இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 32

15 சனவரி 2005


அன்புடையீர். வணக்கம்,

தமிழர் திருநாள் வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகள்.

தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் கூடித் திருவள்ளுவர் ஆண்டினைப் பயன்படுத்துவது என்று அறிவித்து, அதற்காகச் "சுறவம் முதல் சிலை" வரை முறைப்படுத்தி ஆங்கில வருட எண்ணோடு 31 ஆண்டுகளைக் கூட்டி திருவள்ளுவர் ஆண்டு என அறிவித்தும் அது பயன்பாட்டில் இல்லை.

அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டே தமிழ்ப்பள்ளியை நடத்திவரும் திருமிகு. பொற்செழியன் அவர்கள் என்னைக் காண வீட்டிற்கு வந்ததும் முதலில் கேட்டது " தமிழ் நாள்காட்டி " எங்கு கிடைக்கும் என்பதுதான். நெஞ்சம் நிறைந்தது. தெனமொழி அலுவலகத்திற்குத் தொலைபேசி செய்து, திருப்பூர் நண்பரான துரையரசன் (தொலைபேசி எண் (0421) 2222052 ) உதவியால் நாள்காட்டி பெற்று அவருக்குக் கொடுத்தேன். வெளிநாட்டில் வாழுகிற தமிழ் நெஞ்சங்கள் தமிழ் உணர்வு மிகுந்து இருப்பது கண்டு வணங்குகிறேன். தமிழ்க் குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்பதற்காகப் பல திட்டங்களை வரிசைப்படுத்தி உள்ளேன்.

முதலாவதாக தமிழ்ப் பள்ளிகள் நடத்துகிற நண்பர்கள் தங்கள் பள்ளி பற்றிய தகவல்களை மின் அஞ்சல் செய்யவும். அவை இணையத்தில் தனியாக ஒரு பக்கத்தில் முறைபடுத்தப்படும். அவர்களுக்கு உதவுகிற வகையில் பாடத்திட்டங்களும் இந்தப் பக்கத்தில் வைக்கப்படும்.

உழைத்த மக்களுக்கு தமிழன் எடுக்கிற விழாதான் பொங்கல் விழா. இயற்கைக்கும், மனிதனுக்கும், மாட்டிற்கும் நன்றி செலுத்துகிற உயரிய பாங்கு சடங்காக, சம்பிரதாயமாகச் சுருங்கிப்போனதுதான் வருந்துதற்குரியது. வெளிநாட்டுக்காரர்கள் வந்து பார்க்கிறார்கள் வியக்கிறார்கள் சாதனை என்று சொல்லி மாட்டோடு மோதிச் சாவது நெஞ்சை நெருடுகிறது. ஜல்லிக்கட்டு, தமிழர்களை வீரர்கள் என்ற போர்வையில் மோதிச் சாகடிக்கிறது.( "ஜ" எழுத்து நம் இனம் அழிக்க ஒட்டிக்கொண்டது.)

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
15 - 1 - 2005


ooo

உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்

அண்ணா கயிறு

தெருவில் பல பொருள்களை விற்றுக்கொண்டு போவார். அவற்றுள் அரைஞாணும் ஒன்று.

இந்த அரை ஞாணை, "அண்ணா கயிறு ! அண்ணா கயிறு! " என்று தான் கூவுகின்றார்.

அரை என்று ஒரு சொல்லும் ஞாண் என்று ஒரு சொல்லும் கயிறு என்று ஒரு சொல்லும் ஆக மூன்று சொற்கள் இந்தத் தொடரில் அமைந்துள்ளன.

அரை என்பது இடை. தமிழன் உடலை நான்கு பங்காகப் பகுத்தான். நான்கில் ஒரு பாகமான காலைக் கால் (1/4) என்றான். கால் என்றால் தூண் என்றும் பொருள். உடலைத் தாங்குகின்ற தூண். அதனாலும் கால். முழுப்பகுதியில் பாதியான இடையை அரை (1/2) என்றான். இடை என்பதுகூட மேற்பகுதிக்கும் கீழ்ப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி என்பதனாலேயே அதனை இடை என்றான். தோள் என்பது முக்காற்பகுதி. தொள் என்பதே நீண்டு தோள் ஆனது. தொள் என்பது குறைவு. அதாவது முழுமைக்குக் குறைவு என்று பொருள்.

தலை முழுமை. முதன்மை. மனிதன் தலையினால்தான் முழுமை பெறுகிறான். தலையில்தான் அய்ம்பொறிகளும் நிகழ்கின்றன. அதனால் தலையின்றி வேறு எவையிருந்தும் மனிதன் முழுமையில்லை. அதனால்தான் அதனை முண்டம் என்று வழங்கினர்.

தலை முதன்மை என்பது நாம் நிற்கும்பொழுது முதன்மை மேன்மை இடத்தைப் பெற்று நிற்பது மட்டும் அன்று. பிறக்கும் பொழுது தலையே முதலாவதாக வெளிவரும். அதனாலும் அது முதன்மை. அவ்வாறு தலை முதலில் வெளிவராமல் கால்கள் வெளிவருமானால்தான் சிக்கல் உண்டாகித் தாயே வேதனைக்குள்ளாகின்றனர்.

அரைஞான் கயிற்றுக்கு வருவோம். இந்த மூன்று சொல்களுள் கயிறு. என்னுஞ் சொல்லைச் சேர்க்காமல் அரைஞாண் என்றே கூறலாம்.

அரைஞாண் என்று கூறுவதே சரியானதும் சிறப்பானதும் ஆகும். அப்பொழுதுதான் இடையில் கட்டும் கயிறு என்று பொருளாகும்.

ஞாண் என்றாலும் கயிறே, கயிறு என்றாலும் கயிறே. இது. சிலேட்டுப் பலகை. ஷாப்புக்கடை. நடுசெனடர். கண்ணாடி கிளாஸ். கேட்டு வாசப்படி என்று ஒரு தமிழ்ச் சொல்லும் ஒரு ஆங்கிலச் சொல்லும் சேர்த்துக் கூறுவதைப் போன்று ஞாண் என்னுஞ் சொல்லையும் சேர்த்துச் சொல்லுகின்றனர். ஆனால், தமிழ் அறிஞரே பலர் அரைஞாண் கயிறு என்றே தவறாமல் எழுதுகின்றனர்.

சிறு குழந்தையின் உடல் வளர்கிறதா - உடல் பருக்கின்றதா என்று கண்டு அதற்கேற்ற மருத்துவம் செய்து கொள்ளவும் குழந்தைக்கு வேண்டிய உணவைக் கொடுக்கவும் அவ்வாறு இடையில் கயிறு கட்டினர். அதனோடு ஆண் குழந்தையாயின் கோவணம் ஒன்று கட்டிவிடுவதற்கும், பெண் குழந்தையாயின் மூடி என்னும் வில்லை ஒன்றினை அணிவிப்பதற்கும் அது வாய்ய்பாக இருந்தது. அந்தக் கயிறு அவர்கள் வளர்ந்ததும் அவர்களுக்குப் பயன்பெற்றது. இப்பொழுது அதன் தேவையே இன்றிச் செய்துவிட்டன. ஆண்-பெண் உள்ளாடைகள்.

ஆகையால் அண்ணா கயிறு தம்பி கயிறு என்று கூறாமல், அரைஞாண் கயிறு என்றும் கூறாமல் "அரைஞாண்" என்று மட்டுமே கூறுவோம்.

- புலவர். வெற்றியழகன் -

நன்றி : கண்ணியம் இதழ் - சனவரி 2005.


அதிர்ச்சி

சிறுகதை

அந்தப் பள்ளிக்கு வெள்ளி விழா. ஆகவே விழாக் கோலம் பூண்டிருந்தது.

கல்வி அமைச்சரின் வருகைக்காகப் பிள்ளைகள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப் பட்டிருந்த நேரத்திற்கு இரண்டு மணிநேரம் கழித்துத்தான் அமைச்சர் வந்தார். கொடியேற்றினார். ஒரு மணி நேரம் பேசிவிட்டு அமர்ந்ததும் ஒரு சிறுமி ஓடிவந்து "அங்கிள் ஆட்டேர்கிராப்" என்று கையை நீட்டினாள்.

அமைச்சர் அதில் ஏதோ எழுதி, கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

அதைப் பிரித்துப் பார்த்த சிறுமி, ஒன்றும் புரியாமல் "அங்கிள் என்ன எழுதியிருக்கீங்க ?" என்றாள்.

நீ படிச்சிருக்கியா ?

யெஸ்

எந்த வகுப்பு?

தேர்ட் ஸ்டேண்டர்டு

தேர்ட் ஸ்டேண்டர்டு படிக்கிறியே நான் எழுதியிருக்கிறது தெரியலையா ?

எனக்குத் தமிழ் தெரியாது அங்கிள்

இந்தச் சொல்லைக்கேட்டதும் அமைச்சர் அதிர்ந்து போனார். நம் குழந்தைகள் ஆங்கிலம் இல்லாவிட்டால் ஆடு, மாடு, மேய்க்கத்தான் போகணும் என்று பேசி ஆணையிட்டதன் விளைவு, குழந்தைகள் தாய்மொழியே அறியாமல், கண்ணிருந்தும் குருடர்களாக அல்லவா ஆகிவிட்டார்கள் - என்று அவர் நினைத்ததும் அவருக்குக் குப் என்று வியர்த்துக் கொட்டியது. அந்தச் சிறுமியை உற்றுப் பார்த்தார். குழந்தையோ "அங்கிள் ஆர் யு நாட் வெல் ? " என்றாள்

" ஆமாம் நான் ஒரு முட்டாள் "

" யு மீன் யு ஆர் எ ஃபூல் "

அமைச்சர் ஒரு கையால் அந்தக் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, மறுகையால் தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். முகம் என்றார் கண்களும் அடக்கம் தான்.

- குறளன்பு -

நன்றி : முகம் இதழ் - சனவரி 2005நடப்பா

சிறுகதை

" லே என்னடா கொளத்துல இந்த தாண்டவம் போடுறே... ஒங்க நடப்பா செத்துப் போயிட்டான்டே" என்று மாரியப்பக் கெழவன் சொன்னதும் ஒரே ஓட்டமாய் வீட்டுக்கு ஓடினேன்.

வீட்டில் ஒரே கூட்டம். அம்மா..நடம்மா..அண்ணன்கள், பக்கத்து வீட்ல உள்ளவங்க எல்லோரும் அழுது கொண்டிருந்தனர். நடப்பாவை நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள். வாயில் வெத்தலப்பாக்கு வச்சி கட்டியிருந்தனர். நெற்றியில் ஒரு ரூபாய் காசு..ஒரே பத்தி நாத்தம்... சவத்தோட மூலையில் கிழிஞ்ச தப்பு ஒன்று மாட்டியிருந்தது...அங்கங்க ஒட்டடை படிஞ்சு.

எலேய்... சின்னப்பயலே... காலனித் தெருவுல போயி சொல்லிட்டு வாடா... இவன் பண்ணின காரியத்துக்கு எந்தப்பய வரப்போறான்... ஊருலயும் ஒரே பிரச்சனை... இருக்குறவரைக்கும் நமக்கும் நாலு சனஞ்சாதி வேணுமின்னு இருந்தானா ?

துக்குரித்தனமா நடந்துகிட்டான். இப்ப யாருமில்லாம அனாதையா கெடக்கிறான். ஒறமொறக்குச் சொலிலிவுடக்கூட ஒரு பயலும் வரமாட்டானுவ..

இப்படியாய் பெரியப்பா அலுத்துக் கொண்டவுடன் எனக்கு நடப்பா வாழ்க்கையில ஏதோ சுவாரஸ்யம் இருப்பது போல பட்டது. அதனைத் தெரிஞ்சுக்கணும் என்ற ஆவலும் அதிகமானது.

"ஏம்ப்பெரியப்பா.. இப்படி அலுத்துக்குறீங்க... அப்படி நடப்பா என்னதான் செஞ்சிச்சு"

" ஏண்டா அவன் கொஞ்சம் நஞ்சம் காரியமா செஞ்சான். வாழ்நாள் முழுவதும் ஒரே வம்பு... சண்டை.. இப்படித்தான் ஒருமுறை நம்ம சுப்பிரமணி சாராயம் வித்துகிட்டு இருந்தான். இவன் எங்கையோ எழவு சொல்லிட்டு களச்சு வந்தவன், அவன்ட்ட போயி சாராயம் கேட்ருக்கான்... அவன் கொடுக்க முடியாதுன்னுட்டு மோசமாவும் பேசிருக்கான். அவன்ட்ட கம்முன்னு இருந்திட்டு, ஊருக்குள்ள வந்து சுப்பிரமணி ரூபாய்க்கு ரெண்டு க்ளாசு சாராயம் விக்கிறான்னு தண்டோரா போட்டுட்டான். இந்த சேதி ஊரு பூராவும் பரவிடுச்சு... ஒரே திமுதிமுன்னு கூட்டம்.. நம்மாளுவ எல்லோரும் மண்டிட்டாங்க... விசயம் போலிசுக்கு தெரிஞ்சு சுப்பிரமணிய புடிச்சுட்டு போயிட்டான்ங்கே,, கோர்ட்.. கேசுன்னு அலஞ்சு.. ரொம்பவும் திண்டாடிட்டான். ரெண்டு பேரும் ரொம்ப நாளா வஞசமால்ல இருந்த்ானுவ."

தெரிஞ்சவுங்க... வேண்டியவுங்கன்னு ஒரு சில பேரு வந்தாங்க. ஆனால் ஊருக்காவுங்கதான் யாரும் அதிகமாக வரல... பக்கத்து தெருவுல உள்ள பட்டம்மா மட்டும் ரவா கஞ்சி வச்சி எல்லோருக்கும் கொடுத்தாங்க. பசி நேரத்துல ரவா கஞ்சி ரொம்ப எதமா இருந்துச்சு.

"ஏம்ப் பெரியப்பா.. இதுக்காகவா அத்தனப் பேரும் கட்டுப்பாடா வராம இருக்கான்ங்கே" இன்னும் தெரிந்து கொள்ளனும் என்பதற்காகவே கேட்டேன்.

"ஏது.. இந்தப் பய நம்மள வுடமாட்டான் போலிருக்கே.. இந்த நோண்டு நோண்டிட்ருக்கான். மாரியக்கா கிட்ட போயி நானு ஒரு தரம் பொலவு கேட்டேன்னு வாங்கிட்டுவா " என்றார்.

ஒரே ஓட்டமும் நடையுமா போயி வாங்கியாந்து கொடுத்தவுடன் மேலும் சொல்ல ஆரம்பிச்சார்.

அவன் கொஞ்சம் ராங்கிக்காரன்தான்.. ஒதட்டுல ஒன்னு, மனசுல ஒன்னுன்னு வச்சிப் பேசமாட்டான். எது நியாயமாப் படுதோ அத பட்டுன்னு போட்டு ஒடச்சுடுவான். அதனால அவன யாருக்கும் புடிக்கிறதுல்ல.. ஒரே கெட்ட பேரு...

அப்ப வெட்டும் வேல இவன்தான் பாத்துட்டு இருந்தான். அறுப்பு காலத்துல கூலிப்பிச்சையா காப்படி நெல்லும் ஒரு அரிகதிரும்தான் கொடுத்துட்டு இருந்தான்ங்கே.. ஒரு முறை இவன் பஞ்சாயத்துல,

"எங்களுக்கு கூலிப்பிச்சையா ஒரு படி நெல்லும் ரெண்டு கோட்டு கதிரும் வேணும்.. காப்பொன்னுலயும் மாப்பொன்னாக் கொடுக்குற இந்த சம்பளத்துக்கெல்லாம் எங்களால வேலபார்க்க முடியாது."

"ஏலே பழனி.. யாருக்கு எதிர்ல திமுரா பேசுறன்னு தெரியுதா.. ஒழுங்கு மரியாதையா பேசுனது தப்புன்னு நாட்டாம்ம கால்ல விழுந்து மன்னிப்பு கேளு..." தடிக்கம்பை ஓங்கிக் கொண்டு வந்தார் வைத்தி.

"எதுக்குய்யா.. எதுக்கு நான் மன்னிப்பு கேட்கனும். நானும் எங்க சாதி சனங்களும் இந்த வூருக்காக ஒழக்கிறோம். ஒங்க பொணம் நாறக் கூடாதுன்னு.. ராத்திரியில பொணத்தோட பொணமா கெடந்து நாங்க நாறுறோம். ஊருல எவன் செத்தாலும் முன்னமே வந்து நாங்க நிக்கிறோம். ஆனா இந்த ஊருல எந்த நிகழ்ச்சிலேயும் எங்களுக்கு பங்கும், மரியாதையும் கெடையாது, கோயில்ல மண்டாப்படி செய்யுற உரிமைகூட எங்களுக்குக் கிடையாது. இத நான் கேட்டா, நீங்க தடிக்கம்ப ஓங்கிக்கிட்டு வர்றீங்க... இந்த ஊருக்கு இனியும் நான் வெட்டும் வேலயும் பார்க்கல.. ஒரு மயிரும் பார்க்கல.." பக்கத்துல சாச்சி வச்சிருந்த தப்ப ரெண்டாக் கிழிச்சு கழுத்துல மாட்டிகிட்டு கெளம்பிட்டான்.

"ஏய்.. பழனி.. போடா...போ...ஒன்ன நான் அப்பறம் பின்னாடி பாத்துக்குறேன்" என்றார் சண்முகம்.

"யோவ்.. நீ என்ன அப்புறம் பின்னாடி பார்க்கப்போற.. இப்பயே போறேன்... பின்னாடி என் சூத்தப் பாத்துக்கோ" அப்படின்னுட்டு அவன் வந்துட்டான்.

"அன்னிக்கு இந்த ஊரு பூராவும் கட்டுப்பாடு வச்சான்ங்கே. எவனும் இங்க வர்றதுமில்ல... இவன்கூட பேசறதுமில்ல.. கடைசி வரைக்கும் அதுக்காக, இவன் கவலைப்பட்டதும் கெடையாது. ஊரு சாவுக்கெல்லாம் தப்படிச்சான். இவன் சாவுக்கு தப்படிக்கக்கூட எவனும் வரல. நாலு பேரு பாடைய தூக்கிக்கிட்டு முன்னாடி போக.. பத்தோடு பதினோரு பேரா நானும் அவர்கள் கூடவே நடந்து கொண்டிருந்தேன். அன்றைக்கு யாரோ பேசுனது ஞாபகம் வந்துச்சு... மிகப் பெரிய போராளியோட சாவுக்கெல்லாம் கூட்டம் அதிகம் வராதாம்.

- கலைபாரதி -

நன்றி : தச்சன் இதழ். அந்தணர்குறிச்சி சாலை. திருவையாறு.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061