இந்த இதழில் மீன்கள் சிறுகதையை -ஹரணி எழுதியுள்ளார். இந்த இதழின் சிறப்பே கடித இலக்கியம் தான். எழுதிய கடிதங்களின்வழி இலக்கியப் படப்பிடிப்பை இதழ் தொடர்ந்து நடத்தி வருகிறது. பலரின் முகங்களும். பலரின் செயற்பாடுகளும் இதழ்வழி வெளிப்படும். பொதிகைச் சித்தர் தமிழ்த் தேசிய அடையாள மீட்பு பற்றிய கட்டுரையை எழுதியுள்ளார். முத்தொள்ளாயிரக் காட்சியை நடைமுறைக்காட்சிகளோடு பொருத்திக் காட்டியுள்ள வளவ துரையரசன் பாராட்டுக்குரியவரே. இதழில் உரைவீச்சுகளும் உண்டு. இதழ் வரலாற்றுப் பாதுகாப்பிலும், வரலாற்றைச் சுட்டிக் காட்டுவதிலும் முனைப்புடையது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உருதுக் கவியரங்க நிழற்படததை வெளியிட்டு எழுதியிருப்பது வாழ்த்துதற்குரியதே. இதழ் தொடர வாழ்த்துகள்.இந்த இதழ் நடிகவேள் எம்.ஆர்.இராதா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதழின் சிறப்பே நேர்காணல் இலக்கியத்தை மிகச் சிறப்பாகச் செய்வது தான். உள்நுழைந்து, அலசி, நுட்பம் கண்டு, வெறுப்பு விருப்பின்றிப் பதிவு செய்து வரலாறு காட்ட வழிசெய்வது உயர்தரத்தது. இந்த இதழில் நடிகவேள் நாடகக்குழுவின் நிர்வாகியாக இருந்த சாம்பு என்கிற சண்முகத்தின் மகனான திரு ச.சோமசுந்தரத்தை நேர்காணல் கண்டு - நடிகவேள் பற்றிய கிடைத்தற்கரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளது வாழ்த்துதற்குரியது. மலையாள மொழிபெயர்ப்புக் கதையான வனதுர்க்கையை ஏ.எம்.சாலன் எழுதியுள்ளார். இதழில் உள்ள எண்ணக்கள் திறப்போம் என்ற ஆசிரியரின் இதழுரை நடக்கிற நிகழ்வுகளை கூர்ந்து பார்த்துப் பதிவு செய்வதே. உரைவீச்சு, சிறுகதை, கட்டுரை என மிகத் தரமாக இதழ் தொடாந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.இதழின் அட்டையில் சிற்றிதழாளர்களை ஊக்குவித்து வந்த திரு வல்லிக்கண்ணன் அவர்களது கோட்டோவியம் இடம் பெற்றுள்ளது. உள்ளே வல்லிக் கண்ணனின் நினைவலைகளை சுகன் எழுதியுள்ளார். அன்றைய இதழாளர் இன்றைய கல்லூரி முதல்வர் இலக்குமி குமாரன் ஞானதிரவியத்துடனான கலந்துரையாடல் இதழில் இடம்பெற்றுள்ளது. காலம் தின்றவர்கள், கலைஞனின் தனிமை என்கிற படைப்பாக்கங்களும், தண்டனை என்கிற மலையாள மொழிபெயர்புக் கதையும் இதழிலுள்ளன. கவிதையை ஒரு கலகக்குரலாக எண்ணிப் பதிவு செய்வதாகக் கூறுகிறார் ஷாராஜ். தலித் விடுதலைக்காக, மண்விடுதலைக்காக, ஒடுக்கப்படுபவருக்கு எதிராக ஒலிப்பதுதான் கலகக்குரல் என்பதற்கான சரியான பொருளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது பற்றி ஷாராஜ் தான் கூறவேண்டும். இந்த இதழில் இதழாசிரியர் க.சு.சரவணன் அவர்களது தாத்தா கே.வி.திருஞானம் அவர்களது நினைவலைகளை மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். 28-12-2006 கே.வி. திருஞானம் அவர்களது பத்தொன்பதாவது நினைவுநாள்.இந்த இதழில் ஆட்டுவிக்கும் ஆடைகள் என பண்பாட்டுச் சீரழிவைச் சுட்டிக் காட்டுகிறது. மதியழகன் சுப்பையா மொழிபெயர்த்த மொழிபெயர்ப்புக் கதையை இதழில் வெளியிட்டுள்ளது. கடித இலக்கியமாக இலக்குமி குமாரன் ஞானதிரவியத்திற்கு வந்த மடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரா.நடராசன், கி.சாந்தகுமார் நூல்களின் விமர்சனத்தோடு, பொதிகைச் சித்தரின் குறும்பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன, கூர் என வந்த மடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய மாதவியின் சிறுகதை அறிமுகம் வெளியிடப் பட்டுள்ளது.தமிழ் இலக்கிய சாளரத்தின் பல்வேறு கதவுகளைத் திறந்து வைத்து படைத்துக் கொண்டிருக்கும் இதழ் இது. சுரதாவின் நினைவலைகளை சாகுல்அமீது எழுதியுள்ளார். செஞ்சோலைக் கொடூரம் பற்றி தலையங்கத்தில் எழுதியுள்ளது. சிறுகதைகளையும், உரைவீச்சுகளையும் இலக்கியத்தரமாக வெளியிடவேண்டும் எந்த உந்துதலோடு இயங்கிவருகிற இதழ் இது. கடித இலக்கியத்தை சுகன் இதழ் புதுப்பித்து வருகிறது. இந்த இதழில் கோவி.மணிசேகரன் அவர்களை நேர்காணல் கண்டு எழுதியுள்ளது.தஞ்சையிலிருந்து வெளிவரும் இந்த இதழ் சுகனின் குடும்பமே முன்நின்று தொடருகிற இலக்கியச் சிற்றிதழ் ஆகும். விளம்பரங்கள் ஏதுமில்லாது, கருத்துச் செறிவொன்றினையே கருத்தாகக் கொண்டு தொடருவது. எழுது கோலால் எண்ணங்கள் திறப்போம் என, ஆசிரியரின் அனுபவப் பிழிவுத் தலையங்கம் ஒவ்வொரு இதழிலும் துடிப்புடன் சுட்டிக்காட்டுவது. தரமான இலக்கியவாதிகளை அரவணைப்பதில், அவரது கருத்துகளை வெளியிடுவதில் சுகன் இதழ் பாசத்தோடு செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இவரது அன்புப் பிடியில் முதன்மை வகிப்பவர்கள் இவரது தாத்தா அமரர் கே.வி.திருஞானமும், அமரர் தஞ்சை பிரகாசும் ஆகும். அனைத்து இலக்கியவாதிகளையும் நேரில் கண்டு நேர்காணலைப் பதிவு செய்வது இவரது உயர்தன்மை. கடித இலக்கியம் இதழுக்குச் சிறப்புச் சேர்ப்பதே. தரமான சிறுகதைகளையும், உரைவீச்சுகளையும் இதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கூர் என வாசகர் கருத்துகளை அப்படியே வெளியிடுவது இதழின் பாராட்டிற்குரிய அணுகுமுறை. கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் இந்த இதழோடு தொடர்புடைய படைப்பாளிகளை எண்ணும் பொழுது நெஞ்சு நிமிர்கிறது. இதழ் தொடர வாழ்த்துகள்.கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைக்கும் இலக்கியத் திங்களிதழ். இந்த இதழ் 19 ஆம் ஆண்டின் 10 ஆவது இதழ். இதழ் எண் 226. படப்படி இதழிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்ந்து சொந்த அச்சகத்தில் அச்சாகி வெளிவருகிற இதழ். வணிக நோக்கமின்றி கருத்து விதைப்பையே முதன்மையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிற இதழ். சிறுகதை, கட்டுரை, கவிதை என இலக்கியத்தின் பல பரிமாணங்களைச் சிறப்பாக வெளியிட்டு வருகிற இதழ். படைப்பாக்கங்களை இட்டு நிரப்பாமல் தேர்ந்தெடுத்து வெளியிடுவது இதன் சிறப்பு. இதழில் வெளியிட்டு வரும் கடித இலக்கியம் இதன் நுட்பக்கூறாக அமைந்துள்ளது. வந்த மடல்களை கூர் என்கிற தலைப்பில் வெளியிடுகிறது. இதழின் தலையங்கம் அன்றைய நடைமுறைகளை அலசிப்பார்கிற வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. இலக்கியம், அரசியல், கல்வி என அனைத்துத் துறைகளிலும் தன் ஆளுமையைப் பதித்துத் தலையங்கத்தை எழுதி வருகிறது. இதழ் முகவரி : சி.46 இரண்டாம் தெரு, நகராட்சிக் குடியிருப்பு, தஞ்சாவூர் - 613 007


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,