தமிழம் வலை - கணினிச் செயற்பாடுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள் - இறுவட்டு


தம்பா மின்னூல் பதிப்பகம் - சென்னை நெட்வொர்க்.காம்இலக்கிய உலகில் வணங்குதற்குரிய மா மனிதராக இன்றும் போற்றப்படுவர் புதுமைப்பித்தன். ஆனால் அவர் வாழும் காலத்தில் அவர் பட்ட இன்னல்கள் கணக்கிலடங்கா. அதுவும் அவரது இறுதி நாள்கள் வாழ்க்கையோடு போராடுகிற நாள்களாகவே அமைந்தன. அவரது இறுதி ஊர்வலம் நான்கைந்து பேர்களடங்கிய சிறு கூட்டமாகவே இருந்தது. யாரும் அவரைக் கவனிக்கவில்லை. அவரது எழுத்திற்கான மரியாதையையும், மதிப்பையும் அவர் வாழும் காலத்தில் யாரும் கொடுக்கவில்லை. புதுமைப் பித்தன் என்னும் உயரிய படைப்பாளி நொந்து நொந்து வாழ்ந்த வாழ்க்கை தரமான தமிழ்ப் படைப்பாளிகளின் நிலையே இதுதானோ என்று வேதனைப்படும் வகையில் அமைந்திருந்தது.

அவரது மறைவிற்குப் பிறகு அவரது படைப்புகளை இப்படிக் கணினி வடிவில், ஒரு குறுவட்டிற்குள் அவர் எழுதிய அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கி வெளியிட்டுள்ளது புதுமைப்பித்தனுக்குச் செய்த மிகப்பெரிய நன்றிக்கடன். இக்குறுவட்டு கணினியில் இயக்கிப் படிக்கிற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள pdf கோப்புகளை கொண்டுள்ளது. இக்குறுவட்டில் புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், கடிதங்கள் என அவரது படைப்பாக்கங்கள் அனைத்தும் உள்ளன. இவற்றை புத்தகங்களாக வாங்கிப் படிப்பதென்றால் அதற்கு ஆகும் செலவு மட்டுமல்ல, அது அடைத்துக்கொள்ளும் இடம் ஆகியவற்றைக் கணக்கிலெடுக்கும் பொழுது இவ்வகையான குறுவட்டுகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே நினைக்கிறேன்.

புதுமைப்பித்தன் படைப்பாக்கங்களை கணினிவடிவில் வெளியிட்டுள்ள தம்பா மின்னூல் பதிப்பகம் வாழ்த்துதற்குரிய செயலையே செய்துள்ளது. தொடரட்டும் இவர்களது பணி.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,