இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 17

14 மே 2004


அன்புடையீர். வணக்கம்,

சென்ற முறை வைரசு கணினியைத் தாக்கியது. இந்த முறை வைரசு என்னைத் தாக்கியது. கடந்த 4 நாள்களாக காய்ச்சல் தலைவலி இருந்தாலும்.............
" வெட்டியவன் சென்று விட்டானா ?,
எட்டிப்பார்த்தது,
தளிர்."
உரைவீச்சு நினைவிற்கு வந்தது. எழுந்தேன். திட்டமிட்டபடி 14-5-04 அன்று வலையேற்றிவிட்டேன்.

தமிழகத்தையும், இந்தியாவையும் தேர்தல் அலைகள் இழுத்து இழுத்து இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது. தமிழகத்தில் 40 இடங்களிலும் தி.மு.க.கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

மின் அஞ்சல்வழி வைரசுகளை அனுப்புபவர்கள் தற்பொழுது புதிய முறையைக் கையாளுகிறார்கள். attached file இல்லை. 41 K இருக்கிறது. திறந்தால் - கடிதத்தை இதில் திறக்கமுடியவில்லை - இதற்குள் வாருங்கள் என்கிறது. சென்றால் அவ்வளவுதான். வைரசு உள்ளே வந்து விடும். இனி எந்த மின் அஞ்சல்களையுமே திறக்கக் கூடாது என முடிவு எடுக்கவேண்டும் போல் இருக்கிறது. யார் இவர்கள் ? இப்படிச் செய்வதால் இவர்களுக்கு என்ன இலாபம். எப்படியோ.. இப்பொழுது முழுமையாக format செய்யவும், அனைத்தையும் 3 மணி நேரத்திற்குள் திரும்பவும் ஏற்றிக் கொள்ளவும் கற்றுக்கொண்டாகிவிட்டது. வாழ்க வைரசுகள்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


உரை வீச்சுகள்

உன் மடிமீது
சம்மணங் கொட்டி
அளைந்து விளையாடிய
மண் எங்கேயம்மா?

பாதி கருகிய
முண்டம் போல தான
பிரேதம் போல
ஊனம் வடிக்கும்
மானுடம் பற்றிய
கதை யென்னம்மா?

அம்மா!
நிலா வெறிக்கும்
எங்கள் வெள்ளை
மணலில்
'பனம் பழம் விழுந்த'
திடுக்கம் கலந்து
ஓடி ஓடி
பொறுக்கி எடுத்த
காலங்கள் எங்கேயம்மா
தொலைந்து போயின?
அழுத என்னை
அள்ளி எடுத்து
இடுப்பில் இடுக்கி
'காகம்' காட்டி
அண்ணார்ந்து பார்த்த
ஆலமரமும்
அந்த திரிசூலமும்
ஒரே வரும் அணில் குஞ்சும்
எங்கேயம்மா?

என் கண்ணீர் துடைத்து
தன் மடி மீது வைத்து
பயம் விலக்கி
பாசம் காட்டிய
பெரிய மச்சாள்
துவக்கோடு போனவள்
ஏனம்மா வரவில்லை?

தீயாய் விளாசி
எரியும் காடு போல்
அடிக்கடி எங்கள்
தேசத்தின் மீது
என்னம்மா நெருப்பு?

பந்தம் கொளுத்தும்
தேவர்கள் பற்றிய
கதைகளை நீ அன்றைய
இரவுகளில் கூறுவாயே.
அதன் உண்மை
வடிவமாம்மா இது?

ஓடி உறங்கும்
இரவுகள் தொலைந்த
பாடி இறைக்கும்
கிணறுகள் தூர்ந்த
என் தாய் மண்
மீதான
எதிர்காலம்....?
பற்றிய
ஏக்கம் மட்டும்
என்னோடு சேர்ந்து
அகதியாய் உறங்கும்.

அம்மா!
இன்னொரு முறை
உந்தன் மடியில்..
சக்கப்பணிய
என் தாய் மண்ணின் மீது
என் வயதை மீறிய
அன்புடன் ஓடி..
ஆசைப்பட்டு நுங்கு குடித்து
பின்னர்
'குருவிச்சை ' ஆற்றங்கரையில்
'கனகாம்பரம்'
பறித்து
அம்மா ...
எப்போதம்மா..
என் தாயே
இவையெல்லாம்
எப்போது என்று
ஒரு முறை சொல்!
என் இதயம் குளிர்ந்து
ஒரே ஒரு முறை
சந்தோஷிப்பதற்கு.

எம். என். எம். அனஸ்,
லண்டன் தீபம் தொலைக்காட்சித் தொகுப்பாளர்

நன்றி : நிலாச்சாரல் இணையதளம்


வறண்டுவிட்ட பாலைவனம்

அன்றொருநாள் வெண்ணிலவில் அழகான உன்மடியில்
சாய்ந்திருந்து கதைகேட்க தமிழ்ச்சரிதத்தை நீயுரைக்க
சிரித்தபடி வானமதில் சித்திரையின் பெளர்ணமியில்
உதித்திருந்த சந்திரனை உற்றுநான் பார்த்திருந்தேன்.

எத்தனை சுகமதிலே என்னம்மா! உணர்த்தி நின்றாய் !
பக்கத்தில் வந்த அண்ணா படுத்திருந்த எனைப்பார்த்து
உனக்குத்தான் அம்மாவின்மடி சொந்தமென நினைப்பா ?
உள்ளுக்குள் சிரித்தபடி உலுப்பியே எனையெழுப்ப

செல்லமாக நானழவே சேலையால் நீ துடைப்பாய் !
முல்லைமலர் வாசமது முற்றத்தில் வீசி நிற்க
முழுநிலவில் என்பாசம் எனை மலர வைக்கும்
கள்ளமிலா உன்னிதயம் காட்டுகின்ற அன்பினிலே
வெல்வேன் உலகையென வீறாப்புக் கொண்டிருந்தேன்.

அந்நியரின் காலடி என் அன்னை மண்ணிற் பட்டதினால்
அன்னையைப் பிரிந்து அகதியென இங்கு வந்தேன்
முற்றமிழந்து எங்கள் முழுநிலவைப் பறிகொடுத்து
கட்டிய வீடிழந்து கன்றுடன் பசுவிழந்த சோகத்துடன்

முல்லைக்கொடி வாட முத்தான உறவுகள் உதிர்ந்திட
சத்தியத்தை மறந்த சதிகாரக் கும்பலின் செயலால்
நித்தமும் வேதனையைச் சுமந்திங்கே வாழ்வதுவும்
வாழ்க்கையல்ல எந்தனுக்கு வறண்ட பாலைவனம்.

கவிதாயினி. அம்பிகா. இராஜலிங்கம்

சூரிச் - சுவிற்சலாந்து.

நன்றி : கலைவிளக்கு - ஜெர்மெனி - ஏடு 3 - சித்திரை-வைகாசி 2004


விடியல் கானா இரவுகள்

எங்கள் இரவுகள்
விடியவே இல்லை.
ஆசைச் சூரியன்
முளைக்கும் போதெல்லாம்
ஏமாற்றங்களின் அணைப்பில்.

சர்க்காரு சாமிகள்
பசியாற நாங்கள்
நெய்யாக வார்க்கப்பட்டோம்.
சக்கையான போதும்
எங்கள் அடுப்புகளுக்கு
நாங்களே விறகுகள்.

எங்கள் நம்பிக்கை
பானை காய்ந்து
பல காலமானது.
எதிர்பார்ப்புகள்
எகறியதில் அது ஓட்டையாகியும் போனது.

எங்கள் சோக கீதையை
ரப்பர் மரங்களில்
செதுக்கி வைத்திருக்கிறோம்.

பேனா பிடிக்கும்
அதிகாரிகளே....
நேரமிருந்தால் வாரும்.
சோக கீதத்தைக் கேட்க
மனமிருந்தால் வாரும்
எங்கள் முன்னேற்ற
வீட்டிற்கு அடிக்கல்லிட...

விடியாத இரவுக்குக்
காத்திருந்து எங்கள்
கவலைக் கிணறு
காய்ந்து போனது.

இருதயத் துடிப்பு
மெளனமாய் அழுதது.

வற்றிய நாடி நரம்பு
மரணித்துப் போனது.

மொத்தமாய்ச் செத்த
நாங்கள்
உயிர்த்திருப்பது
வாக்காளர் பட்டியலில் மட்டுமே !

கோகிலவாணி கோபால்
அம்பாங்

நன்றி : இதயம் - மே 2004
மலேசியாவின் தேசியத் தமிழ் மாத இதழ்.


குறும்பாக்கள்

மருந்து வாங்கவே
சரியாக உள்ளது
ஓய்வூதியம்.

நிமிர்ந்தாள்
அடி பணிந்தது
ஆதிக்கம்

கவனமாகக் கேள்
கடலலைச் சத்தம்
கவிதை சந்தம்.

பொன். குமார். சேலம்


தெரு வாசகங்கள்

வன்முறையை அகிம்சை வென்றது
மகாத்மாவை வன்முறை கொன்றது.

பிறமாநிலங்கள் இருப்பது தேசப்படத்தில்
தமிழகம் இருப்பதோ திரைப்படத்தில்.

தேளுக்குக் கொடுக்கு தேவை
ஆளுக்கு அது தேவையில்லை.

ஓநாய்களின் உயிரைக் காக்க
ஆடுகளே அர்ச்சனை செய்கின்றன.

தமிழுக்கு இலக்கணம் உண்டு
தமிழனுக்கு ?

உன் பூமி என் பூமி
இருப்பதென்னவோ ஒரே பூமிதான்.

ஏசுகளாக ஆக எல்லோருக்கும் ஆசை
ஆனால் சிலுவை சுமக்க மட்டும் யாருமில்லை.

தத்துவத்தில் காவிகள்
நடைமுறையில் காலிகள்.

குத்துவதைவிட குத்திக் காட்டுவது
அதிகம் புண்படுத்தும்.

வெள்ளையர்கள் உழைப்பவனைச் சுரண்டியவர்கள்,
நம்மவர்கள் சுரண்டுபவனுக்காக உழைப்பவர்கள்.

செங்கோட்டையன் அவர்களது தெருவாசகம் நூல்

நன்றி : ஊமையர் குரல் - ஏப் மே 2004


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061