அன்புடையீர் - வணக்கம்.
ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றிப் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மனிதம் தொலைந்து, சுயநலமும், பொருளீட்டும் வேகமும் மக்களை முன்னிழுத்துச் செல்கின்றன. ஒன்றைத் தவறு என்று நினைப்பதற்குள் அதைவிட மோசமான தவறு நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் தரும் காட்சிப் பகுதிகள் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன. எதை நோக்கிய பயணத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதன் முடிவுதான் என்ன என்ற வினாவே நம்முள் எழுகிறது. இப்படியே சென்றால், இனி வரும் தலைமுறையினருக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம். அவர்களுக்காக நாம் எதைக் காட்டப் போகிறோம். யாராவது கொஞ்ச நேரம் சிந்திப்பார்களா? வரலாறு என்பதே, நடக்கிற நிகழ்வுகளின் தொகுப்பு தான். இன்றைய நடைமுறைதான் நாளைய வரலாறு. இப்படிச் சி்ந்திக்கும் ஆற்றலை மனிதன் ஏன் இழந்து போனான்? எவை அவனது மூளைக்குத் திரை போட்டன? இப்படியான சூழலில் உலகம் முழுவதும் வாழுகின்ற நம் தமிழ் மக்கள் எப்படி இயங்க வேண்டும். மொழியையும், நாட்டையும் இரு கண்களாக நினைக்க வேண்டும். நம் இளம் தலைமுறையினரை நமது பண்பாடுகளிலிருந்து பிறழாத நிலையில் வளர்த்தெடுக்க வேண்டும். நம் மக்கள்தான் நமக்கான சொத்து. அவர்களை ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். நுட்பமும் ஆழமும் உடையவர்களாக முறைபடுத்த வேண்டும். புதியன கண்டறியும் ஆற்றலும், புதுமைகளை வடிவமைக்கிற ஆற்றலும் இவர்கள் அடைய வேண்டும். அவர்களது கல்வியும், பயிற்சியும் இதை நோக்கியதாக இருக்க வேண்டும். இதற்கான திட்டமிடுதலை வரிசைப்படுத்தி, வளத்தைச் சேகரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். இவை பின்வருகிற நம் தலைமுறையினருக்கு படிக்கட்டுகளாக இருக்கும் வகையில் வரிசைப் படுத்த வேண்டும். இந்த நோக்கில் ஏற்புடையவர்கள் முதலில் ஒன்றிணைய வேண்டும். நண்பர்கள் இதுபற்றி யோசிக்கவும். தமிழம் வலை இவை குறித்து இயங்கவிருக்கிறது. அன்புடன்,
பொள்ளாச்சி நசன் 5-1-2009
தமிழ் படிக்க உதவுகிற தமிழம் வலையின் பக்கங்களை நம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.