன்று முறை பார்த்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். 
  
ஒரு தமிழாசிரியர் இரண்டு முறை பார்த்தாராம். இப்படத்தில் அப்படி என்ன கற்றல் கற்பித்தல் பயிற்சி அல்லது 
அறிவுறுத்தல்கள் இருந்தன எனத் தெரியவில்லை. 
  
திரைப்படத்தை ஒருமுறை பாருங்கள், போதும். முட்டாள்கள்தான் இரண்டு மூன்றுமுறை பார்ப்பார்கள். தமிழகத்தில் 
அன்றாட சாப்பாட்டிற்குத் திண்டாடிடும் ஒரு ஆட்டோ ஓட்டுநர், சந்திரமுகி படம் பார்க்க 100 நாட்களுக்குரிய 
நுழைவுச் சீட்டினை உறுதிப்படுத்திக் கொண்டதைப் பெருமையாகக்கூறி தனது தலையை மொட்டை 
அடித்துக்கொண்டார். பாடுபட்டு உழைக்க வழியைக் காணாமல் இந்தக் கேடுகெட்ட புத்தி எதற்கு? இப்படியெல்லாம் 
செய்தால் உணவு வந்துவிடுமா ?
  
ரஜினியும் சிவாஜியின் குடும்பமும் தமிழகத் தமிழனை மொட்டையடித்தது போதாது என்று விஜயும் மொட்டை 
அடிக்கத் தொடங்கிவிட்டார். 
  
தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகம் அல்லது திரையிடும் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் 
பெறுகின்றன. அவர்களும் அவர்கள் குடும்பங்களும் சுகமாய் வாழ்கின்றனர். அவையெல்லாம் உங்களைத் தேடி 
வருமா..? 
  
தமிழ் நண்பனே நன்கு சிந்தித்துப் பார்.
  
தமிழகத் தமிழனின் அடிமைத்தனம் நமக்குத் தேவையில்லை.
  
அவன்பால் உள்ள திரைப்படவெறியும், சோம்பேறித்தனமும் நமக்கு வேண்டா. ஒரு புதிய தமிழ்க் குமுகாயக் 
கட்டமைப்பை உருவாக்குவோம். அது நமது தனித் தன்மையைக் காட்டட்டும். இதோ...
  
பினாங்கு பயனீட்டாளர் குரல் நடத்திய ஆய்வின்படி, சந்திரமுகி ஏறக்குறைய 35 அரங்குகளிலும், மும்பை 
எக்ஸ்பிரஸ் ஏறக்குறைய 30 அரங்குகளிலும், சச்சின் ஏறக்குறைய 20 அரங்குகளிலும் திரையிடப்பட்டிருந்தன.
   
இந்த மூன்று திரைப்படங்களுக்கான நுழைவுச் சீட்டின் விலைகள் ரிம 10 லிருந்து 12 வரை விலையேற்றம் கண்டு 
விற்கப்பட்டு வருகிறது. சராசரி ஒவ்வொரு திரை அரங்கத்திலும் 200 இரசிகர்கள் என்று கணக்கிட்டால் இந்த 
மூன்று படங்களுக்கும் ஒரே நாளில் ரிம 680,000 செலவு செய்துள்ளனர் மலேசிய பொறுப்பற்ற தமிழர்கள். 
அதாவது 14-5-05 வரை, 30 நாள்களில், ரிம 2,04,00,000(இரண்டு கோடியே நான்கு இலட்சம் வெள்ளி) 
நுழைவுச் சீட்டு வாங்கப்பட்டிருக்கின்றன. 
  
தமிழா சிந்தித்துப் பார். 10 வெள்ளி நுழைவுச்சீட்டை 15 வெள்ளி வரை வாங்கும் நீ, உனது தமிழ்ப்பள்ளிக்காக 
ரிம 2 கொடுத்து உதவி இருந்தால் நாம் எவருக்கும் தலை வணங்காமல் நமது உரிமையினை நிலைநாட்டி 
முன்னேறிய குமுகாயமாக வெற்றி நடைபோடலாம் அல்லவா? இல்லையென்றால் முட்டாள் தமிழன் என்பதைவிட 
மூடத் தமிழன் என்றே அழைப்பார்கள். 
  
குமாரி.கி. கோகிலவாணி, பொறுப்பாசிரியர்  
செம்பருத்தி இதழ் - சூன் 2005 - தலையங்கம்.
 
  
 
எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
  
செம்பருத்தி இதழுக்கு எழுதுகின்ற எழுத்தாளர், வாசகர் அன்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 
  
தங்களது எழுத்தோவியங்களில் கூடுமானவரை ஆங்கிலச் சொற்கள் கலவாமல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
மேலும் பலர் தங்களது பெயர்களுக்கு முன்னால் ஆங்கலம் கலந்த எழுத்தைத் தமிழில் எழுதுவதாகக் கருதுகின்றனர். 
எடுத்துக்காட்டாக, இராமசாமி என்ற எழுத்திற்கு - இரா - எழுதாமல் - ஆர் என்று எழுதுகின்றனர். தங்களது 
பெயருக்கு முன்னால் செ.இராமலிங்கம் என்றும், சி.ப.கனிமொழி என்றும் எழுதக் கோருகிறோம. அவற்றுகுப் 
பதிலாக எஸ்.இராமலிங்கம்  என்றும் எஸ்.பி.கனிமொழி என்றும் எழுதுவதைத் தவிர்த்துவிடுமாறு உங்களின் 
அன்பான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். - ஆசிரியர் - 
  
செம்பருத்தி இதழைப் போல மற்ற இதழாளர்களும் அறிவிப்பு வெளியிட்டு அறிவுறுத்தலாமே. தமிழில் 
முன்னெழுத்து எழுதாத, அயற்சொற்களில் எழுதுகிற படைப்பாளிகளின் படைப்புகள் வெளியிடப்பட மாட்டாது 
என அறிவிப்புக் கொடுங்கள். படைப்பாளிகள் திருந்தினால் அவரது படைப்புகள் வழி மக்களும் 
திருந்துவார்கள் - தமிழ்க்கனல்.
 
  | 
   |