இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 7

01 டிசம்பர் 2003


அன்புடையீர். வணக்கம்,

இது ஏழாவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இணையதளம் என்னுடை ஓய்வு நேரத்தில் என்னால் வடிவமைக்கப் பட்டதுதான். இணையதளம் கிடைத்ததும் நானே html, flash..எனப் படித்துப் படித்து ஆக்கியுள்ளதுதான் இந்த இணையதளம். தொழில் நுட்ப வல்லுநர்களின் கைவண்ணம் இல்லாததால் பல குறைகள் இருக்கலாம். அருள்கூர்நது சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன். வல்லுநர்களிடம் சென்று இணையதளப் பக்கத்தை வடிவமைக்கச் சொன்னால் உரிய நேரத்தில் கிடைக்குமா? 15 நாள்களுக்கு ஒருமுறை சரியாக வலையேற்றம் செய்ய இயலுமா என்பது வினாக்குறியே. எனவே தான் நானே வடிவமைக்கிறேன். இந்த வலையேற்றத்திலிருந்து 'தமிழ் கற்போம்' புதிய தொடர் தொடங்கியுள்ளேன். இதனைத் தொடர்ச்சியாகக் கற்று, பயிற்சி எடுப்பவர்கள் மூன்று திங்களுக்குள் தமிழ் எழுதப் படிக்க இயலும். இணைய தளத்ததைக் காணுகிற நண்பர்கள் "தமிழ் கற்றுக் கொள்ள விரும்புகிற" மக்களுக்கு இச்செய்தியை மின்அஞ்சல் வழியில் தெரிவித்து படிக்க உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். வெளிநாட்டுத் தமிழ்ப் பள்ளிகள் இதைப் பயன்படுத்தி மழலைகளின் கற்றலை ஊக்குவிக்கவும். தமிழ்ச் சங்கங்களும் தமிழ் கற்றலுக்கான பரவலுக்கு உதவினால் மகிழ்வடைவேன். இறுதியில் இப்பாடங்கள் அனைத்தையும் குறுந்தகடு ஆக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


- சருகு - சிறுகதை -

கண்மணி குணசேகரன்

"ஒரு வாய்க்கி சருவு இருந்தாக் குடுங்க சாமி" ன்னு யார் யார்கிட்டியோ கையேந்திப் பாத்துட்டான் கலியன். எங்கியும் ஒன்னும் பறியில. வாய் சுள்ளன்னிருந்தது. கூழ்லியும் புளிச்ச கம்மங்கூழ். அடியேடையோட கரைச்சது. ஏப்பம் ஏப்பமா வந்துக்கிட்டு இருந்துது. ஒரு வாய் சருவு போடுலன்னா பைத்தியமே புடுச்சிடும் போல்ருக்கு. மத்ததுலாம் இருக்கு. வெறும் வெத்தலதான் வேணும். காலயில பைய நடயில வச்சிட்டு ஒன்னுக்கு உடப்போனதுதான், பேசிக்கிட்டு ஒக்காந்திருந்த மொளவிக் கெழுவி சுருட்டிக்கிட்டுப் பூட்டா. அட ஒரு அர வெத்தலனாச்சும் வக்கறதில்ல ? சாயிந்திரம் ஆவுட்டும் அவள, இது எனனா முந்திரிக் கொட்ட நாளா, நாலு கொட்டய கடயிலப் போட்டக்கிட்டு வாய் நெறயா சருவு வாங்கிப் போட்டு கொதப்பறதுக்கு.

கடயில கூட்டம் அதிகமில்ல. சனங்க எல்லாம் கள வெட்டப் போயிருந்துதுவோ, செட்டியார் மொவன் கடயில எதையோ நெனச்சிகிட்டு ஒக்காந்திருந்தான். ஊனிக்கொண்டு வந்த கழிய கட மின்னாலப் போட்டுட்டு நாய்க் குந்தலாக் குந்தினான் கலியன். தலையை சொறிஞ்சான். பிச்ச எடுக்கற மாதிரி கையேந்தனபடி " சாமி, ரவ கிளிஞ்சலு சருவு இருந்தாக் குடுங்க சாமி" ன்னான்.

"இப்பதான் பாயி வெத்தலப் போட்டுட்டுப் போயிருக்காரு. மொத மொத எனாம் வெத்தல குடுக்கக் கூடாது. நாலணா கையில இருந்தாப் பாரு. இல்லன்னா எடத்தக் காலி பண்ணு" செட்டி மொவன் கறாராச் சொன்னான்.

உள்ள மொழுவாத கசங்குப் புட்டியில வெத்தல பசும மாறாம அடுக்கியிருந்துது. அதப் பாக்கப் பாக்க கலியனுக்கு மனசு பதறுது. அப்பிடியே செட்டியாரு மொவனப் புடிச்சி எட்டத் தள்ளிட்டு புட்டியில இருக்கற வெத்தல எல்லாத்தையும் ஆடு மொள்ற மாதிரி மொன்னுடுவுமாங்கற மாதிரி வெறி வந்துது. அதுலாம் நடக்கற காரியமா ? தல சொட்ட வுழுந்து கழி ஊனிக்கிட்டு நடக்கறப்ப நெனக்கற நெனப்பா இது? மொகம் சுண்டிப் போச்சி. "இது இப்பத்திய புள்ளிவோ. நானுஞ் செட்டியாரும் அந்தக் காலத்துல ஒன்னா மரம் வாங்கி கரி சுட்டு விப்பம்" இன்னும் எத எதையோ சொல்லி தேத்திப் பாத்தான் கலியன். வாய் சருவுக்கு மைய்ய மாட்டன்னுட்டான் செட்டி மொவன்.

ஒரு வேள சாப்பாடு இல்லன்னாலும் பரவாயில்ல. சருவு இல்லன்னா பித்து புடிச்ச மாதிரி ஒன்னும் ஓடமாட்டங்குது. தலையில துணியப் போட்டுக்கிட்டு ஊட்டப் பக்கம் நடந்தான்.

"நம்மகிட்ட இருந்துதுனா வந்து மெனமெனயா நோட்டுப் போட்டுட்டு நொட்ற மாதிரி போட்டுக்கிட்டு கொழயக் கொழய மொன்னு மூஞ்சில துப்பற மாதிரி முழிஞ்சிட்டுப் போறாளுவோ, நமக்கு என்னைக்காச்சும் இல்லன்னா எதிர்லகூட ஒரு பய வரமாட்டாங்கறான்." நெத்தியில கைய வச்சி உத்து உத்துப் பாக்கறான், எதிர்ல வர்றவங்க யாராச்சும் வெத்தல போடறவங்க வரமாட்டாங்களான்னு. யாரையும் காணம். உச்சி வெயில்ல கண்ணு பூத்துப் போற மாதிரி இருந்துது,

ஒரு நாலணா இருந்தாப் போதும். எங்க போறது ? காடு வெட்டப் போறமா, இல்ல கள வெட்டப் போறமா. ஒடன காலம் ஓடிச்சி. வயசாயிப்போச்சி. காலு கையி மடங்கி ஒக்காந்துப் போச்சி. மொவங்காரன் சாயந்திரமா வந்து ஒரு ரூவாய்க்கி வாங்கித் தருவான். ஒரு நாளக்கி அந்த சருவு போதும். என்னைக்காவது ஒரு நாளக்கி ஓர் ரூவா ரெண்டு ரூவா குடுத்து இட்லி வாங்கி வாயில போட்டுக்கம்பான். அதுல எட்டணா நாலணானு வாயக்கட்டி பையிலப் போட்டு வச்சிருந்தா பேரப்புள்ளிவோ கையஉட்டு அலசிடுதுவோ. யாரு எடுத்தா எவுரு எடுத்தான்னு கேக்க முடியுமா? வெளிய வெசயம் தெரிஞ்சிப் போச்சின்னா அவ்வளவுதான். "அடிக்கிற முட்டி காணுலன்னு அப்பனுக்கு இட்லிகூட வேணுங்குதா" ன்னு புடிச்சுப்பா பொல்லாத மருமவ மகராசி. சரி, பேரப்புள்ளிவோதான் எடுத்துதுன்னு போவ வேண்டியதுதான்.

மனசாரியில நொழயரப்ப கெழக்குத் தெருவுல மொதல்வூட்ல குனிஞ்சிப் பாத்தான். யாரையும் காணம். "அரசன் இருந்தான்னா கேக்கலாம், குடுப்பான். ஆளு இல்ல போல்ருக்கு, எப்பியும் திண்ணயிலேயேதான் ஒக்காந்திருப்பான். நம்ம நேரம் எவனும் இருக்க மாட்டாம் போ,"

ஊர்லேர்ந்து மொவ வந்துதுனா கொண்டாட்டந்ததான். அர கவுளி, கால் கவுளின்ன வாங்கியாந்து தள்ளும். அப்பிடியே தண்ணியில ஒரு அமுக்கு அமுக்கி ஒதறி, ஈரத் துணியால சுத்தி வச்சிட்டா நாலு நாளக்கி பசும கொறயாம இருக்கும். கருநாளு அன்னிக்கி வேணும் வாணான்னு கெடைக்கும். காசு போடறாங்களோ இல்லியோ நாலு வெத்தல கெடைக்கும். "நானு எங்கப் போட்டுக்கப் போறன். இந்தாக் கெழவா" ன்னு மத்தவங்களும் குடுத்துடுவாங்க. எல்லாத்தையும் ஒழுங்கா அடுக்கி தண்ணிக் கொடத்துக்கிட்ட மண்ணப் பறிச்சி காம்பு மட்டும் வெளியில தெரியிற மாதிரி ஈரத்துல பொதச்சி வச்சிட்டா, ஒரு வாரம் ஓடும்.

வூட்டுக்கு முன்னால நின்னான். நடயில படுத்திருந்த நாயி இவனக் கண்டதும் ஒதறி சிலுப்பிட்டு ஓடிச்சி. "நாயி சிலும்பனா நெல்ல செவுனமாச்சே. அப்படினா கெச்சிப் போன வாயிக்கு சருவு கெடைக்குமா?" கூரையோரம் கட்டிக் கெடந்த பன்னிக் குட்டி மூச்சிறைச்சிக் கெடந்துது. உள்ள போயி கூழ் பான அலசன தண்ணிய எடுத்தாந்து ஊத்தனதும் குடிச்சிட்டு படுத்துக்கிச்சி.

நடயில ஒக்காந்தான். தெருவுல யாரும் இல்ல. வெறிச்சோடிக் கெடந்துது. வெத்தல போடாம எரிச்சலா இருந்துது. பொட்லம் பொயலயா இருந்தாலும் போட்டுக்கலாம். வச்சிருக்கறது கட்டப் பொயல. கள்ளிக்கட்ட மாதிரி எங்கப் போட்டு அடக்குறது.

பக்கத்து ஊட்டு செவுடி, ஊருக்குப் பூட்டுது. அது இருந்தா எந்தக் கவலயும் இல்ல. கள காம்பு வெட்டப் போகும். கையில காசு இருக்கும். வெத்தல பாக்கு வாங்கி வச்சிருக்கும். நம்முளுது மாதிரி எடுத்துப் போட்டுக்கலாம். ஏங்கிட்ட இருந்தாலும் சொந்தமா எடுத்துப் போட்டுக்கும். அண்ணம் மொவ வயசிக்கு வந்து போச்சின்ன தண்ணி ஊத்தப் போயிருக்கு. எப்படியும் சாயந்திரம் வந்துடும். 'இந்தாக் கெழவா தண்ணி ஊத்தன வெத்தல, போட்டுகக'ன்னு குடுக்கும். பொட்டலம் பாக்கு எடுத்தாரும். அசந்தா பாக்கு கீக்கு எடுத்தாந்தா கொள்ளதான். போட்டா தேனுமாதிரி இருக்கும். ஒரு சொட்டு எச்சிய கீழ முழிய மனசு வராது. எல்லாம் சாயந்திரம் வரும். ஆனா இப்ப ?

உள்ள கடாமுடான்னு சத்தம் கேட்டுது. எந்திரிச்சி உள்ள போனான். கீழண்ட அடுக்கு மேல் பானயில சத்தம் கேட்டுது. "எலி போல்ருக்கு. இந்தா ...ச்சூ..." ன்னு அதட்னான். சத்தம் கேட்டு எலிவோ ஓடிச்சி. இவங் காலடியாலும் ரெண்டு ஓடிச்சி. "பானயில என்னா இருக்குது எலி உருட்டுது." மெதுவா நடந்து போயி பானயில கைய உட்டான். அடிப்பானயில 'அது' கையில தட்டுப்பட்டதும் கலியனுக்கு சிரிப்பு வந்துது. அந்த நிமிசமே வாய் நெறய மணக்க மணக்க வெத்தலயப் போட்டு கொதப்பற மாதிரி மனசுல பட்டுது. அந்த நொடியே அவசரமா காரியத்துல எறங்கனான்.

நடயில வேகம் கூடிப்போச்சி. வழியில பேரன் 'சின்ன வண்டு' சோறு வாங்கிக்கிட்டு வந்தவன் பாத்துட்டான். அது என்னாத் தாத்தா துணிணிலன்னு கேட்டதும் கலியனுக்ககு 'குப்' புன்னு வேர்த்துப் போச்சி. "ஒன்னுமில்ல, ஊட்டுக்குப் போப்பா. அப்பறமா ஒனக்கு முட்டாயி வாங்கியாந்து தர்றன்."

கடயிலேர்ந்து வெளிய வரங்காட்டியும் கையும் வாயும் பரபரக்குது. வெத்தல என்னா, எல்லாமே வாங்கியிருந்தான். ஒரு வெத்தலய எடுத்துப் பாதியா மடிச்சிக் கிழிச்சி, சுண்ணாம்பு தடவி, வாயில பாக்கக் கிள்ளிப் போட்டு மொன்னு, வெத்தலயும் சேத்துப் போட்டு நாக்க நீட்டி செவப்பப் பாத்து. பொட்டலம் பொயலயப் பிரிச்சி கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில வச்சி உருட்டி கடவாயில வச்சி ஒரு கொதப்புக் கொதப்பி, ஒதட்டுல ரெண்டு வெரல வச்சி 'விசுக்' குன்னு சாட்டயா எச்சிய முழிஞ்சப் பொறவுதான் ரத்த ஓட்டமே சீரான மாதிரி இருந்துது கலியனுக்கு.

மொகத்துல தெளிவு வந்ததும் 'அப்பாடா'ன்னு பெருமூச்சி வுடுனு மாதிரி இருந்துது. வெத்தலப் பையச் சுருட்டி கோவண மடியில வச்சான். "ஊம்...அந்தக் காலத்துல எல்லாம் வெத்தல எப்படி இருக்கும். அப்பிடியே ஒரு ஆளுக்கு சாப்பாடு போடலாம். இப்ப என்னடான்னா அறியாப் புள்ளிவோ 'அரமூலி' மாதிரி ஒரு வாய்க்கிக்கூடப் பத்த மாட்டங்குது.

அடுத்து ஒரு 'விசுக்'. நெட்டுக் குத்தலாத் துப்பனதும் ஒரு செவப்புப் பூவாக் கீழேத் தெரிஞ்சிது. உத்துப் பாத்தான். செக்கச் செவேல்னு அழகாத் தெரிஞ்சிது. மறுபடி மெதுவா விரிஞ்சி விரிஞ்சி ஒரு கோவங்கொண்ட மொகம் மாதிரி அய்யோ அதுவும் மருமொவ மொகம் மாதிரி... சுண்ணாம்பு நாக்குல அதிகம் சுட்ட மாதிரி இருந்துது கலியனுக்கு. சரி ஆவுறது ஆவுட்டும். மெதுவா தெருப்பக்கம் வந்தான். தெருவுல திரும்பும் போதே காதுல மருமொவ பேசற சத்தம் காத்துவாட்டத்துல கேட்டுது. கலியனுக்கு சீவனே அடங்கிப் போற மாதிரி தெரிஞ்சிது.

"மாரமுட்டுங் கம்மஞ் சொணையில நாங்கெடந்து சாவறன். குடுக்கறத தின்னுட்டு கோழி அவயங் கெடக்கற மாதிரி ஊட்ல ஒக்காந்து கெடக்கற கொழுப்பாகப்பட்டது இந்த வேலயச் செய்ய சொல்லியிருக்கு. அதான் சாய்ந்திரம் சாய்ந்திரம் ஒரு ரூவாய்க்கி வாங்கியாந்து கொட்றான். அவம் முழிச்சிகிட்டு வர்றத பாரன். ஆடு மொள்ற மாதிரி எல்லாத்தையும் மொன்னுட்டு, கண்டு காணததுக்கு வழிய போறவனுக்குலாம் 'இந்தா, போட்டுக்க' ன்னு பிரிச்சி வச்சிடறது. குடிக்கத் தண்ணியில்ல. அய்யா இவருக்குக் கொப்பளிக்க பன்னீரு. அரபடி காப்படின்னு போட்டு வச்சிருந்தன். அத அள்ளிகிட்டுப் போயிருக்கான். அப்படிலாம் திருடியா அந்த நாக்கு வெத்தலப் பாக்கு கேக்குது? எனக்கு வர்ற ஆத்தரத்துல அந்த வெத்லப் பாக்குக் கேட்ட நாக்க இழுத்து வச்சி அருவாமனயால அறுத்துடமான்னு வருது."

நானும் பாக்கறன் கம்பு கோடா நடுவூட்ல கீழ எறஞ்சிக் கெடக்குதுன்னு. அவம் முழியப் பாரன். துணியில ஒட்ட கீட்ட இருக்குதான்னு பாத்துருப்பாங்கற. கம்பப் போட்டுட்டு கடக்கிட்டியே வாங்கன வெததலப் பாக்க கொழயக் கொழயப் போட்டுக்கிட்டு நிக்கிறானாம. வவுறு எரியுது. எனக்கு வர்ற காந்தாலத்துக்கு ஒனக்கு வெத்தலப் பாக்குப் போடக் கத்துக்குடுத்த பையங்குட்டிய இந்த வெளக்க மாத்தால உச்சியிலேர்ந்து சிலுக்க அடிப்பன்....." கொல்லன் ஒலயில எகிர்ற நெருப்பு மாதிரி மருமொவ வார்த்தையால கொட்னா.

இந்த ஏதாளங்கெட்ட வெத்தலப் பாக்குக்கு இம்மாங் கேழ்வி வாங்க வேண்டிதாப் பூட்டுது. இதவுட செத்தே தொலைச்சிருக்கலாம். மானத்த வித்து அப்பிடிலாம் வாழ்ந்து என்னா பண்ணப் போவுது. கலியனுக்கு கோவமா வந்துது. இந்த சனியம் புடிச்ச வெத்தலப் பாக்கு போடக் கத்துக்கிட் சென்மத்த செருப்பாலத்தான் அடிக்கனும். இருந்தும் இவனாவா கத்துக்கிட்டான்? நின்னு நெனக்கறப்ப அன்னிக்கு நடந்தது நேத்து நடந்த மாதிரியே கண்ணிலியே நிக்குது.

அப்ப பத்து வயசி இருக்கும். காட்டுப் பொறத்துல ஒரு வூட்ல கலியன் வேல சேய்ஞ்சிக்கிட்டு இருந்தான். அந்த வருசம் அவன் வேல செய்ஞ்ச வூட்ல நெல்ல கேவுரு, முந்திரி செடியுந்தான் இருக்குது. கல்லு மாதிரி கேவுரு கருது. பத்துப் பாஞ்சிப் பேரு கேவுரு கருது அறுக்கறாங்க. இவஞ் சாக்குல கருது புடிக்கறான். ஒரு பச்சக் கருது அப்பிடியே முருக்கு மாதிரி இருக்குது. அத ஆசையா அப்பிடியே கிழிச்சி கையில வச்சி உமிட்டி வாயிலக் கொட்ற நேரம், பக்கத்துல ஊட்டுக்கார ஆயி தாம் போட்டுக்க சுண்ணாம்போடு சுருட்டி வச்சிருந்த வெத்தலய எடுத்து, அவங் கையில இருந்த கேவுர தட்டிவுட்டுட்டு, "இந்தாடா சாண்டக்குடிச்சவன பத்துப் பாஞ்சிப் பேரு அறுக்கற எடத்துல நீ ஒரு கருத எடுத்து உருட்டனா, ஆளுக்கு ஒன்னு எடுக்க மாட்டாங்க?" ன்னு சொல்லி வாயில வச்சி அழுத்தி உட்டுட்டாங்க. இவனும் வாயில நொழுந்தன வெத்தலய துப்புனா என்னா நெனைப்பாங்கன்னு மொன்னான், நாக்க நீட்டச் சொல்லி "இன்னஞ் செவக்கலடா பையா" ன்னுட்டு சுண்ணாம்பும் குடுத்துது ஆயி. வாங்கிப் போட்டுகிட்டான். அப்பறம் தானாக் கேட்டு வாங்கி வெத்தல போட்டக்கிட்டான். அப்பறம் புடிச்சிக்கிச்சி வண்டி. தனியா வெத்தலப் பாக்கு வாங்கி பையி தயார் பண்ணிட்டான்.

"படுபாவி எங்க இருக்கியோ, ஒரு கருது உமுட்னதுக்கு குடுத்த தண்டனயா இது. காலம் பூரா வாய் கேக்காம கெடந்து பாட்டு வாங்கறன. நீ நெல்ல கெதி போயிருப்பியா!" வூட்டுக்கும் பின்னாடி இருக்கற புளியமரத்துக் கீழ துண்ட விரிச்சான். வாச்லல சைக்கிளு சத்தம் கேட்டுது.

"மொவங் காட்லேர்ந்து வந்திருக்காம் போல்ருக்கு." இவனுக்கு குண்டி கொடலுல்லாம் ஆடுது. "மொத வேலயா வந்தவங்கிட்ட அவுப்பா. அவனும் காடு வெட்டிட்டு வர்ற ஆத்துரத்துல "கமினேட்டி வெத்தல வேணுமின்னா ஏங்கிட்ட இல்லடா நீ காசு கேட்டுருக்கனும். இந்த வேலக்கி ஏன்டா போனன்னு பேசறதோட இல்லாம நாலு வச்சாலும் வைப்பான்." விதிய நொந்தபடி தாங்குறதுக்கு தெம்பு இல்லாம கிலியுடன் சாய்ஞ்சான் கலியன். புளிய மரத்து நெழலும் காத்தும் உருக்கமா இருந்துது.


நன்றி : உயிர்த் தண்ணீர் - கண்மணி குணசேகரன்

தாமரைச் செல்வி பதிப்பகம், 31/48 இராணி அண்ணா நகர், சென்னை 78



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061