சென்னையிலிருந்து வெளிவருகிற திங்களிதழ். ஆசிரியர் சொர்ணபாரதி. இதழின் அட்டையில் கருப்பண்ணசாமி படத்தினை வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வில் இணைந்திருந்த தொன்மக்கூறுகளின் எச்சமாக இன்னும் இருப்பது சிறுதெய்வ வழிபாடுகளாகும். மண்காத்த வீரர்களும், மக்களுக்காகப் போராடி உயரி நீத்த வீரர்களும் நடுகல் வைத்து வழிபடும் தெய்வங்களாயின. அவர்களையே சாமிகளாக மக்களும் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் பெரிய ஆலையங்கள் உருவாகி பெருந்தெய்வ வழிபாடும் பரவலாகி பக்தி வேறுபாடுகள் உருவான பிறகு சிறுதெய்வ வழிபாடுகள் அருகி, அத்தெய்வங்கள் குழுக்களான மக்களின் குலதெய்வங்களாகவும், கிராம காவல் தெய்வங்களாகவும் பெரிய கோவில்களின் முன்னோடிகளாகவும் மாறின. அவ்வாறு மாற்றத்திற்குள்ளான சிறுதெய்வங்களுள் ஒருவர்தான் கருப்பசாமி. கருப்பண்ணசாமி என்றும் அழைக்கப்படும் இவர் முன்னாள் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக வணங்கப்படும் தெய்வமாக உள்ளார். 18 ஆம் படி கருப்பண்ணசாமி, மார நாட்டுக் கருப்பு, வண்ணக் கருப்பு, முத்துக் கருப்பு, சோனைக்கருப்பு என இன்னும் பல பெயர்களால் வழங்கப்படுகிறார். சபரிமலையில் சேரநாட்டு மக்களின் வனக்காவல் தெய்வமான ஐயனாரப்பன் சன்னதியின் முன் உள்ள 18 படிகள் கருப்பண்ணசாமி அடையாளமாகவுள்ளது. குருவாயூரில் கிருஷ்ணனுக்கும் காவல் தெய்வமாக உள்ளார். தமிழகத்தில் முருகர் ஆலையங்களிலெல்லாம் நுழைவாயிலில் இக் கருப்பண்ணசாமி இருப்பார். போகர், சித்தர், வான்வழி யாத்திரை வரும்பொழுது இவர் வழிமறித்ததாகவும், பின் போகரென்றறிந்து வணங்கி வழிவிட்டதாகவும் பழனியில் நவபாஷான முருகர் சிலை செய்ய உதவியதாகவும் செய்திகள் உண்டு. பல பெரிய கோவில்களில் இவர் இருந்த மூலவர் அறை பூட்டப்பட்டு பொற்படியான் எனும் பெயரோடு பூட்டப்பட்ட கதவுகளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து மக்கள் வழிபடுவதுண்டு. இதே நிலையில் தான் அழகர் கோவிலிலும் வழிபாடு உள்ளது. அழகர் கோவில் பழமுதிர்ச் சோலை முருகர் கோவிலாக இருந்த போது இவர் முன்னோடியாக இருந்தார். பின்னர் கள்ளழகரை முன்னிலைப்படுத்த வேண்டிய சூழலில் முருகர் கோவில் மலைமேல் துரத்தப்பட்ட போது கருப்பண்ணசாமி பெருங்கதவுகளும் பூட்டப்பட்டதாகவும் வரலாறு உண்டு. கருப்பண்ணசாமியின் ஆலையம் சென்னை வியாசர் பாடி பக்தவச்சலம் நகரில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 28-8-06 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த ஆலையத்தின் மூலவரே இந்த இதழின் அட்டையை அழகுசெய்கிறார்.

சென்னையிலிருந்து வெளிவருகிற திங்களிதழ்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,