சூடாமணி நிகண்டு
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி

மண்டல புருடர் வரலாறு

இவர் தொண்டை நாட்டின்கண் உள்ள பெருமண்டூர் எனப்படும் வீரபுரத்தில் பிறந்தவர். வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் என இவரே கூறியது காண்க. வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவர் சமயம் ஆருகதம், அஃது இந்நூல் முகத்து, சொல்வகை யெழுத்தெண்ணெல்லாந் தொல்லைநா ளெல்லையாக, நால்வகையாக்கும் பிண்டிநான்முகன் - எனக் கூறியதனாலும் விளங்கும். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தவர். பல வடசொற்களுள் தமிழ் கூறியுள்ளார். இப்போது அச்சாகியுள்ள நிகண்டுகள் பலவற்றுள்ளும் இதுவே விருத்தயாப்பில் இருத்தலின் யாவரும் படித்தற்கு எளியதாக உள்ளது.


இருமை

இப்பிறப்பு, வருபிறப்பு (இம்மை, மறுமை)

இருவினை

நல்வினை, தீவினை

இருவகைத் தோற்றம்

சரம், அசரம் (அசைதல், அசையாமை)சரம் - இயங்கியற்பொருளென்றும், அசரம் - நிலையியற் பொருளென்றும் தமிழில் வரும்

இருசுடர்

சந்திரன், சூரியன் (இரண்டொளி)

இருமரபு

தாய்மரபு, தந்தை மரபு

இருவகைக் கந்தம்

நற்கந்தம், துர்க்கந்தம்

இருவகையறம்

இல்லறம், துறவறம்

இருவகைப்பொருள்

கல்விப் பொருள், செல்வப்பொருள் - பொருள் பொய்ப் பொருள் முதலாகப் பலவகைப்படினும், பெரும்பான்மை கருதி இரண்டென்றார்.

இருவகைக்கூத்து

தேசிகம், மார்க்கம் - தேசிகம் என்பது இயற்சொல் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகம் என்பர் அடியார்க்கு நல்லார். மார்க்கம் என்பது வடுகு

முப்பழம்

வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்

மூவகைப்பாவபுண்ணிய வழக்கம்

செய்தல், செய்வித்தல், உடன்படல்

மும்மை

உம்மை, இம்மை, மறுமை (சென்ற பிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு)

முப்பொறி

வாக்கு, காயம், மனம்

முக்காலம்

இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம்

முத்தொழில்

படைத்தல், காத்தல், அழித்தல்

மூவிடம்

தன்மை, முன்னிலை, படர்க்கை (முறையே யான், நீ, அவன்) முன்னிலை முன்நிற்றலையுடையவன், படர்க்கை பேசும் விஷயம் செல்லுதலையுடைய இடம், படர்தல் - செல்லல்

மூவுலகம்

பூமி, அந்தரம், சுவர்க்கம்

முக்குற்றம்

காமம், வெகுளி, மயக்கம் காமம் - ஆசை, அஃதாவது பொருண்மேற் செல்லும் பற்றுள்ளம். வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காதபோது உண்டாவது, மயக்கம் - கோபத்தின் காரியமாகவுள்ளது. வெகுளி - வெகுள் - பகுதி, இ - விகுதி ( இம்மூன்று சொற்களுள் வெகுளி ஒன்றே தமிழ்ச்சொல் )

முச்சுடர்

சோமன், சூரியன், அக்கினி

மூவகை மொழி

பழித்தல், புகழ்தல், மெய்கூறல்

மூவகை வேதத்தீ

காருகபத்தியம், தக்ஷிணாக்கினி, ஆகவநீயம் - காருகபத்தியம் இல்லறத்தானுக்கு உரிய யாகாக்கினி, தக்ஷிணாக்கினி முன்கூறிய காருகபத்தியத்துக்கு இடப்புறத்திலுள்ளது, ஆகவநீயம் யாகத்துக்கு உரியது

மூவகையுயிர்த்தீ

உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி. உதராக்கினி உதரம் - வயிறு, ஜாடராக்கினி.

முக்குணம்

சாத்துவிகம், இராசதம், தாமதம், (ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடைமை, ஐம்புலனடக்கல், இவை சாத்துவிகச் செயல்கள்)

இராசதச் செயல்

தானம், தவம், மெய்ம்மை, தருமம்பேணல், ஞானம், கல்வி, கேள்வி

தாமதச்செயல்

பேருண்டி, ஒடுங்கல், சோம்பு, மூரி, காமம், நீதி, கேடு, நித்திரை, மறதி, தணியாக்கோபம், வஞ்சகம், மூரி - அருள் - தொடர்பில்லாதார் இடத்தும் தோன்றும் உள்ளவுருக்கம்

மூவகைத் தானம்

உத்தமதானம், மத்திமதானம், அதமதானம்

உத்தமதானம்

தருமவழியாற் சம்பாதித்த பொருளை மனம் இந்திரியவழி செல்லாது தடுத்து நோற்குந் தவமுடையாரிருக்குமிடம் சென்று பெற்றுக் கொள்க எனக் குறையிரந்து பணிந்து கொடுத்தல்

மத்திமதானம்

அங்கக்குறைவுடையோர்க்கும், பெண்களுக்கும், செவிடர்க்கும், வறியவர்களுக்கும் (பிரதிபலன் கருதாது) கொடுத்தல்

அதமதானம்

அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் பலன் கருதிக் கொடுத்தல், கண்ணோட்டம் - தாக்ஷண்ணியம், கண் + ஓட்டம் = கண்ணிணது ஓட்டம், கைம்மாறு - கையினின்று மாறுதலையுடையது, பிரதியுபகாரம்

திரிகடுகம்

சுக்கு, திப்பிலி, மிளகு

திரிபலை

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

திரிபுரம்

பொன்மதில், வெள்ளிமதில், இருப்புமதில்

சூரியனுக்குரிய மூவகை வீதி

மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி முறையே ( உத்தராயநம், பூர்வாயநம், தக்ஷணாயநம் என்பார் வட நூலார்) சூரியன் வைகாசி ஆனி ஆடி ஆவணி மாதங்களில் மேடத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான், சித்திரை புரட்டாசி ஐப்பசி பங்குனிகளில் ரிஷபத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். கார்த்திகை மார்கழி தைகளில் மிதுனத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். ஆதலால் அந்த மாதங்கள் மேட, இடப, மிதுன வீதிகளெனப்படும்

நால்வகை நிலம்

முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், ( முல்லை காடுங்காடு சேர்ந்த இடமும், உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் அஃதாவது நிமித்தமும் அதன் கற்பு. குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும், உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும், நெய்தல் - கடலுங் கடல்சார்ந்த இடமும், உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும், மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும், உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்)

நாற்கதி

தேவ, மனுட, விலங்கு, நரக பிறப்புகள்

நாலவகையங்கம்

கஜம், ரதம், துரகம், பதாதிகள் ( கஜம் -யானைப்படை, ரதம் - தேர்ப்படை, துரகம் - குதிரைப்படை, பதாதி - காலாட்படை)

நால்வகையிழிசொல்

குறளை, பொய், கடுஞ்சொல், பயனில்சொல்

நால்வகைவேதம்

இருக்கு, யசுர், சாமம், அதர்வம்

நால்வகைப் பொருள்

அறம், பொருள், இன்பம், வீடு. அறம் - திருக்குறள் முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும். பொருள் - அறநெறியால் பொருளீட்டுதல், இன்பம் - அறத்தின் வழி தன் மனைவியோடு அனுபவித்தல், வீடு - மோக்ஷம் - இம்மூன்றனையும் அறவே விடுதல். இதனைக் குறிக்கும் வெண்பா, ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருளெஞ்ஞான்றுங் காதலிருவர் கருத்தொருமித் தாதரவு பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு (ஒளவையார்).

நால்வகைக் கேள்வி

மேற்படி நான்கினையு முணர்த்தும் புருஷார்த்த நூல்களைக் கேட்டல்

நால்வகையரண்

காடு, மலை, நீர், மதில்

ஆடவர்க்குரிய நால்வகைக் குணம்

அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். நிறை பகுதி, ஓர்ப்பு - ஆராய்தல், கடைப்பிடி துணிந்த ஒருண்மையினை விடாது பற்றுதல்

பெண்களுக்குரிய நால்வகைக் குணம்

நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு

நால்வகைப் புண்ணியத் தோற்றம்

தவம், ஒழுக்கம், கொடை, கல்வி இவற்றை உடையராய்ப்பிறத்தலே புண்ணியர். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, பயிர்ப்பு - அருவருப்பு, புண்ணிம் - பரிசுத்தம்

நால்வகைப் பொன்

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம். சாம்பூந்தப் பொன் எல்லாவற்றிலுஞ் சிறந்தது. ஆசிரியர் நக்கீரனார் - நாவலொடு பெயரிய பொலம்புனைய விரிழை - என்பர்.

நால்வகைப்பூ

கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, அல்லது நிலப்பூ

நால்வகை உணவு

உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன

நால்வகையூறுபாடு

எறிதல், குத்தல், வெட்டல், எய்தல்

நால்வகையுபாயம்

சாமம், பேதம், தானம், தண்டம் ( சாமம் - சமாதானம், பேதம் - பிரித்துக் கோடல், தானம் - பொருள்தரல், தண்டம் - போரிடுதல் )

நால்வகையுயிர்த்தோற்றம்

கருப்பையிற் தோன்றுவது, முட்டையிற் றோன்றுவது, வித்து வேர் முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவது, வேர்வையிற் தோன்றுவது

நால்வகைப்புலவர்

கவி, கமகன், வாதி, வாக்கி
கவியாவான் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் யாவரும் வியக்கும்படி பாடுவோன்.
கமகனாவான் - அரும்பொருட்களைச் செம்பொருணடையினவாகக் காட்டி விவகரிப்போன்
வாதியாவான் - ஏதுவும் மேற்கோளும் எடுத்துக்காட்டி வாதித்துப் பிறன்கொள்கையை மறுப்பவன்
வாக்கியவான் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பொருளையும் யாரும் விரும்பிக் கேட்குமாறு குற்றமறக் கூறுவோன்.

ஆசுகவி

சபையிலே ஒருவனாற் கொடுக்கப்பட்ட பொருள், பாட்டு, அடி முதலியன அமையும்படி விரைந்து பாடவல்லவன்

மதுரகவி

பொருட்சிறப்பும் சொற்சிறப்பும் தொடையும் தொடைவகைகளும் நெருங்கி உருவக முதலிய அலங்காரங்களும் ஓசையுந் தோன்றும்படி பாடவல்லோன்.

சித்திரகவி

மாலைமாற்று, சுழிகுளம், ஏகபாதம், சக்கரவகை, ஏழுகூற்றிருக்கை, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழுத்தில்லாப் பாட்டு, ஒரு பொருட்பாட்டு. சித்திரகவி முற்காலத்தில் மந்திரோச்சாரணநிமித்தம் சக்கரங்களில் எழுத்துகளை அமைத்துப் பாடப்பெற்று வந்தது. பிற்காலத்தில் யாவரும் எதனையுஞ் சித்திரமாகப் பாடத் தொடங்கினர். அது பொருந்தாது எனத் தொல்காப்பிய வுரையில் நச்சினார்க்கினரியர் கண்டித்தனர்.
சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், ஓரெழுத்துப்பாட்டு, ஓரினப்பாட்டு, காதைகரப்பு, கரந்துறைபாட்டு, கோமூத்திரி, கூட சதுர்த்தம்,
சருப்பதோபத்திரம் என்பவைகளும், எழுத்தும் எழுத்தின் வர்க்கமும் உதாரணமும் நோக்கிப்பாடும்படி வடநூலுள்ளே வைத்த மிறைக்கவிகளும், பிறவும் பாடவல்லோன் சித்திரகவியாம்.

வித்தாரகவி

மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மடலூர்தல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல், இசை, சாடகம் என்பனவற்றை விரித்துப் பாடவல்லோன்

வில்வீரர் நிற்கும் நால்வகை நிலை

பைசாசம், ஆவீடம், மண்டலம், பிரத்தியாலீடம் - பைசாசமாவது - ஒரு காலை ஊன்றி ஒருகாலை முடக்கி நிற்றல், ஆலீடமாவது - வலக்காலை வளைத்து இடக்காலை முன்வைத்து நிற்றல், மண்டலமாவது - இருகாலையும் மண்டலித்து நிற்றல், பிரத்தியாலீடமாவது - வலக்காலை முன்வைத்து இடக்காலை மண்டலித்து நிற்றல்

ஐவகைத் தானப் பொருத்தம்

பாலன், குமரன், அரசன், கிழவன், மரணம். தானப்பொருத்தம் பார்க்கும்போது நெட்டெழுத்துக்களை அவ்வவற்றிற் கினமாயுள்ள குற்றெழுத்திலடக்கி ஐந்தெழுத்தாகக் கொண்டு, பாட்டுடைத் தலைவன் பெயரின் முதலெழுத்தைப் பாலன்றானமாக வைத்தெண்ணுக. எண்ணும்போது எடுத்துக் கொண்ட முதற்சீரின் முதலாம் எழுத்து முதன் மூன்று தானத்துளொன்றாய் வரின் நன்மை. பின்னிரண்டு தானத்தில் வருமாயின் தீதாம். நற்கணமாகிய மூவகைச்சீரே எல்லாவகைப்பட்ட பாக்களுக்கும் முதற்சீராகக் கொண்டு பாடல் வேண்டும்

பஞ்சபட்சி

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் இவற்றை அ, இ., உ என்னும் எழுத்துகளும் உணர்த்தும். முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்பன இவற்றின் தொழில்களாகும்.
இப்பட்சிகளும் தொழில்களும், அபரபக்கத்திலே மயில், கோழி, காகம், ஆந்தை, வல்லூறு எனவும், ஊண், சாவு, துயில், அரசு, நடை எனவும் பேதமாகக் கொள்ளப்படும். தன் பெயர்ப் பக்ஷி சாவு துயில் இல்லாத பொழுதிற் செய்யுள் செய்தல் மிகவும் நன்மை

ஐவகைப்புலனுகர்வால் உயரிழப்பன

மீன் சுவையினாலும், வண்டு நாற்றத்தினாலும், தும்பி பரிசத்தினாலும், அசுணமா இசையினாலும், விட்டில் ஒளியினாலும் உயிரிழக்கும். அசுணம் ஒருவகை இசையறி விலங்கென்று சிலரும், இசையறி பறவையெனச் சிலரும் கூறுவர். இப்போது ஆராய்ச்சியினால் பறவையென்றே தெளிவாகிறது

ஐந்திணை

குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம்

பஞ்சவாசம்

ஏலம், தக்கோலம், இலவங்கம், சாதிக்காய், கர்ப்பூரம்

ஐவகைவிரை

சந்தனம், அகில், தகரம், குங்குமப்பூ, கோட்டம்

ஐவகையகிற்கூட்டு

சந்தனம், கருப்பூரம், எரிகாசு, (காசுக்கட்டி) தேன், ஏலம்

அரசனைம்பெருங்குழு

மந்திரி, புரோகிதன், தூதன், ஒற்றன், (மாறுவேடங்கொண்டாராய்வோன்) சேனாபதி

அவனைம்பொருஞ்சுற்றம்

படைத்தொழிலாளர், நிமித்தம்பார்ப்பவர், ஆயுள்வேதியர், நட்பாளர், அந்தணர், ஆயுள்வேதியர்- வைத்தியர், அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர், அஃதாவது துறவிகள் இவ்வாறன்றி அந்தத்தை அணவுவோர் அஃதாவது வேதாந்தத்தை நோக்குவார் என்று கூறினர் நச்சினார்க்கினியர்

ஐவகைக் குரவர்

அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்

ஐம்பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

பஞ்சாங்கம்

திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம்

பஞ்சபாதகம்

கொலை, களவு, பொய், கள்ளுண்ணல், குருநிந்தை

பஞ்சசயனம்

மயிற்றூவி, இலவின் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, அன்னத்தூவி,

கூந்தலினைம்பால்

முடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள்

ஐவகைத்துரக கதி

மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி (மயூரம்-மயில்)

ஐவகையுணவு

கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்

ஐவகைவினா

அறியான்வினாவல், அறிவொப்புக்காண்டல், ஐயந்தீர்த்தல், அவனறிவுதான்கோடல், மெய்யவற்குக்காட்டல், அறிவொப்புக்காண்டல், அவனறிவு தன்னறிவுடன் ஒத்திருக்கும் பகுதியை அறிதல், அவனறிவுதான் கோடல், அவனறிவைத்தான் கொள்ளுதல்

ஐம்பூதம்

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் (ஆகாயம்- வெளி)

ஈசுரனைம்முகம்

சத்தியோசாதம், வாமம், அகோரம், தற்புருடம், ஈசானம், ஈசுவரன் ஐம்முகம் - ஈசானமூர்த்தி, படிகநிறமும் மூன்று கண்ணும் சூலம் அபயமும் உடையராய்ச் செளமியராய்ப் புருஷாகரமாய் இருப்பர், சத்தியோசாதமூர்த்தி வெண்ணிறம், வெள்ளை மாலை, வெள்ளாடை, பால்யரூபம், புன்னகை, அபயம், வாதம் உடையவர். வாமமூர்த்தி செந்நிறமும் சுரபிமாலையும் உயர்ந்த மூக்கும் கையில் கத்தி கேடயமும் சிவந்தபாகையும் உடையவர். அகோரமூர்த்தி வெண்மைகலந்த கருநிறம் காதிற் குண்டலம், மீசை, சிகை, கோரப்பல், பயங்கரமுகம், கபாலமாலை, சர்ப்பபூஷணம் முதலிய பெற்று எட்டுத்தோள்களையுடையவர், தற்புருஷமூர்த்தி நான்கு முனிவர்களைத் தந்தருள்புரிந்தவர்.

ஐவகை இசைக்கருவி

தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, கண்டக்கருவி, தோற்கருவி - முரசு முதலியன. புல்லாங்குழல் முதலியன. நரம்புக்கருவி யாழ் முதலியன, கஞ்சக்கருவி தாளம் முதலியன, கண்டக்கருவி மிடற்றால் பாடுதல்

ஐவகை வேள்வி

தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்யாகம், மாநுடயாகம். தேவயாகம் - தேவர்களைப் பூசித்தல், பிதிர்யாகம் - பிதுர்களைப் பூசித்தல், பூதயாகம் - பூதங்களுக்குப் பலிபோடுதல், மாநுஷயாகம் - அதிதி பூசை செய்தல், பிரமயாகம் - வேதம் ஓதுதல்

ஐவகைத் தாயர்

பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்

ஐவகைத் தொழில்

எண்ணல், எழுதல், இலைகிள்ளல், மலர்தொடுத்தல், யாழ்வாசித்தல்

மெய்யின் ஐவகையவத்தை

கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சீடு, நட்டுவிழுதல்

காடுதிரவியம் ஐந்து

அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி

கடல்படுதிரவியம் ஐந்து

உப்பு, பவளம், முத்து, சங்கு, ஓர்க்கோலை

நாடுபடு திரவியம் ஐந்து

செந்நெல், செவ்விளநீர், சிறுபயறு, வாழை, கரும்பு

நகர்படு திரவியம் ஐந்து

கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, யானை, அரசன்

மலைபடு திரவியம் ஐந்து

மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமப்பூ

ஐம்புலன்

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ( ஊறு - தொட்டறிதல் )

மன்மதபாணம் ஐந்து

தாமரைப்பூ, மாம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ, உன்மத்தம், மதனம், மோகம், சந்தர்பம், வசீகரணம் என்பன முறையே இவற்றின் பெயர்களாம்

ஐங்கணையவத்தை

முறையே சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பனவாம் சுப்பிரயோகத்தின்றன்மை - பேச்சும் நினைவும்,
விப்ரயோகத்தின்றன்மை - மூச்செறிந்து வருந்துதல்
சோகத்தின்றன்மை - வெதுப்பும் உணவு வெறுத்தலும்
மோகத்தின்றன்மை - அழுதலும் பிதற்றலும்
மரணத்தின்றன்மை - மயக்கமும் அயர்ச்சியும்

அந்தணர்க்குரிய அறுதொழில்

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் (வேட்டல் - யாகம்செய்தல்)

அரசர்க்குரிய
அறுதொழில்

ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைக்கலம்பயிலல், போர்செய்தீட்டல்

அரசர்க்குரிய ஆறங்கம்

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்

வைசியர்க்குரிய அறுதொழில்

ஓதல், வேட்டல், வேளாண்மை, வாணிகம், பசுக்காத்தல், உழவு

சூத்திரர்க்குரிய அறுதொழில்

பசுக்காத்தல், பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளையோதல், ஈதல், அந்தணா முதலியோர்க்கு அநுகூலமாகிய தொழில் செய்தல்

ஆறுசக்கிரவர்த்திகள்

அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவா, கார்த்தவீரியன்

வேதாங்கம் ஆறு

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம், சிக்ஷையானினி, முனிவர் இயற்றியது, இதன் கண் வேதசப்தங்கட்கு அக்ஷரத்தானம், உதாத்த அனுதாத்த ஸ்வரித ஞானங்கள் கூறப்பட்டுள்ளது. வியாகரணம் யானினி இயற்றியது. காத்யாயனரும் பதஞ்சலியும் வியாக்கியானம் செய்தனர். இதில் வேதசப்தங்களின் பிரகிருதி பிரத்யயஞானம் கூறப்பட்டுள்ளது. சந்தம் பிங்கலர் கர்த்தா, இதில் வேதத்திற் கூறப்பட்ட காயத்திரி முதலியவற்றின் சந்தங்களின் ஞானம் உணர்த்தப்பட்டிருக்கிறது. நிருத்தம் இதற்கு யாஸ்கமகருஷி கர்த்தா. இதில் வேதமந்திரங்களின் பொருளை அறிய அதன்கண் வந்துள்ள பதங்களின் பொருளை உணர்த்துவது, சோதிடம் ஆதித்யாதியர் கர்த்தா, இது வைதிககர்மங்களைத் தொடங்குங் காலஞானத்தையும் அதன் பயனையுங்கூறும். கற்பம் இதற்கு ஆச்வலாயனர், காத்யாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், வைகாசனர், திராஷ்யாயதனர், பாரத்வாஜர், சத்தியாஷ்டர், ஹிரண்யகேசி முதலியவர் கர்த்தாக்கள், இது யாககர்மங்களை அனுஷ்டிக்கும் வகையைக் கூறுவது.,

ஆறு உட்பகை

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

அறுவகைத்தானை

வில், வேல், வாள், யானை, குதிரை, தேர்

அறுவகைப்படை

மூலப்படை, நாட்டுப்படை, கூலிப்படை, துணைப்படை, பகைப்படை, நாட்டுப்படை

அறுவகைச் சுவை

தித்தித்தல், புளித்தல், கூர்த்தல், துவர்த்தல், காழ்த்தல், கைத்தல்

அறுவகையகச் சமயம்

சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்

அறுவகைப்புறச்சமயம்

உலோகாயதம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம், (மாயாவாதம்- வாய்வேதாந்தம் கூறுதல்) உலோகாயதம் - உலகத்தில் அநுபவிக்கும் இன்பமே சுவர்க்கம், துன்பமே நரகம், கடவுள் என்பது இல்லை என்பவா. பெளத்தம் புத்தரைக் கடவுளாகக் கொள்பவர், ஆருகதம் அருகனை வழிபடுவோர் பாஞ்சராத்திரம் ஐந்து இராத்திரியில் செய்யப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ ஆகமம்

நாட்டிற்குரிய அறுவகைச் சிறப்பு

செல்வம், விளைவு, பல்வளம், செங்கோன்மை, நோயின்மை, குறும்பின்மை

அறுவகையரசியல்

அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்

அறநிலையம்

நான்கு வருணத்தாரும் தத்தம் வருணாசிரமங்களிற் பிறழாது தங்களைக் காக்குங் காவலின் பொருட்டுக் கொடுக்கும் பொருள் கொண்டு அவரைப் பாதுகாத்தல்

மறநிலையம்

பகைத்திறந்தெறுதலும், செஞ்சோற்றுதவி யில்லோரைச் செகுத்தலும், நிறைமீட்டலுமாம்

அறநிலைப்பொருள்

நீதிவழிநின்று தத்தம் நிலையினால் முயன்று பெறுபொருள்

மறநிலைப்பொருள்

பகைவர் பொருளும் தண்டத்தில் வந்த பொருளும், சூதில் வென்ற பொருளுமாம்

அறநிலையின்பம்

ஒத்த பருவமும், ஒத்த குலமுமுடைய கன்னிகையை அக்கினி முன்பாக விவாகஞ்செய்து இல்லிலிருந்து அநுபவிக்கும் இன்பம்

மறநிலையின்பம்

ஏறுதழுவலும் வில்லால் இலக்கமெய்தலும் முதலியவற்றாற் கன்னிகையை விவாகஞ்செய்தநுபவிக்கு மின்பம்

கருமபூமிக்குரிய அறுவகைத்தொழில்

வரைவு, தொழில், வித்தை, வாணிகம், உழவு, சிற்பம்

போகபூமியாவது

பதினாறு வயதுடைய நாயகனும் பன்னிரண்டுவயதுடைய நாயகியும் பத்துக்கற்பகங்களும் வேண்டிய புதிய போகங்களைக் கொடுப்பப்பெற்றுப் புணர்ந்தின்ப மநுபவித்துப் பிரியாது வாழும் பூமி, சிலர் பதினாறெனு மியாயுட் பாவையும் நாலைந்தென்றுதியாயுட்கொள் காளையும் மெய்யொவ்வுதல் என்றார்

அறுவகைப்போகபூமி

ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்

ஏழுவகைமாதர்கள்

அபிராமி, மகேசுவரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி

ஏழுவகைத்தாது

இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்

செங்கோல் மன்னவர்க்குரிய எழுவகைப்பேறு

அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, மறுமை

எழுவகைப்பிறப்பு

தேவர், மனிதர், நீர்வாழ்வன, விலங்கு, ஊர்வன, பறவை, தாவரம்
எழுவகைப்பிறப்பில் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதம் - ஊர்வன பதினொரு நூறாயிரயோனிபேதம், மனிதர் ஒன்பது நூறாயிர யோனிபேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம், விலங்கு பத்து நூறாயிர யோனிபேதம், பறவை பத்து நூறாயிர யோனிபேதம், தேவர் பதினான்க நூறாயிர யோனி பேதம், தாவரம் இருபது நூறாயிர யோனிபேதம்.

எழுதீவின் பெயர்

நாவலந்தீவு, இறலித்தீவு, சூசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, இலவந்தீவு, தெங்கந்தீவு, புட்கரதீவு

ஏழுகடல்

உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், (சுத்தநீர்க்கடல்) வெள்ளைநீர்க் கடல்

எழுமேலுலகம்

- பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்

ஏழுகீழுலகம்

அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம்

ஏழுநிரயவட்டம்

களிற்றுவட்டம், மணல்வட்டம், எரியால்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், இருள்வட்டம், பெருங்கீழ் வட்டம்

ஏழு நரகம்

கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி

ஏழு நதி

கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, காவேரி, குமரி, கோதாவரி

ஏழு முனிவர்

அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்

நாட்டில் வரும் ஏழுகுற்றம்

விட்டில், தோட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி

ஏழுமுகில்

ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம்

எண்டிசையானை

அயிராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபெளமம், சுப்பிரதீபம்

எட்டு மலை

இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்

எட்டுப் பெரியநாகம்

வாசுகி, அனந்தன், தக்கன், சங்கன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன்

எட்டு திக்குப்ப பாலகர்

இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இவர் திசைகள் முறையே கிழக்கு தென்கிழக்கு தெற்கு முதலியன

சூரிய சந்திரர் சார்திசைகள்

முறையே கிழக்கும் வடக்குமாம்

எட்டுத்திக்குக்குறி

கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, யானை, நாகம்

அட்டமூர்த்தங்கள்

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா, இவ்வெட்டும் சிவபெருமானுக்குத் திருமேனியெனப்படும். இவையெட்டும் அன்றி உலகமென்பது ஒன்றின்கையின் சிவபெருமான் எல்லாமாய் உள்ளான் என்பது விளங்கும். "இவ்வுண்மை, நிலநீர் நெருப்புயர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புல்னாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான், உலயேழெனத் திசைபத்தெனத்தா னொருவனுமே, பலவாகி நின்றவாதோணோக்கமாடாமோ" என்னுந் திக்திக்குந் திருவாகச் செய்யுயால் உணர்க.

எண்சித்தி

அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், முறையே அணு, பெரிது, பாரம், இலேசு, நினைத்தவிடம் செல்லுதல், விரும்பினதைப்பெறல், சிருஷ்டி முதலிய செய்தல் எதையும் தன்வசப்படுத்தல்

எட்டுயோகாங்கம்

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி. இயமம் கொலை, களவு செய்யாமை, மெய்கூறல், கள்ளுண்ணாமை, பிறர் பொருள் விரும்பாமை, இந்திரியமடக்கல் முதலியன. நியமம் தத்துவநூலாராய்தல், தவம், தூய்மை, தெய்வவழிபாடு, மனமுவப்பு, முதலியன. ஆதனம், சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முத்தம், மயூரம், சுகம் முதலியன. பிராணாயாமம் பிராணவாயுவை இரேசக பூரக கும்பகஞ்செய்தல், தாரணை ஆதாரத்தனங்களாகிய மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறாதாரங்களில் அவற்றுக்குரிய தேவதைகளைக் குருமுகமாக அறிந்து மனதையும் வாயுவையும் அங்கங்கே நிறுத்தித் தரிசித்து ஆனந்தமுறுதல், தியானம் ஐம்புலனும் அடக்கியோகஞ்செய்தல், சமாதி கரணங்களிறந்து மனோலயமான சாக்கிராதீதத்தில் தன்னிலைகண்டின்புறுதல்

எட்டுத் தருமாங்கம்

அறமையப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியைநீக்கல், அழிந்தோரை நிலைநிறுத்தல், அறுசமயத்தவர்க்கன்பு, அறம் விளக்கல்

அருகனுக்குரிய எட்டுக்குணம்

கடையிலாவறிவு, கடையிலாக்காட்சி, கடையிலாவீரியம், கடையிலாவின்பம், நாநலமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அந்தராயங்களின்மை

சிவனுக்குரிய எண்குணம்

தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, வரம்பிலாற்ற லுடைமை, இவைகளின் விரிவை அகராதிகளிற் காண்க. சிவபெருமான் எண்குணம் உடையராதலை " கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை " என்னும் திருக்குறளாலும் உணர்க. வரம்பிலின்பமுடைமை

அருகனுக்காகாவென
விலக்கப்பட்ட எட்டுக் குற்றம்

ஞானாவாணீயம், தரிசணாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந்தராயம்

வைசியர்க்குரிய எண்வகைக் குணம்

உறுவது தெரிதல், ஈட்டல், கொடுத்தல், இறுவதஞ்சாமை, இடனறிந்தொழுகல், தனிமையாற்றல், முனிவிலனாதல், பொழுதொடுபுணர்தல்

அட்டகணிதம்

குணகாரம், பரியச்சம், பாற்கரம், மூலம், மானதம், கன்மம், சலிதி, தருதம் (பிங்கல நிகண்டைப் பார்க்க)

அட்ட மங்கலம்

விளக்கு, கவரி, கண்ணாடி, தோட்டி, இணைக்கயல், முரசு, நிறைகுடம், கொடி

எண்வகைமெய்ப்பரிசம்

தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்

நாட்டில்வரும் எண்விதக் கேடு

விட்டில், தன்னரசு, யானை, மிகுமழை, மிகுகாற்று, நட்டம், வேற்றரசு, கிளி

எண்மணம்

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம், பிரமமாவது ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது, பிரசாபத்தியமாவது மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டிதம் மகட்கு ஈந்து கொடுப்பது. ஆரிடமாவது தக்கான் ஒருவர்க்கு ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப்பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீசென நீரிற்கொடுப்பது. தெய்வதமாவது பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒருவற்கு அவ்வேள்ளித் தீமுன்னர்த் தக்கணையாகக் கொடுப்பது. அசுரமாவது கொல்லேறுகோடல், திரிபன்றியெய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல், இராக்கதம் தலைமகள் தன்னிலும் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது, பைசாசம் மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை மணஞ்செய்தலும் ஆடைமாறுதலும் பிறவும், கந்தருவம் கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முன் எதிர்ப்பட்டுப் புணர்வது

எண்வகை மாலை

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, இவை முறையே நிரைகவர்தல், நிரைமீட்டல், பகைமேற்சேறல், எதிரூன்றல், மதில்காத்தல், அரண்வளைத்தல், அதிரப்பொருதல், போர்வெல்லுதல் என்னும் வீரச் செயல்களாம்

அரசர்க்குரிய எண்பேராயம்

கருமாதிகாரர், கடைகாப்பாளர், நகரி, மாக்கள், படைத்தலைவர், சுற்றத்தார், யானைவீரர், குதிரைவிரர், காவிதியர், ஆயம் கூட்டம், காவிதியர் - காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்

எண்வகை உடற்குறை

குறள், செவிடு, மூங்கை, கூன், மருள், குருடு, மா, உறுப்பிலாப்பிண்டம் ( மருள் - ஈண்டு ஆணோ பெண்ணோ என மயங்கல் ) மா - விலங்குறுப்பு விரவப்பெற்ற வடிவம், உறுப்பில் பிண்டம் - உறுப்புக் குறைந்த வடிவம், குறள்- பூதம், குறுகிய வடிவம்

செய்யுளுக்குரிய எண்வகை அசை

நீர்க்கணம், நிலக்கணம், தேயுகணம், சூரியகணம், சந்திரகணம், ஆகாயகணம், இயமானகணம், வாயுகணம் (இயமானன் - ஆன்மா)
மேற்சொல்லிய எடடினுள் நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இயமான கணம் என்னும் நான்கும், நூலிலே முதற்செய்யுண் முதலில் வருதல் நன்மையாம், மற்றைய நான்கும் வருதல் தீதாம்
நிரை நிரை நிரை நிலக்கணம், நேர் நிரை நிரை நீர்க்கணம், நிரை நேர் நேர் சந்திரகணம், நேர் நேர் நேர் இயமான கணம்
நேர் நிரை நேர் சூரியகணம், நிரை நேர் நிரை தேயுகணம், நேர் நேர் நிரை வாயுகணம், நிரை நிரை நேர் ஆகாயகணம்

பெரியோர்க்குச் செய்யும் ஓழுக்கம் என்னும் நவபுண்ணியம்

எதிர் கொளல், பணிதல், ஆசனத்திருத்துதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்காட்டல், தீபங்காட்டல், துதித்தல், உணவுகொடுத்தல்

நவகண்டம்

வடபால்விதேகம், தென்பால் விதேகம், கீழ்பால் விதேகம், மேல்பால் விதேகம், வடபாலிரேவதம், தென்பாலிரேவதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்திமகண்டம்

நவதாரணை

நாமதாரணை, மாயதாரணை, வச்சிரதாரணை, சித்திர தாரணை, சத்ததாரணை, வத்துதாரணை, சதுரங்கதாரணை, செய்யுட்டாரணை, நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணை

செய்யுளுக்குரிய
நட்சத்திரம்
ஒன்பதாகப்
பிரித்தறிதல்

பாட்டுடைத் தலைவன்மீது பாடப்படும் முதற்பாவின் முதற்சீர்க்குரிய முதலெழுத்திற்கமைந்த நட்சத்திரம் அவனியற்பெயரின் முதலெழுத்திற்கமைந்த நக்ஷத்திரத்திற்கு அடுத்த நக்ஷத்திரமாகவும், நான்காம் ஆறாம் எட்டாம் ஒன்பதாம் நக்ஷத்திரங்களாகவும் இருத்தல் நன்று. அவனுடைய நக்ஷத்திரமாகவும், அதற்கு மூன்றாம் ஐந்தாம் ஏழாம் நக்ஷத்திரங்களாகவும் இருத்தல் தீது, அஸ்வினி முதல் இருபத்தேழு நக்ஷத்திரங்களும் மும்முறை ஒன்பது ஒன்பதாகப் பிரிந்து அறியப்படும்

நவதானம்

சமதாளம், அருமதாளம், அரிதாளம், படிமதாளம், துருவதாளம், சித்திரதாளம், விடதாளம், சயதாளம், நிவிர்த தாளம்

நவரத்தினம்

மரகதம், பவளம், நீலம், வச்சிரம், பதுமராகம், முத்து, கோமேதகம், புருடராகம், வயிடூரியம்

நவரசம்

சிங்காரம், வீரம், நகை, சாந்தம், கருணை, குற்சை, அற்புதம், பயம், கோபம், (சிங்காரம் - இன்பம், குற்சை - இழிபு)

பத்துவகைச் சிற்பத் தொழிலுறுப்பு

கல், உலோகம், மண், செங்கல், கண்டசர்க்கரை, மெழுகு, மரம், தந்தம், சுதை, வண்ணம்

தசாங்கம்

மலை, யாறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, கொடி, முரசு, தானை

பத்துவகைத்துவர்

நாவல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர்

விட்டுணுவின் தசாவதாரம்

மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனம், பரசுராமன், தசரதராமன், கண்ணன், பலதேவன், கற்கி

வேளாளருடைய பத்துவகைச் செய்கை

விருந்தோம்பல், ஆணைவழி நிற்றல், ஒழுக்கம், முயற்சி, மனத்துமாசின்மை, கைக்கடனாற்றல், அரசர்க்கிறை கொடுத்தல், ஒற்றுமைகோடல், சுற்றம் பேணல், மாட்சிமையான வினைகளைத் தொடங்கல்

பெண்களானமலரும் பத்துவகைமரம்

மகிழ் பெண்கள் சுவைத்தலாலும், பாலை நண்புசெய்தலாலும், பதிரி நிந்தித்தலாலும், முல்லை நகைத்தலாலும், புன்னை ஆடுதலாலும், குரா அணைத்தலாலும், அசோகு உதைத்தலாலும், குருக்கத்தி பாடுதலாலும், மா பார்த்தலாலும், சண்பகம் நிழல்படுதலாலும் மலரும்

கரந்துறைகோள்கள் பத்து

சூரியன், சந்திரன், இராகு, கேது, பரிவேடமிரண்டு, வான்மீன், தூமகேது, வானவில்லிரண்டு (இராக கேது சாயாகிரகங்கள்)

ஆண்பிள்ளைக் கவியுறுப்புப்பத்து

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர், பிள்ளைக்கவி, ஆசிரியவிருத்தத்தாலியற்றப்படும், (சப்பாணி - கைதட்டல்) செங்கீரை - ஒருகாலை மடக்கி யொருகாலை நீட்டி யிருகைகளையும் நிலத்திலூன்றிக் கொண்டு தலைநிமிர்ந்து முகமசைய ஆடுதல். இது குழந்தைக்கு ஐந்தாம் மாதம் நிகழ்வது, கீர் - சொல், தால் - நாக்கு, தாலாட்டல் என்பதற்கு நாவையசைத்தலெனச் சிலர் பொருள் கொள்வர், அது பொருந்தாது அது தாராட்டல் என ஒருசொல் பாராட்டல், சீராட்டல் என்பன போல வாரானை - வருகை ஆனை - தொழிற்பெயர் விகுதி, அம்புலி - சந்திரன்

பெண்பிள்ளைக் கவியுறுப்புப் பத்து

ஆண்பிள்ளைக் கவியுறுப்புப் பத்தில் - சிற்றில், சிறுபறை, சிறுேத்ர் என்னு மூன்றுறுப்பையு நீக்கி எஞ்சிய ஏழுறுப்போடு, கழங்கு, அம்மனை, ஊசல் என்னும் மூன்றுறுப்பையுஞ் சேர்க்கப் பத்தாம். இக்கவிகளை மூன்றாம் மாத முதல் இருபத்தொராமாசம் வரை ஒற்றித்த மாசங்களினும் ஐந்தாம் ஏழாம் ஆண்டினும் கேட்பிக்கலாகும்

உயிர்க்குரிய பன்னிருவகை வேதனை

அனல், இடியேறு, குளிர், ஆயுதம், நஞ்சு, மருந்து, நீர், காற்று, பசி, தாகம், முனிவறாமை, பிணி (திவாகரர் விரிவாகக் கூறியுள்ளார்)

பன்னிருவகைத் தானை

யானை ஒன்று, தேர் ஒன்று, குதிரை மூன்று, பதாதி ஐந்து கொண்டது ஒருபத்தி, பத்தி மூன்று கொண்டது சேனாமுகம், சேனாமுகம் மூன்று கொண்டது குல்மம்
குல்மம் மூன்று கொண்டது கணம், கணம் மூன்று கொண்டது வாகினி, வாகினி மூன்று கொண்டது பிருதனை, பிருதனை மூன்று கொண்டது சமூ.
சமூ மூன்று கொண்டது பிரளம், பிரளம் மூன்று கொண்டது சமுத்திரம், சமுத்திரம் மூன்று கொண்டது சங்கு, சங்கு மூன்று கொண்டதுஅநிகம், அநிகம் மூன்று கொண்டது அக்குரோணி.

பதினெண் கணங்கள்

சாரணர், சித்தர், விஞ்சையர், பைசாசர், பூதர், கருடர், கின்னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர், உரகர், ஆகாசவாசர், போகபூமியர், முனிவர், நிருதர், கிம்புருடர், விண்மீன்

பதினெண்வகை மங்கலச் சொல்

சீர், மணி, பரிதி, யானை, திருநிலம், உலகு, திங்கள், கார், மலை, சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன், இவையன்றி இவற்றின் பரியாயப்பெயர்களும் செய்யுளில் முன்வைத்தற்குரிய மங்கலச் சொற்களாம், மங்கலச்சொல் முதலியன பிற்காலத்துத் தோன்றியவை

யாக்கைக்குரிய பதினெண்வகைக் குற்றம்

பசி, அதிசயம் , நினைத்தல், பயம், கையறவு, மூப்பு, வியர்த்தல், நீர்வேட்டல், வேண்டல், வெகுளி, மதம், கேதம், நோய், பிறப்பு, இறப்பு, உவகை, உறக்கம், இன்பம் (கையறவு - செயலின்மை)

பதினெண்புராணம்

மச்சம், கூர்மம், சைவம், வைஷ்ணவம், வராகம், இலிங்கம், பத்மம், வாமணம், காந்தம், பவுடியம், ஆக்கினேயம், பிரமம், பிரமகைவர்த்தம், நாரதீயம், மார்க்கணடேயம், பாகவதம், காருடம், பிரமாண்டம்

அரசர்க்குரிய இருபத்தொரு
சின்னங்கள்

முடி. குடை, கவரி, தோடடி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், பூரணகும்பம், மாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம்

பேடிக்குரிய இருபத்தைந்துவகை
இலக்கணம்

நச்சப்பேசல், நல்லிசையோர்தல், ஆணபெண்ணாமடை வியற்றல் , உச்சியிற்கையை வைத்தல், ஒருகைவீசிநடத்தல்
விழிகளை வேறாச் செய்தல், முலையை வருத்தி நிற்றல், கண்சுழலநோக்குதல், நாணுதல், தொந்தோமென்று தாளமிடல், நடித்தல், காரணமின்றிக் கோபித்தல், அழுதல், ஒருபக்கம் பார்த்தல்
இரங்குதல், வருந்தல், யாவருமிரங்கும்படி பேசுதல், வளைதல், கோதாடல், கூடல், கூவிளிகொள்ளல், மருங்கிற்கையை வைத்தல், அதனை எடுத்தல், பாங்கியை நோக்கல், ஏலேலென்று பாடல் (இந்த விலக்கணங்களை மாறுபடக் கூறுதலுமுண்டு

இருபத்தெட்டுச் செய்யுளலங்காரம்

உருவகம், உவமை, அடிமடக்கு, தீபகம், நிலைமடக்கு, வேற்றுமை, வெளிப்படை, நோக்கு, உட்கோள், தொகைமொழி, மிகைமொழி, சொற்பின்வருநிலை, தன்மை, வேற்றுப்பொருள் வைப்பு.
சிறப்பு, சிலேடை, மறுத்து மொழிநிலை, உடனிலைக்கூட்டம், உவமாரூபகம், மகிழ்ச்சி, நுவராநுவற்சி, ஒப்புமைக்கூட்டம், நிதர்சனம்,
புகழ்ச்சி, ஒருங்கியனிலை, ஐயம், கலவை, வாழ்த்து என்னும் இவ்வணிகளாம்.

நல்லாசிரியன் இலக்கணம்

மேற்படி யலங்காரங்களோடு மற்றை எழுத்துச் சொற்பொருள் யாப்பு என்னும் நான்கினையும் அறிந்தவனும்..
இவ்விலக்கணத்துறைகளில் வல்லவனும், முத்தமிழிலும், நாற்ககவிகளிலும் வல்லவனும், உயர்குலத்துதித்தவனும், அழகும், ஆசாரமுமுடையவனும், முப்பது வயசின் மேற்பட்டு எழுபது வயசுக்குட்பட்டவனும் நல்லர்சிரியனாம் ( முத்தமிழ் - இயல், இசை, நாடகம்)

புலவர் கவிதையை அரசர் அங்கீகரிக்கும் முறைமை

குற்றமற்ற கவிதையை அரசர் ஏற்றுக்கொள்ளும் போது தோரணங்கள் நாட்டி, கொடியுயர்த்தி, கோலஞ்செய்து, பட்டுவிரித்தபின் பல்வாச்சியங்களும் முழங்க,
அட்டமங்கலங்களேந்த, பெண்கள் பல்லாண்டுகூற, பூரணகும்பமும் தீபமு முளைப்பாலிகைகளும் விளங்க, விதானப்பந்தருள்ளே அறிஞர்களை ஆசாரப்படி அமர்த்திய பின் (விதானம் - மேற்கட்டி)
தனதாசனத்திற் புலவனை இருத்தி, கவிதையைக் கேட்டு, புலவனுக்குப் பொன்முதலியவைகளைக் கொடுத்து, ஏழடிதூரம் அவனுக்குப் பின்போய் வழிவிட்டு, அவன் நிற்க என்றபின் நிற்றல் முறைமையாகும்

பரிசில் கொடாத உலோபியர்க்குச் செய்யுட் செய்வகை

கவிதை கேட்ட, பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடானாயின், அக்கவிதையினின்றும் அவன் பெயரையும் ஊரையும் எடுத்துவிட்டு, வேறொருவனுடைய ஊரையும் பெயரையும் நாட்டின், பரிசில் கொடாதவனுடைய செல்வமெல்லாம் நீங்கிப் பின்னர் நாட்டப்பட்டவனுக்காகும்.
பரிசில் கொடாத பாவியினுடைய பாமாலையை எழுதிச் செம்பூச்சூட்டிப் பாம்புப் புற்றிலும், காளிகோயிலிலும், தன்மனைப்புறத்திலும், எரித்தால் அவன் ஒரு வருடத்தில் இறப்பான் என்று அகத்திய முனிவர் கூறினர்.

முப்பத்திரண்டு அறம்

ஆதுலர்க்குச் சாலை, ஐயம், அறுசமயத்தோர்க்குண்டி, ஓதுவார்க்குணவு, சேலை, ஏறுவிடுதல், காதோலை, பெண்போகம், மகப்பால், மகப்பேறு, மகவளர்த்தல், மருந்து, கொல்லாமல் விலைகொடுத்துயிர் நோய்தீர்த்தல் (ஆதுலர் - வறியவர்) கண்ணாடி, பிறரிற்காத்தல், கன்னிகாதானம், சோலை, வண்ணார், நாவிதர், சுண்ணம், மடம், தடம், கண்மருந்து, தண்ணீர்ப்பந்தர், தலைக்கெண்ணெய், சிறைச்சோறு, விலங்கிற்குணவு, பசுவுக்கு வாயுறை, (நாவிதர் - அம்பட்டர் - வாயுறை - மருந்து )
அறவைப்பிணமடக்கல், அறவைத்தூரியம், தின்பண்டநல்கல், ஆவுரிஞ்சுதறி, (ஆவிரிஞ்சுதறி - பசுதினவை ஒழித்துக்கொள்ளும் கட்டை)

உயிர்வகை

ஓரறிவுயிர் - புல், மரம், முதலியன, இவை மெய்யாற் பரிசத்தை அறியும்,
ஈரறிவுயிர் - முரள், (அட்டை) நந்து முதலியன, இவை பரிசத்தோடு நாவினாற் சுவையையும் அறியும்.
மூவறிவுயிர் - கறையான், எறும்பு முதலியன இவை அவ்விரண்டோடு மூக்கினாற் சுவையை அறியும்
நாலறிவுயிர் - தும்பி, வண்டு முதலியன. இவை அம்மூன்றோடு கண்ணால் உருவத்தையும் அறியும்.
ஐயறிவுயிர்கள் - வானவர், மனிதர், நரகர், விலங்கு, புள்ளு இவர் அந்நான்கனோடு செவியினால் ஒலியையும் அறிவர். இவர்க்கு மனத்தாலறியும் அறிவும் விசேடமாக உண்டு. மக்கள் ஆறறிவு உடையவர். "மக்கள் தாமே ஆறறி வுயிரே" என்றனர் ஆசிரியர் தொல்காப்பியனார். இது விலங்குகட்கும் பறவைகட்கும் உண்டு.

காப்புக்கு முன்னெடுக்கும் கடவுள்

இலக்குமிக்கு நாயகராயிருத்தலானும், காவற்கடவுளா யிருத்தலானும், முடிமுதலியன புனைதலானும் காப்புக்கு முன்னெடுக்கும் கடவுள் விட்டுணுவாகும்

அருகன்

வாகனம் - தாமைரைப்பூ, படை - காட்சி, ஞானம், சீலம், கொடி, அருள்

சிவன்

வாகனம் - இடபம், படை - மழு, சூலம், பினகவில்

விட்டுணு

வாகனம் - கருடன், கொடி - கருடன், படை - வில், சக்கரம், சங்கு, வாள், தண்டு என்னும் பஞ்சாயுதங்கள்

பிரமன்

வாகனம் - அன்னப்பறவை, படை - பாசம், கொடி - வேதம் (இது பிராமணருக்குமாம்)

பலதேவன்

படை - கலப்பை, கொடி- பனை

யமன்

வாகனம் - எருமை, படை - பாசம், தண்டு, காலன் படை - கணிச்சி

குபேரன்

வாகனம் - நரவாகனம், புட்பகவிமானம்

சூரியர் ஊர்தி

ஒற்றையாழித்தேர்

சந்திரன் ஊர்தி

முத்து விமானம்

சுப்பிரமணியர் ஊர்தி

யானை, மயில், படை- வேல், கொடி- கோழி

இந்திரன்

ஊர்தி - ஐராவதயானை, சோலை - கற்பகச் சோலை, குதிரை - உச்சயிச்சிரவம், மண்டபம் - சுதன்மை, மாளிகை - வசந்தம், கொடி - இடியேறு

காளி

ஊர்தி - சிங்கம், கொடி - பேய்

துர்க்கை

படை - வாள், ஊர்தி - கலைமான்

முதேவி

வாகனம் - கழுதை, படை- துடைப்பம், கொடி- காகம்

சத்தமாதர்கள்

அபிராமி - அன்னம், மாகேசுவரிக்கு இடபம், கெளமாரிக்கு மயில், வைணவிக்கு கருடன், வராகிக்கு சிங்கம், மாகேந்திரிக்கு யானை, மாகாளிக்கு பேய் வாகனங்களாகும். இவர்களுக்கு முறையே வேதமும், பினாகவில்லும், வேலும், சக்கரமும், கலப்பையும், வச்சிரமும், சூலமும் படைகளாகும்

மூவேந்தர்கள்

சேரன் கொடி - வில்லு, மாலை - பனந்தார்
சோழன் கொடி - புலி, மாலை - ஆத்தி மாலை
பாண்டியன் கொடி - மீன், மாலை - வேப்பந்தார்
புலவருடைய கொடி - பன்றி, யானை

அரசுவாவினிலக்கணம்

(பட்டத்து யானை இலக்கணம்) நான்கு கால்களும், கோசமும், துதிக்கையும், வாலுமாகிய ஏழுறுப்பும் நிலத்திலே தோய்ந்து, காலில் வெண்மையான நகமுடையதாய், வால் நாலுகால் உடம்பு துதிக்கை இரண்டு கொம்பு என்னுமிவற்றாற் கொல்லவல்லதாய், ஏழுமுழமுயர்ந்து ஒன்பதுமுழ நீண்டு பத்து முழச் சுற்றுடையதாய்,
முற்பாகமுயர்ந்து பிற்பாகந் தாழ்ந்து அழகியதாய், தறுகண்ணினையும், சூழிசார்ந்த மத்தகத்தினையு முடையதாய், சுளகு போன்ற செவியினையும் மும்மதத்தையுமுடையதாயுள்ள யானை அரசர்க்குரிய அரசுவாவாகும் (மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீஜமதம்) தறுகண் - அஞ்சாமை, சுளகு - முறம்

அரசர்க்குரிய குதிரையினிலக்கணம்

மகளிர் மணம் போன்ற மணமுடையதாய், வாழைப்பூ மடல் போன்ற செவியுடையதாய், நான்கு கால்களும் முன்புறமும் முதுகும் பிடர்த்தலையும் முகமும் வெண்மையுடையதாய், எண்பத்திரண்டங்குலம் உயரமுடையதாயுள்ள குதிரை அரசர்க்குரிய குதிரையாம்

அர்ப்புதம்

நூறாயிரங் கொண்டது அதியுகம், அதியுகம் நூறாயிரங்கொண்டது பிரமம், பிரமம் நூறாயிரங் கொண்டது கோடி, கோடி பத்துக் கொண்டது அர்ப்புதம்

சமுத்திரம்

கோடி நூறு கொண்டது கணகம், கணகம் பத்துக் கொண்டது கற்பம், கற்பம் பத்துக் கொண்டது நிகற்பம், நிகற்பம் பத்துக் கொண்டது சங்கம், சங்கம் பத்துக் கொண்டது சமுத்திரம்

உரைத்தவிப்பல்பேர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி தன்னில்
விருத்த மூவைம்பதின்மேன் மிகுதியோரிரண்டு செய்தான்
திருக்கிளர் குணபத்திரன்றாள் சென்னியிற் சூடிக்கொண்டோன்
மருக்கிளர் பொழில்சூழ்வீரை மன்னன் மண்டலவன்றானே.

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி நிறைவுற்றது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,