இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 28

31 அக்டோபர் 2004


அன்புடையீர். வணக்கம்,

இணையதளத்தை நிறைய நண்பர்கள் பார்க்கிறார்கள். இணையதளம் பற்றிய கருத்து எழுதினால்தான் இணையத்தை இன்னும் சிறப்பாக அமைக்க இயலும். எனவே அருள்கூர்நது இணையதளத்தை வளர்த்தெடுக்கும் கருத்துகளை அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

30 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். நட்புணர்வோடு இணைந்து இணையத்தின் பரவலுக்கும், உருவாக்கப்படுகிற குறுவட்டுகளின் பரவலுக்கும் துணைநிற்க விரும்புபவர்கள் இணையத்திலுள்ள "நம்மைப்பற்றி" பக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

அடுத்து உருவாக்கப்படுகிற குறுவட்டு இலக்கியச் செறிவோடு வெளிவந்து சாதனை படைத்த "சரஸ்வதி" இதழ். இந்தக் குறுவட்டினை வெளியிட்டு, பரவலாக்க விரும்புகிற அமைப்புகளும், நண்பர்களும் தொடர்பு கொள்ளவும். (குறுவட்டு உருவாக்கச் செலவுக்கான தொகை அனுப்பினால் அமைப்புகளின் பெயரிலேயே குறுவட்டினை உருவாக்கித் தருகிறேன்) தொடர்ச்சியாக உருவாக்கப்படுகிற ஒவ்வொரு குறுவட்டினையும் ஒவ்வொரு நாடுகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். எனவே ஆர்வலர்கள் தங்கள் குறிப்புகளை அனுப்பி, நம்மைப்பற்றி பகுதியில் தங்களை இணைத்துக் கொள்ள உடன் தொடர்பு கொள்ளவும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
31 - 10 - 2004தமிழ்ப் பணி எது ?

தமிழ்ப்பணி என்பது பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுவது போன்றதா? என்று சுடுவினா எழுப்பினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

யாரைப் பார்த்து என்றால், தமிழறிஞர்கள். தமிழரசியலார், கவிஞர்கள், இதழாளர்கள் போன்ற அனைவரையும் பார்த்து. தமிழறிஞர்கள் கூடி கம்பனையும், இளங்கோவையும் வள்ளுவரையும் போற்றிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
அரசியலார், தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூட்டத்தில் முழங்கிவிட்டால் அது தமிழ்ப்பணியா ?
கவிஞர்கள் பெண்ணையும், பெணிணின் கண்ணையும்பாடி, கொஞ்சம் மரம் செடி கொடிகளைப் பாடி, பின்னர் ஏழையின் வயிற்றையும் பாடிவிட்டால் அது தமிழ்ப்பணியா?

பல மொழிகளைக் கலந்து, பெண்களின் ஆடைகளை நழுவவிட்ட, உதறிவிட்ட படங்களைப் போட்டு கோடி கோடியாகத் தினமும் இதழ்களை விற்றவிட்டால் அது தமிழ்ப்பணியா?

மடற்குழு ஒன்றைத் தொடங்கி அதில் தமிழிலும் எழுதிவிட்டால் அது தமிழ்ப்பணியா?

இணைய இதழ் ஒன்று தொடங்கி அதில் உல்லாசத்தையும், ஊருக்கொருவரின் படைப்புகளைப் போட்டு, இலக்கியம், இலக்கணம், அரசியல், நகைச்சுவை, உளறல், பிதற்றல் என்று பலவற்றைப் போட்டு, தனிமனிதர்களின் சிறப்புகளை அரங்கேற்றவது தமிழ்ப்பணியா?

தமிழை நன்கு கற்று, பின்னர் மண்டைக் கிறுக்கெடுத்து, பகையை நக்கி, பல்லிளித்து பதவியின் உச்சியில் அமர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் செய்கிறேன் என்ற போர்வையில் மானங்கெட்டலைவது தமிழ்ப்பணியா? ஏழைத் தமிழர் சிலரைக் கூட்டி அவர்க்கு சொக்காய் வாங்கிக் கொடுத்து சோறு போட்டு அனுப்புதல் தமிழ்ப்பணியா?

இவையாவும் தமிழ்ப்பணிதான், இருந்தபோதும் இவையே போதுமா என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

இவையாவும் தமிழ்ப்பணிதான் ஆயினும் பெரும்பாலும் தன்னொழுக்கம் இல்லாததால் செய்யப்படும் தமிழ்ப்பணி. இவையாவும் தமிழ்ப்பணிதான் தமிழாண்மையும் நேர்மையும் குறைந்தோரால் பெரும்பாலும் செய்யப்படும் தமிழ்ப்பணி.

தமிழும் நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. இந்நாள் அல்ல அந்நாள் முதற்கொண்டு காலகாலமாய்த் திட்டமிடப்பட்டுத் தமிழ்க கொலை நிகழ்கின்றது.

மொழி தமிழாய் இல்லை. இறை தமிழாய் இல்லை. கல்வி தமிழாய் இல்லை. பண்பும் தமிழாய் இல்லை பேச்சும் எழுத்தும் தமிழாய் இல்லை. ஆக்கமும் தமிழில் இல்லை. அழிவே உள்ளது.
அரசும் தமிழில் இல்லை. அரசர்களும் தமிழுக்கில்லை, செடியொன்று இருந்தால் களை ஆங்கு பத்தாம். பகையைப் போற்றி பகையடி வருடும் தமிழர் ஆயிரமாயிரம். குச்சி மிட்டாய்க்கும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் ஆயிரமாயிரம்.

மூவாயிரமாண்டின் தமிழ் பேசுவான்! மூன்று சங்கங்களையும் மூச்சுவிடாமல் பேசுவான்! ஆனால் பகையின் செருப்பைத் தலையில் சுமப்பான்! அது தமிழ்தான் என்பான்.
இப்படியே இந்தச் சமுதாயம் தன்னை மறந்து தன் தேவையை மறந்து எத்தனை நாள் போகும்? போக முடியும்?

மறைமலையடிகளார், பாரதிதாசனார், பாவாணர், பெரியார், பெருஞ்சித்திரனார் போன்றோர் எத்தனை முறை தோன்றுவார்கள். இவர்கள் இத்தமிழகத்திற்கு தந்து போனவற்றை எத்தனை பேர் நடைமுறைப் படுத்துகிறார்கள்?

இவர்கள் யாவரையும் நாமறிவோம்! தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். ஆயினும் அன்னார் சொன்னவற்றை நாம் பயின்றும் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் நாம் சோம்பிக் கிடக்கிறோம். அல்ல, அல்ல இன்னும் மாயைக்குள் கிடக்கிறோம்.

தமிழிலே களைகள். தமிழர்களிடையே பகைவரோடு களைகளும். தமிழர்களுக்கு இடையே களைகள். இறைவனுக்கும் தமிழனுக்கும் இடையே களைகள்.

தமிழுக்கு இருக்கும் இன்றைய சிக்கல்களை மேலோட்டமாக எதிர்ப்பதுவும் அலசுவதும், நுனிக்கிளையில் அமர்ந்து அடியை வெட்டுவது போன்றதாகும்.

இதோ நான் தமிழன்! தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று பேசுவதெல்லாம் போதாது. ஈராக்கிலே அமெரிக்கா குண்டைப் போட்டால் அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன.

பிரித்தானியப் பொருள்களை வாங்காதே, பயனபடுத்தாதே என்று காந்தியார் சொன்னபோதுதான் பிரித்தானுக்கு மிகவும் உரைத்தது.

எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் அகலவேண்டியது அகலும். அதுபோல, தமிழுக்கும் தமிழருக்கும் வேதனை தருவது யாது ? யாவர் ?

மொழியிலே, எழுத்திலும் பேச்சிலும் புரளும் மொழிக்கலப்பு ஒரு வேதனை! இறைவனுக்கு இடையே திரைபோடும் அயனமொழி ஒரு வேதனை !

நாமும் தமிழிலேயே இறைப் பாடல்கள் பாடவேண்டும் என்று கதறுகிறோம் ! கேட்பாரில்லை ! பகைவர் கேட்கமாட்டார் !

ஏன் கேட்கமாட்டார் என்றால், நம்மிடம் தன்னொழுக்கம் இல்லை. நமது எழுத்துகளில் பகைமையைப் புழங்கவிட்டு விட்டு, இறைவனடியில் மட்டும் அதைச் சேர்க்காதே என்றால் பகைவர் விடுவாரா ?

எப்படி காந்தியார் பிரித்தானியப் பொருள்களை வாங்காதீர் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றி கண்டாரோ, அதே பாங்கில்தான் மறைமலையாரும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும் - இன்னும் இவரைப் போன்று பலரும் எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் எழுத்துகளில் பிறமொழி கலந்து எழுதுவது "மொழி ஊழல்" ஆகும்.

அந்த ஊழலை தமிழர் தவிர்த்து தமிழின் மானத்தையும் தன்மானத்தையும் காக்க ேவ்ணடிய பொறுப்பு அனைவர்க்கும் உண்டு. அதுதான் தமிழ்ப்பணியும் கூட !

இந்த அடிப்படையை மறந்து செய்யும் எந்தத் தமிழ்ப் பணியும் தன்னொழுக்கம் இல்லாத தமிழ்ப் பணிதான் என்பதில் அய்யமில்லை.


நாக. இளங்கோவன் - சென்னை
நன்றி : அமீரகத் தமிழிணைய நண்பர்கள் ஆண்டுமலர் 2003தமிழிலேயே சாப்பிடலாம்

மலேசியாவின் கரு.திருநாவுக்கரசு எழுதியுள்ள கட்டுரையில்...)
(நன்றி : அமீரகத் தமிழிணைய நண்பர்கள் ஆண்டுமலர் 2003 )

அசைத்தல் - விலங்போல அசையிட்டுத் தின்னுதல்.
அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறி மாறி ஒதுக்குதல்.
அரித்தல் - பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்.
அருந்துதல் - சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்.
ஆர்தல் - வயிறு நிரம்ப உண்ணுதல்.
உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்.
உதப்புதல் (குதப்புதல்) - வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சுவைத்தல்.
உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்.
ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்.
கடித்தல் - கடினமானதைப் பல்லால் உடைத்தல்.
கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்.
கறித்தல் - மெல்லக் கடித்தல்.
குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்.
குதட்டுதல் - கால்நடைபோல அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்.
கொறித்தல் - ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்.
சப்புதல் - சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்.
சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்.
சாப்பிடுதல் - சோறுண்ணுதல்
சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்.
சூப்புதல் - கடினமானதைச் சப்புதல்.
தின்னுதல் - மென்று உட்கொள்ளுதல்.
நக்குதல் - நாவினால் தொடுதல்.
பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்.
மாந்தல் - ஒரே விடுக்கில் பெருமடக்காய்க் குடித்தல்.
முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்.
மெல்லுதல் - பல்லால் அரைத்தல்.
மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னதல்.
விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்.
மிசைதல் - மிச்சில் உண்ணுதல்.நல்லவன்

என் சிரிப்பைப்
பார்த்ததும்
பைத்தியம் என்றார்கள் !

என் அழுகையைக்
கண்டதும்
அழுமூஞ்சி
என்றார்கள் !

எதிர்த்துக் கேட்கையில்
திமிர் பிடித்தவன்
என்றார்கள் !

பாராட்டிப்
பேசுகையில்
"பச்சோந்தி"
என்றார்கள்.

குற்றத்தைச்
சொல்லும்போது
துரோகி
என்றார்கள் !

எல்லாவற்றிற்கும்
தலையசைத்தபோது
நல்லவன்
என்றார்கள் !!

நெடுங்குளம் நியாஸ் முகமது, துபாய், அமீரகம்.
நன்றி : அமீரகத் தமிழிணைய நண்பர்கள் ஆண்டுமலர் 2003.அகதி இல்லை

நம்மைப் பிரித்து நிற்பது
இந்து -
சமுத்திரம் மட்டுமல்ல
சட்டமும் தான்.

உன்னை
பார்க்காமல்
இருக்க வேண்டுமென
சட்டம் போட்டு
வென்றவர்கள்...

உன்னை - நான்
நினைக்காமல்
இருக்கவேண்டுமென
சட்டம் போட்டு
நித்தமும்
தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நீ
குண்டு மழைகளில்
நனைந்த போது
என் பூமி
இங்கே
வறண்டு போனது.

நீ
இருட்டில்
விழித்துக் கொண்டிருக்கிறாய்
இங்கே....
பகலில் கூட
என் கண்கள்
கருப்புத் துணியால்
கட்டப்பட்டிருக்கின்றன.

நம்
இருவர் உலகமும்
இருண்டு போனதால்
நம்
கனவுகள் கூட
பதுங்கு குழியில்...

நீ
விடியலுக்காகக்
காத்திருக்கிறாய்

நான்
வெளிச்சமெல்லாம்
விடியல் அல்ல
என்பதால்
உனக்காக
விழித்திருக்கின்றேன்.

நீ அகதி
என்று எழுதியது
என் சட்டம்...!

நீ அண்ணன்
என்று துடித்தது
என் இரத்தம்....!!

- புதிய மாதவி -
நன்றி : ஹே...ராம் - நூல்தெரிந்த கதை

ஆற்றோரத்து மரம் ஒன்றை
அடியோடு வெட்டிக் கொண்டிருந்தேன்
தவறி தண்ணீருக்குள்
விழுந்து விட்டது கோடாரி !

தொலைந்தது சனியனென்று
துண்டை உதறித் தோளில் போட்டு
புறப்பட்டேன்.
"பொறு மகனே"
புன்னகையுடன் தோன்றினாள் தேவதை !

நீருக்குள் மூழ்கி
தங்கம், வெள்ளி, இரும்பு என
மூன்று கோடாரிகளை எடுத்து
இவற்றில் எது உன்னுடையது என்றாள் !

இவை மூன்றுமே
என்னுடையது இல்லை என்றேன் !

புரியாமல் விழித்தாள் தேவதை
புரிந்து கொண்டு அசைந்தன.
ஓசையுடன் மரங்கள் !!

- தென்பாண்டியன் -
மிதக்கும் காடு கவிதைத் தொகுப்பிலிருந்து
நன்றி : விஜயா பதிப்பகம் - தருகிற தாள் பை -தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061