|
அன்புடையீர், வணக்கம்
1985 இல் விடுதலைப்பறவை என்ற இதழைத் தொடங்கிய பொழுது என்னிடம் எந்த இதழ்களோ நூல்களோ இல்லை. என் இதழுக்கு மாற்றுப்படியாக
வந்த இதழ்களை வரிசைப்படுத்தி அடுக்கிப் பார்தேன். பலரின் உயிர்த்துடிப்புகள் தெரிந்தன. சிற்றிதழ் கண்காட்சி எனப் பல இடங்களிலும் என் சொந்த
செலவில் சென்று, கண்காட்சி நடத்தி, இதழ்களைத் திரட்டலானேன். வகைக்கு ஒன்று எனத்திரட்டிய எனது பயணம் ஒரு கட்டத்தில் ஒற்றை இதழ்களை
வைத்துக் கொண்டு இதழின் வரலாறு காட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகு இதழ்களை முழுமையாகத் திரட்டத் தொடங்கினேன்.
நூல்களும் இதழ்களும் குவிந்தன. அடுக்குவதும் பாதுகாப்பதுமே வேலையானது. இந்த நிலையில் நூலகம் இணையதளம் இதழ்களை அப்படியே
பாதுகாக்கிற ஒரு முறைவழி இணையத்தில் வலையேற்றி இலவயமாக வலை இறக்கவும் அனுமதி அளித்திருந்தது கண்டேன். அதன் கோபி இதழ்களை
வருடிப் பாதுகாக்கிற முறையை அறிமுகப்படுத்தினார். நான் வாழும் காலத்திற்குள்ளேயே நான் சேகரித்த அனைத்தையும் மின்னாக்கம் செய்து பாதுகாக்கவும்
அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் இயலும் என்று அறிந்து மகிழ்ந்தேன். வருடி, படவடிவக்கோப்பாக்கி, இணையத்தில் இணைத்து வந்தேன்,
நாள் ஒரு நூல் இணைப்பது என்று தொடங்கினேன். படிப்படியாக அது நாளுக்கு இரண்டு, மூன்று, ஐந்து என அதிகரித்துக் கொண்டே சென்றது.
1000, 2000, 3000, 4000 என எண்ணிக்கை கூடியது, வருடுதல், உருவாக்குதல், வலையேற்றுதல், இணையதளம் வடிவமைத்தல் எனப் பணிகள் கூடிக்கொண்டே
இருந்தன. "இன்னோர்க்கும் என்னாது என்னொடும் சூழாது எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழவோயே" என்ற நிலையில் தான் அது நகர்ந்தது. யார் பயனாளிகள்
என்ற நிலையே தெரியாது. ஓடிக்கொண்டே இருந்தது. 4000 கோப்புகள் இணையத்தில் இருந்த பொழுது - வலை இறக்குபவர்கள் தொடர்ந்து இறக்கியதால்,
கடந்த ஆகத்து, செப்டம்பரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சென்று தளம் செயலிழந்தது. அனைத்தையும் அழிக்க நேர்ந்தது. தற்பொழுது வருடுதல்,
உருவாக்குதல், இணையப் பட்டியல் ஆக்குதல் என்கிற வேலையை மட்டும் செய்து வருகிறேன். வேலைப்பளு குறைந்ததால் தற்பொழுது ஒருநாளைக்குப்
பத்து கோப்புகளை உருவாக்கவும் இணைக்கவும் முடிகிறது. இதேவேகத்தில் சென்றால் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் என் தொகுப்பில் உள்ள
அனைத்தையும் நான் மின்னாக்கம் செய்து விடுவேன்.
ஒவ்வொரு நாளும் புதியதாக நுழைபவர்களும், பழைய பயனாளிகளும் எங்களால் வலை இறக்க இயலவில்லை எப்படி இறக்குவது என மடல் எழுதிக் கொண்டே
இருக்கிறார்கள். வலை இறக்க வகைசெய்யாது இருப்பதால் பாதுகாத்து என்ன பயன் என்ற வினாவையும் எழுப்புகிறார்கள். உங்கள் இலக்கு தான் என்ன என்று
வினவுகிறார்கள். எனவே தான் இந்தக் குறிப்பினை இப்பொழுது எழுதுகிறேன்.
பாதுகாப்பவை அடுத்த தலைமுறையினருக்காக என்பதே எனது இலக்கு. அதற்கான அடித்தளப்பணியையும் செய்து வருகிறேன். எனவே அது தொடரும்.
1980க்கு முன் தமிழில் வெளிவந்த அனைத்து நூல்கள் மற்றும் இதழ்களையும் மின்னாக்கம் செய்துவிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகவே
தொடர்ந்து இயங்குகிறேன். திரட்டுகிறேன், பாதுகாக்கிறேன், மடல் எழுதும் நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள். நீங்களும் என்னோடு, என் பணியில் இணைய
வேண்டுகிறேன். தமிழில் வெளிவந்தவற்றைத் திரட்டுதல், பாதுகாத்தல் என்கிற செயலில் நீங்களும் இணைந்தால் முழுமையாகத் திரட்டி விடலாம் என்றும்
நம்புகிறேன். உங்களுக்கு இப்படிப் பாதுகாப்பதின் முக்கியத்துவம் தெரியும் என்பதால்தான் உங்களிடம் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். என்னோடு
இணைபவர்கள் பழைய புத்தகக் கடைக்குச் சென்று விடுபட்ட இதழ்கள், நூல்களைத் திரட்டிக் கொடுத்தால் நான் அவற்றை படவடிவக் கோப்பாக்க அணியமாக
இருக்கிறேன். அல்லது நீங்களே செய்து பாதுகாப்பதாக இருந்தாலும் அதற்கும் உதவுகிறேன். இந்தச் செயற்பாட்டில் இணையும் நாம் அடுத்த தலைமுறையினருக்குத்
தமிழ், தமிழரின் வரலாற்றை கொண்டு செல்வோம். முதன்மையான இப்பணியில் என்னோடு இணைய விருப்பம் இருப்பவர்கள் இணைந்து இயங்க அன்போடு வேண்டுகிறேன்.
அன்புடன்
தமிழ்க்கனல்
தமிழம் வலை - 8903002071 - pollachinasan@gmail.com - skype ID : pollachinasan1951
|
|