எப்படி முடிகிறது இவர்களால் - பலமுறை நான் வியப்போடு பார்த்ததுண்டு, இந்த இதழ் பணிஓய்வு பெற்ற ஒருவரின் இலட்சிய செயற்பாடாகத் தொடர்ந்து வருகிறது, இதழாய் ஓர் எழுத்தியக்கம் - என்று எழுதி - இதழ் தொடர்ந்து வருகிறது, இதழாசிரியர் கவிதாசரண் பல்வேறு வாழ்வியல் நெருக்குதல்களுக்குள் தள்ளப்பட்டபோதும் - ஒவ்வொரு முறை எழும்போதெல்லாம் - ஒரு வீறுகொண்ட இதழாக அது மலர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி முடிகிறது இவர்களால் வியப்போடு பார்க்கிறேன் நான். எந்த விளம்பரமும் இல்லாமல் - கருத்து விதைப்பிற்காகவே - அதுவும் இந்தக் கருத்தை இனிமேல் தான் மக்களிடம் பரவலாக்க வேண்டும் - இதழைத் தொடர்வது - எனது பார்வையில் சிந்தனைப் பதிவாக இந்த இதழ் இருந்து வரலாற்றிற்கு வழிகாட்டுவதாக இருக்கும் என்று தோன்றுகிறது. பாலையாய்த் திரிந்த மருதமும்.. சிகரமாய் உயர்ந்த மனிதரும் - என்ற கட்டுரை ( நீங்கள் எதை மூடி மறைத்துக் கழுத்தறுக்கிறீர்களோ - அதை நான் வெட்ட வெளிச்சமாக்கி உங்கள் முகத்திரையைக் கிழிக்கிறேன் - சரண்) என்ற கட்டுரை முதல் கட்டுரையாக உள்ளது. இப்படித் தொடருபவை 72 அ4 அளவுள்ள பக்கங்களில் - அச்சாகி வெளியிடப்பட்டுள்ளது. கவிதை, உரைவீச்சு, குறிப்பு - என அனைத்தும் செறிவாக உள்ளன.டிசம்பர் 2006 - இருமாத இதழாக, இதழாய் ஒரு எழுத்தியக்கம் என தலைப்பிலிட்டு, அ4 அளவுள்ள பெரிய வடிவில், விளம்பரங்களில்லாது, கருத்துச் செறிவை முதன்மைப் படுத்தி, தொடர்ந்து வருகிற இதழ். ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் கிளர்ந்து எழுந்து, கருத்தளிக்கிற இதழ். இந்த இதழில் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின் அதிகாரக் கொள்முதலும் தன்மான விற்றொழிப்பும் என்ற கட்டுரை கால்டுவெல் நூல்பதிப்பை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. பொ.வேல்சாமி பற்றிய தன்கருத்துரையை இதழாளர் பதிவு செய்துள்ளார். சு.தமிழ்ச்செல்வி எனது படைப்பு மொழியும் அனுபவங்களும் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். நானும் நீயும், நாமும் பிறரும்,நிலமும் வெளியும் என்ற மூசாவின் மொழியாக்கமும் இதழில் இடம்பெற்றுள்ளது. எம்.சி.ராஜா எழுதியுள்ள ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்ற நூலின் சுட்டிக்காட்டல்கள் ஒரு கட்டுரையாக இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. வீ.அரசுவின் விந்தன் என்றொரு மனிதன் என்ற கட்டுரையும் உள்ளது. மேலும் உரைவீச்சுகள், குறிப்புகள், நூல் விமர்சனம், வந்த மடல்கள் என ஒவ்வொரு பக்கமும் செறிவாக இதழ் உள்ளது. முகவரி - 31 டிகேஎசு நகர், சென்னை 19.கவிதாசரண் - இயக்கமாக - உயிர்த்துடிப்பாக - எழுத்து வடிவமாக - இந்தச் சிற்றிதழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயங்குகிற படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு சென்னையிலிருந்து வெளியிடுகிற இதழிது. சொற்களை ஒலிக் குப்பைகளாக்கித் துப்பும் உச்சமாய் ஒரு முற்றெச்சம் - என வைகோவின் உள்முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிற நீண்ட கட்டுரை உள்ளது. ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிடும் க.கிருஷ்ணசாமிக்காகப் பயணித்த ஆசிரியரின் அனுபவத் தொகுப்பும் உள்ளது. ஆற்றின் வண்டலாய் - காற்றின் இலவயமாய் - அடித்துச் செல்லப்படும் தமிழர்கள் என்ற விளாடிமிர் கட்டுரை தமிழர்களைச் சிந்திக்கத் தூண்டுவதே. சூஃபித் தத்துவம் பற்றிய மம்மதுவின் கட்டுரை மதங்களுக்கு எதிரான கலகக்குரலை அடையாளம் காட்டுகிறது. தமிழில் மதனநூல் பதிப்பு பற்றிய கட்டுரை படிப்பாளிகளின் மற்றுமொரு கோணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.கவிதாசரண் - இதழாய் ஒரு எழுத்தியக்கம் என அறிவித்து இருமாத இதழாகத் தொடாந்து வெளிவருவது. சென்னையிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாக வெளிவருவது. 15 ஆண்டின் தொடக்க இதழ் இது. ஒவ்வொரு இதழ் வரும் பொழுதும் எப்படி இவரால் இயலுகிறது என வியப்பூட்டும். இதழின் படைப்புகள் செறிவானதாகவும், தரமானதாகவும், நுட்பமானதாகவும் இருக்கும். ஒடுக்கப்பட்டவரது நிலையை மிகச் சரியாகக் காட்டும். இதழைப் பற்றி ஆசிரியர் வரிகளிலே காண்போம்...

"ஒரு சுடர் அணைந்தபோது அதை ஈடுகட்டும் ஒளியாகவும், அதனினும் நிலைத்த வெளிச்சப் புலமாகவும் ஏற்றி வைத்த சுடர் இந்த இதழ். சூறைக்காற்றில் அணைந்து போய்விடக் கூடிய சிற்றகல் சுடர் அன்று. சூறையையே விழுங்கித் தன்னைச் சூழ்ந்தாகப் பெருக்கித் தற்காத்துக் கொள்ளும் உள்ளூற்றம் தளும்பும் சுடர்"

"வரலாறு படைத்த கனமழை, வீட்டுக்குள் வந்த வெள்ளம், நாள் கணக்கில் தொடர்ந்த மின் துண்டிப்பு, இடிமின்னலால் பழுதடைந்து செயலற்ற கணிணி, படைப்புகளைப் பெறுவதில் உள்ள சுணக்கம், வெளியுதவியைக் கோருவதிள்ள சுமை என, தாமதம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஒவ்வொரு பின்னடைவிக்குப் பின்னும் வெல்வது நாங்களாகவே இருக்கிறோம்".

" எங்கள் 14 ஆண்டுக்கால இதழ்ப் பணியில் ஒவ்வொரு கணுவையும் பிடிமானமாக் கொண்டு எங்களைப் புதுப்பித்துக் கொண்ட தேடல், எங்களைத் தின்றும் எங்களால் தின்னப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்ட செயல்பாடு, இதழைக் காரணமாக வைத்து, எங்கள் இதயம் எண்ணங்களின் பொங்குாங்கடலாய்க் கொந்தளித்துத் ததும்பும் தருணங்கள் மனித வார்ப்பில் நாங்கள் பெறும் மகத்தான அனுபவங்கள். இரண்டொரு சந்தர்ப்பங்களில் இதழின் இயக்கத்தைவிடவும் அதன் இருத்தலையே உறுதிப்படுத்திக் கொள்ளும் படியாக ஊடறுத்த தாமதங்களைத் தின்று செறித்து நாங்கள் நிலைப்பட்டிருக்கிறோம். அதுதான் சொன்னோமே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்களே வென்று மீண்டிருக்கிறோம். வாசகர்கள் எங்களைத் தேடித்தேடி, ஊக்குவித்து மீட்டெடுத்த வெற்றி அது"கவிதாசரண். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கிளர்ந்து எழுந்து மிகப்பெரிய கட்டுரைகளையும், விவாதங்களையும், விளக்கங்களையும் வெளியிடுகிற இருமாத இதழ். சென்னையிலிருந்து வெளியிடப்படுவது. வணிக நோக்கின்றி ஒவ்வொரு பக்கத்திலும் கருத்துத் செறிவோடு தொடருகிற இதழ். நடப்பியலை தன் ஆழ்ந்த பட்டறிவோடு பொருத்தி உரசிப்பார்த்து உண்மையைச் சரியாகச் சொல்லுகிற இதழ். தொய்வின்றித் தொடர்ந்து வெளிவருவது.இதழாய் ஓர் எழுத்தியக்கம் என ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் தரமான இதழ். தவறுகளைச் சுட்டிக்காட்டி சமுதாய நலம் பேணத்துடிக்கும் இருமாதமொருமுறை இதழ். தொடர்ந்து வருகிற இதழ்.இதழின் அட்டைப் படத்தில் உள்ளது ஓவியர் புகழேந்தியின் காலம் கடந்து நிற்கும் உயர் படைப்புகள் உள்ளன.இதழாய் ஓர் எழுத்தியக்கம் நடத்துகிற இதழ். சென்னையிலிருந்து வெளிவருகிற இதழ். ஒடுக்கப்படுகிற தலித் பிரச்சனைகளை முன்னெடுத்தும், ஒடுக்கப்படுகிற மக்களுக்காகக் கருத்து விதைப்பு செய்தும் தொடர்ந்து வெளிவருகிற இருமாத இதழ். மார்க்சிய வாதிகளின் காந்திய அரசியல், இழப்பின் அரசியல், தமிழ்த் தேசியத்தின் தந்தை பெரியார், தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர், குறிஞ்சிப்பாட்டு நாடகம், தேசாபிமானம், பாசாபிமானம்.. எனத் தரமான படைப்புகளை உள்ளடக்கியதாக இந்த இதழ் வெளிவந்துள்ளது.அனைத்தும் கட்டுரைகள். ஒவ்வொன்றும் இலக்குநோக்கிய விதைப்புகள். நுட்பமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளை உள்வாங்கி, ஒழுங்குபடுத்தி, உரைகல்லாகத் தன் சிந்தனையையும் வரிசைப்படுத்தி, தொடர்ந்து வெளிவருகிற இருமாத இதழ். இந்த இதழில் தமிழிசை பற்றியும், தமிழ் ஒளி பற்றியும், எழுதியுள்ளது. அயோத்திதாச பண்டிதர் பற்றி எழுதியுள்ள கட்டுரை உயர்தரத்தது. இந்து மனங்களில் தலித் கரிசனங்களின் நுண்அலகுகள் என எழுதியுள்ளது இங்கு புரையோடிப்போன ஒவ்வொரு கூறுகளையும் நுட்பமாகக் காணுகிற எழுத்துப் பதிவே. இந்திய தேசம் வேர்களும் கிளைகளும், வெம்மை - படிக்கவைப்பதே.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,