கன்யாகுமரி மாவட்டத்திலிருந்து வெளிவருகிற இதழ். மருத்துவர் த.இராசேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருவது. பேராசிரியர்களையும், மருத்துவர்களையும், தெளிந்த சிந்தனையாளர்களையும் இதழில் இணைத்துக் கொண்டு இதழை வெளியிட்டு வருகிறார். சேது சமுத்திரம் அரசியலும் அறிவியலும், இராமன் எத்தனை இராமனடி., இராமர் பாலம் கலாச்சாரச் சின்னமா?, நஞ்சில்லாத உணவுக்கு இயற்கை வேளாண்மை, அகிம்சைப் போராளி சர்மிளா, இந்தியாவின் சுற்றுச் சூழல், மனம் என்னும் மாயக் கண்ணாடி, சீரழியும் தமிழச்சிகள், நாடி சோதிட மோசடி, பயோடீசல் கருத்தரங்கு, எனத் தரமான கட்டுரைகளை உள்ளடக்கியதாக இதழ் உள்ளது, இதழ் தொடர வாழ்த்துகள்,மருத்துவர் த.இராசேந்திரன், அசுரன் மற்றும் குழுவினரது முயற்சியால் வெளிவருகிற தரமான இதழ் தான் புதிய தென்றல். மக்கள் நலம் கருதி, மக்களைச் சூழுகிற பிரச்சனைகளை மிகத் துல்லியமாக, சரியாகக் கட்டுரைகளாக்கி விழிப்புணர்வு ஏற்றுகிற இதழ் இது. அன்பகம், மூலச்சல், மேக்கா மண்டபம் 629 166 முகவரியாகக் கொண்டு வெளிவருகிறது. இது 5 ஆவது இதழ். தனியிதழ் ரூ10. இந்த இதழில் வேண்டாம் டைட்டானியம் தொழிற்சாலை, இந்தியா அடிமை நாடா?, போலியோவைப் பரப்பும் உலக சுகாதார நிறுவனம், ஹிஸ்டீரியாவும் பில்லிசூனியமும், கல்லாமை இல்லாமை வேண்டும் என்கிற கட்டுரைகள் மிகவும் சிறப்பாக எழுதப் பட்டுள்ளன. கீழா நெல்லி பற்றிய மருத்துவக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. புத்தக விமர்சனம், உரை வீச்சு என அனைத்து வகையிலும் மக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்துகளைப் பதிவு செய்கிற உயரிய இதழ் இது.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம், மூலச்சல் பகுதியிலிருந்து புதிய தென்றல், வெளிவந்து இதுவரை 3 இதழ்களை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் த.இராசேந்திரன். வாழ்வியல் வழிகாட்டியாகப் பயன்படத்தக்க வகையில் இதழ் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. புறக்கணிக்கப்படும் கிராமங்கள் என்ற கட்டுரை சிறப்பாக உள்ளது. அறிவியல் அடிப்படையில் உண்மைகளைத் துணுக்குகளாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற இதழ் இது. ஜே.சி.குமரப்பா பற்றிய கட்டுரையும் இதழில் உள்ளது. பெண்ணியப் போராளி திருமிகு ஓவியா அவர்களது நேர்காணலும் இதழில் உள்ளது. அசுரனிடம் கேளுங்கள் என்ற கேள்வி பதில் பகுதி மக்களுக்கு வழிகாட்டுவதே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,