இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 34

1 மார்ச் 2005


அன்புடையீர். வணக்கம்,

ஒவ்வொரு நாளும் இணையத்தைக் காணுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இணையத்தைக் காணுகிற ஒவ்வொருவரும் எழுதுகிற மின்அஞ்சல்கள் நெஞ்சில் பதிந்து நிமிர வைக்கிறது. பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையிலும் எத்தனை ஏக்கங்களோடு நம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை மின் அஞ்சல்கள்வழி அறிய முடிகிறது. நம்மாலான அனைத்தும் நம் தமிழர்களுக்குச் செய்யவேண்டும் என்ற உந்துதல் மேலெழுகிறது. தொடர்நது இயங்குவேன்.

மகிழ்ச்சியான செய்தி - நண்பர் செளந்தர் அவர்களது முயற்சியால் தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளிகள் ஒருங்கிணைப்பு, தமிழ்க் கலை பண்பாடுகளை ஆவணப்படுத்துதல் போன்ற செயல்களுக்காக 1000 எம்பி இடமுள்ள இணையதளமானது முறைபடுத்தப்பட்டுவிட்டது. www.thamizamuthu.com என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த இணையத்தைக் காண அன்புடன் அழைக்கிறோம்.

உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிற தமிழ்ப் பள்ளிகள், தங்களது மாணவர்களின் புகைப்படங்கள், பள்ளியின் புகைப்படம், குறிப்பு போன்றவற்றை அருள்கூர்ந்து உடன் அனுப்பி வைக்கவும். பார்வையாளர்கள்கூட இந்த வகையில் உதவ வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன்,
1 - 3 - 2005இணையதளம் இணைக்குமா ?தமிழர்கள் உலகம் முழுவதும் வாழுகின்றனர். பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். பல்வேறு கலை, இலக்கியம், பண்பாடுகளோடு - பொருந்திப்போய் வாழுகின்றனர். பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

பூமிப் பந்தின் வெவ்வேறு பகுதிகளிலும் நம்தமிழர்கள் இடைவிடாது இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். அறிவியல், தொழில் நுட்பம், இசை, விளையாட்டு எனப் பல துறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டுச் சாதனையாளராகவும் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

1. யார் இந்தச் சாதனையாளர்கள் ?

2. எங்கு இந்தச் சாதனையை நிகழ்த்தி வருகிறார்கள் ?

3. அவர்களது கண்டுபிடிப்புகள்தான் என்ன ?

ஆற்றலோடு இயங்குகிற இவர்களது பதிவுகள் நம் தமிழ்மக்கள் அனைவருக்கும் சென்றடைவதில்லை. "எனக்குப் புகழ் பிடிக்காது. நான் என் பணியைச் செய்கிறேன். இதுவே போதும்" - என்று ஒதுங்கியே இருக்கிறார்கள் இவர்கள். கணினித் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் கண்டுபிடிக்கிற, ஆற்றுகிற இவர்களது செயற்பாடுகள் பரவலாக்கப்படவில்லை. பதிவு செய்யப்படவில்லை.

இந்தப் பதிவு சுயநலம் பேசுகிற பதிவு அல்ல. தமிழர்களது பல்துறை ஆற்றல்களை காட்சிப்படுத்துகிற, வெளிப்படுத்துகிற, பரவலாக்குகிற, ஆவணப்படுத்துகிற உயரிய செயல்.

இப் பதிவுகளின்வழி நாம் நமது இளைய தலைமுறையினரை முறைப்படுத்தி, ஊக்கப்படுத்தி, ஆற்றுப்படுத்தலாம். என் முன்னோர்கள் இதனைச் செய்துள்ளார்கள். நான் இதனைச் செய்வேன் என்று மேலெழுகிற செயலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க உதவலாம்.

www.thamizham.net இந்தப் பதிவைச் செய்ய விரும்புகிறது. பார்வையாளர்களும், நட்பு இணையதள அமைப்பாளர்களும் இச் செய்தியினைப் பரவலாக்கி, அல்லது இக்கட்டுரையைத் தங்களது இணையத்தில் இணைத்துப் பரவலாக்கி, நம் தமிழர்கள் பற்றிய சிறப்புகளைத் தொகுக்க உதவவும்.

தமிழர்கள் பற்றிய குறிப்புகளை......

1. சாதனைத் தமிழர்களின் பெயர், புகைப்படம்.

2. முகவரி

3. செயற்பட்ட துறை

4. செயற்பாடு பற்றிய குறிப்பு

5. பிற செய்திகள்

எனத் தொகுத்து அனுப்பவும். கண்டுபிடிப்புகள், செயற்பாடுகள், சாதனைகள், பற்றிய புகைப்படங்களை jpeg file ஆக்கி மின்அஞ்சல் செய்யவும்.

பூமிப்பந்தில் பரவிக் கிடக்கிற நம் தமிழ் மக்கள் தற்பொழுது இயங்காமல் இல்லை. ஏகப்பட்ட பொருளிழப்பில் ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

1. கோயில்களைக் கட்டுகிறார்கள்.

2. நினைவு மண்டபங்களைக் நிறுவுகிறார்கள்.

3. தனிமனித துதிபாடும் விழாக்களை நடத்துகிறார்கள்.

4. தனிமனிதனை அழைத்துக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

5. திருமணநாள், பிறந்தநாள் விழா எனச் செலவழிக்கிறார்கள்.

இவையணைத்தும் எதிர்காலத் தலைமுறையினரை எந்த வகையில் " அறிவோடும், ஆற்றலோடும் " வளர்த்தெடுக்கும் படிக்கட்டுகளாக இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வேரையும் வேரடி மண்ணையும் சரிசெய்யாது - என்றாவது ஒருநாள் நீரூற்றிப் பயன் என்ன ?

உலக அளவில் நம்தமிழ் மழலையர்களது ஆற்றல்களை வளர்த்தெடுக்கவும், பின் வருகிற தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி வளர்த்தெடுக்கவும் நாம் செய்யவேண்டியன நிறைய உள்ளன.

1. உலக அளவில் தமிழ்ப் பள்ளிகளை ஏற்படுத்துதல். நடந்து கொண்டிருக்கிற தமிழ்ப் பள்ளிகள் பற்றிய குறிப்பினை மாணவர்களது படங்கள், ஆசிரியர் படம், பள்ளி பற்றிய குறிப்பு ஆகியவற்றை இணைத்தல்.

2. உலக அளவில் இயங்குகிற பல்துறை வல்லுநர்களை அவர்களது செயற்பாடுகளை புகைப்படங்களுடன் இணையத்தில் இணைத்து ஆவணப்படுத்துதல்.

3. தமிழ் மக்களது கலை, இலக்கிய பண்பாட்டினைத் தொகுத்து ஆவணப்படுத்துதல்.

4. உலக அளவில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய நூலகங்கள், வெளிவரக்கூடிய, வந்த தமிழ் சஞ்சிகைகள், நூல்கள் போன்றவற்றைத் தொகுத்து - வரிசைப்படுத்தி - ஆவணப்படுத்துதல்.

குறைந்த செலவில், நொடிப்பொழுதில் கலந்துரையாட, பகிர்ந்துகொள்ள - உதவுகிற அறிவியலின் உயரிய தொழில் நுட்பம்தான் இந்த இணையதளம்.

இந்த இணையதளம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளோடு ஒத்ததிர்வு உடைய நண்பர்களை இணைத்துச் செயலாற்ற உதவுமா ?

இணையதளம் இணைக்குமா ?

- பொள்ளாச்சி நசன் -

ooo

காசி ஆனந்தன் ஹைகூ கதைகள்

தேவை

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது.
" ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை ? "
தாய்க்குருவி சிரித்தது.
" மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை " என்றது தாய்...
தாய்க்குருவி சொன்னது

" வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும் "குனிவு

குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்து செல்லும் கழுதையை வேம்பில்
இருந்த காக்கைகள் கவனித்து வந்தன.

ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து

"இந்தக் கழுதை மேல் உனக்கு இரக்கம் வரவில்லையா ?
எப்போது பார்த்தாலும் மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே.."
என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது.

" நாம் என்ன செய்ய முடியும் ? கழுதைதான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் "
என்றது மற்ற காக்கை.

"ஏன் அப்படிச் சொல்கிறாய் ?"

இறக்கைகளைக் கோதிக் கொண்டே இரண்டாம் காக்கை சொன்னது.

" குனிந்து கொண்டே இருப்பவன் சுமந்து கொண்டே இருப்பான் "இடம்

கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாவப் போயின.

மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
" இந்த இடத்தில் நான் கச்சேரி வைப்பேன் - இங்கே எனக்கு வரவேற்பிருக்கும் "
என்றது கழுதை.

அது பாடத் தொடங்கியது.

என்ன கொடுமை... கழுதைக் கச்சேரி - கல்வீச்சு - கலாட்டா என்று ஆகியது.
அடிபட்ட கழுதையும், பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த
ஒரு குச்சி வேலியின் அருகின் வந்து சேர்ந்தன.

கழுதைக்கு ஒரே கொண்டாட்டம்.

ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன.
கழுதை மகிழ்ச்சியோடு பாடத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம். !

தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
வியப்போடு அசைவற்று நின்ற

பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு

" ஒன்றும் வியப்படையாதே.. இங்கே அப்படித்தான் " என்று கூறியது.

சுருக்கமாக அது சொன்னது.

" ஓணான்களின் ஊரில் கழுதைகளும் வித்துவான்களே "அலைவு

ஆறு, கடலில் ஓடிக் கலப்பதையும் -
அலை கரையைத் தேடித் தழுவிவதையும்
அன்றாடம் பார்த்து வந்த வானம்பாடி சிந்தனையில் ஆழ்ந்தது.

" உலகம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றுதான்.." என்றது வானம்பாடி.

பிறகு அது பாடியது.

" மண்ணில் இருக்கிற ஆற்றுக்கு மண்ணில் வெறுப்பு, கடலில் ஆசை
கடலில் இருக்கிற அலைக்கு கடலில் வெறுப்பு, மண்ணில் ஆசை "

ooo

ஆதியிலே சூன்யம் இருந்தது.

அந்த நிலத்தை என் தந்தை வாங்கினார்
நாங்கள் குடியிருக்கிறோம்.

அதை ஒரு ஆசிரியர்
தனது பிள்ளைகளின்
படிப்புச் செலவுக்காக விற்றதாக
பத்திரம் கூறுகிறது.

அதற்கு முன் அது ஒரு
ஈயம் பித்தளைக்காரனிடம் இருந்தது.

ஒரு ஜமீந்தாரின் ஆசை நாயகியிமிருந்து
அது அவனிடம் சென்றது.

அதற்கு முன்பு அது
வெள்ளைக்கார பிரபுவிடம் இருந்தது.

அதற்கு முன்பு
ஒரு பேரரசனின் படைத் தலைவனுக்கு
சொந்தமாயிருந்தது.

அதற்கு முன் அது
ஆதி மனிதர்களிடமிருந்தது.

அதற்கும் முன்பு அது
சூன்யமாயிருந்தது.

- எம். எஸ்தர் -என்னைக் குடையால அடித்துக் கொண்டிருக்கிறார்கள்

முதன் முதலில் குடையால்
அடி வாங்கியது ஏறக்குறைய
எட்டு வயதில் அம்மாவிடம்தான்.

கடையிலிருந்து சர்க்கரை
வாங்கிக் கொண்டு வந்தபோது
திடீரென்று மழை பெய்ய
நான் ஓட ஆரம்பித்தபோது
வழியெங்கும் சர்க்கரை கொட்டிவிட்டது.
மழைக்காகக் கொண்டு வரப்பட்ட
அந்தக் குடையால் அடி வாங்கினேன்.

மற்றொரு முறை அன்னியர் ஒருவர்
குடையால் அடித்தார்
திருவிழாவின்போது
கூட்டத்தில் அமர்ந்து
கரகாட்டம் பார்க்கும்போது
அது நடந்தது.

முன்னால் அமர்ந்திருந்த
வயோதிகர் திரும்பி
திடீரென சிறுவனாகிய
என்னைத் தாக்கினார்
பத்து வயது நிரம்பியிருந்த
எனக்கு அனேக அடிகள்
தவறுதலாகக் கால் பட்டிருக்கக்கூடும்.
வேறொருவரின் சேட்டையால்
பாதிக்கப் பட்டிருக்கக்கூடும்.
மற்ற் சிறுவர்கள்
மறுநாள் விசாரித்தபோது
மிகவும் கலக்கமுற்றிருந்தேன்.

இம்முறை சமீபத்தில் நடந்தது
நன்றாக வாலிபனாக பிறகு....

இவர் திறமையானவர்
குடையை மிக லாவகமாக்க கையாளுகிறார்
உண்மையில் அவர்
நேரில் அடிக்கவில்லை.
அவர் ஏவிவிட்ட குடை
சரியாய் என்னைத் தாக்கியது.
சரமாரியாய் உடம்பெங்கும் அடித்தது
இறுதியில் குடை குத்தீட்டியாய்
நெஞ்சினில் பாய்ந்தது.

ஒரு சிறு பெண் மட்டுமே கலக்கமுற்றாள்
கண்கள் கலங்கியிருந்த அவள்
அந்தக் குடைக்காரரின் மகள்.

- எம். எஸ்தர் -

நன்றி : நத்தை மொழி நூல், வெளியிடு: மருதா, விலை ரூ40


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061