இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 18

30 மே 2004


அன்புடையீர். வணக்கம்,
netsoftonline நண்பர் திரு.அரவிந்தசாமி அவர்களது உதவியால் 20 MB இணையதளத்தைப் பெற்றிருந்தேன். 17 MB முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு வலையேற்றத்திற்குள் 20 MB முடிந்துவிடும் போலிருக்கிறது. தமிழம் இணையதளத்தில் ஏதாவது ஒரு பகுதியை அழித்துவிடலாமா? என எண்ணுகிறேன். தமிழம்.வலை இணையதளத்தை முழுமையாகப் பார்ப்பவர்கள் இணைய தளத்தில் எது தேவையில்லை, அல்லது எதை அழித்துவிடலாம் என மின்அஞ்சல் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன். தமிழம் வலைக்கு இடம் நிறைய இருந்தால் இன்னும் பல செய்திகளை அதிக படங்களுடன் செறிவாகச் சொல்ல முடியுமே !., என்ன செய்வது என்று யோசிக்கிறேன். உதவ விருப்பம் உடையவர்கள் தங்களது கருத்துகளை மின்அஞ்சல் செய்யவும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006
ஒரு தரமான இதழுக்கான அடிப்படைக் கூறுகள்.

(பத்திரிகை, சஞ்சிகை, மாசிகை, இதழ் அனைத்தும் ஒன்றுதான். இதழ் என்பதே சரியான தமிழ்ச் சொல். ஒரு இதழின் தொடர்ச்சியும், கருத்துச் செறிவும், இதழின் அமைப்பும் எப்படி இருந்தால் காலம் கடந்தும் பேசப்படும் என்பதற்கான சில கருத்துகளை இங்கே வரிசைப் படுத்தியுள்ளேன். இதழாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக.)

இதழின் தொடர்ச்சி

1. இதழைத் தொடர்ச்சியாக வெளியிடவேண்டும்.( ஒவ்வொரு இதழாளரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இதழ் நடத்துவதால் திங்களிதழில் இரண்டு இதழ்கள் வெளியிடாவிட்டாலும்,இருதிங்களிதழில் ஒரு இதழ் வெளியிடாவிட்டாலும் தவறு இல்லை. காலாண்டிதழும், சதுர்மதி இதழும் கட்டாயம் 4, 3 இதழ்கள் வெளியிட முயற்சி எடுக்கவேண்டும். இல்லையென்றால் படிப்பவர்களிடையே தொடர்பு விட்டுப்போய் தொடர்ச்சியில் தொய்வு ஏற்படும். இதழை விட்டு விலகி விடுவார்கள்.

கருத்துச் செறிவு

2. இதழின் கருத்துகள் செறிவாக இருக்கவேண்டும். கலை, இலக்கியம், பண்பாடு, நுட்பம், ஒடுக்கப்படுதல், அறிவியல், அரசியல், தொழில், வேளாண்மை, மக்களுடைய நல்வாழ்விற்கு உளவியல் வழியில், முன்னோர்கள் சொன்ன வழியில் கருத்தூட்டுதல் - போன்ற மக்கள் நலக் கருத்துகளை - நுட்பமாக, நுணுகி ஆராய்ந்து, பல்வேறு எடுத்துக்காட்டுகளிலிருந்து பொதுத்தன்மை வகுத்து - மக்களுக்குப் புரிகிற வகையில் (புரியாமல் எழுதுவதே எனது இதழின் சிறப்பு எனச் சொல்லி மகிழுபவரும் இருக்கின்றனர்) எளிமையாக, மக்களது நடையில், (அதற்காகக் கொச்சைச் சொற்களையும், அயற்சொற்களையும் இட்டு நிரப்பாமல்) தரமாக "அடுத்த இதழ் எனக்கு வந்து என்னை வளர்த்தவேண்டும்" என்று படிப்பவர்கள் நினைக்கிற வகையில் அவர்களது விருப்பம் அறிந்து ( அதற்காகப் பாலியல் எழுத்துக் குப்பைகளையும், வண்ண வண்ண படங்களையும் போட்டு ஈர்க்கக் கூடாது) இதழை அமைக்கவேண்டும்.

ஆசிரியர் குழு

3. கருத்துகளை ஆசிரியரும், அவருடனிருப்போரும் மட்டுமே எழுதி நிரப்பக்கூடாது. படைப்பை ஆக்குகிற பட்டறிவு மிக்க படைப்பாளிகளையும், புதியன அறியத்துடிக்கும் விருப்புடையவர்களையும், நம் கருத்துகளோடு ஒத்த அதிர்வு உடைய கருத்தாளர்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும். (ஒருவரே பல்வேறு புனைபெயரில் எழுதி நிரப்புபவரும் உண்டு. இது பரவலுக்குத் தடையாகும்) இதழோடு நண்பர்களை இணைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல இதழாளருடன் கூடவே இருந்து, அவரது சந்தாதாரர் முதல் அச்சகத்தர் வரை அனைவரையும் தனதாக்கி, அந்த இதழைப் போலவே தானும் தொடங்கி, பாலியல் வண்ணக் கலவையைக் கலந்து இதழை வணிமாக்கி நெஞ்சு நிமிர்த்தும் போலிகளை, புல்லுருவிகளை அந்த நல்ல இதழாளர் தொடக்கத்திலேயே இனம் கண்டு தனது ஆற்றலால் அவரைத் திருத்த வேண்டும். அல்லது ஒதுக்கிவிட வேண்டும்

இதழ் அமைப்பு

4. பக்கங்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இதழாளருடைய பொருளாதாரம், அச்சாக்கும் தன்மை ஆகியவற்றைப் பொருத்துத் திட்டமிட்டுக் கொண்டு பக்க எண்ணிக்கையை தொடக்கத்திலேயே இறுதிசெய்யவேண்டும். முதல் இதழில் வண்ணத்தாளில் 84 பக்கங்களில் அச்சடித்து படிப்படியாக 4 பக்கங்களில் சாணித்தாளில் தொடர்ச்சியாக நடத்தினாலும் மக்களிடையே நிற்கமுடியாது.

தொடக்கத்திலேயே சாணித்தாளில் இருந்தால்கூட கருத்துச் செறிவாக இருந்தால் ஏற்றுக்கொள்வார்கள். (ஆனால் இன்றைய வணிகச் சூழலில் பளபளப்பான தாளில் எதைவேண்டுமானாலும் அச்சாக்கி குழுவாக நின்று தரமான இதழ் என்று பரப்புரை செய்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். காலவெள்ளத்தில் அவை அடித்துச் செல்லப்பட்டுவிடும். நிற்காது. பேசப்படாது) இதழாளருக்குக் கிடைக்கிற ஒவ்வொரு பக்கமும் கிடைத்தற்கரிய தொடர்புக் கருவிகள். பக்க வடிவமைப்பு, ஒழுங்குபடுத்தி அமைத்தல், கலைநயத்தோடு ஆக்குதல், தாள்களை வீணடிக்காமல் பயன்படுத்துதல் போன்ற நுட்பங்கள் இதழாசிரியருக்குக் கூடுதல் நுணுக்கமாக இருக்கவேண்டும்.

இதழின் பரவல் (அச்சடித்ததை என்ன செய்வது ?)

5. தரமான இதழாக இருந்தாலும் அச்சாக்கிய பிறகு அதன் "பரவல் முறையில்" ஒழுங்கு படுத்தியவர்களால்தான் வென்றெடுக்க இயலும். தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தரமாக இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய நண்பர்கள், நூலகங்களின் பட்டியலை எடுக்கவேண்டும் (50 க்கு மேல் வராது) தற்பொழுது தரமாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய, உங்களது கருத்திற்கு ஒத்த அதிர்வு உடைய இதழாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டும். (50 க்கு மேல் வராது) இவர்களுக்கு இலவயமாக அனுப்பவேண்டும். இலவயமாக அனுப்புவது கூட இரண்டு இதழ்களுக்குள் அவர்கள் தங்கள் கருத்தினை ஏதாவது ஒரு வழியில், (அஞ்சல் அட்டையில்கூட) அனுப்பாவிட்டால், இதழ் அனுப்புவதைத் தவிர்த்து விடலாம். (படிக்காமலேயே, படித்தேன், ரசித்தேன், இதுபோல எந்த இதழாளரும் வெளியிடவில்லை என்கிற பொதுவான சொற்களை எழுதுபவரிடமும், ஆசிரியரை-குழுவினரை புகழ்ந்து தள்ளுபவரிடமும் கவனமாக இருக்கவேண்டும். மிகச் சரியாகக் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள்தான் நம்மை வளர்த்தெடுப்பவர்கள் அவர்களை நாம் வணங்கவேண்டும்.

துபாயிலிருந்து திரு ஜெபா அவர்களது மின் அஞ்சல் வரவில்லையென்றால் இந்தக் "கருத்துரை" வெளிவந்திருக்காது. அவருக்கு என் அன்பு நன்றிகள். 1905 - 1937 க்குள் வெளிவந்த பல இதழ்களின் அட்டைப்படங்களை www.thamizham.net இணையதளத்தின் பழைய இதழ்கள் பகுதியில் பார்க்கிறீர்கள். அன்று அச்சாக்கம் என்பதே வினாக்குறியானது. இன்று கணினியும், தட்டச்சும் தெரிந்தால் போதும். வீட்டின் உள்ளிருந்தே தரமான இதழை வெளியிட்டு மக்களுக்குக் கருத்துச் செறிவேற்ற முடியும். மக்கள் நலத்தில் விருப்பம் இருந்து இதழ் நடத்தி அதன்வழி அவர்களுக்கு ஏதாவது உதவவேண்டும் என்று நினைக்கிற நண்பர்களுக்கு, நான் உதவக் காத்திருக்கிறேன். முதலில் உங்களைச் செறிவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பெற்ற அரிய, தரமான கருத்துகளை மற்றவர்களோடு இதழ்வழிப் பகிர்நது கொள்ளுங்கள். அல்லது ஒத்த கருத்துடைய இதழாளர்களோடு இணைந்து அந்த இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன்.

காலதேவன்

அரைப்பதற்கு
உருவாக்கப்பட்டதுதான்
அம்மி....

இன்று அது,
அன்று அரைத்தததற்கு
அடையாளச் சின்னமாகிவிட்டது.

அம்மி மிதிப்பதற்காக
மட்டும்
அரங்கத்திற்கு வருகிறது.

பயன்கள்
பயனற்றுப் போவதுதான்
காலதேவனின் லீலையோ !


செல்லப் பிள்ளையல்ல

பிள்ளை அழுகிறது
எல்லா இடத்திலும்.
பேருந்துப் பயணத்தில்,
படிக்கட்டில்,
படுக்கையில்,
அடுக்களையில்,
எங்கும் அழுகிறது
தங்கு தடையின்றி....
இது
இவர்களின்
செல்லப் பிள்ளையல்ல,
செல்லுலார் பிள்ளை.

செண்பக ஜகதீசன்,

பொருநை அலைகள் நூலில்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061