அதிகாரம் 44, நிலையாமை - குறள் எண் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

வருமுன்னர் - வருவதற்கு முன்பு, காவாதான் - காக்காமல் இருப்பவன், வாழ்க்கை - வாழ்க்கையானது, எரிமுன்னர் - எரிகின்ற தீயின் முன்பு, வைத்தூறு - வைத்த வைக்கோல் போர், போலக் கெடும் - போலக் கெட்டு விடும்.

வருவதற்கு முன்னரே திட்டமிடாதவன் வாழ்க்கை, நெருப்பின் முன்னால் வைத்த வைக்கோல் போர் போல எரிந்து சாம்பலாகும், கெடும்.

எரிகின்ற பொருளின் முன் உள்ள எது விரைவில் தீப்பற்றி எரியும். அழியும். பஞ்சும் நெருப்பும் அருகருகே இருந்தால் பற்றி எரியும். இதுதான் நாம் சொல்வது. ஆனால் காற்று அடித்தால் பஞ்சு பறந்துவிடும். எனவே நெருப்பு பற்றுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவே. ஆனால் வைக்கோல் போர் காற்றடித்தாலும் நகராது. அங்கேயே இருக்கும். எரிமுன்னர் வைத்த வைக்கோல் போர் விரைவில் பற்றி எரிந்து சாம்பலாகும். வைக்கோல் போர் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நொடியில் சாம்பலாகும். மிகப் பெரிய செல்வச் செழிப்பும், அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் கூட பற்றி எரிந்து நொடியில் சாம்பலாகும்.

எப்பொழுது ?

வள்ளுவர் காட்டும் மிகப் பெரிய வாழ்வியல் கூறு இது.

வரும் முன் - வந்த பொழுது - வந்த பிறகு, இந்த மூன்று காலங்களில் வருவதற்கு முன்பாகவே, வருவதற்கான அனைத்துக் கூறுகளையும் வரிசைப்படுத்தி, அதற்கான தடைகளை, காப்பு முறைகளை, ஒழுங்கு படுத்தி, செயற்படுத்துகிற எண்ணம் உடையவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

வருவதற்கு முன்னரே காப்பதற்கான திட்டமிடாதவன் வாழ்க்கை, எத்தனை பெரிய நிலையில் வாழ்ந்தாலும், நொடியில் ஏதுமற்றதாகி, ஏதிலி நிலைக்குத் தள்ளப்பட்டு, கெட்டு அழிவான், வள்ளுவர் காட்டும் வாழ்வியலுக்கான மிகப் பெரிய செய்தி இது.

திருக்குறளை ஆய்ந்து அறிந்து தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார்.
அவர் உரை கேட்டால் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன் தோன்றும். ( பெருஞ்சித்திரனார் உரையைத் - தமிழம்.பண்பலையில் கேட்கலாம் ) உரை கேட்டுக் குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.
உலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே. திருக்குறளின் பன்முகத் தோற்றத்தையும், மாந்தன் மகிழ்வாக வாழ்வதற்குரிய வாழ்முறையையும் உலகுணர வழி அமைப்போம்.