செவ்வானம். 1970 களில் இலக்கியத் திங்களிதழாக வெளியிடப்பட்டது. இது முதல் ஆண்டின் 6 ஆவது இதழ். கூழுக்கு ஒருத்தன் அழும்படி ஆண்டிடும் கோலை முறித்திடுவோம் என்கிற பாரதிதாசனின் வரிகளைத் தலைப்பில் வெளியிட்டுள்ளது. தமிழ் உணர்வோடு மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு பற்றிய குறிப்பினைத் தலையங்கத்தில் எழுதியுள்ளது. மரபுப் பாடல்களை வெளியிட்டுள்ளது. துணுக்குச் செய்திகளாகப் பெரியாரின் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. அல்லி அரங்கம் என நாட்டு நடப்புகளை அலசியுள்ளது. வந்த மடல்களை வெளியிட்டுள்ளது. தெரிந்தால் சொல்லுங்கள் என்ற தலைப்பில் வினா விடைப் பகுதியும் தரப்பட்டுள்ளது. ஆங்கில மொழிப் பித்தர்களுக்கு என முனைவர் மு.வ அவர்களின் கருத்தாக.... வெளிநாட்டுப் பயணத்தில் என் பழைய மாணவர் ஒருவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். சரளமாக ஆங்கிலம் பேசினார். நான் வியந்தேன். கல்லூரியில் ஆங்கிலத்தில் மூன்று முறை தவறிய அவரா அப்படிப் பேசுகிறார் என்று வியந்தேன். எப்படி இப்படி உன்னால் பேச முடிகிறது என்றபோது அவர் - உடன் இருப்போருடன் நானும் பேசிப் பழகிவிட்டேன் - என்றார். தமிழ் பயிற்று மொழியால் ஆங்கிலம் போய்விடும் என்று யாரும் அஞ்சவேண்டாம். முயன்றால் எம்மொழியும் கற்றுவிடலாம்... என்பதை கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,