இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 23

15 ஆகத்து 2004


முதலாண்டு நிறைவில்....
தமிழம்.வலை தோன்றியது எப்படி ?

அன்புடையீர். வணக்கம்,

2003 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நானும் எனது மாணவன் வெற்றிவேலும் வாவிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் விழாவிற்குச் சென்றிருந்தோம். செல்லும் பொழுது... இணைய தளத்தில் நாம் செய்யும் வேலையைக் குறிப்பிட்டால் உலக அளவிலான பார்வை கிடைக்குமே என்று மாணவன் சொல்ல, "இணையதளத்திற்கு என்ன செய்வது !" என்று கேட்டேன். SSL செந்தில் இதில் நுட்பமானவர் அவரிடம் கேட்கலாம். அவரும்கூட பள்ளிவிழாவிற்கு வருகிறார் என்று மாணவன் சொன்னான்.

விழாவில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடி, படப்பிடிப்புக் கருவியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார் செந்தில். அவரிடம் கேட்டதற்கு இணைய தளமா ?... நண்பர் இருக்கிறார்...கவலைப்படாதீர்கள்..வாங்கிவிடலாம்.. என்று சொன்னவர்.... சொன்னது போலவே தொலைபேசியில் நண்பரோடு பேசி உங்களுக்கான இணையதளம் ஆறாம் தேதிக்குள் கிடைத்துவிடும் என்றார். எனக்கு ஒரே வியப்பு. நினைதததெல்லாம் நடக்கிறதே... உண்மையா இது... என என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இணையத்தில் செய்திகளை எப்படி வைப்பது ? அவரிடம் கேட்டபோது html file ஆக வைக்கவேண்டும். கவலைப்படாதீர்கள் நண்பர் இருக்கிறார் உதவுவார் என்றார்.

இரண்டாம் தேதி நானும் என் மாணவனும் கோவையில் உள்ள இராஜேசுவரி அடுக்ககத்தில் உள்ள புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். html பற்றிய புத்தகம் உள்ளதா என்றேன். இருக்கிறது விலை ரூ150 என்றார். அதைவிடக் குறைவாக ஏதேனும் புத்தகம் உள்ளதா என்றேன். கடைசியில் போய்ப் பாருங்கள் ரூ 35 க்கு ஒரு புத்தகம் உள்ளது என்றார். கடைசியில் தேடினோம். புத்தகம் இருந்தது. ரூ 35 தான். மிகவும் மகிழ்ந்தேன். தணிகை அரசு எழுதிய புத்தகம் அது. படுக்கைவசத்தில் அச்சாகி இருந்தது. இரண்டாம் தேதி விடிய விடிய படித்தேன். 10 வரிகளுக்குள் html ஆக்குகிற அனைத்து நுட்பங்களையும் அடக்க முடிந்தது. விடிய விடிய தமிழம் வலைக்கான பக்கங்களை வடிவமைக்க ஆரம்பித்தேன். வண்ண வண்ணமாய் விரும்புகிற படியெல்லம் வடிவமைக்க முடிந்தது. 6 MB அளவிலான தமிழம் வலையைச் சரிசெய்து குறுவட்டில் பதிவுசெய்து வைத்தேன்.

6 - 8 - 2003 அன்று, நெட்சாப்ட் அரவிந்தசாமியை 3 மணிக்குச் சென்று பார்த்தால், அவரிடம் இணையதளத்திற்கான Password கிடைக்கும் என்று கூறியிருந்தார் SSL செந்தில். 6 - 8 - 2003 அன்று SSL செந்திலைச் சந்திக்கச் சென்றபோது நான் பதிவுசெய்து வைத்திருந்த குறுவட்டையும் கூடவே எடுத்துச் சென்றிருந்தேன். இது சரியாக வருமா, தவறாக இருக்குமா எதுவுமே தெரியவில்லை. செந்திலைச் சந்தித்த பொழுது மணி 1. இன்னும் இரண்டு மணி நேரம் இருப்பதால் மதிய உணவை முடித்துக் கொண்டு ஒரு கணினியகத்திற்குச் சென்று செந்திலின் மின் அஞ்சல்களைப் பார்வையிட்டோம். என்ன வியப்பு. செந்திலுக்கு வந்த மின்அஞ்சலில் தமிழம் இணையதளத்தின் ID யும் Password ம் இருந்தது. கையில் வைத்திருந்த குறுவட்டைக் காட்டினேன். இதில் ஓரளவிற்கு நான் தமிழம் வலையை வடிவமைத்துள்ளேன் என்று தயங்கியபடி கூறினேன். இதையே வலையேற்றி விடலாம் என்று கூறியவர் செய்தும் காட்டினார். நான் உருவாக்கி வைத்திருந்த ஒவ்வொரு கோப்பும் பதிவாகியது. பிறது www.thamizham.net என்று அடித்தால் அனைத்தும் வந்தது. ஏதோ ஒரு கனவுலகத்தில மிதப்பது போன்ற நிலை. 45 நிமிடத்திற்குள் அனைத்தையும் ஏற்றிவிட்டு, நெஞ்சு நிமிர்த்தி வெளியே வந்தேன்.

அரவிந்தசாமியை நோக்கி செந்திலினுடைய ஊர்தியில் பறந்தோம். அரவிந்தசாமியை அன்று தான் நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். அன்பான இளைஞர் அவர். "வாங்க... உங்களுக்கு மின்அஞ்சல் அனுப்பிவிட்டேனே. கிடைத்ததா?" என்றார். "www.thamizham.net போட்டுப் பாருங்கள்" என்றோம். தமிழம் வலை வண்ணம் வண்ணமாக வந்ததை அவரது கணினியில் நான் பார்த்த பொழுது என் நெஞ்சு படபடத்தது.

அரவிந்தசாமி வியப்போடு நோக்கினார். எனக்கு எல்லா வகையிலும் உதவுவதாகக் கூறினார். இணையத்திற்காகக் கொடுத்த பணத்தில் பெரும் பகுதியைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகு இன்றுவரை 30 MB யை அவர் ஏற்றிய பிறகும் பணம் எதுவும் வாங்காமல் "தமிழுக்கான எனது பங்களிப்பாக இருக்கட்டுமே" என்று வலியுறுத்திச் சொன்னபோது நெஞ்சுக்குள் கைகூப்பினேன். எப்படி வண்ணம் தருவது? எப்படி இணையதளத்தைச் சிறப்பாக அமைப்பது? எப்படி குறைந்த MB க்குள் படங்களை உருவாக்குவது? என ஒவ்வொரு முறை செல்லும் போதெல்லாம் நட்பாகச் சொல்லி வளர்த்தெடுத்ததை இந்த ஓராணடு நிறைவில் நான் நன்றியோடு நினைவு படுத்துகிறேன்.

SSL செந்தில் இணையதளம் வலையேற்றும் பொழுதெல்லாம் மின்அஞ்சல் அனுப்பி வளர்த்தெடுப்பார். முதல் மாதத்தில் இணைய தளத்தை, ஆங்கிலத்தில்தான் வடிவமைத்திருந்தேன். சுவைத்த பக்கங்கள் jpg image ஆக இருக்கும். இடம் அதிகம் பிடிக்கும். வலையிறக்கம் ஆக வெகுநேரம் பிடிக்கும். என் தமிழில் எழுதினால் தான உள்ளத்தில் உள்ளதை அப்படியே தர இயலும்..."செந்தில் நான் என்ன செய்வது" ...என்று அடிக்கடி துளைத்தேன்.

ஒருநாள்......

அழகி எழுத்துகளை நண்பர் விஸ்வநாதன் இணையத்திற்காக வடிவமைத்துள்ளார். வேண்டுமானால் அவரிடம் கேளுங்கள். அவரும் நமது நண்பர்தான் என்றார். அப்பொழுது நான் சென்னை செல்லும் வாய்ப்பும் உருவானது. தி.நகரில் உள்ள சுபோதயா அடுக்ககத்தைத் தேடிப்பிடித்து உள்ளே நுழைந்தேன். அடுத்த இளைஞர். "வாங்க வாங்க" என்று இன்முகத்தோடு வரவேற்றார். "நசன் உங்களைப்பற்றி செந்தில் நிறைய சொல்லி இருக்கிறார். வாங்க" என்றார். இப்பொழுது தான் இணையத்திற்கான அழகி எழுத்துகளை வடிவமைத்து வருகிறேன் விரைவில் முடித்துவிடுவேன் என்று கூறினார். தமிழம் வலைக்கு அழகி எழுத்தைத் தாருங்கள் என்று கூறினேன். தமிழம் வலையின் ID, Password தந்துவிட்டு வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் வந்த மின்அஞ்சலில் உங்களது இணையத்தில், இணையத்திற்கான dynamic font வைத்துவிட்டேன். இனி இந்த கோப்பு போலத் தட்டச்சு செய்து வலையேற்றுங்கள் என்று எழுதியிருந்தார். என் தமிழில் எழுத முடியுமா? நேரடியாகத் தமிழில் வருமா ? பல்வேறு வினாக்குறியுடன் இரவோடு இரவாகத் தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றினேன். வலையிறக்கம் செய்த பொழுது தமிழில் வந்தது. அடுத்த நாள் கணினியகத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கும் "தமிழம்" தமிழில் வந்தது. கேரளாவில் ஒரு நண்பரோடு சென்று பார்த்தேன். அங்கும் தமிழில் வந்தது. அழகி விஸ்வநாதன் இன்றும் நட்போடு உதவி வருகிறார். Unicode Font செய்து வருவதாகவும். முடிந்ததும் தமிழம் வலைக்கு வைப்பதாகவும் கூறியுள்ளார்.

முதன் முதலாக "பதிவுகள்" வ.ந.கிரிதரன் என்னைப்பற்றி எழுதி பதிவுகள் வலையில் வைத்தபொழுது அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஜெர்மனியில் பதிவுகள் வலையைச் சிறப்பாக நிர்வகித்து வரும் அவரது வலை பல்வேறு நுட்பச் செய்திகளை எனக்கு உணர்த்தியது.

கனடாவிலிருந்து துடிப்புடன் இயங்குகிற நக்கீரன் ஆற்றலுள்ள இளைஞர். இவரது வலைவழி தமிழில் வெளிவரும் அனைத்துச் சிற்றிதழ்களையும் தமிழம் வலை இணைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாகப் பல இரவுகள்... தட்டச்சு செய்து...தட்டச்சு செய்து.. சாப்பிட மறந்து.. தமிழம் வலைக்கான அனைத்துப் பக்கங்களையும் உருவாக்கி, வைத்துக் கொண்டே இருக்கிறேன். நிறைய நண்பர்கள் மின் அஞ்சல் வழி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தொடங்கிய மாதத்தில் நாளொன்றுக்கு 3 பேர் மட்டுமே பார்த்து வந்த தமிழம் வலை தற்பொழுது 100 பேர் பார்க்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் என்னைச் சுற்றிப் பின்னப்பட்ட அன்பானவர்களின் வலைப்பின்னலே. மின்அஞ்சலாலும், மடல்வழியிலும் என்னை ஊக்குவித்து வளர்த்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் இந்த முதலாம் ஆண்டு நிறைவில் அன்போடு வாழ்த்துகளை உரியதாக்குகிறேன்.

நாம் வென்றெடுக்க வேண்டியது நிறைய உள்ளது. வழிகாட்டுங்கள். வென்றெடுப்போம் அனைத்தையும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
8 - 8 - 2004குறும்பாக்கள்

திறந்திருந்த கூடு
பறக்கவில்லை கிளி
பழக்கம்.

நிமிர்ந்து நிற்கிறது
இராணுவவீரன் சமாதிமீது
முளைத்த செடி.

குதிரைப் பந்தயத்தில்
தோற்றுக் கொண்டேயுள்ளான்
மனிதன்.

- பொன். குமார் -


அன்னையின் அன்பு

மகிழுந்து நேர்ச்சியில்
பிழைத்து வந்தவனைப்
பார்த்து,
முதலாளி கேட்டான்
"வண்டிக்கு ஒன்றும்
ஆகவில்லையே? " என்று !

அன்னை கேட்டாள்
"அப்பா உனக்கு ஒன்றும்
ஆகவில்லையே! " என்று

முன்னதில் வருக்கக் கொழுப்பு,
பின்னதில் குருதிக் கலப்பு.

- கோ. கலைவேந்தன் - நட(டி)ப்பும் நூலில்


பனையும் தென்னையும்

தென்னை மரமொன்று
பனை மரத்தின் மீது சரிந்து விழுந்தது.
பனை மரத்தின் கழுத்து முறிந்தது.
நான்
அவனுடைய கழுத்தை முறித்து விட்டேன்
ஆணவமாகப் பேசி
திரும்பிப் பார்த்தபொழுது
தான், பூமியிலிருந்தே பிடுங்கப்பட்டிருப்பது
தென்னை மரத்திற்குத் தெரிந்தது.

ஜயவடுவிதான - ராவய - சூன் 1987


இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

சந்தேகத்துடனே தொட்டுப் பார்த்தேன்
பையிலிருந்த பேனாவைக் காணோம்.
வழியில் எங்கோ விழுந்துவிட்டது.
நீண்ட நாள்களாகப் பழகிய பேனா.
எங்கே விழுந்ததோ ? யாரெடுத்தாரோ?

ஒரு கணம் நினைத்தேன் வழியில் அதன்மேல்
வண்டி ஒன்று ஏறிவிட்டதாய்.
எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கியது.

வண்டி எதுவும் ஏறியிராது
பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில்
கிடைத்திருக்கலாமென்று எணிணிக் கொண்டேன்.
முள்ளைக் கழற்றிக் கருத்தைத் திருகிப்
பல்லால் கடித்துத் தரையில் எழுதி
அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன்.
அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன்.

எவனோ ஒருவன் கிழவன் கையில்
அந்தப் பேனா கிடைத்தால் எண்ணினேன்.
குடும்பத்தைவிட்டுத் தொலைவில் வாழும்
அந்தக் கிழவன் மகளுக்குக் கடிதம்
எழுத முயன்று அவனுக்கெழுத
வராமல் போகவே என்னைத் திட்டியதாய்
எண்ணிக் கொண்டே எனக்குள் சிரித்தேன்.

மாலை வரை நிம்மதியற்றுப்
புதிய பேனா ஒன்று வாங்கினேன்.
சோதனைக்காகக் கடையில் கிறுக்கினேன்.
வீட்டுக்க வந்ததும் முதலாம் வேலையாய்
எழுதிப் பார்க்கக் காகிதம் வைத்தேன்.
என்ன எழுத ? ஏதோ எழுதினேன்.
புதிய பேனா எழுத எழுத
இழந்த பேனா இருப்பதை உணர்ந்தேன்.
ஆமாம் எல்லாம் ஒன்றுதான்
இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

ஞானக்கூத்தன் - கவனம் சனவரி 1982


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061