இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 33

15 பிப்ரவரி 2005


அன்புடையீர். வணக்கம்,

தமிழம் வலையின் பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்வது நிறைவாக இருக்கிறது. தனிஅறையில் அமர்நது கொண்டு அலசி, அலசி தட்டச்சு செய்து இணையத்தில் வலையேற்றுவது பலருக்கும் பயனாவது குறித்து நெஞ்சு நிறைகிறது.

பொள்ளாச்சி வந்த திரு. பொற்செழியன் அமெரிக்காவிற்குத் திரும்பிவிட்டார். கதம்பம் இணையதளம் வைத்துள்ள நண்பர் திரு செளந்தர் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவிலிருந்து அவர் பேசியது, உலகத் தமிழ் மக்களுக்கு இன்னும் நிறைய செய்யவேண்டும் என்ற திட்டத்தை வளர்த்தெடுத்தது. 800 எம்.பி.இணையதளத்தைத் தன்னுடைய சொந்த செலவில் தருவதாகக் கூறினார்.

(இணைய தளத்திற்கான பெயர் அமிழ்தம்)

தமிழ் கற்பிப்பதற்காகவும், தமிழ்வழியில் பள்ளிகள் உலக நாடுகளில் நடத்திக் கொண்டிருப்பவர்களை இணைக்கவும், பல்வேறு நிலைகளில் தமிழ் கற்பிக்கவும், உலகத் தமிழ்க் குழந்தைகளது ஆற்றலை வளர்க்கும் வகையில் அமைகிற பல்வேறு பாடத்திட்டங்களை உருவாக்கி இணையத்தில் வைப்பதும் இன்றைய இலக்காகக் கண்முன் எழுகிறது.

குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் குறுவட்டுகள், ஆடல் பாடல்களின் ஒளிப்படக்காட்சிகளின் குறுவட்டுகள் ஆக்கவேண்டும் - கணினித் துறையில் ஆற்றல் உள்ள நண்பர்கள் உதவினால் இதனை வென்றெடுக்கலாம். என்ன செய்யவேண்டும் என்ற கருத்து இருக்கிறது ? கணினியில் ஆற்றல் உடையவர்கள் தொழில்நுட்பப் பகிர்வு கொடுத்தால் போதும்.

திரு செளந்தர் அவர்களது உதவியால் புதிய மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இனி இந்த மின்அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் - pollachinasan@gmail.com -

உலகநாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் நடத்தி வருபவர்கள் தங்களது பள்ளி பற்றிய குறிப்பை - புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். நான் கண்டறிகிற நுட்பமான பாடத்திட்டங்கள் அனைத்தும் இணையத்தில் முழுமையாக வைக்க விரும்புகிறேன். தமிழ்ப் பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
15 - 2 - 2005


ooo

காசி ஆனந்தன் ஹைகூ கதைகள்

புடம்

காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப்பட்டது.

நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது
" ஐயோ உடல் புண்ணாகிறதே.." என்று கதறி அழுதது.

" கொஞ்சம் பொறுமையாக இரு.." என்று

மூங்கிலைப் பார்த்து ஆறுதல் சொன்னது காற்று.

மூங்கில் புல்லாங்குழல் ஆனது.

மேடையில் -

உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த
புல்லாங்குழலைப் பார்த்து மேனி சிலிர்த்தது காற்று.
அது சொன்னது.....

"புண் பட்டவன் பண்பட்டவன்"நிறைவு

நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக்கல்லைப் பார்த்து தெருவில் கிடந்து குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

'எனக்கு ஏன் மதிப்பில்லை ? நானும் ஒரு கல்தானே..' என்று ஓலமிட்டது.

தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.

' ஏ குறுணி ! காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் பார்க்கத் தெருவில் கிடக்கிறாய். ஆனால் இரத்தினக்கல் அப்படியா ? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.'

' அப்படியென்றால்..? ' என்று இழுத்தது குறுணிக்கல்.

கடப்பாரை சொன்னது.

" நிறைவாகும் வரை மறைவாக இரு "சொரணை

நெருஞ்சிப் புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.

' மனிதர்கள் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே, பார்.. பார்.. அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உனனைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள் ' என்றது அருகம்புல்.

நெருஞ்சி சூடானது.

' என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம் நான் தாங்கிக் கொள்ள வேண்டுமாக்கும்..'

" வதைபடுவதை விட புதைபடுவது மேல் "
காசி ஆனந்தன் நறுக்குகள்


மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

பசு பால் தரும்
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

காகம்
வடையைத் திருடிற்று
என்கிறான்

இப்படியாக
மனிதன்....


குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது
குப்பைத்தொட்டி.

குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது
அலுவலகம்...


மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா ?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.


ஏழ்மை

சதை பிடித்து
விடுகிறாள்.

அழகு
நிலையத்தில்

எலும்புக் கைகளால்.


அறுவடை

திரைப்படச்
சுவரொட்டியை

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.


மாடு

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுக்கிறது

கொம்பை
மறந்த
மாடு.


- காசி ஆனந்தன் -

நறுக்குகள் நூல், ரூ 50
காசி ஆனந்தன் குடில்,
73 பி. 7 ஆவது தெரு,
ராஜ் நகர், மேட்டுக்குப்பம்,
சென்னை - 96.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061