இலக்கிய இணைய இதழ்
1 மே 2006 - இதழ் எண் : 49

அன்புடையீர். வணக்கம்,

நண்பர் இரா.அரசெழிலன் ஒரு துண்டறிக்கை அனுப்பியிருந்தார். பெண் நிலை குறித்தும், ஆற்ற வேண்டியது குறித்தும் மிகச் சிறப்பாக அச்சாக்கியிருந்தார். பெண்கள் எழ இக்கருத்து பயனாகும் என நினைக்கிறேன்.

சிங்கப்பூரிலிருந்து தமிழ் மாணவர்கள் தங்கள் பேராசிரியர் வழி உரைவீச்சினை அனுப்பியிருந்தனர். மாணவர்களை எழுத ஊக்குவித்தும் அதனை பரவலாக்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் - நினைக்கிற இவர் போன்ற பேராசிரியர்களால் தமிழினம் உயரும். நிறைய எழுத வாழ்த்துகிறேன்.

( படைப்பாக்கங்கள் அனுப்புகிறவர்கள் தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு tscu எழுத்துருக்களின்வழி தட்டச்சு செய்து அனுப்பினால் நான் இங்கு மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. நேரம் குறையும். இன்னும் நிறைய செய்யலாம். எனவே அருள்கூர்ந்து tscu எழுத்துருக்களில் தட்டச்சு செய்து அனுப்பவும்)

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
1 - 05 - 2006

அன்புள்ள தோழிக்கு,


அன்புள்ள தோழி அஞ்சலி அவர்களுக்குத் தோழமை வணக்கங்கள். உங்களின் மடல் கிடைத்தது. அனுப்புநர் முகவரிப் பகுதியில் உங்களின் பெயரை திருமதி அஞ்சலி நாகராசன் என எழுதியிருந்ததைக் கண்டு சிறிது அதிர்ந்து தான் போனேன். நாகராசன் என்பது உங்கள் கணவர் பெயர்தான் என்பதை நான் நன்றாகவே அறிவேன் தோழி. திருமணத்திற்கு முன் தாங்கள் எழுதிய மடல்களிளெல்லாம் தாங்கள் அஞ்சலி என்று மட்டும்தானே குறிப்பிட்டு வந்தீர்கள். திருமணத்திற்குப் பிறகு ஏன் இந்தத் தேவையில்லாத வால் முளைத்தது என்பது எனக்கு இன்னும் விளங்கவே இல்லை.

சமூக நடைமுறையில் உள்ள வழக்கம்தானே இது என்று நியாயப்படுத்தப் போகிறீர்களா அஞ்சலி? மேல்த்தட்டுப் பெண்களிடம் ஊறிப்போன நடைமுறையாகிவிட்ட இச்செயல், நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடமும் விரைவாகத் தொற்றிவரும் இந்த நோய், தங்களையும் தொற்றிக் கொண்டதில்தான் எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் மேலிடுகிறது. சராசரிப் பெண்கள் இதுபோல எழுதுவதை வேண்டுமானால் பிற பெண்கள் இப்படி எழுதுவதைப் பார்த்து நாகரிகம் என நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்,

ஆனால் , தாங்கள் அப்படியான சராசரிப் பெண் அல்லவே அஞசலி, பெண்களின் நிலை பற்றியும், பெண்கள் ஒடுக்கப்படுவது பற்றியும் ஆணாதிக்கச் சமூக நடைமுறை பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் மணிக்கணக்கில் பேசுவீர்களே ! விவாதிப்பீர்களே ?

இதுவும் ஒரு ஆணாதிக்க நடைமுறைதான் பெண்ணடிமைத்தனத்தின் கூறுகளில் ஒன்றுதான் என்பதை ஏன் அறியாமல் போனீர்கள்? உங்கள் கணவர் இந்தச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப் படுகிற போதோ, அறியப்படுகிற போதோ நாகராசனாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறார், அறியப்படுகிறார். ஆனால் நீங்கள் மட்டும் திருமதி அஞ்சலி நாகராசன் என்று அறிமுகப்படுத்தப் படுகிறீர்கள். திருமதி என்பதன் மூலம் நீங்கள் மணமானவர் என்பதும், உங்கள் பெயருக்குப் பின் உங்கள் கணவன் பெயரை இணைப்பதன் மூலம் நீங்கள் யாருக்கு மணமானவர் என்பதும் அறியப்பட்டு விடுகிறதோ !

பெண் ஆணுக்கான போகப்பொருள் என்கிற மதவியல் கருத்துகளின் மறுவடிவம்தானே இது! ஆணாதிக்கக் கருத்தியல்களின் நவீன வெளிப்பாடு தானே இது! இன்னும் ஒருபடி மேலே போய் (Mrs. Nagarajan) திருமதி நாகராசன் என்று ஒரு பெண் தன் சுயத்தை, சிந்தனையை மட்டுமல்ல தன் பெயரைக் கூடத் தொலைக்கும் அவலம் கூட நேர்ந்துவிடுகிறது. இவற்றையெல்லாம் தாங்கள் உணராமல் போனது ஏன் தோழி?

திருமணத்திற்கு முன்னும் பின்னும் நாகராசன் திரு.நாகராசன் தான். ஆனால் அஞ்சலி மட்டும் திருமணத்திற்கு முன்பு செல்வி அஞ்சலியாக இருந்தவர், திருமணத்திற்குப் பின் திருமதி அஞ்சலி, ஒரு பெண் தன் பெயரைச் சொல்வதிலிருந்தே, எழுதுவதிலிருந்தே அவள் திருமணமாவரா, ஆகாதவரா என அறியப்பட வேண்டும் என்கிற அவலச் சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டீர்களே,

திருமணமாகாத பெண்களை Miss என்றும் திருமணமான பெண்களை Mrs என்றும் குறிப்பிடுவது பெண்களுக் கெதிரான ஆணாதிக்க நடைமுறை என உணர்ந்து கொண்ட பெண்ணியவாதிகள் மணமான, மணமாகாத பெண்கள் அனைவருக்கும் பொதுவாக Ms. என்ற பொது அடைமொழியைப் பயன்படுத்துகின்றனர், CHAIRMAN என்ற சொல் ஒரு ஆணை மய்யப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட சொல் என்பதனால் CHAIR PERSON என்ற சொல்லைப் பெண்ணியவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்த அளவுக்குப் பெண்ணியச் சிந்தனைகள் கூர்மைப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இன்னும் சில பெண்கள் இப்படிக் கூறுவார்கள் - நானாக விரும்பித்தான் என் பெயருக்குப் பின் என் கணவர் பெயரைச் சேர்த்து எழுதுகிறேன், என்னுடைய வெற்றிக்குப் பல வழிகளிலும் என் கணவர் ஒத்துழைக்கிறார், அன்பின் வெளிப்பாடாகத்தான் இப்படி எழுதுகிறோம் - என்று பத்தாம்பசலித்தனமாக உளறுவார்கள்.

இப்படிக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக நமது கதைகளும், காவியங்களும், இலக்கியங்களும் திரைப்படங்களும் கூறுகின்றனவே! பெண் எப்போதுமே ஆணுக்குப் பின்னால் ஏன் இருக்கிறாள் என்பதைப் பெண்கள் எப்போதாவது எண்ணிப் பார்க்கிறார்களா தோழி?

தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருப்பதற்காக மனைவி பெயரைத் தன் பெயரோடு இணைத்தெழுதும் ஆண்கள் உண்டா? கூறுங்கள். எங்கோ ஓரிருவர் உண்டு என்பதை நானும் அறிவேன், விதிவிலக்குகள் விதியாகமாட்டா என்பதை உணருங்கள். யாருக்காகவும் யாரும் தங்கள் தனித்தன்மையை இழக்க வேண்டியதில்லை. கணவன் அவன் பெயரால் மட்டுமே, மனைவி அவர் பெயரால் மட்டுமே அறியப்படட்டும். தங்கள் பெயருக்குப் பின் தங்கள் கணவர் பெயரைச் சேர்த்தெழுதியது சரியானதுதான் என்றால், அதற்கான நியாயமான காரணங்களோடும், தவறென்று பட்டால் உங்கள் பெயரை அஞ்சலி என்றும் மட்டுமே குறிப்பிட்டு எழுதப்படும் தங்களின் அடுத்த மடலை ஆவலோடும் எதிர்பார்க்கும்

பி.இர.அரசெழிலன்,
4/7 பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம், திருச்சி 14
வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களின் படைப்பாக்கங்கள்

பிறருக்கு உதவும பேருள்ளங்கள்

உருகிப்போன மெழுகுவர்த்தியே !
உருகிப்போன மெழுகுவர்த்தியே !
இப்படி உருக்குலைந்து நிற்கும்
மெழுகுவர்த்தியே !

ஏனிந்தக் கொடுமை ?
ஏனிந்த நிலைமை ?
கம்பீரமாக நிமர்ந்து நின்றாயே !
இப்போது கூனிக் குருகி விட்டாயே !

எத்தனை பேருக்கு
வெளிச்சம் கொடுத்திருப்பாய்
எத்தனை முறை
மின்சாரத் தடை வந்தபோது உதவியிருப்பாய்

காற்றோடு சேர்ந்து
தீபத்தை அரங்கேற்றம் செய்து வைத்தாய்
காலை மாலை பாராது
இரவு பகல் பாராது
உதவி புரிந்தாய்.

பல வண்ணங்களில் பிறவி எடுத்து
எத்தனையோ எழில் கொண்டாய்.
தான் அழிந்தாலும்
பிறருக்குப்
பயன் தந்து தியாகி ஆனாய்.

(o)

கிழிந்த புத்தகமே !
கிழிந்த புத்தகமே !
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட
கிழிந்த புத்தகமே

ஏனிந்த நிலைமை ?
ஏனிந்த இழிநிலை ? ஏனிந்த அழிவு ?
யாருந்தன் பக்கங்களைக் கிழித்தது ?
யாருனக்கு இத்தனை கொடுமை செய்தது ?

நல்ல புத்தகமாய் இருந்தபோது
எத்தனை பேருக்கு
எழுத்தறிவைக் கொடுத்திருப்பாய் ?
எத்தனை பேருக்குப் பதவி உயர்வு
பெற வாய்ப்பளித்திருப்பாய் ?

அறிவில்லாதவர்களுக்கு
அறிவை நீ அளித்தாய்
உன்னருமை அறிந்தவர்களுக்குப்
பட்டமும் பதவி உயர்வும்
வாங்கிக் கொடுத்தாய்.

எத்தனை உயிர்களுக்குக்
கல்விச் செல்வத்தை வழங்கியிருப்பாய்
கிழிந்து நீ இப்போது
குப்பையில் கிடந்தாலும்
மறுபயனீட்டிற்குத் தயாராய் இருந்து
மீண்டும் எங்களுக்கு உதவுகிறாய்
நீ அழிந்தாலும்
மறுபடியும் பயன்படும் அழியாச் செல்வம்
நீ வாழ்க !!

(o)

கிழிந்த சட்டையே
கிழிந்த சட்டையே
எந்தன் எழில் மேனியை மூடி
எடுப்பாய் காட்டிய சட்டையே
யாருந்தன் இதயத்தைப் பிளந்தது?
யாரிந்தத் தோற்றத்தைத் தந்தது ?
ஏனிந்தக் கொடுமை ?
ஏனிந்த நிலைமை ?

எத்தனை முறை நீ
எங்களுக்குப் பெருமை சேர்த்திருப்பாய் ?
பல்வேறு வகையினும் பயனளித்திருப்பாய் ?
எத்தனை முறை நீ
எங்களுக்குச் சுகம் அளித்திருப்பாய் ?

குளிரில் நடுங்கியபோது
போர்வையாய் நீ இருந்து உதவினாய்
கோடை காலத்தில்
வெய்யிலின் கொடுமையிலிருந்து
நீ எங்களைக் காத்தாய்

எடுப்பாய் இருக்கையில்
எத்தனை எழிலாய் எங்களை மாற்றினாய் ?
கிழிந்தபோதும் தரையைத் துடைக்கும்
துணியாய் மாறி எங்களுக்குப்
பயன் தந்து உதவினாய் !
உன் பெ(று)ருமையோ
உன் பெ(று)ருமை.

(o)

கிழிந்த சேலையே !
கிழிந்த சேலையே !
ஏழை மங்கை மேனியை
எழிலாய் மூடும் சேலையே,

ஏனிந்தக் களைப்பு ?
ஏனிந்த சோகம் ?
யாருந்தன் மென்மையான அசைவைப் பறித்தது ?
யாருந்தன் பளபளவென்ற நிறத்தைக் குடித்தது ?

எத்தனை நிறங்களில் தோற்றம் அளித்தாய் ?
எத்தனை வடிவங்களில் வடிவம் எடுத்தாய் ?
மூதாட்டியானாலும் சரி
இளநங்கையானாலும் சரி
எத்தனை பேருக்கு எழில் வடிவம் கொடுத்தாய் ?

கன்னியரின் சேலைகளைக்
கண்ணன் மூலம் களவாட வைத்தாய்
கண்ணன் மூலம் கன்னியரின்
மானத்தையும் காத்தாய்.
தாயும் சேயும் ஒன்றாக இருக்கையில்
சேயின் தலைமுடியைத்
துடைக்கும் துண்டானாய்.
சேய்க்குப் பாலூட்டும் பொழுது
திரைச் சீலை ஆனாய்.

எல்லாச் செயல்களுக்கும்
எழிலாய்ச் செல்ல உதவினாய் !
எழில் இழந்து பேர்ன பின்பும்
எங்கள் அன்னையரின்
தாலாட்டுப் பாடலுக்குத் தூளியானாய்
எழிலிழந்து போனபின்பும்
எங்களுக்கு உதவும் சேலையே
உன் பெருமையே பெருமை.முனைவர் மா.தியாகராசன்,
துணைப் பேராசிரியர், நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்,
தேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061