இலக்கிய இணைய இதழ்
இதழ் எண் : 41 - 30 டிசம்பர் 2005

அன்புடையீர். வணக்கம்,

மல்லிகை இதழாளர் டொமினிக் ஜீவா அவர்கள் 9-10-79 அன்று கோவை வந்த பொழுது உரையாற்றி, ஜீவா இதழ் வெளியிட்டுள்ள - கட்டுரையைப் படித்த பொழுது 26 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட நாம் அப்படியே இருப்பதை எண்ணி வேதனையோடு இந்தக் கட்டுரையை மறு வெளியீடு செய்கிறேன். படித்துணர்ந்து செயற்படுக.

2005 ஆம் ஆண்டில் சிறப்பாக வெளிவந்த யாதும் ஊரே இதழ் பற்றிய அறிமுகக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழைப் படிக்கும் படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது மகிழ்வாக உள்ளது.

படிப்பாளிகளும் தாங்கள் படித்த தரமான படைப்புகளைப் படியெடுத்து அனுப்பி வைக்கலாம்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
30 - 12 - 2005டொமினிக் ஜீவா அவர்களின் பேச்சு
நன்றி : ஜீவா இலக்கியத் திங்களிதழ், டிசம்பர் 1979.

(9-10-79 அன்று கோவைக்கு வந்திருந்த ஈழத்து எழுத்தாளரும் மல்லிகை ஏட்டின் ஆசிரியருமான தோழர் டொமினிக் ஜீவா அவர்களுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவைக் கிளை அளித்த வரவேற்பின் போது தோழர் ஜீவா அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கம்)

இரண்டொருமுறை தமிழகம் வந்துங்கூட எனக்கு மிக அருகாமையில் இருக்கும் கோவைக்கு வர இயலவில்லை. விரும்பவும் இல்லை. காரணம் வானம்பாடியை நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொலை செய்து விட்டீர்கள். ஒரு குழந்தை இறந்துவிட்டால் மறு குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு இலக்கிய அமைப்பு இறந்து விட்டால் அதை மீண்டும் பெற்றெடுப்பது இயலாத ஒன்றாகும்.

சில பெரியவர்கள் இந்தியை தேசிய மொழி என்று கூறுகிறார்கள். அடுத்த தேசிய மொழி தெலுங்கு என்று கூட சென்னையில் பேசக் கேட்டேன். நமது தேசிய சிந்தனையை வங்க மொழியிலிருந்துப் பெற்றோம். இயக்க இலக்கியத்தை மலையாள மொழியிலிருந்து பெற்றோம். திரைப் படத் துறையில் புதுமைகளைக் கன்னட மொழியிலிருந்து பெறுகிறோம். நல்ல இலக்கியத்தை சிந்தனையை மராட்டிய மொழியிலிருந்து பெற்றோம்.

அத்தனை மொழிகளும் இந்திய தேசிய மொழிகளாகும். ஆனால் தமிழ்? அது சர்வதேச மொழியாகும். அவ்வாறு கூறுவதில் நான் பெருமையடைகிறேன். இன்றைக்குத் தமிழிற்கு சர்வதேசச் சிறப்பு அற்றிருக்கலாம். ஆனால் அதற்கு சர்வதேசத் தன்மை, வலிமை, சிறப்பு - இருக்கிறது.

சர்வதேச மொழியைப் பேசும் நாம் அதற்குரிய தன்மையைப் பெற்றிருக்கிறோமா? சற்று சிந்தியுங்கள். பாரதி தமிழகத்தில் பிறந்தான். ஆனால் அவன் தமிழில் மட்டுமல்ல, அவன் உலகத்துக்குச் சொந்தமானவன். நாம் நாம் என்று பேசி தனித்துவப் பேசி தனிமைப்படுத்திக் கொண்டு நாற்றமெடுத்துப் போய் கிடக்கிறோம். உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்று அழைக்கிறோம். காரணம் என்ன? அதில் புதுமை இருக்கிறது. தமிழ் சுதந்திரமானது. ஆயிரம் ஆயிரமாண்டுகள் செழுமைப் பட்டு வந்த தொன்மையான மொழி. தமிழ்ச் சுரங்கத்தில் பெருமதிப்பு வாய்ந்த வைரங்களும், வைடூரியங்களும் நிறைந்திருக்கின்றன. அவை தோண்டி எடுக்க எடுக்கக் குறையாதவைகளாக இருக்கின்றன. எனவேதான் ஈழத்து எழுத்தாளர்களாகிய நாங்கள் உலகச் சிந்தனையை ஏற்றுள்ளோம். எங்களுக்கு ஒரு துணிவு இருக்கிறது. வர்க்கப்பார்வை இருக்கிறது.

நான் மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் இறங்கியதும் எனது கால் அணியைக் கழற்றி விட்டு, அந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டேன். தண்ணீரை அள்ளி புனிதநீராகக் குடித்தேன். ஏன்? அந்த மண்ணில் வாஞ்சிநாதன் தோன்றினான். செயற்கரிய தியாகத்தைச் செய்தான். அவனது தேச விடுதலையுணர்வை நான் மதிக்கிறேன். வணக்கம் செய்கிறேன்.

இன்று நீங்கள் அனைவரும் புகழிற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எதிர்காலச் சந்ததிகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு ஒரு எழுத்தாளனுக்கு முதல் வகுப்பு பிரயாண ஏற்பாடும் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதியும் செய்துதர வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் ஒரு பெரிய பந்தாவுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் கூட்டங்களுக்குக் கால தாமதமாகவே வருவதில் பெருமிதம் அடைகிறார்கள். போலித்தன்மை நிறைந்த வாழ்வை நீங்கள் அனைவரும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். வேடதாரிகளாகிவிட்டீர்கள். நாங்கள் கடமையை உணர்ந்து செயலாற்றுகிறோம். எங்களில் எவருக்கும் போலித் தன்மை கிடையாது. வேடம் போட்டுப் பழகத் தெரியாது. நாங்கள் புகழை விரும்பாதவர்கள். குறிப்பாக எங்களிடம் பந்தா கிடையாது.

இந்த நேரத்தில் ஒன்றினைச் சொல்லிக் கொள்ள விருமபுகிறேன். எங்கள் நாட்டிலும் ஆங்கில மோகம் இருக்கிறது. மேல்தட்டு மனிதர்களான சிங்களவர்களும், தமிழர்களும் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள். பாட்டாளி மக்களாகிய நாங்கள் எங்கள் தாய்மொழிகளான தமிழையும் சிங்களத்தையும் விரும்புகிறோம். நாங்கள் ஆங்கிலத் தன்மையை விரும்பாதவர்கள்.

நாங்கள் தமிழ் வேண்டுமென்று கூறியவர்கள். நாங்கள் சமூகப் பற்றுடையவர்கள். இந்தச் சமுதாயம் வாழவேண்டும் வளர வேண்டும் என்று எண்ணுபவர்கள். அதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள். நாங்கள் வெறும் பேனாப் பிடித்தெழுதும் எழுத்தாளர்கள் அல்ல. தேவைப்பட்டால், எழுதுகோலை உடைத்தெறிந்து விட்டுத் தெருவில் நடக்கத் தயாராக இருக்கும் துணிவு, மனவலிவு, எங்களுக்குண்டு. நாங்கள் ஒரு சமுதாய விஞ்ஞான வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு பிரச்சனைகளைப் பார்க்கிறோம்.

எங்கள் நாட்டில் கலாநிதிகளின் இலக்கிய ஆட்சி நடந்து கொண்டு வந்தது. கலாநிதிக்கு வேண்டியவர்கள் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பெருமைப் படுத்தப்பட்டார்கள். கலாநிதிகளின் அரசியல் கருத்துக்கு ஒத்து வருபவர்கள் புகழப்பட்டார்கள். நல்ல படைப்பிலக்கியவாதிகளைப் புறக்கணிக்கும் போக்கு ஈழத்தில் இருந்தது. இந்த நிலையை விளக்கி மல்லிகையில் 15 கட்டுரைகள் எழுதப்பட்டன. எழுதியவர்கள் எவரும் கலாநிதிகள் அல்ல. உயர்நிலைப்பள்ளி வரை படித்தவர்கள். பீடிசுருட்டும் தொழிலாளி. கல்லுடைக்கும் தொழிலாளி போன்றவர்களே. ஆனால் அவர்களுக்கு இலக்கிய வேட்கை, உயர்ந்த சிந்தனைப் போக்கு இருந்தது. கடைசியல்தான் ஒரு பத்திரிகை ஆசிரியனாக அல்ல, ஒரு எழுத்தாளனாக எனது கருத்தைத் தொகுத்து கலாநிதிகள் திமிர்பிடித்தவர்கள், அவர்கள் விமர்சகர்களே தவிர, படைப்பாளிகள் அல்ல என்று தாக்கி எழுதினேன். இவ்வளவும் நடந்து முடிந்த பின்னரும் அந்தக் கலாநிதிகள் எனது மல்லிகையில் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு மனவலிமை இருந்தால், இத்தகைய விமர்சனங்களைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து எழுதுவார்கள்.

ஆனால் தமிழகத்தில் நேர்மாறான நிலை. உங்கள் நாட்டுக் கலாநிதிகளுக்கு விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ளும் வலிமை கிடையாது. இது வளர்ச்சியைப் பாழ்படுத்தும். தேங்கிய குட்டைகளாகி நாற்றமெடுக்கும்.

உங்களிடத்தில் பேச்சும் நடப்பும் முரண்படுகிறது. இந்த நாட்டில் பேனாப்பிடிக்கும் எழுத்தாளனுக்கு இதயசுத்தம் கிடையாது. போலித்தனமான இலக்கியப் போக்கு வேண்டவே வேண்டாம். அந்தப் போலித்தனம் அரசியலோடு நின்று விடட்டும்.

இங்கு எழுத்தாளர்களைக் கூப்பிட்டு எழுதிய கதையில் சில பகுதிகளைத் திருத்தவும், முடிவை மாற்றவும் சொல்லுகிற பத்திரிகை ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதன்படி நடக்கிற எழுத்தாளர்களும் இருக்கிறாாகள். எங்கள் நாட்டில் இந்தப் போக்கு இல்லை. இங்கு பந்தா இருக்கிறது. எங்களிடத்தில் பந்தா இல்லை.

என்னைச் சிறந்த எழுத்தாளன் என்று கூறினீர்கள். அது காதில் பூ வைப்பது போன்றதாகும். என்னைவிட மிகவும் திறமையாக இலக்கியங்களைப் படைக்கும் எழுத்தாளர்கள் ஈழத்தில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இதைக் கூறுகிற மனவலிமை எனக்கு இருக்கிறது. அவ்வாறு கூறுவதில் பெருமையும் அடைகிறேன். இது வளர்ச்சியைக் குறிக்கும். ஆனால் உங்களில் எவருக்கும் இந்த மனவலிமை கிடையாது. நீங்கள் ஒவ்வொருவரும் பெரிய எழுத்தாளர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

என்னை எதிர்க்கக்கூடிய பிற்போக்கு வாதிக்குக்கூடி எங்கள் நாட்டில் ஆத்மசுத்தி இருக்கிறது. ஆத்மசுத்தியுடைய எவரையும் நான் மதிக்கத் தயாராக இருக்கிறேன். என்னால் இந்துமதியை, சிவசங்கரியை எவ்வாறு மதிக்க முடியும்?

இநதச் சமுதாயத்தைப் பற்றி நினைக்காத அவர்களின் தொடர்பு எனக்கு வேண்டாம். ஆயிரம் கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறேன். மனிதனைப் பற்றிக் கவலைப் படுகின்ற எழுத்தாளர் எவராக இருந்தாலும் அவரது வீடுதேடி, கதவைத் தட்டி அவர் அடிபணியத் தயாராக உள்ளேன்.

எங்கள் புதுக் கவிதை மிகவும் முன்னேறி இருக்கிறது. அதற்கு வழிகாட்டியாக இருந்த, இந்த மண்ணில் தோன்றிய வானம்பாடியைச் சாகடித்து விட்டீர்கள். அதன் கழுத்ைத் திருகிச் சென்றுவிட்டீர்கள். உங்களை மன்னிக்கவே முடியாது. நான் அடுத்த முறை கோவைக்கு வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் வானம்பாடியைப் பறக்க விடுங்கள். புத்துயிர் அளித்துத் தாருங்கள். வானம்பாடியின் மறைவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் புவியரசு, மேத்தா, சிற்பி, ஞானி, சக்திக்கனல் ஆகிய ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்.

இங்கிருந்து எங்கள் நாட்டிற்கு ஆனந்தவிகடன், குமுதம், தினமணிக்கதிர், இதயம், குங்குமம் போன்ற குப்பைகள் வந்து குவிகின்றன. எங்களது வளர்ச்சிக்குத் தடையாக இவைகள் இருக்கின்றன. பெண்களை விளம்பரப் பொருளாக்கி விடுகிறார்கள். பக்கத்துக்குப் பக்கம் சினிமாக்காரி, சினிமாக்காரன்களின் மூக்கு, விழி, மார்பகம் போன்ற உறுப்புகளைப் போட்டு பக்கங்களை நிரப்புகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும் பெண்ணையும், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் குபேரனையும் தொடர்புபடுத்தித்தான் கதைகள் எழுதப்படுகின்றன. இந்த நாட்டில் அவதியுறும் மனிதனைப் பற்றிய கதைகளை எங்களால் படிக்க முடியவில்லை. இத்தகைய கதைப் பின்னல்களைத் தயவுசெய்து நிறுத்தி விட்டு மனித இனததைப் பற்றிச் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

விடுதலை பெற்று 32 ஆண்டுகள் கழித்துக்கூட மனத இனத்தைப் பற்றிச் சிந்திக்காத சினிமாக்கள் வளர்ந்திருக்கின்றன. ஐந்தாம் தர சிறப்புகளைத் தாங்கி மூனறு மணி நேரம் மனிதனைச் சிரிக்க வைக்கும் நாடகங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இதைப் பற்றி வேதனைப் படவே வெட்கப்படவோ இல்லை.

நாடகத்தில் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாடகக்காரனும் பார்வையாளனும் இணைகிற அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறோம். எங்களிடம் ஐந்தாம் தரமான நகைச் சுவைகள் இல்லை. சாதனையை எழுப்பக்கூடிய தன்மை வளர்ந்து இருக்கிறது.

இன்றைக்குச் சென்னை இலக்கியம் நச்சு இலக்கியமாக்கப் பட்டிருக்கிறது. ஓசியில் இலக்கியத்தைப் படிக்கும் தன்மை இங்கு வளர்ந்து போயிருக்கிறது. எங்கள் நாட்டு அமைச்சர் எங்களிடம் ஏன் மல்லிகை எனக்குக் கிடைக்க வில்லை என்று கேட்டார். "நீங்கள் மல்லிகை சந்தாதார் இல்லை" என்று பதில் கூறினேன். தயவுசெய்து எந்தப் பத்திரிகையையும் எவருக்கும் இலவசமாக அனுப்பாதீர்கள். ஏழைகளுக்கு வேண்டுகோள் கொடுங்கள்.

ஈழத்து எழுத்தாளர்கள் மார்க்சீயத்தின் அடிப்படைத் தன்மையை ஏற்று இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களைத்தான் மக்கள் போற்றகிறார்கள். அத்தகைய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஈழத்து மக்களிடம் வரவேற்பு இருக்கிறது.

நாமெல்லாம் சோசலிசப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு எதிர்ப்புகளும், தடைகளும் அதிகம். எங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கட்சியில் சேர்த்துவிடுகிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் நலம் பாதுகாக்கப் படும். நாங்கள் அவர்களை இனங்கண்டு வைத்துள்ளோம். நீங்களும் அவர்களை இனங்கண்டு கொள்ள வேண்டும்.

பிற்போக்கு எழுத்தாளன், சமய சந்தர்ப்பவாத எழுத்தாளன் இருவரில் சமுதாயத்திற்குத் தீமை பயக்கக் கூடியவன் யார் என்று செவ்வியன் கேட்டார். பிற்போக்கு எழுத்தாளன் ஆத்மசுத்தியுடையவன். அவன் நாளை திருந்தலாம். ஆனால் சமயசந்தர்ப்பவாத எழுத்தாளர்கள் தான் பிற்போக்கு எழுத்தாளர்களைவிடச் சமுதாயத்திற்கு அதிகப்படியான தீமை பயப்பவர்கள். சமய சந்தர்ப்பவாத எழுத்தாளர்களுக்கு உதாரணமாக தீபம் நா.பார்த்தசாரதி, சோ, போன்றவர்களைக் கூறலாம். இவர்கள் சில நேரங்களில் அதிதீவிரவாதம் பேசுவார்கள். சமய சந்தர்ப்பவாதமும், தொடக்கநிலைத் தீவிரவாதமும் ஒருதாய் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளாகும் என்று பேசி முடித்தார்.

கூட்டத்திற்குக் கவிஞர் செவ்வியன் தலைமை தாங்கினார். கவிஞர் புவியரசு வரவேற்புரையும் நன்றியுரையும் கூறினார். எழுத்தாளர்கள் சிதம்பரநாதன், முப்பால்மணி, மேத்தா, ஞானி, சி.ஆர்.இரவீந்திரன் போன்றவர்களும் மற்றோரும் வந்திருந்தனர்.

நன்றி : ஜீவா இலக்கியத் திங்களிதழ் (சிறப்பாசிரியர் செவ்வியன்) டிசம்பர் 1979.
குறும்பாக்கள்

(o) கொம்பை விட்டு
கூரை தாவும் கொடி
மீறலே வளர்ச்சி

(o) சூரியனிலிருந்து பூமி
பூமியிலிருந்து நீ
உன்னிலிருந்தே தீ

(o) நாயை விடு
பூனையிடம் கற்றுக் கொள்
தேவை விசுவாகமல்ல, எதிர்ப்பு.

(o) மனப்பாடம் வெறு
விவாதித்ததுப் படி
புதியதை படைத்தலே அறிவு.

(o) ஆதிக்கப் பட்டம் பறக்கிறது
நூல் உன் கையில்
அறுத்துவிடு.

(o) குனிவு பணிவல்ல
குனிவு பக்தியல்ல
குனிவு கூன்.

(o) உறக்கம் பிடிக்கவில்லை
கனவிலும்
கையில் பீ துடப்பம்.

(o) இழுக்கு இழுப்பதினாலே
இழுக்காதே
தேர் உடை.

(o) கள்ளிப் பால் குடித்தும்
சிரித்தது குழந்தை
அழுதாள் தாய்.

(o) அழும் குழந்தை
அழாத சிலை
தீர்ததமென விரையமாகும் பால்.

(o) எவ்வளவு நீர் குதித்தாலும்
அருவியின் அழகு
சாரலில்.

(o) கழுகின் கொக்கரக்கோ
எப்படி விடியும் சமாதானம்.
குண்டடிபட்டுப் புறாக்கள்.

(o) லாபம்..லாபம்..லாபம்..
கழிவு நீரால் நிறைகிறது
வறண்ட நதி.

(o) சுமைக்குள் உடல்
உயரத்தில் ஏறுகிறது
நத்தை.

(o) பசியால் செத்த பிணம்
கல்லறை மீது
படையல்.

(o) சிரித்துக் கொண்டே சுமந்தாள்
அழுது கொண்டே சுமக்கிறேன்.
பாடையில் தாய்.

(o) திரையில் நடிகை
தேவைப்படுகிறது
இன்னொரு தோள்சீலைப் போராட்டம்.

---தமிழ்ப் பித்தன்---

(o) தமிழன் தலையில்
வடவர்சாமி
முறைக்கிறார் அய்யனார்.

(o) நாத்து நடாத
கதிர் அறுக்காத சாமிக்குப்பேரு
அன்னலெட்சுமி.

(o) மரணித்த பிறகு
அலங்கரிக்கப்படுகிறான்
புதைக்க.

(o) உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்
நாடு கடத்தப்பட்டாலும்
புதுப் புதுக் கடவுள்கள்.

--- தயாகவிச் சிற்பி ---

நன்றி : கொஞ்சோண்டு - அய்க்கூ நூல்சிறப்பிற்குரிய தமிழ்ச் சிற்றிதழ் - யாதும் ஊரே
பொள்ளாச்சி நசன்

தமிழ் நாட்டில் வெளிவருகிற மக்கள் தொடர்புக் கருவிகளான தமிழ்ப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை தமிழ்க் கொலை புரிவதோடு, தமிழர்களை ஆற்றலோடு வளர்த்தெடுப்பதற்கான வழிவகை காட்டாது, பாலியல் பொழுது போக்கில் சீரழிக்கிற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்து வருவதால் - கருத்துச் செறிவூட்டலுக்கான விதைப்புக் களமாகத் தங்களை உருவாக்கிக் கொண்டு, பொருளாதார இழப்பில், தமிழ் மொழி, தமிழர் முன்னேற்றம் கருதி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவைதான் இந்தத் தமிழ்ச் சிற்றிதழ்கள்.

இவ்வகையான சிற்றிதழ்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அச்சானாலும், கருத்து நுட்பத்தால் வரலாற்றுப் பதிவிற்காக வரிசைப் படுத்தப்பட்டு ஆய்வு செய்வதற்கான அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ளன. தாள் விலையேற்றம், அச்சுக்கூலி உயர்வு, அஞ்சலக அழுத்தம், ஆண்டுக் கையொப்பம் அளிப்பவர்களின் எண்ணிக்கை குறைதல் என்பன போன்ற பல்வேறு நெருக்குதல்களுக்கிடையிலும் 40 க்கு மேற்பட்ட தரமான தமிழ்ச் சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்திலும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் வெளியிடப்படும் இவ்வகைச் சிற்றிதழ்கள் வணிக நோக்கமற்று, மக்களுக்காக இயங்குகிற தன்மை வணங்குதற்குரியதும், வாழ்த்துதற்குரியதும் ஆகும்.

உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக வெளிவருகிற தென் செய்தி, தெளிதமிழுக்காக வெளிவருகிற தெளிதமிழ், தமிழர் நிலை காட்டும் தமிழர் முழக்கம், தமிழியச் செய்திகளைத் துணுக்குச் செய்திகளாகத் தரும் தமிழ்ப்பாவை, தூய தமிழுக்காக இயங்கும் தென்மொழி, தமிழர் நாட்டிற்கான அடித்தளம் காட்டும் தமிழர் கண்ணோட்டம், பகுத்தறிவோடு சிந்தனையை சீரமைக்கும் சிந்தனையாளன், பகுத்தறிவு காட்டும் நாளை விடியும், இதழ் வழிச் சுட்டிக்காட்டும் எழுகதிர், இயங்குகிற மக்களது முகவரி காட்டும் முகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலித் முரசு, மள்ளரிய வரலாறு காட்டும் மள்ளர் மலர், சுற்றுச் சூழலை முதன்மைப் படுத்தும் சுற்றுச் சூழல், பசுமைத் தாயகம், இசைக்காக வெளிவரும் இசைத்தமிழ் - இப்படி 40 க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து கருத்து விதைக்கின்றன.

இந்த வரிசையில் தரமாகவும், தொடர்ந்து வெளிவந்தும் - தமிழ், தமிழருக்காக இயங்குகிற "யாதும் ஊரே" இதழின் ஓராண்டுகாலப் பதிவினை ஒப்புநோக்கி, அறிமுகமாகப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

சென்னை, பம்மல நாகல்கேணித் தமிழ்ச் சங்கத்தின் திங்களிதழான யாதும் ஊரே இதழ் - வணிக நோக்கமற்று, விளம்பரங்களை வெளியிடாது, ஒவ்வொரு திங்களும் தொய்வின்றித் தொடாந்து வெளிவந்து விழிப்புணர்வூட்டுகிறது. இதழின் கோட்டோவியங்கள் நடக்கிற நிகழ்வுகளை நுட்பமாகச் சுட்டிக் காட்டி, படிக்காதவருக்கும் உணர்வூட்டுகிற தன்மையில் உள்ளன. தமிழ் மொழி, தமிழர் நலம் நோக்கிய கட்டுரைகளையும், துணுக்குகளையும், உரைவீச்சுகளையும் நுணுகிக் கண்டு பதிவுசெய்து வருகிறது. இதழின் ஆசியரியர் உரை நடக்கிற நிகழ்வுகளை நுட்பமாக அலசுகிற போக்கில் அமைந்திருக்கும். நூல் விமர்சனம் எனத் தமிழிய நோக்கில் வெளிவருகிற தரமான நூல்கள் பற்றிய கருத்துரையை வெளியிடுகிறது. படிப்பவர் குரல் என மடல் எழுதுபவரது கருத்தினை வெளியிட்டு வருகிறது. 2005 இல் வெளியான அனைத்து இதழ்களும் தனித் தனியாக ஒரு சிறப்பிதழாகவே மலர்ந்துள்ளன.

2004 இல் பாவாணர், மயிலை.சீனி.வேங்கடசாமி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பண்டிதமணி அயோத்திதாசர், சாலையார், இலக்குவனார், ப.ஜீவா, நாவலர் சோமசுந்தர பாரதியார், ம.பொ.சி, வள்ளலார், ந.சி.கந்தையா பிள்ளை, டாக்டர் தருமாம்பாள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பாவலரேறு ஆகியோர் பற்றிய விரிவான செய்திகளை ஒவ்வொரு இதழிலும் தொகுத்து வெளியிட்டுள்ளது. வரலாறறுப் பதிவாக அமைகிற இத்தன்மையின் முதன்மை கருதி 2005 ஆம் ஆண்டின் அனைத்து இதழ்களையும் இப்படித் தனித்துவத்தோடு தொகுப்பதுடன், அதனைச் சிறப்பு மலராகவும் வெளியிடுவது என்று திட்டமிட்டு வெளியிட்டு வென்றுள்ளது.

2005 ஆம் ஆண்டின் (சனவரி) மார்கழி இதழ் மொழிப்போர் ஈகிகள் நினைவு மலராக மலர்ந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக வெளிவருகிற இந்த இதழின் 79 ஆவது இதழ் இது. முன் அட்டையில் மொழிப் போராளி நடராசன் அவர்களது படத்தினையும், பின் அட்டையில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களது படத்தினையும் வெளியிட்டுள்ளது. தமிழன் தொடுத்த போர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட நுட்பமான செய்திகள் இதழுக்கு வலுவூட்டுகின்றன. பலிபீடத்தில் இருதமிழர் என நடராசனும், தாளமுத்துவும் தமிழுக்காக உயிரீந்த நிகழ்வைக் காட்டுவது நெஞ்சை நனைக்கிறது. 1909 ஆம் ஆண்டிலிருந்து இந்திக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த வரலாற்றைப் படிக்கும் பொழுது நிமிர்ந்து நிற்போம். 1937 லிருந்து 1994 வரையிலான காலக்கட்டத்தை ஏழு நிலைகளாகப் பிரித்துக் கொண்டு மொழிப் போராட்டத்தை வரிசைப்படுத்தி - போராட்ட நாள், போராளிகள், போராட்ட அணுகுமுறை என்பது பற்றி இதழில் விளக்குவது வரலாற்று ஆவணமாக இருக்கிறது. 1994 க்குப் பிறகு தற்கால நிகழ்வுகளை இயங்குகிற படைப்பாளிகளின் கட்டுரைகள் வழி வரிசைப்படுத்தியிருப்பது சிறப்பானதே. புலவர் கி.த.பச்சையப்பன் காட்டுகிற தமிழ்க்காப்பு இயக்கங்கள் பற்றிய கட்டுரைத் தொடர் தமிழுணர்வூட்டுவதே. உலகத் தமிழர் பேரமைப்புப் பற்றியும், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு பற்றியும் இதழில் படங்களுடன் குறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழியத்திற்கான கி.ஆ.பெ. அவர்களது கருத்துரைகளும் இந்த இதழில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

2005 மாசி இதழ் தமிழ்ப் பாதுகாப்புப் பயணச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. இதழின் முன் அட்டையில் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி அவர்களது படத்தினையும், பின் அட்டையில் மொழிப்போர் ஈகி குடந்தை தாலமுத்து அவர்களது படத்தினையும் வெளியிட்டு, இதழினுள் அவர்களது செயற்பாடுகள் பற்றிய விளக்கக் கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. மேலும் இன்றைய சூழலின் இன்றியமையாமையால் உருவான தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின்வழி "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்று முழக்கமிடுபவராக, செயற்படுபவராக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. சென்னை, கோவை, புதுவை, கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்க ஊர்திப் பயணம் பற்றிய நிகழ்வுக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. திருச்சியில் நிறைவடையும் இப்பயணம் பற்றிய செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. "வரலாற்றில் நாம் நின்ற இடத்திலேயே நிற்கிறோமா?, நடப்பதாகக் காட்டிக் கொள்கிறோமா?. நடந்து பாதையைக் கடக்கிறோமா? என்ற வினாவை பக்கம் 28 இல் வெளியான பயண வரைபடம் எழுப்புகிறது. 31-7-1938 இல் நகரதூதன் இதழில் வெளியான "திருச்சியிலிருந்து சென்னைக்கு தமிழர் பெரும்படை போகுதுபார் என்ற குறிப்புடன் கும்பகோணம், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சிபுரம் வழியாகச் சென்னைக்குச் செல்லுகிற பயணப்பாதை படத்தினை வெளியிட்டுள்ளது. 38 லும் நடைப்பயணம், இன்றும் நடைப்பயணம் - என்று இலக்கை அடைவோம் என்று வினாத் தொடுப்பதாக இப்பக்கம் அமைந்துள்ளது. ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் தமிழ் நாட்டில் தமிழாக அமைய வேண்டும் என்கிற கருத்து விதைக்கிற துணுக்குகள் இதழில் இடம்பெற்றுள்ளன.

2005 பங்குனி இதழ் குத்தூசி குருசாமி நூற்றாண்டு பிறந்தநாள் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. முன் அட்டையில் குத்தூசி குருசாமி அவர்களது புகைப்படத்தினையும், பின் அட்டையில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழை அரியணையில் ஏற்ற இணைந்து செயலாற்றுவது போன்ற கோட்டோவியத்தையும் வெளியிட்டுள்ளது. குத்தூசி குருசாமி அவர்கள் ஆரியப் புரட்டை தன் அறிவால், ஆற்றலால் ஒவ்வொரு நிகழ்விலும் சுட்டிக்காட்டி, இடித்துரைத்து, கூர்மையான ஈட்டி கொண்டு குத்திக்கிழித்து உண்மை காட்டுகிற தன்மையை இதழின் பக்கங்கள் வெளிப்படுத்து கின்றன. இதழில் தி.க.சி பற்றிய குறிப்புரையும், பொருத்தம் சிறுகதையும் உள்ளன. தமிழ்ப் பாதுகாப்பு இயக்க மாநாட்டின் தீர்மானங்களை வெளியிட்டதோடு, தொடர் நிகழ்வான கரிமை பூசி அழிக்கும் போராட்டம் பற்றிய குறிப்பினையும், சிறை நிரப்பும் தொடர் முற்றுகைப் போராட்டம் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டுள்ளது. புலவர் இரா.இளங்குமரனார் அவர்களது கருத்தரங்கத் தலைையுரைக் குறிப்பாக வெளியிட்டுள்ளதை தமிழக அரசு உணர்ந்து - தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாளை அரசு விழாவாகக் கொண்டாட முன்வரவேண்டும். கருநாடக அரசு கொண்டாடி வருகிறது. தமிழக அரசும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

2005 சித்திரை இதழ் ஆதித்தனார் நூற்றாண்டு பிறந்தநாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று உரத்துச் சொன்ன ஆதித்தனாரின் படத்தை முன் அட்டையிலும், உலகத் தமிழர்களுக்கான இணைப்பு மையத்தை உருவாக்கிய பழ.நெடுமாறன் அவர்களது படத்தைப் பின் அட்டையிலும் வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது. தமிழினத்திற்காக இயங்குகிற நுட்பமானவர்களை ஏதாவது ஒரு சிறுவட்டத்திற்குள் அடக்கிக்காட்டி, அவரது செயலை மழுங்கடித்து, அவர்களது தொலைநோக்குப் பார்வையை மக்களுக்குப் பரப்புரை செய்யாமல் தவிர்த்து விடுவது பார்ப்பனியத்தின் தொடர்ச்சியான வேலையாக அமையும். இந்த வஞ்சக வலையில் பலரும் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆழமான நுட்பமான தமிழியச் செயற்பாடுகளை உள்ளடக்கி இயங்கிய ஆதித்தனாரைச் "சடுகுடுக் கட்சி" என்று கொச்சைப்படுத்தி, நீர்த்துப் போக வைத்தன அன்றைய பெரிய பத்திரிகைகள். சுதந்திரத் தமிழ்நாடு விரைவில் உதயமாவது உறுதி என்ற மன்னார்குடி மாநாட்டுத் தலைமையுரை உயரியது. தினத்தந்தி வழி அவர் பாமர மக்களுககு ஆற்றிய பணி நுட்பமானது. தமிழன் கால்வாய், தமிழர் ஆட்சி, எதிலும் தமிழ் என்று அவரது இயக்கத்தினைச் சித்திரை இதழ் நுட்பமாகத் தொகுத்துப் பதிவு செய்துள்ளது. இது நாளைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். இதழிலுள்ள குடியரசு என்பதன் விளக்கக் கட்டுரையும், தமிழை அழிக்கும் சமற்கிருதப் படையெடுப்பு பற்றிய கட்டுரையும் சிந்திக்கத் தூண்டுவதே.

2005 வைகாசி இதழ் காயிதெ மில்லத்தின் சிறப்பிதழாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் அட்டையில் காயிதே மில்லத்தும், பின் அட்டையில் ச.மெய்யப்பனார் அவர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் தமிழுக்கு முதலிடம் கிடைக்க வேண்டும் என்று போராடிய மருத்துவர் இராமதாசு அவர்களின் போராட்டம் பற்றியும், அயலவரை வெளியேற்றுவோம் என்கிற தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியும் இதழில் வெளியிட்டுள்ளது. காயிதெ மில்லத் அவர்களின் உயர் பண்பு, தமிழுக்காக, தமிழருக்காக இயங்கியவிதம் பற்றியும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதழ்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் திரட்டிய காயிதெ மில்லத் பற்றிய செய்திகளை விரிவாக வெளியிட்டுள்ளது. புலவர் சி.ஞானமணி எழுதியுள்ள தமிழக வடக்கெல்லை மீட்பு வரலாறு பற்றிய கட்டுரைத் தொடர்ச்சி எல்லைப் போராட்டத்தின் வரலாறு பற்றியும், நாம் இழந்த இடங்கள் பற்றியும் சான்றாதாரங்களுடன் விளக்குகிறது. தலைச்சன் பிள்ளையை நரபலி கொடுக்கும் கொடுமையைச் சுட்டிக்காட்டுகிற என்று மடியும் சிறுகதை மூடப்பழக்கத்தை சுட்டிக் காட்டுவதே. பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் பற்றிய நூலினைச் சிறப்பாக விமர்சித்துள்ளது.

2005 ஆனி இதழ் குன்றக்குடி அடிகளார், புலவர் குழந்தை இருவரின் சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. இதழில் ஆன்மீகத்திற்கான புதிய அணுகுமுறையைக் காட்டி, அதன்வழி வாழ்நது வரலாறு படைத்த குன்றக்குடி அடிகளாரின் தூய, துணிந்த, தொண்டினைப் பற்றி நுட்பமாக விவரித்துள்ளது. மக்களுக்காக வாழ்ந்து, மக்களை வழிநடத்துவதே தன் இலக்கென வாழ்ந்து, அறிவியலின் நுட்பத்தோடு வழிநடத்திய இவரது வாழ்முறை பற்றிய செய்திகளைச் சிறப்பாகத் தொகுத்துள்ளது. அடிகளார் வாழ்விலே ஒரு நாள் கட்டுரை நாம் எப்படி நம் வாழ்வியலை அமைத்துக் கொள்ளவேண்டும் என வழிகாட்டுவதாக உள்ளது. மேலும் இதழில் ஆன்மீகத்தின் எதிர் முறையான பகுத்தறிவிற்காக வாழ்ந்து, இயங்கிய புலவர் குழந்தை அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ளது. இராவண காவியத்தைப் பற்றிய கதைச் சுருக்கத்தை வெளியிட்டு, அது ஏன் எழுதப்பட்டது என்பதற்கான வரலாற்றுப் பின்னணியையும் காட்டியுள்ளது. இந்நூலுக்கான அறிஞர் அண்ணா அவர்களது ஆராய்ச்சி முன்னுரையையும் வெளியிட்டுள்ளது. நாகர்கோயிலில் பழ.நெடுமாறன் தொடங்கித் தொடருகிற உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மாநாடு (31-7-2005) பற்றிய துண்டறிக்கையை வெளியிட்டதோடு, ஆசிரியர் உரையில் "நாம் தமிழர், நமது மொழி தமிழ், நம் தாயகம் தமிழகமும், ஈழமும், நமது தேசியம் தமிழ்த் தேசியம்" என அறிவித்து செயலாற்றுவோம் வாரீர் தமிழர்களே என அழைப்பு விடுத்துள்ளது. கவிஞர் இனியன் இதழின் புரவலராகத் தம்மை இணைத்துக் கொண்டமைக்கு பெருமைப்படுவதோடு நன்றியும் தெரிவித்துள்ளது.

2005 ஆடி இதழ் பெண்ணியப் போராளி டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சிறப்பிதழாகக் காணப்படுகிறது. தேவதாசி ஒழிப்பு முறைக்காகப் போராடிய அம்மையாரது வாழ்க்கைக் குறிப்பினைக் கட்டுரையாக வெளியிட்டதோடு, அவரது இயக்கம் தொடர்பான குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதழிலுள்ள அம்மையார் அவர்களது சாதனைப் பட்டியல் பெண்ணினமே பெருமை கொள்ளத்தக்கதாகும். நடந்து முடிந்த நாகர்கோயில் மாநாட்டுச் சிறப்புரைகளை இந்த இதழில் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. அலைகடலெனத் திரண்டெழுந்த தமிழர்களுக் கிடையில் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்களைப் பட்டியலிட்டுள்ளது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடர்ச்சியாகப் போர்சங்கு ஊதவேண்டும் என்பதனைக் கோட்டோவியமாக வெளியிட்டதோடு, சிறை நிரப்பும் தொடர் முற்றுகைப் போராட்டம் பற்றிய தேவையை ஆசிரியர் உரையில் வலியுறுத்தியுள்ளது. சிறை நிரப்பும் போராட்டத்திற்கான உறுதிமொழிப் படிவத்தினையும் இதழின் வெளியிட்டுள்ளது. பழ.நெடுமாறன், ம.இலெ. தங்கப்பா - கட்டுரைகளின் வழி இப்போராட்டத்திற்கான நியாயத்தையும், இன்றியமையாமையையும் வெளிப்படுத்தியுள்ளது. இதழில் வெளியாகியுள்ள மரபுப் பாக்கள் மொழிக்காப்பின் வீச்சினை வெளிப்படுத்துகிறது. தமிரபரணியைக் காப்பாற்றுவோம், சாலைப்பணியாளர்களின் கண்ணீர், கர்நாடகாவில் தமிழில் பதிலளித்ததால் கலவரம், ஆவணி அவிட்டம் பூணூல் கதை போன்ற துணுக்குச் செய்திகள், மக்களைச் சிந்திக்க வைத்து வழிநடத்துபவைகளே. தமிழ் மண் பதிப்பகத்தின் தமிழ் இலக்கணப் பேரகராதி பற்றி விளம்பரக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. செம்மொழி குறித்த மணவை முஸ்தபா அவர்களது கட்டுரை செம்மொழிக்கான புரிதலை ஆக்குகிற கட்டுரையே. நூல்கள் அறிமுகத்தோடு, நூல் வெளியீட்டு விழாவையும் குறித்துள்ளது.

2005 ஆவணி இதழ் நடிகவேள் எம்.ஆர்.இராதா, மயிலை சிவமுத்து ஆகிய இருவரது சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. முன் அட்டையில் நடிகவேளும், பின் அட்டையில் சிவமுத்துவும் காணப் படுகின்றனர். எம்.ஆர்.இராதா நடிகராக இருந்து, பகுத்தறிவாளராக வாழ்ந்து கலைத் துறையின்வழி பெரியார் கருத்துகளைப் பிரச்சாரம் செய்த மாண்புடையவர். இவர் "ஏழுமலையானுக்கு வெடிகுண்டு" எனத் தன் அனுபவத்தை விவரிக்கும் போது நம் நெஞ்சு படபடக்கிறது. இராவணன் பத்திரிகை எனக் குடியரசை விவரித்து, பெரியாரைச் சந்தித்த அனுபவத்தை மிகச் சுவையாக விளக்கியுள்ளார். நாடகத்திற்கா தடை என நாடகம் பார்க்க வந்த சி.ஐ.டி க்களை 100 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்க வைத்தது மறக்கமுடியாதது. தமிழ் நெறிக் காவலர் மயிலை சிவமுத்து பற்றி கட்டுரை அவரது தமிழ் உணர்வையும், செயற்பாடுகையும் விளக்குவதாக உள்ளது. இதழின் உள் அட்டையில் சங்கமித்ராவையும், புலவர் ப.சுப்பண்ணன் அவர்களையும் குறித்துள்ளது. செப் 21 மறவாதீர் என மூன்றாம் மொழிப்போர் பற்றிய குறிப்புரையை ஆசிரியர் உரையில் தந்துள்ளது. பழ.நெடுமாறன் அவர்களது "இந்தி நேரு வாக்குறுதியின் உண்மைப் பொருள் என்ன?" என்கிற தொடர் கட்டுரை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிராக எப்படியெல்லாம் சதிசெய்யப்பட்டுள்ளது என்பதை அலசிக் காட்டுகிறது. முனைவர் மலையமான் அவர்களது ஒப்பாய்வுத் தொடர் தமிழ் மொழிக்கான சிறப்பிடத்தை அகழ்ந்தாய்ந்து காட்டுவதாக உள்ளது. குடந்தை கும்பலிங்கன் அவர்களது சிறப்பு கண்ணா சிறப்பு மடல் அருமையானது. சுட்டிக்காட்டுவது. தமிழ்க் கேட்டினை அம்பலப்படுத்துவது.

2005 புரட்டாசி இதழ் புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதழின் அட்டையில் புதுமைப்பித்தன் புகைப்படம் உள்ளது. பார்ப்பனரின் சதியை உணருவீர் எனத் தன் மரண வாக்குமூலமாகத் திருவனந்தபுரம் சு.சிதம்பரம் அவர்களுக்குச் சொன்ன செய்தியைப் படித்த கண்கள் பனிக்கும். இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரையாக www.thamizham.net இணையத்தால் சிறந்த கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டு வலையேற்றப்பட்டுள்ளது. கவிக்குயில் ஆசிரியர் சு.சிதம்பரம் அவர்களது கட்டுரை புதுமைப் பித்தன் அவர்களது இறுதிக் காலத்தை, வறுமையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இன்று தலையில் தூக்கிக் கொண்டாடும் அவரது இறுதி நாள்கள் எத்தனை இடர்பாடுடையதாக இருந்தன என்பதைப் படிக்கும் பொழுது நெஞ்சு விம்முகிறது. இதழில் வெளியாகியுள்ள புதுமைப் பித்தன் அவர்களது வாழ்க்கைக் குறிப்பும், அவரது அனைத்துக் கதைகளினது சுருக்கக் குறிப்பும் இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் காட்டுவதாக உள்ளன. இந்த இதழில் வெளியாகியுள்ள பல்வேறு துணுக்குகளும் மொழிக் காப்பிற்கான குறிப்புகளாகவே உள்ளன. மேலும் சிறை நிரப்பும் போராட்டத்தில் 1 இலட்சம் பேர் கலந்து கொண்டதைக் குறிப்புரையாக வெளியிட்டுள்ளது. ஈரோட்டில் நடந்த தமிழ் மக்கள் கல்வி உரிமை மாநாடு பற்றியும் எழுதியுள்ளது. உலகத் தமிழ் பேரமைப்பு - உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துத் தமிழ் இயக்கங்களையும் இணைக்கும் பெருமுயற்சி பற்றிய குறிப்பை இதழில் வெளியிட்டுள்ளது. உலகத் தமிழினமே ஒருகுடைக்கீழ் வரப் பாடுபடும் பழ.நெடுமாறன் அவர்களது பணி வணங்குதற் குரியது. தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தமிழ் நாளிதழ் தொடங்குவது பற்றிய அழைப்புரையும் இதழில் உள்ளது. "முரசு கொட்டும் ஆபாசக் குப்பைகள்" எனத் தமிழில் வெளிவருகிற வணிக இதழ்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. வணிக எழுத்தாளர்கள் வசதிகளோடு வாழ்வதையும், இலக்கியத்திற்காக வாழ்பவர்கள் வறுமையோடு போராடுவதையும் - "செம்மொழிக் காலமாவது" மாற்றுமா எனப் பொருத்திருந்து பார்ப்போம்.

2005 ஐப்பசி இதழ் கல்விப் பெருவள்ளல் பு.அ.சுப்பிரமணியனாரின் சிறப்பிதழாக உள்ளது. பின் அட்டையில் முகம் இதழாளர் மாமணி அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு, இதழில் அவர் பற்றிய கட்டுரையையும், அவரது நேர்காணலையும் வெளியிட்டுள்ளது. இதழினுள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களது வாழ்க்கைக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. திருப்பூரில் மனித நேயப் பாசறை சார்பில் நடைபெற்ற "தமிழ்த் தேசிய ஒற்றுமை மாநாடு" பற்றிய தொகுப்புரையை வெளியிட்டிருப்பதுடன், இது குறித்த கோட்டோவியத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த இதழின் இன்னொரு கோட்டோவியப் படம், வாய்ப் பூட்டால் நெருக்கப்பட்டுள்ள தமிழுணர் வாளர்களை வரிசைப்படுத்தி உள்ளது. இருக்கிற தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து ஒரு பேரமைப்பாக உருவெடுக்க வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் மனித நேயப் பாசறை வாழ்த்துதற்குரியதே. இதழின் உள் அட்டையில் பணத்தை முதன்மைப் படுத்தாத தோழர் நல்லக்கண்ணு அவர்களது குறிப்பினையும், புதுச்சேரியில் நாளிதழ் தொடங்குவது தொடர்பான கலந்தாய்வையும் வெளியிட்டுள்ளது. ஒகேனக்கல்லில், உள் நுழைந்து அரட்டிய கருநாடக வனத்துறையினரின் உள்நுழைதலுக்கு எதிராக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டுள்ளது. சித்தன் எழுதியுள்ள சன் தொலைக்காட்சியின் கட்டுரை - "வீழ்வது தமிழாக இருப்பினும் வாழ்வது நாமாக இருக்கட்டும்" என்கிற கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதாக உள்ளது. இந்த இதழில் நிறைய நூல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆக 2005 ஆம் ஆண்டில் யாதும் ஊரே இதழ் தமிழ், தமிழர் தொடர்பாகத் தரமான பதிவுகளைச் செய்து இதழியல் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை கருதி, வரலாற்றுப் பாதுகாப்புப் பதிவாக இதழ் தொடருவது கண்டு www.thamizham.net இணையதளம் வந்த இதழ்கள் பகுதியில் இதழின் மார்கழி, தை, மாசி, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய ஆறு இதழ்களின் அட்டைப்படங்களைக் குறிப்புகளுடன் வலையேற்றியுள்ளது. இதழ் தொடர்ந்து மக்களை வளர்த்தெடுக்க வாழ்த்துகிறோம்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061