வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் தொடர்ந்து நடத்துகிற தரமான திங்களிதழ் ( 19.முருகப்பா தெரு(மாடி), சேப்பாக்கம், சென்னை 5 - 600 005, தந்தை பெரியார் கருத்துகளை முதன்மைப் படுத்தியும், தமிழ் நாட்டு மக்களுக்கும், உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான - விடிவிற்காகத் தொடர்ந்து சிந்தித்தும், எழுதியும் வருகிற - தரமான உயர்கருத்துச் சிந்தனையுடைய இதழ் இது, பிரச்சனைக்குரிய நிகழ்வுகளுக்கு இவரது கட்டுரைகள் தரமான தீர்வுகளை அளிப்பதாக இருக்கும், தன்நலத்தை முதன்மைப்படுத்திய இயங்குகிற அரசியல், ஆட்சியாளர்களை - சுட்டிக்காட்டி அதற்கான கருத்துச் செறிவை முனைமழுங்காது வெளியிடுகிற தலைவர் இவர். மார்க்சிய, பெரியாரியஇ பொதுவுடமைக் கட்சி வழியாக கருத்து விதைப்பதும் - இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் - உயர்தரத்தது, இந்த இதழில் - பற்றி எரிகிறது காஷ்மீர் பற்றி எரியுமா இந்தியா - திருப்பித் தாக்கும் காலநிலை மாற்றம் - கள்ளப் பணத்தில கொழுக்கும் கடவுளின் தூதர்கள் - தோல்வியைத் தழுவிய தோகாப் பேச்சு - அறிவியலார் கற்றுத் தந்த பாடம் - ஒதுக்கி வைத்தவர்களை உயர்த்தியவர்களின் வரலாறு - என்கிற கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன,இதழில் ஆனைமுத்து எழுதியுள்ள - காங்கிசுக்கட்சி எதற்காக ஆளவேண்டும்? பாரதிய சனதாக் கட்சி எதற்காக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசிரியர் உரை எழுதியுள்ளார். இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் - உழைக்கும் மக்களும் ஒடுக்கும் அரசுகளும் (தமிழேந்தி), பெருங்குழும வேளாண்முறையை ஒழிப்போம், வெகுமக்களுக்கான வேளாண்மையை வளர்ப்போம் (க.முகிலன்), தமிழ்நாட்டில் மின்சாரம் இன்றைய நிலை (பொறிஞர்.கு.ம. சுப்பிரமணியன்), தி.மு.க. மகளிரணி மாநாடு ஒரு மதிப்பீடு (ஓவியா), பெட்ரோல் விலை உயர்வு மறைக்கப்படும் உண்மைகள் (செங்கதிர்), உணவு மக்களின் அடிப்படை உரிமை அல்ல. அக்கிய நாடுகள் அவையின் முடிவு (இராமியா), செயற்கையில் செய்யாதது. இயற்கையில் இருந்ததா? (தா.அன்புவாணன் வெற்றிச் செல்வி), மகளிர்க்கு இட ஒதுக்கீடு. அரசியலில் மாற்றம் கொண்டு வருமா? (முனைவர். நா. நளினிதேவி) - இதழின் ஒவ்வொரு கட்டுரையும் தரமாக நாட்டு நடப்பை மிகச் சரியாகச் சொல்லுபவை. படித்து உணரவேண்டிய செய்திகளை உடையவை.ஓய்வு பெறும் வயதை உயர்த்தாதே, ஒடுக்கப்பட்டோருக்குக் கதவை அடைக்காதே. எரிமலைகளைத் தேடி தீக்குச்சிகளை எடுத்துச் செல்லும் மூடர்கள், அரச பயங்கரவாதமும் தனிமனித பயங்கரவாதமும் - போன்ற கட்டுரைகள் கருத்துச் செறிவுடையனவாக இருந்து உரமேற்றுபவைகள். இந்த இதழின் அட்டையில் தமிழியக்கம் சாய்ந்தது என்று அருளாளன் என்று அழைக்கப்பட்ட கருணைதாசன் (தமிழ்ப் பாவை இதழாளர்) அவர்களது படத்தினை வெளியிட்டு உள்ளே - அவர் தமிழ்ப் பணி பற்றி எழுதியுள்ளது.மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் மதுரையில் 6,7 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டுச் சிறப்பிதழ் இது. மாநாட்டுக் காட்சிகள், மாநாட்டுத் தீர்மானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு இதழ் வெளிவந்துள்ளது. தலைநகரில் சாயிபாபா என்று கட்டுரையை எழுதி எப்படி அரசியலாளர்கள் வலையில் மூழ்கியுள்ளார்கள் என விவரித்துள்ளது. மத ஓடத்தில் மாந்தரே- பலி பீடத்தில் சாய்ந்தீரே. மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நீர் மூலப்படுத்தக் கை ஓங்குங்கள் - பலி பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ நாடு நமக்கென்று வணங்குவீர். என்ற பாரதிதாசன் கவிதை வரிகளை நினைவுபடுத்தியுள்ளது. இரத்தம் தோய்ந்த அமெரிக்க வரலாறு என வரலாறு காட்டுகிறது. பெண்கல்வி முன்னேற்றம் குறித்த கட்டுரையையும் வெளியிட்டுள்ளது.பின் அட்டையின் உனக்கா படுகுழி என்ற தமிழேந்தியின் கவிதைகள் சிறப்பாக உள்ளன.கூடல் மாநகரில் கூடி கொள்கைக்கு வழிகாண ஆர்வமுள்ளவர்களை இதழ்வழி அழைத்துள்ளது. பெரியார் சிலை உடைப்பு பற்றியும், ஆண்டன் பாலசிங்கம் மறைவு பற்றியும் ஆசிரியர் உரை காணப்படுகிறது. கொள்கைப் பிடிப்போடு இயங்கிய தோழர்களின் மறைவை நினைவு கூர்ந்து படத்துடன் செய்தி வெளியிடுவது இந்த இதழின் சிறப்பு. தமிழர்களுக்கென ஒரு தமிழ் நாளேடு என தமிழ் ஓசை இதழ் வெளியீட்டு விழா பற்றிய குறிப்பினை வெளியிட்டுள்ளது. குயில் இதழில் பாரதிதாசன் எழுதியுள்ள பொங்கல் விழா பற்றிய குறிப்பினை இதழில் மறுவெளியீடாக வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வு ரத்து பற்றியும், சச்சார் அறிக்கை பற்றியும் கட்டுரைகளை எழுதியுள்ளது. இதழில் எழுச்சிமிகு உரைவீச்சுகளும், நிகழ்வுக் குறிப்புகளும் உள்ளன. தமிழ் மக்களின் சிந்தனையைக் கூர்மைப்படுத்த சிந்தனையாளன் இதழ் பெரிதும் உதவும்.தீய சட்டத்தைத் தீயிலெரிப்போம் என்கிற ஆசிரியர் உரை எழுச்சி மிக்கது. துணைத் தலையங்கமாக கன்ஷிராம் ஓ கன்ஷிராம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் திட்டமிட்டு இயங்கிய தலைவரை நினைவுகூர்ந்துள்ளது. ஆனைமுத்து அய்யா அவர்களது தம்பியின் (வே.இளங்கோ) மறைவு குறித்த செய்தி நம்மை வருத்துகிறது. "எந்த வசதியும் இல்லாத கூரை வீட்டில் நாங்கள் பிறந்தோம், வளர்ந்தோம், குடும்பம் நடத்தினோம்" என்று அவர் குறிப்பிடும் பொழுது கண்கள் பனிக்கின்றன. உண்மைதான். இந்த நாட்டுக்காக வாழுகிறவர்கள் வறுமையின் பிடியிலே பிறந்து வளர்ந்து, இறுதிவரை வாழ்ந்தும் - தன் கொள்கையை விடாது - வாழ்ந்து கொண்டிருப்பது இயங்குபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதே. எப்படி உருப்படுவார் தமிழ் மக்கள் அருமையான கட்டுரை. விரப்பமொய்லி குழு அறிக்கைக்குத் தீ என்கிற பெரியார் திராவிடர் கழகப் போராட்டம் பற்றிய செய்தி இதழில் உள்ளது.மா.பெ.பொ.க.வின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவை யொட்டி சீர்காழியில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் இதழில் தரப்பட்டுள்ளன. மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழர் நலன் உயர்த்துபவையே. நுட்பமாகச் சிந்திப்பவரையெல்லாம் இந்தத் தமிழகம் ஏன் ஒதுக்குகிறது என்ற வினா எழுகிறது. மக்களை நாம் வளர்த்தெடுக்க வில்லையோ என்ற ஐயப்பாடும் மேலெழுகிறது. பெப்சி கோக் பற்றிய கட்டுரை விரிவாகவே உள்ளது. இடஒதுக்கீட்டுக்காக இதழாசிரியரின் பெருமுயற்சி போற்றுதற்குரியதே. செஞ்சோலை கொடுமைக்காகக் கிளர்ந்து எழுந்து நிமிர்ந்த இயக்கங்களை இதழ் வரிசைப்படுத்தியுள்ளது. தமிழனை நிமிர்த்துகிற நிகழ்வுக் குறிப்புகளும் இதழில் உள்ளன.12-8-2006 அன்று சீர்காழி இரத்தினாம்பாள் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு நடைபெறவுள்ளது என்பதனை இதழில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதனை மிகத் துல்லியமாக இந்த இதழின் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். துணைத் தலையங்கமாக ஈழத்தில் அமைதி நிலவிட இந்திய அரசின் தலையாய பணி பற்றியும் சுட்டிக் காட்டுகிறார். அணுஆயுத ஒப்பந்தம் பற்றிய மாயையை இதழ்வழி அறிய முடிகிறது. அரசு ஊழியர்களுக்கு அரசியல் உரிமை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் இதழில் காணப்படுகிறது.இந்த இதழின் தலையங்கம் இந்திய அரசின் வரவு செலவுத் திட்டம் வெகுமக்களின் நலனைப் புறக்கணிப்பதே என்பதற்கான சான்றுகளுடன் விளக்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின் பின் ஒளித்திருக்கும் தன்நலம் பற்றிய உண்மைகளை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். சங்கமித்ராவின் தொடர் சிறப்பாக உள்ளது. முல்லைப் பெரியாறின் நிலையை எப்படி எடுத்துச் சொன்னாலும் ஏன் கேட்க மறுக்கிறது இந்த அரசும் அதிகாரமும் என்ற கோபம் தில்லைவனத்தின் கட்டுரையைப் படித்தவுடன் எழுகிறது. பாலியல் நோய்க்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அனைத்துத் தொடர்புக் கருவிகளும் தன்போக்கிற்கு பாலியலை முதன்மைப்படுத்தி வணிகம் செய்வதைத் தடுக்க முடியாத அரசும் அதிகாரமும் பாலியல் தடுப்பு நடவடிக்கை எனப் பலகோடி கடன் வாங்கிச் செலவு செய்வது நகைப்பிற்கிடமாக அல்லவா இருக்கிறது.இந்த இதழின் ஆசிரியர் உரையில் "பாராளுமன்றமா பன்றித் தொழுவமா?" என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களது அதிகாரம், அரசின் தன்மை, செயற்படவேண்டிய முறை என்பது பற்றி நுட்பமாகக் கூறியுள்ளார். இதழ் நடத்துவதோடு மட்டுமல்லாமல் பயிற்சி வகுப்புகள் நடத்தி மக்களை உருவாக்கக்கூடிய செயற்பாட்டினையும் செய்து வருகிறார். அவரது துடிப்பான வேகம் இளைஞர்களை வழிநடத்துகிறது.இதழ் நடத்துவதோடு மக்களுக்கான பயிற்சிப் பட்டறைகளும் நடத்தி வருகிறது. ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய இதழிது.மக்களுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுத்து கருத்து விளக்கச் செறிவூட்டுகிற இதழ். ஆசிரியர் தலையங்கம் நுட்பமான, ஆழமான, கருத்துச் செறிவுடையதாக இருக்கும்.கட்டுரைகளின்வழி மக்களுக்குச் செய்திகளைப் பரப்புரை செய்வதோடு, பயிற்சிகளையும் நடத்தி அடித்தளம் அமைக்கிற உயர்சிந்தனையாளரின் தொடர்பிதழ் இது.மார்க்சிய. பெரியாரிய. லெனினியக் கருத்துகளை தமிழ் மண்ணுக்கு ஏற்றவாறு பொருத்திப் பார்த்துக் கருத்து விதைக்கிற தரமான இதழ்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,