இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 31

31 டிசம்பர் 2004


அன்புடையீர். வணக்கம்,

20-12-2004 அன்று ந.க.ம.கல்லூரியில் மலேசியாவிலிருந்து வந்துள்ள எழுத்தாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. திரு.பெ.இராசேந்திரன் (தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) தலைமையில் 33 படைப்பாளிகள் புதுவையிலும் தமிழகத்திலும் இலக்கியப் பயணம் மேற்கொண்டனர். மொழிப்பற்றும், தமிழுக்குச் செப்பமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற துடிப்பும் மேலோங்கி இருக்கிற அவர்களைப் பார்க்கும் பொழுது இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன எனத் தோன்றியது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வரலாற்றை பாதுகாக்கிற நிகழ்வை மேற்கொள்ள வேண்டும். மலேசியாவில் வெளியான நூல்களையும், இதழ்களையும் திரட்ட வேண்டும். 130 ஆண்டுக்கால ஆக்கங்களைத் திரட்டி அதனை, தற்காலத் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு குறுவட்டுகளில் சேகரிக்கவேண்டும். இது வரலாற்றைப் பாதுகாக்கிற உயரிய முயற்சி. இந்தச் செயலில் தமிழம் வலை, முழுநிறைவோடு ஒத்துழைக்கும். மலேசியத் தமிழ் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.

இயற்கையின் சீற்றத்தால் 26-12-2004 இல் தமிழகம், ஆந்திரம், இலங்கை, மலேசியா போன்ற கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கமும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டு நிகழ்ந்த இழப்பு மீளாத் துயரை ஏற்படுத்துகிறது.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
31 - 12 - 2004



கண்ணன் வந்தான்

சிறுகதை

மா. நயினார்
T.C.20/2816, Gokulam,
Karamana, Trivandrum,
Kerala - 695 002.
நன்றி
நேர்கோடுகள் - சிறுகதைத் தொகுதி



"ஏங்க... சீக்கிரம் சாப்பிட்டுட்டு வாங்க" - உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவைன்ப பார்த்துச் சொன்னாள் தங்கம்.

"அப்படி என்னடீ அவசரம் ? சோறு இறங்கண்டாம.... புளியங்கொட்டை மாதிரி இருக்கு அரிசி.. கறியானா வாயிலெ வைக்க முடியல்லே...என்னா எரிப்பு !" அவனது பதில்.

"வந்து வந்து நான் என்ன செய்தாலும் உங்களுக்கு பிடிக்கமாட்டேங்குது...நூறு குத்தம். ரேசன் கடைலெ குடுக்கப்பட்ட அரிசி தானே வாங்க முடியும்? " தங்கம் சொன்னாள்.

அவன் பேசவிலலை.

குழந்தை செல்வி உள் திண்ணையில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தாள். மூத்தவன் குமார் டியூசனுக்குப் போயிருந்தான்.

ஐந்து நிமிடத்திற்குள் ஒரு ஏப்பம் விட்டுக் கொண்டு கையையும் வாயையும் லுங்கியில் துடைத்துக் கொண்டு வந்தான் தங்கத்தின் கணவன் மாணிக்கம்.

"கொஞ்சம் சோறு மிச்சம் இருக்கு எடுத்து மூடிவை" என்றான்.

"கொஞ்சம் தானே போட்டேன்... அதிலயும் மிச்சம் வந்திட்டா? அது அங்க இருக்கட்டும்.. நீங்க இப்படி இருங்க.." என்றாள் தங்கம்.

மாணிக்கம் தன் மனைவி தங்கத்தின் பக்கத்தில் உட்கார்ந்தான். மீண்டும் ஒரு ஏப்பம். பக்கத்தில் கிடந்த தினசரியை எடுத்துப் புரட்டத் தொடங்கினான்.

"ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் பேப்பர் படிக்கணும். அப்படி அதுலெ என்னதான் இருக்கோ !" அவள் பேப்பரை வேகமாகப் பிடுங்கினாள்.

"டீ...டீ...அது எரவல் பேப்பரு.. கிழிச்சுப் போடாதே... ஆமா..நீ அவசரமா எதுக்கு கூப்பிட்டே?"

"பாருங்கோ.. குழந்தைக்கு இப்போ ஆறாவது மாசம் நடந்துக்கிட்டிருக்கு" என்றாள் தங்கம்.

"ஆமா..அதுக்கென்ன ?" மாணிக்கம் கேட்டான்.

"இன்னைக்கு காலம்பற எதிர்வீட்டு மாமி வந்து பேசிக்கிட்டிருந்தா..."

"ஊர் வம்பெல்லாம் பேசியிருப்பாளே..." மாணிக்கம் குறுக்கிட்டான்.

"ஐயோ..ஐயோ.. நான் சொல்லதை மொதல்லே கொஞ்சம் கேளுங்கோ" தங்கத்திற்கு கோபம் வந்தது.

"சரிம்மா சொல்லு"

"குழந்தை ஏன் இப்படி வெளறிப் போயிருக்கிண்ணு கேட்டா.. நான் ஒன்னும் சொல்லலலே... குழந்தைக்கு என்ன குடுக்கிறேன்னு கேட்டா... டின் மாவை பாலிலெ கலக்கிக் கொடுக்கிறதா சொன்னேன். இந்தப் பிராயெத்திலெ பொடியை மட்டும் கலக்கிக் கொடுத்தா போராதாம். கொஞ்சம் எரியும் புளியும் உள்ளே போகணுமாம். இல்லேண்ணா வயிறு மந்தம் பிடிச்சிருமாம்.. எரை சல்லியமும் இருக்குமாம்" தங்கம் மெதுவாகப் பேசினாள்.

"எரியும் புளியும் கொடுக்க வேண்டாமிண்ணு நானா சொன்னேன்...? கொடுக்க வேண்டியதுதானே...!" மாணிக்கம் சாதாரணமாகப் பதில் சொன்னான்.

"ஏங்க ..! எல்லாத்துக்கும் தமாசு தானா? தங்கம் பல்லைக் கடித்தாள்.

"சரி... விசயத்தைச் சொல்லு"

"சும்மா நெனச்ச நேரம் எரியும் புளியும் கொடுக்க முடியுமா? மொதல்ல அவளுக்குச் சோறு கொடுக்கணும்"

"அதுக்கென்ன கொடுத்திருவோம்.. இன்னைக்கே கொடுத்திருவோமா ?" மாணிக்கம் கேட்டான்.

"ஐயோ..ஐயோ..என்ன சொன்னாலும் இப்படித்தான் பேசுவீங்க.. உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்." தங்கத்துக்கு எரிச்சல் வந்தது.

மாணிக்கம் பேசாமல் இருந்தான்.

குழந்தை செல்வி திடீரென சத்தம் போட்டு அழுதாள். குழந்தையின் மூக்கு தரையில் இடித்துவிட்டது. தங்கம் வேகமாகச் சென்று குழந்தையை எடுத்தாள்.

"ஒரு எடத்திலெ கெடத்தினா கெடந்தாத்தானே... சும்மா நீங்கி நீங்கி போயிரது.." தங்கம் குழந்தையை எடுத்து இன்னொரு பக்கம் கிடத்தினாள். அதன் பக்கத்தில் சில விளையாட்டுச் சாமான்களை எடுத்துப் போட்டாள்.

குழந்தை அழுகையை நிறுத்தியது.

"பாருங்கோ ஒத்தை மாசத்திலெ சோறு கொடுக்கக்கூடாது. அடுத்த மாசம் ஒத்த மாசம். அதுக்கு அடுத்த மாசம் கொள்ளாது. அதனாலெ இந்த மாசம் சோறு கொடுக்கணும்... இல்லேண்ணா ரொம்ப நீண்டு போகும்" தங்கம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"சரி.. ஒரு நல்ல நாளைப்பாத்து கொடுத்திருவோம்" மாணிக்கம் சொன்னான்.

"இந்தா பாருங்கோ..மூத்தவனுக்கு குருவாயூர் கோவிலிலெ வச்சு சோறு கொடுத்தோம். அப்போதே நான் மனசுக்குள்ளே நேர்ந்தேன்... அடுத்தது பொண்ணா இருந்தா அவளுக்கும் இங்கே வச்சு சோறு கொடுக்கலாமின்ணு" தங்கம் தன் நேர்த்திக் கடனை வெளிப்படுத்தினாள்.

"இந்தா.. பாரு.. தங்கம்.. மூத்தவனுக்கு சோறு கொடுக்கிற சமயத்திலெ நாம பாலக்காட்டிலெ இருந்தோம் குருவாயூர் பக்கம். இப்ப நாம திருவனந்தபுரத்தலெ இருக்கோம்....ஓராளுக்குப் போய்வர வண்டிக்கூலி எவ்வளவு ஆகும் தெரியுமா?" இது மாணிக்கத்தின் கேள்வி.

"பாருங்கோ... ஒரு நல்ல காரியத்தைப் பேசும் போது தடசம் சொல்லாதீங்க....."

"சுற்று வட்டாரத்திலெ எத்தனை கிருஷ்ணன் கோயில்கள் இருக்கு... அங்க எங்கையாவது போய் கொடுத்தா போராதா?" மாணிக்கம் மீண்டும் கேட்டான்.

"அப்போ... நான் நேந்தது ?"

"நீ இப்படித்தான் அடிக்கடி எதையாவது எங்கையாவது நேந்துகிடுவே... மூத்தவனுக்கு முடியெடுக்க பழனிக்கு நேந்தே..ரூபா எவ்வளவு செலவாச்சு..?"

"சாமி காரியத்துக்கு பணம் செலவாக்கீட்டு இப்படியெல்லாம் பேசாதீங்க..." தங்கம் இரக்கத்தோடு பேசினாள்.

"சாமியானாலும் சாத்தாவானாலும் நம்ம நெலமைக்கு தகுந்தபடிதானே துள்ள முடியும்?" மாணிக்கம் கேட்டான்.

"என்ன சொன்னாலும் இந்தப் பஞ்சப்பாட்டுதான்... நான் சொல்லதைக் கொஞ்சம் கேளுங்கோ." தங்கம் கணவனை சமாதானப்படுத்தினாள்.

"சரி சொல்லு"

"மூத்தவனுக்குச் சோறு கொடுக்கும்போது பக்கத்திலெ இருந்து குழந்தைகளைப் பாத்தீங்களா? ஒவ்வொண்ணும் கழுத்திலெ செயினும் கெயிலெ காப்பும் காலிலெ தங்கத் தண்டையுமா எப்படி இருந்தது...! நம்ம புள்ள மட்டும் மொட்டை மொழுக்கிண்ணு.. எனக்கு வெக்கமா இருந்தது"

"ஆமா... இப்போ அதுக்கென்ன? " மாணிக்கம் கேட்டான்.

"சோறு கொடுக்கும்போது செல்விக்கு ஒரு பவுன்லே ஒரு செயின் செய்து போடணும்.. பவுனு வெல கொறஞ்சிருக்காம்..."

"அப்புறம்?" அவன் எரிச்சலாகக் கேட்டான்.

"நல்லதா ஒரு பட்டுப் பாவாடை தைக்கணும்.... முன்னூறு முன்னூற்றைம்பது ரூவா தான் ஆகும். நல்ல சுருக்கு வச்சு தைக்கணும்..." தங்கம் சொன்னாள்.

"அப்படீண்ணா.. குழந்தைக்குச் சோறு கொடுக்கிற காரியத்துக்கு குறஞ்சது ரூவர் ஐயாயிரம் உண்டாக்கணும்"

"உங்களுக்கு எல்லாத்துக்கும் இப்படித்தான் ஒரு கணக்கு! பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்படாத பொம்பளையொ உண்டா? இப்படியானா பூவுக்கு மட்டும் மாசம் அறுவது எளுவது ரூவா ஆகுமிண்ணு... அந்த ரூவா இருந்தா பையென டியூசனுக்கு அனுப்பலாமிண்ணு... நான் ஒண்ணும் மறக்கல்லே..." தங்கத்திற்கு அழுகை வரும்போல் இருந்தது.

மாணிக்கம் பேசாமல் இருந்தான். அவன் முகமும் சற்று வாடியது. எதிர்பாராத ஒரு அஸ்திரம் தன்மேல் பாய்ந்தது போல்.

"பாருங்கோ...உங்களெ குத்தப்படுத்ததுக்காக நான் ஒண்ணம் சொல்லல்லே... எல்லாத்துக்கும் ஒரு வழியுண்டாகும். நமக்கு சந்தோஷமா போய் வருவோம்" தங்கம் மாணிக்கத்தை கனிவோடு பார்த்தாள்.

"பாரு தங்கம்... எனக்கும் இந்த மாதிரி ஆசையெல்லாம் இல்லேண்ணு நெனச்சயா?.. எண்ணிச் சுட்ட அப்பம் மாதிரி சம்பளம் வாங்கீட்டு இருக்கோம்... நூலுக்கு மேலே நடந்த மாதிரி செலவை நடத்தீட்டு இருக்கோம்... அதுக்கு எடையிலெ திடீர்ணு அய்யாயிரம் ரூவா மறிக்கணும்னா என்ன செய்வது? அதைத்தான் ஆலோசிச்கேன்" என்று தங்கத்தின் கையைப் பிடித்துச் சொன்னான் மாணிக்கம்.

"நீங்க சொன்னதையே சொல்லீட்டு இருப்பியோ.... உங்க அக்கா பையன் காலேஜிலெ சேரப் போறான்னு வந்து சொன்னான்... கொஞ்சம்கூட ஆலோசிக்காம சொளையா ரூவா ரெண்டாயிரம் எடுத்துக் கொடுத்தீங்க... அதுக்கெல்லாம் எப்படித்தான் பணம் பொரட்டினீளோ" தங்கத்தின் குரல் மீண்டும் உயர்ந்தது.

"சரி...சரி... இனிமேலும் நான் ஏதாவது சொன்னா சண்டைதான் வரும்...நீ உங்க அப்பா கிடடெ சொல்லி ஒரு நல்ல நாள பாரு... போயிட்டு வந்திருவோம்... அந்தக் கடென பாக்கி வைக்காண்டாம்" என்றான் மாணிக்கம்.

"ஏங்க....!" தங்கம் மெல்ல இழுத்தாள்.

"வேறென்ன ? சொல்லு"

"அம்மா இதுவரை குருவாயூர் போனதில்லையாம்... நாம போறதா இருந்தா... கூட வரலாமிண்ணு இருக்கா... எப்படி வேண்டாமிண்ணு சொல்வது..." தங்கம் கொஞ்சலாகப் பேசினாள்.

மாணிக்கம் எதையோ சொல்ல வாயெடுத்தான். அப்போது உள்ளே டமளர் சத்தம் கேட்டது. கூடவே செல்வியின் அழுகையும்.

"ஊந்து ஊந்து.... அங்க போயிட்டாளா?!" என்று சொல்லிக் கொண்டே தங்கம் உள்ளே சென்றாள்.

கையிலும் வாயிலும் கன்னத்திலும் நெஞ்சிலும் சோற்றுப் பருக்கைகளாக சாப்பாட்டுத் தட்டை அளைந்து கொண்டிருந்தாள் குழந்தை செல்வி. சுண்டில் எரிப்புப் பட்டுவிட்டதோ என்னவோ.... இதழ்களைக் குவித்துக் கொண்டு, சூ!...சூ! என்று காற்றை உள்ளே இழுத்தாள்.

"அட சனியனே" என்று சொல்லிக் கொண்டு ஓடிச் சென்று செல்வியின் வாய்க்குள் தன் ஆள்காட்டி விரலைப் போட்டு சோற்றுப் பருக்கைகளை வெளியே எடுக்க முயன்றாள் தங்கம்.

குழந்தை அவளது கைவிரலை கடித்துப் பிடித்துக் கொண்டு அழுதது.

"நான் அப்பவே சொன்னேன் அந்த எச்சித் தட்டத்தை தூக்கி மாற்றி வையிண்ணு...." மாணிக்கம் அங்கே வந்தான்.

"எல்லாத்துக்கும் காரணம் ஒங்க காராட்டம் தான்" தங்கம் அழுது விட்டாள்.

"நம்ம வறுமையை நெனச்சு சாட்சாத் குருவாயூர் கண்ணன்தான் இங்கு வந்து அவளுக்குச் சோறு கொடுத்திருக்கான" என்று தனக்கே உரிய பாணியில் சொல்ல வாயெடுத்தான் மாணிக்கம். ஆனால் தங்கத்தின் முகத்தைப் பார்த்தபோது அவனுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

அங்கே அமைதி நிலவியது.



குறும்பாக்கள்

நன்றி

மலேசியத் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்

ஹைகூ கட்டுரை

ந. பச்சைபாலன்.



அழகிய குருவி
அமில போத்தலில்
அறிவியல் பாடம்.

அறைக்குள் நகை
இறுக்கிச் சாத்தினேன்
இடுக்கில் பல்லி.

- ஏ.எஸ். குணா.

தேநீர் கோப்பை
கழுவாமல் அலமாரியில்
என்னவளின் உதட்டுச் சாயம்.

கோவிலில் இருந்தாலும்
வாசலில் என்பார்வை
கழற்றி வைத்த காலனி.

- சுவாசிப்பவன்.

காயம்பட்ட ஆடு
சீக்கிரம் மருந்து போடு
விரைவில் தீபாவளி.

நெளியும் புழு, தொடாதே
சில நாள்களில்
வண்ணத்துப் பூச்சி.

- ஏ. தேவராஜன்.

வாடகை வீடுமாறும் நாளில்
நான் நட்ட செடியில்
சில பூக்கள்.

பத்துமலைத் தைப்பூசம்
உண்டியலைப் பார்த்தபடி
ஏழைச் சிறுமி.

- ந. பச்சைபாலன்.

அடுப்பைச் சுற்றிக் குழந்தைகள்
உலைவைக்க அரிசியில்லை
கொதித்தாள் அம்மா.

- ப. ராமு.

தெளிந்த நீருக்குள்ளும்
தோரணம் கட்டும்
சாலையோர மரங்கள்.

- கோ. புண்ணியவான்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061