இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 19

15 சூன் 2004


அன்புடையீர். வணக்கம்,
netsoftonline நண்பர் திரு.அரவிந்தசாமி மேலும் ஒரு 10 MB அளவிலான இடத்தைத் தந்துள்ளார். ஆக இப்பொழுது 30 MB இடம் உள்ளது. நண்பரின் தொடர்ச்சியான உதவியால் இன்னும் நிறைய செய்யவேண்டும் என்கிற துடிப்பு மிகுகிறது. அவருக்கு எனது அன்பான வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


உயிரைக் கணந்தோறும்
கையில் பிடித்தபடி
வாழத்தவிக்கும்
ஏழைக்கு உங்கள்
ரொமாண்டிக் புஷ்பங்களும்
அக்கினிப் போலிகளும்
என்ன எழவென்றே
புரியாது.
யாருக்காய் எழுதுகிறீர்கள் ?
வயிற்றுக்கு உங்கள்
பாட்டாளிக் கவிதை
உணவல்ல.
சோறு முளைக்கப் பயிரிடுமோ !
இன்றேல் ரசனைக்கு
மனசின் பசிக்கு
உண்மைக் கவிதைப்
பயிர்காட்டு.

- அரூப் சிவராம் -
நன்றி : அஃக் இதழ் ஆகஸ்ட் 1972


தூரத்திலிருந்து
பார்க்கும்பொழுது
அழகாகத்தான்
இருக்கிறது ஊர்.

தேக்கு மரங்கள் பூத்திருக்கும் காட்டுக்கு
தினம் இவன் போவான்
விறகு வெட்ட.

ஓய்ந்த நேரத்தில்
எழுதுகின்றார்.
ஒழிந்த சமயத்தில்
இலக்கியம் செய்கின்றார்.
உருப்படுமா தமிழ்
இலக்கியம் ?

எனக்கு
நண்பர்களே இல்லை.
இதைவிட மோசம்
என் நண்பர்கள் பாடு.

- விக்ரமாதித்யன் -
நன்றி : அஃக் இதழ் ஆகஸ்ட் 1972எச்சிலை

எச்சில் படுத்தி
எறிந்த என்னை
இன்னும் எச்சைப் படுத்த
இங்கே பலர்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு கால் விலங்கினமும்...
நான்கு கால் விலங்கினமும்...
எனக்காக
தினம் நடத்துகின்ற
போட்டியில்
வலிமையுள்ளவர்கள்
வெற்றி பெறுகின்றனர்.

சிவா. பன்னீர் செல்வம்செத்த பாம்புகள்

சின்னச் சின்ன
பாம்புகள் கூட
சீறிச் சீறிக் கடிக்கின்றனவே...
ரேசன் கடை வாசலில்
இத்தனை பெரிய பாம்புகள்
செத்தா கிடக்கின்றன.

- பாரதி புத்திரன் -
நன்றி: விடுதலைக் குயில்கள் - சூலை 1990


குறும்பாக்கள்

ஓடுகிறது
ஓடாத பேருந்தில்
கடிகாரம்.

ஒரே சட்டையோடே
வாழ்நாளையே கழிக்கிறது
வண்ணத்துப்பூச்சி.

கரையில் நாணல்
அணைத்து விளையாட
நீரில்லை.
பொன். குமார் - சேலம்.வேட்டையாடுதல்
மரபு வழியாய் வந்ததாம்
ஆதி மனிதனுக்கும்
இன்றைய
அறிவியல் மனிதனுக்கும்
ஒரே ஒரு மாற்றம்
அவன் மிருகங்களை....
இவன் மனிதர்களை....

நந்தவனம் சந்திரசேகரன் - திருச்சி.ரசிகனும் ரசனையும்

அம்மணமா நடிச்சபோது
அங்கமெலாம்
தங்கமுன்னு
வருணிச்சு
ரசிச்சவன்தான்......

அம்மன் வேசம்
போட்டவுடன்
ஆத்தாமக மாயீன்னு
கன்னத்துல
போட்டுக்கறான்

என்னத்த
நாஞ்சொல்ல ? !

அதிகப்பிரசிங்கி - விகடகவி இதழில்.ஒழிவதென்னாள் ?

தொடைதெரிய முன்தெரியும் கொங்கை யோடு
தொப்புளையும் கண்தெரியக் காட்டடிக் காட்டி
இடைதெரியக் கீழான இச்சை தூண்டும்
இயல்பில்லா அசைவுகளை நடனம் என்றே
உடையின்றி பெண்களினை ஆட விட்டே
உணர்ச்சிகளைச் சீரழித்துப் பெண்கள் தன்னைக்
கடைச்சரக்காய் மாற்றிதினம் இழிவு செய்யும்
கயமையெல்லாம் திரைப்படத்தில் போவ தெந்நாள் ?

இருபொருளைத் தருகின்ற உரையா டல்கள்
இயற்கைக்கு மாறான காதல் காட்சி
அருவருப்பில் நகைச்சுவையின் ஆர்ப்ப ரிப்பு
ஆள்ஒருவன் பலரை வீழ்த்தும் சண்டைக் காட்சி
கருத்திலா நிகழ்வுகளும் கற்ப ழிப்பும்
கட்டுடைத்தும் பண்பாட்டைச் சீர ழித்தும்
பொருளொன்றே குறிக்கோளாய் படமெ டுக்கும்
பொறுப்பற்றேர் திருந்துவதும் எந்த நாளோ ?

ஆங்கிலத்தில் வசனங்கள் பெயர்க ளெல்லாம்
ஆங்கிலத்தில் தமிழ்தெரியா நடிகை யர்கள்
ஆங்கிலத்துச் சொற்களினை இடையில் சேர்த்தே
ஆபாச இசைப்பொருளில் ஒலிக்கும் பாடல்
தீங்குகளைச் செய்வதற்கே வழியைக் காட்டி
திருவான இளைஞர்தம் நெஞ்சி லெல்லாம்
பாங்காக வன்முறையை ஏற்றி வைக்கும்
பாதகங்கள் திரைப்படத்தில் ஒழிவ தெந்நாள் ?

- பாவலர் கருமலைத் தமிழாழன் -
நன்றி : அன்பு வணக்கம் - சூன் 2004


பணம் எங்கே போனது ?

நேற்று சந்தையில் 100 ரூபாய் விற்ற கத்தரிக்காய் இன்று 50 ரூபாய்க்கு விற்றால் எந்த விவசாயியும் தனது 50 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று புலம்புவதில்லை. ஆனால் நேற்று 100 ரூபாய்க்கு விற்ற பங்கு இன்று 50 ரூபாய்க்க விற்றால் 50 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று பங்குசந்தை வணிகர்கள் புலம்புகிறார்கள்.

கத்தரிக்காய் சந்தையில் கத்தரிக்காய் என்ற சரக்கு பணமாக மாறுகிறது. இந்த வணிகத்தில் ஏற்ற இறக்கம் "விலை உயர்வு அல்லது விலைச் சரிவு" என்று கருதப்படுகிறது. ஆனால் பங்குச் சந்தையில் பணமே சரக்காகவும் ஆகிவிடுகிறது. பணமுதலீடு - சரக்குஉற்பத்தி - வணிகம் - பணம் என்று சுழல்வதுதான் முதலாளித்துவச் சந்தையின் வணிகமுறை. இதற்கு மாறாக, பணமே பணத்தைக் குறுக்கு வழியில் பெருக்க முயல்வதுதான் பங்குச் சந்தை. இப்படிப் பெருகும் பணத்தின் செல்லப் பெயர்தான் "நிதிமூலதனம்".

பணத்தைப் பெருக்கும் பணம் என்ற நிலையை அடைய வேண்டுமானால் அல்லது நிதிமூலதனம் திரளவேண்டுமானால் அந்த நாட்டில் பொருள் உற்பத்தி பலமாக இருக்கவேண்டும். எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி நிலைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். மாறாக பங்குச் சந்தையில் நிதிமூலதனம் வந்து பெருகுவதால் உற்பத்தி பெருகாது. பொருளாதாரம் வளராது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் குணமே இப்படிப் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் பார்த்துச் செயல்படுத்துவதுதான். தலைகீழாகப் பார்த்து நிபுணர்கள் புளகாங்கிதமும் அடைவது மட்டுமின்றி அவர்களோடு சேர்ந்து நாமும் குதூகலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

பங்குச் சந்தை தொழிலை வளர்க்க உதவிடும் பங்குச் சந்தையாக இருக்க வேண்டுமே தவிர, பணம் பண்ணும் "மந்திர வித்தையாக" இருக்கக்கூடாது. அது பொருளாதாரத்தை முடக்கிவிடும். இன்று இந்தியாவின் பொருளுற்பத்தி மந்தமாகிப் போனதற்கு இந்தப் பங்குச் சந்தைத் தில்லு முல்லுகளே காரணம்.

- வே. மீனாட்சி சுந்தரம் -

நன்றி : புதிய ஆசிரியன் - சூன் 2004தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061