அன்புடையீர் - வணக்கம்.
கடந்த திங்களின் ஒவ்வொரு நாளிலும், தமிழர்களின் மீது பேரிடியாய் இறங்கிய பல்வேறு வகையான குண்டுகள் அனைத்தும், மனச்சாட்சியுள்ள அனைவரையுமே செயலிழக்க வைத்தன. சாட்சி இல்லாமலேயே ஒரு சண்டை நடந்து முடிந்து விட்டது. எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்றே பல நாள்கள் ஓட்டிவிட்டன.
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், உறுப்புகள் இழந்தும், அலைக்கழிக்கப்பட்டும் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் மறக்க முடியாதவை. வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் இவை. இதனை அரங்கேற்றி முகத்திரை கிழிந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டுச் சதியால் அப்பாவித் தமிழர்கள் நிலைகுலைந்துள்ளனர். இன்னும் கம்பி வேலிகளுக்குப் பின் வாடும் அவர்களது நிலைமை அறிந்து நெஞ்சு வெடிக்கிறது.
துள்ளிக் குதித்த நாட்டில், அடிமைகளாய் கையேந்தி நிற்கும் நிலை, உளவியல் அடிப்படையில் சிதைந்து நிற்கும் நிலை, வீடு திரும்புவோமா என்று காத்திருக்கும் நிலை - வேதனைக்குரியது. புலம் பெயர்ந்த சொந்தங்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலில் வந்த உணவையே தடுத்துக் கிடைக்க விடாது செய்யும் சிங்கள வல்லாதிக்க மனோநிலை. ஒரு கவளம் உணவிற்கே இப்படித் தடைபோடும் சிங்களம், தமிழர்களைத் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பவிட விரும்புமா என்பதை உலகநாடுகள் ஏன் விளங்கிக் கொள்ள மறுக்கின்றன.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே... உலகநாடுகள் உணரும் காலம் விரைவில் வரும். அதுவரை எத்தனை இழந்தாலும் மீண்டும் வென்றெடுக்கக்கூடிய நெஞ்சுரத்தோடு ஏதிலியாய் நிற்கும் தமிழ் மக்களுக்காக நாம் துணை நிற்போம். தமிழீழம் மலரும். புலிக்கொடி பறக்கும்.
அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 4.7.09