மிகத் தரமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிற திங்களிதழ். தெளிதமிழுக்காகத் திருமுருனார் அவர்கள் வெளியிடுவது. தமிழ் வளர்க்கும் நண்பர்கள், பா எழுதப் பயிற்சி, மொழி இன நாடு என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துகிற கருத்து விதைப்பு என நுட்பமாகத் தொடருவது. இந்த இதழில் வெளியாகியுள்ள கறிக்கடைக்காரருக்கு இராமலிங்க அடிகள் விருது, முப்பாலைப் பாதுகாப்போம் கட்டுரை, மறுபதிப்பாக இணையத்தில் வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் என ம.இலெ.தங்கப்பா அட்டையில் பா எழுதியுள்ளார். முனைவர் தமிழன்னலின் உணர்ச்சியுள்ள தமிழர்களின் நூறு உறுதிமொழிகள் என்ற தொடர் தமிழியச் சிந்தனையின் கருத்துப் பதிவுகளாக இருக்கின்றன. பாவலர் பரிசுத் திட்டம் பா எழுத வைத்து பரிசளிப்பது வணங்குதற்குரியது.
இந்த இதழில் நம் தமிழம் வலையைப் பற்றி 32 வரிகளில் செம்பியன் அவர்கள் பா இயற்றி வெளியிட்டுள்ளார்கள்.
வாழையடி வாழைஎனத் தமிழ்வ ளர்த்து
வாழ்ந்தவர்கள் திருவுருவப் படங்கள் எல்லாம்
வாழுகின்ற தமிழருக்குப் பெருமை யோடு
வலையேற்றி அனுப்புவதோர் அருமைப் பாடு
காழகத்துக் கொண்டலையும் மொழிப்ப கைவர்
கண்டுவிட்டால் வயிறெரிந்தே செத்துப் போவார்.
தாழாது தமிழ்மொழியைக் காப்ப தற்குத்
தமிழம் போல் இதழ்கள்இன்னும் பெருக வேண்டும்.
செம்பியன் எழுதியுள்ள வரிகள் எம்மை மேலும் ஊக்கத்தோடு இயங்க வைக்கின்றன.தெளிதமிழ் 13 ஆம் ஆண்டில் தொடருகிற சிற்றிதழ். தெளி தமிழை முதன்மைப்படுத்தி வணிகநோக்கமின்றித் தொடர்ந்து நடத்துகிற இதழ். திருமுருகனார் அவர்கள் இதழாசிரியராக இருந்து வெளியிடுகிற இதழ். தமிழிய நோக்கில் செறிவாக வருகிற இந்த இதழைத் தமிழர்கள் அனைவரும் வாங்கிப் படித்து வளரவேண்டும். இதழ் முகவரி: முனைவர் இரா.திருமுருகன், 62 மறைமலையடிகள் சாலை, புதுச்சேரி - 605 001தெளி தமிழ்: இலக்கணப் புலவர் திருமுருகனார் மொழி வளர்ச்சிக்காக முனைப்புடன் தொடர்ந்து தொய்வின்றித் தரமாக நடத்துகிற இதழ் இது. 11 ஆவது ஆண்டின் நான்காவது இதழ் இது. பாட்டியற்றுக, குறித்தபடி படைத்த பாடல்கள், தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள் என இதழின் ஒவ்வொரு பக்கமும் தெளிதமிழாக வெளியிடும் சிறந்த இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,