இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 8

01 சனவரி 2004


அன்புடையீர். வணக்கம்,

இது எட்டாவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சு நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

www.pathivukal.com இணையதளம் thamizham.net இணையதளம் பற்றிச் சிறப்பாக முதல் பக்கத்திலேயே எழுதியுள்ளமையால் இந்தமாதம் இணையதளத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. வ.ந.கிரிதரன் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். நமது இணையதளத்தில் இணைய இதழ்களின் பெயர்களைத் தொகுத்துத் தரவிரும்புகிறேன். தமிழில் தற்பொழுது நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. தரமான இதழ்களை அடையாளம் காட்டவும். இணைய இதழை நடத்துகிற இதழாளர்களும் தொடர்பு கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


- கவிதைகள் -

- பாடு நெஞ்சமே -

பாடு பாடு பாடு நாளும்
பாடு நெஞ்சமே
பண்பு மன்பும் பாரி லோங்கப்
பாடு நெஞ்சமே
பாடு யார்க்கும் பயன ளிக்கப்
பாடு நெஞ்சமே
பச்சை மச்சப் பாட்டு மாளப்
பாடு நெஞ்சமே

நாடு வாழ வேண்டு மென்று
பாடு நெஞ்சமே
நன்மை வந்து கூட வென்று
பாடு நெஞ்சமே
கூடி வாழ வேண்டு மென்று
பாடு நெஞ்சமே
கொள்கை யொன்று வேண்டு மென்று
பாடு நெஞ்சமே

மண்டி யிட்டுக் கொஞ்சு வோரைச்
சாடு சாடுவாய்
மான வாழ்வு வேண்டு மென்று
பாடு பாடுவாய்
அண்டி வாழும் அற்பர் தம்மைச்
சாடு நாளுமே
ஆண்மை வாழ்வு வேண்டு மென்று
பாடி ஆளுவாய்

கவிஞர். வி. கந்தவனம்.
நன்றி : www. tamilnenjan.com


குடியினால் வரும் கேடுகள்

கள்விலை பகர்வோர் கள்ளினை நுகர்வோர்
கள்ளருந்து தற்குடன் படுவோர்
கள்ளருந் துனரை மகிழுநர் நரகில்
கற்ப காலங் கிடந் தழுந்தி
விள்ளருந் தீய மலப்புழு வாகி
மலத்தினை நுகர்ந்து பின்னிறந்து
விள்ளருங் கொடிய ரெளரவ நரகில்
மீட்டு மீட் டுழன்றுநாள் கழிப்பபர்

கூர்மபுராணம்
நன்றி : குலாலமித்திரன் - மே 1932பசிவந்திடப் பறக்கும் பத்து

மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனி
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

ஒளவையார்


- குறும்பாக்கள் -

கொஞ்சிப் பேசுவது குற்றமா
கூண்டுக்குள் சிறைப்பட்டது
பச்சைக் கிளி.

பெற்றவர்கள் இல்லை
அனாதையாக அலைகிறது
பெற்ற சுதந்திரம்.

வேலைக்குப் போனவள் வரவில்லை
வருத்தப் பட்டனர் பெற்றோர்
முதல் தேதி
.
நேற்று விளைநிலம்
இன்று வீட்டுமனை
நாளை ?

வாழ்க்கை ஒரு புத்தகம்தான்
இல்லையென்றால்
கரையான்கள் அரித்திருக்குமா ?

கலங்கியது பிள்ளை மனம்
கரையைச் சேருமோ சேராதோ
காகிதக் கப்பல்.

எத்தனைமுறை பார்த்தாலும்
அழகாகவே இருக்கிறது
கண்ணாடியில் என் முகம்.

பொன். குமார் - நிஜமும் நிழலும் நூலில்.
வெளியிடு : கனிமொழி,
15.புதுதிருச்சி கிளை வடக்குத் தெரு,
லயன் மேடு, சேலம், 636 006.


நூலுக்குச் சாயமேற்றத் தொடங்கி
கடைசியில்
நதிக்குச்சாயமேற்றி முடித்தார்கள்.

பரந்த பெருவெளி
வலுவற்ற இறக்கைகள்
சிறகடிக்கும் பறவை.

உரை வீச்சுகள்

மண்ணைப் போடு.

வீசும் சாரலில்
வெளிர்ந்து நடுங்கும்
கிளை நுனி முருங்கைப் பூக்கள்.
உதிர்ந்து சிதறுவது
தரையெங்கும்
பார்க்கத் தெம்பில்லை எனக்கு,

ஈரமிருந்தும்
இரக்கமில்லாக் காற்றே
என் கண்ணில் கொஞ்சம்
மண்ணைப் போடு.

உயிர்க் கசிவு

பிய்ந்த துணிபோதும் பூனைக்கு
நாய்க்குச் சாக்கோ, நைந்த போர்வையோ,
ஆட்டுக்குட்டி அடுப்படிக்குவரும்.

பொசுபொசுவென்ற மயிர்ச்சிலிர்ப்படங்க
குஞ்சுகள் இறகுக்குள் கூடுகட்ட
கோழி குறுகிக் தாழ்வாரமொதுங்கும்.

தடித்த தோலுடலம் எருமைக்கு
கண்வளரக் கவலையில்லை
மாட்டுத் தொழுவம்.

மனிதனுக்கு இல்லமென
அரவணைப்பில் விழிமூடும்
சுகவாழ்க்கை.

பேய்மழையின் பேரதிர்வில்
கிளைமுறிந்து மரம் விழுந்தால்
எப்படித் தாங்கும் இந்தக் குளிரை
அந்தச் சிட்டு.

சகாரா - நதிக்கரையில் தொலைத்த மணல் நூலில்
ஜெகதாபி அஞ் 639 118, கரூர் மாவட்டம்.
வெளியிடு: பயணம் புதிது - கரூர்.விரல்கள்

யாசகம் கேட்டு கைகளை ஏந்துகிறேன்.
ஏந்திய கைகளில் விழுகின்றன
விரல்கள்
இரத்தச் செழுமை மின்னும்
விரல்கள்
இரத்தம் உறுஞ்சப்பட்டு
சூப்பிய
விரல்கள்
ரேகைகள் தேய்ந்து அழிந்த
விரல்கள்
புதுப் புது ரேகைகள் அணியும்
விரல்கள்......

தாவரத்திற்கு வேர்கள் எப்படியோ
அப்படித்தான்
மனிதனுக்கு விரல்கள்

ஏந்திய உள்ளங்கைகளில் வளர்கிறது
ஒரு விரல்களின் வனம்.

செந்தில்குமார் - உடுமலைதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061