இலக்கிய இணைய இதழ்
8 அக்டோபர் 2006 - இதழ் எண் : 58

அன்புடையீர். வணக்கம்,

இந்த வலையேற்றத்தில் அரவிந்த் செல்லையா எழுதியுள்ள சிறுகதை வெளியிடப்பட்டுள்ளது. மின் அஞ்சலில் பார்த்த சிறுகதை இது. நாட்டு நடப்பை எள்ளல் நடையில் சிறப்பாக விறுவிறுப்புடன் எழுதியிருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இந்தச் சிறுகதையை எழுதியுள்ள படைப்பாளிக்கு என் அன்பு வணக்கங்கள்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
8 - 10 - 2006கடவுளும் கவிஞர் காத்தாடிப் பிரியனும்.

அரவிந்த் செல்லையா

************ **
முன் குறிப்பு: கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே! (அல்ல). இறந்தோர், இருப்போர் என யாரையும் குறிப்பிடுபவன ஆகா. (ஆகும்).

************ **

திடீரென இருக்கையிலிருந்து எழுந்த சிவபெருமான் வேகவேகமாக எங்கோ கிளம்ப முற்படவும், சக்தி சற்றே ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

"என்ன விசேஷம், எங்கே பயணம்?.." சற்று பவ்யமாக வினவினாள்.

'சிவத்தைப் பார்க்க அனைவரும் இங்கு வந்து தவமிருக்க, இவர் வேறு எங்கோ செல்கிறாரே, என்னவாக இருக்கும்' என்பது தான் உமையின் மனத்தில் இருந்த கேள்வி.

"பூவுலகம் தான் வேறென்ன!" சிவம் பதிலளித்தது.

"அய்யோ! அங்கேயா?" அச்சத்துடன் வெளிப்பட்டது பார்வதியின் குரல்.

ஆமாம்! ஏன்?"

"ஏற்கெனவே பட்ட பாடு போதாதா? மறுபடியுமா?"

"இல்லை! இப்பொழுது உலகம் ரொம்ப மாறி விட்டது. நீ நினைக்கின்ற மாதிரி இல்லை. பூவுலகம்"

"நிஜமாகவா?! அப்படியானால் சரி! நானும் வருகிறேன்!"

"வேண்டாம்! வேண்டாம்!"

"இல்லை! நான் வரத்தான் போகிறேன்"

"வேண்டாம் சக்தி! நான் சொல்வதைக் கேள்! தேவைப்பட்டால் நானே உன்னை அழைக்கிறேன்"

"சரி! தாங்கள் அழைக்கும் பொழுதோ அல்லது என் உதவி தேவைப்படும் பொழுதோ நான் அவசியம் அங்கு வருவேன். ஆனால் மறந்து விடாதீர்கள்! நீங்கள் கடவுளாக இருந்தாலும், பூவுலகிற்குச் சென்றால் நீங்களும் ஒரு சராசரி மனிதன் தான் என்பதை. என்னை இங்கு விரட்டுவுது போல், அல்லது மிரட்டுவது போல் அங்கு போய் எந்தப் பெண்ணிடமாவது ஏதும் செய்து பிரச்னை செய்து விடாதீர்கள். ஜாக்கிரதை."

"நல்லது. அப்படியே செய்கிறேன்"

புறப்பட்ட சிவன், மனித உருக் கொண்டு நேராக வந்து இறங்கியது சென்னையில் உள்ள சென்ட்ரல் இரயில் நிலையம். ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு எல்லாரும் போவதும் வருவதுமாக இருக்க, கடவுள் ஆச்சர்யத்துடன் நின்று போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கலானார்.

"என்ன இது! இவ்வளவு அவசரமாக எல்லோரும் எங்கே போகிறார்கள், ஏதெனும் தேர்த் திருவிழாவா? இல்லை ஏதேனும் ஆலயக் கும்பாபிஷேகமா?" மனதிற்குள் நினைத்தவாறே கடவுள் யோசிக்கலானார்.

"அய்ய! தா, அப்படி ஓரமா நின்னுகினு லுக் விடேன், ஏன் வழியிலே நின்னுக்கினு எங்களை பேஜார் பண்றே" கூடையுடன் ஒரு பெண்மணி கடவுளைத் திட்டி விட்டு நகர்ந்தாள். கடவுள் பாதி புரிந்தும் புரியாதவராக ஒரு ஓரமாகப் போய் நிற்கலானார்.

'இடையில் ஒரு எட்டு முழ வேஷ்டி. அரைக்கைச் சட்டை. தோளில் ஒரு துண்டு. கையில் ஒரு லெதர் பை' என்று தனது தோற்றம் கடவுளுக்கே வியப்பாக இருந்தது. தான் அருள் புரிய வேண்டிய நபருக்காகக் கடவுள் காத்து நிற்கலானார்.

"காலே லேக்கி ராத் திரி மேல் காதலே" ஒரு இளைஞன் பாடியவாறு, வழியில் வந்த பெண்ணின் மீது பலமாக மோதினான். கடந்து செல்லும் அவனைத் திட்டாமல், சிரித்த வண்ணம் திரும்பித் திரும்பிப் பார்த்து கொண்டே சென்றாள் அந்தப் பெண்.

கடவுளுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. 'தெரிந்தவனாக இருக்கும்' தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

'இன்னா பெரிசு போலாமா' என்ற குரல் கேட்டுக் கடவுள் அதிர்ச்சியுடன் திரும்பினார். காக்கிச் சட்டை, உடுப்பு அணிந்த ஒருவன் நின்றிருந்தான். 'எங்கே சவாரி போணும், சொன்னீன்னா கரிக்டா அங்க விட்டுருவேன், மீட்டருக்கு மேல அஞ்சோ பத்தோ கொடு போதும். வா, நயினா, இன்னும் போணியாவல, நாஸ்டா வேற துண்ணல, இன்னிக்கு மவராசன் உன் கையால தான் சோறு, வா, வா' என்றான் அந்த ஆட்டோ டிரைவர்.

'இவனுக்கு உதவினால் என்ன!?' ஷண நேரத்தில் அந்த எண்ணம் கடவுளுக்கு உதயமானதும் அவனோடு கூட நடக்கத் தொடங்கினார்.

ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, கைப்பிடியைத் தொட்டு வணங்கியவாறே 'எங்கே போவணும் சாமி!' என்றான் ஆட்டோ டிரைவர்.

'சாமி' என்று டிரைவர் அழைத்ததும் கடவுளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. "நான் வந்து ... இங்க ஏதோ பாற்கடல் இருக்காமே.., அங்கே தான் போகணும். நம்ம நண்பர் அங்க வந்து காத்துட்டு இருப்பார். கொஞ்சம் சீக்கிரம் போணா நல்லது" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

'"இன்னாது பாற்கடலா, நீ பீச்சைத் தான் சொல்றேன்னு நினைக்கிறேன். அது பாற்கடல் இல்லை சாமி, நாற்கடல், ஒரு பெரிய சாக்கடையே அதுல கலக்குது தெரியுமா சரி, சரி, இப்படிக்காக் குந்து அப்புறம் பார்" சொன்னவன் சடுதியில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய, ஆட்டோ வேகம் பிடித்து நகரச் சந்தடிகளை அநாயசமாய்க் கடந்தது.

'அய்யோ.. அய்யோ.. கொஞ்சம் மெல்லமாப் போப்பா' கத்தினார் கடவுள். அவன் காதில் விழாதது போல வேகம் பிடித்துப் போய்க் கொண்டே இருந்தான். சமயம் பார்த்து ஆட்டோவிலிருந்து "வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க" என்ற திருவாசகப் பாடல் ஒலித்தது. அஸ்தியை உடலில் பூசிக் கொண்டவருக்கு, வயிற்றில் அஸ்தியைக் கரைத்தது போல இருந்தது. 'சாவுக்கிராக்கி, வீட்டுல சொல்லினு வந்திட்டியா' ஆட்டோ டிரைவர் தலையை வெளியில் நீட்டி யாரையோ திட்டியவாறே, கடற்கரைச் சாலை நோக்கி விரைந்தான்.

கடவுளுக்குத் தலையைச் சுற்றியது. 'தான் மட்டும் தனியாக வந்தது தவறோ' என்று யோசிக்கலானார்.

"ஆமா, இதெல்லாம் என்னப்பா?" கடற்கரையில் காணப்பட்ட சிலைகளை நோக்கிக் கடவுள் வினவினார்.

"அதுவா சாமி, அதெல்லாம் சிலைங்க, பெரிய பெரிய மனுஷங்கது, ஞாபகமாக இருக்கறதுக்கோசரம் வச்சிருக்காங்க,

ஆமா, நீ என்ன மெட்ராசுக்குப் புதுசா சாமி?, இதெல்லாம பார்த்ததே இல்லையா?"

"இல்லைப்பா, வந்து ரொம்ப நாளாச்சு, அது மட்டுமில்லாம, நான் அப்ப வரப்போ இதெல்லாம் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் இல்ல, அதான் கேட்டேன். ம், அப்போ இது சாமி மாதிரின்னு வச்சுக்கலாமா, ஏன்னா, சில சிலைங்களுக்கு மாலை எல்லாம் போட்டிருக்கு, பக்கத்துல வேற சில பேரு கும்பிட்டுகிட்டு நிக்கிறாங்க! ஏன் அப்படி?"

" ஓ அதுவா சாமி, அதெல்லாம் நினைவு நாள், பிறந்த நாள்னு கொண்டாடறப்போ அப்படி செய்வாங்க சாமி, மத்த நாள்ல ஈ, காக்கா கூட்டம் இருக்காது, காக்கா எச்சம் தான் இருக்கும்"

"என்னமோப்பா, பேசாம ஒரு பெரிய பந்தல், மண்டபம், இல்லனா ஏதாவது மேல கோபுரம் மாதிரியாவது கட்டி இருக்கலாமே, சிலை வீணாப் போகாமயாவது இருக்கும் இல்லயா?"

"சர்தான் சாமி, ஆனா யாரு செய்யறது சொல்லுங்க?" பதில் கூறியபடி மெல்ல ஆட்டோவை ஒடித்துத் திருப்பிய டிரைவர், கண்ணகி சிலை ஒரமாக நிறுத்தினான்.

"இறங்குங்க சாமி!" என்றான் பவ்யமாக.

'ம், எவ்வளவுப்பா காசு தரணும் உனக்கு?' வினவினார் கடவுள் புதிய கண்ணகி சிலையை சற்று உற்று உற்றுப்பார்த்தவாறே.

"ம் எதுனா கொடு சாமி! உன் கையாலே"

கடவுள் தனது லெதர் பேக்கினுள் கையை விட்டு 50 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்.

"இன்னாது 50ரூபா தானா?, யோவ், நீ எந்த உலகத்துலக் கீற, 100ரூபா எடு, இல்லனா கதை கந்தலாயிடும் " கூச்சலிட்டான் டிரைவர்.

பிரச்னை எதுவும் வேண்டாம் என நினைத்த கடவுள் அவன் கேட்டவாறே 100ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினார்.

"ம், சரிதான் நைனா, ஒண்ணும் தப்பா நினைச்சுக்காத, பெட்ரோல் விலை யானை விலை குதிரை விலை விக்குது, நாங்க என்ன தான் செய்யட்டும் சொல்லு. வேற வழியில்லை, இப்படி சவாரிங்க கிட்ட தான் கறக்க முடியும் வரட்டா," கூறி விட்டு விரைந்தான் டிரைவர்.

கடவுள் ஏதோ மனதுக்குள் முணுமுணுத்தவாறே கடலை நோக்கி மெல்ல நடக்கலானார்.

அந்த முற்பகல் வேளையிலேயே பீச் களை கட்டி இருந்தது. ஆணும் பெண்ணுமாய், கையில் பேக்குடனும், புத்தகப் பையுடனும், குடையுடனும் நிழல் தேடி வேக வேகமாய் விரைந்து கொண்டிருந்தனர். கடவுளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. 'இந்த வெயில் வேளையில் எங்கே, எதற்கு இவர்கள் இப்படி அலைகிறார்கள்,' சிந்தனையுடன் மெல்ல நடந்து ஒரு படகின் நிழலில் சென்று அமர்ந்தார். மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் பொழுது தான் அந்த சப்தம் கேட்டது. ஒரு மாதிரியான வினோதமான சப்தம்.

இடைவிடாமல் தொடர்ந்து கேட்ட அந்த சப்த்தத்தினால், நிலைகுலைந்து மெல்ல எழுந்த கடவுள் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தார். அது அவர் அருகே உள்ள படகிலிருந்து தான் வந்தது.

மெல்ல படகுக்குள் எட்டிப் பார்த்த கடவுள் அதிர்ந்தார். அதில் ஒரு இளம் பெண்ணும், ஜீன்ஸ் அணிந்த முரட்டு வாலிபன் ஒருவனும் அமர்ந்திருந்தனர். அந்தப் பெண் வாயிலிருந்து புகை புகையாய் வந்தது. கண்கள் செருகி அரை மயக்க நிலையில் இருந்தாள். அந்த வாலிபன் அவள் மடி மீது தலை வைத்திருந்தான். கடவுளைக் கண்டதும் அவன் மெல்ல தனது டீ-ஷர்ட்டைத் தூக்கி........ இடுப்பில் சுற்றியிருந்த சைக்கிள் செயினையும், சொருகி இருந்த சின்னக் கத்தியையும் காட்ட, கடவுள் பதில் ஏதும் கூறாமல் வேகமாக அவ்விடம் விட்டு விலகினார்.

சற்றே பயத்துடனும், தீவிர சிந்தனையுடனும் கடவுள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது "யோவ் பெரிசு, இன்னா, ............ .ன்னா பத்து, ...........ன்னா இருவது சரியா! இன்னான்றே,?!" என்று இடை மறித்தது பின்னாலிருந்து ஒரு குரல். கடவுள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்.

அதிர்ச்சியாய் இருந்தது அந்த நபரைப் பார்த்ததும். தான் உமையொரு பாகம் கொடுத்த தோற்றமும், படைப்புக் கடவுளான பிரம்மனின் மீது ஆத்திரமும் ஏற்பட்டது. மானிட உடல் எடுத்து வந்ததால், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தனது இயலாமையை நினைத்தும் மனம் நொந்தார்.

'இந்தாப்பா, நீ கேட்ட பணம். இனிமே இந்த மாதிரி தப்பு பண்ணாதே,' என்றார் கடவுள் இரக்கத்துடன்.

"சர்தான்ப்பா, அப்போ சாப்பாட்டுக்கு இன்னா வழி, நீ நெதமும் சோறு போடுவியா, பேசாமப் போவியா.. வந்து சட்டம் பேசிக்கினுக்கீறே, போ போ" என்றவாறு அவ்விடம் விட்டு அகன்றார் அந்த நபர்.

'ம், கலிகாலம் என்பது சரியாகத் தான் இருக்கிறது' சொன்னவாறே மேற்கொண்டு நடக்கலானார் கடவுள்.

வழியெங்கும் இது போல் பற்பல காட்சிகளைக் கண்டதால் களைப்படைந்த கடவுள், உழைப்பாளர் சிலை தாண்டி உள்ள மர நிழலில், பெஞ்சில் சென்று அமர்ந்தார்.

மனதுக்குள் ஏதேதோ சிந்தனைகள். "சே! இந்த எழவுக்குத் தான் அப்போவே மன்மதனை எரிச்சுத் தொலைச்சேன், ஆனா என்ன பிரயோசனம்! எல்லாம் ரதியால கெட்டது" என முணுமுணுத்தார்.

'சே, என்ன வெயில், என்ன வெயில்' முணுமுணுத்தவாறே அருகில் வந்தமர்ந்தான் கவிஞர் காத்தாடிப் பிரியன்.

'வணக்கம் மிஸ்டர் காத்தாடிப் பிரியன், உங்களுக்காக தான் ரொம்ப நேரமாக் காத்திட்டு இருக்கேன்' என்றார் கடவுள் புன் சிரிப்புடன்.

"சரிதான், நான் டெய்லி இங்க வந்து உட்கார்ந்து தான் கவிதை எழுதுவேன்னு எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு இங்க வந்து காத்திட்டு இருக்கீங்களாக்கும்! சரி நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?, என்றான் காத்தாடி.

"நானா, நான் தான் கடவுள், அதாவது கடவுள் மாதிரின்னு வச்சுக்கங்களேன்" என்றார் கடவுள்

"சரி தான், நாட்டுல ரொம்பப் பேரு இந்த மாதிரி சொல்லிக்கிட்டுத் திரியறாங்க. முதல்ல இந்த மாதிரி ஆட்களை சுட்டுத் தள்ளணும்." ஆவேசத்துடன் சொன்னான் காத்தாடிப் பிரியன்

"அய்யோ, ரொம்பக் கோபப்படாதீங்க தம்பி, நான் சும்மாச் சொன்னேன்" என்றார் கடவுள் ஜகா வாங்கியவாறு.

"சரி உங்களுக்கு என்ன வேணும், ஏதாவது பேட்டியா, இல்லை என் ஆட்டோகிராப்பா, இல்ல வேற ஏதாவதா?, சீக்கிரம் சொல்லுங்க, என்னைத் தொந்தரவு செய்யாதீங்க" சொல்லிவிட்டு காத்தாடி தனக்குத் தானே ஏதோ பேசியவாறு, தனது நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து ஏதோ எழுதத் தொடங்கினான்.

கடவுள், மெல்ல அவன் என்ன எழுதுகிறான் என்று எட்டிப் பார்த்தார்.

"என்னவென்று தெரியாமல் ஈட்டி குத்திய காயமாய்

அவள் நினைவு வலிக்கிறது.

கற்பூரத்திற்குத் தெரியுமா

கழுதையின் அருமை!

காலம் கடந்து விட்டாலும்

ஓடிக் கொண்டே இருக்கிறது ரயில்

பயணிகள் யாருமற்று"

என்று படித்த கடவுள், ஆகா, கவிதை அபாரம்" என்றார்.

'என்ன, இந்தக் கவிதை உங்களுக்கு புரியுதா?' என்றான் காத்தாடி.

ஆமா, காதலோட வலியை அழகாச் சொல்லுதே!" என்றார் கடவுள்.

"சே, அப்படின்னா இது வேஸ்ட். கவிதைனா அவ்வளவு ஈசியா எல்லாருக்கும் புரியக் கூடாது, அப்படிப் புரிஞ்சா அது கவிதையே இல்லை" என்றவாறு தனது கவிதையைக் கிழித்து காற்றில் பறக்க விட்டான்.

கடவுள் சற்றே அதிர்ச்சியுடன் காத்தாடியை உற்றுப் பார்த்தார்.

'என்ன பார்க்குறீங்க, ஆமா உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு எனக்காகக் காத்திட்டு இருந்தீங்க' என்றான் காத்தாடி.

"சரி தான், தூத்துக்குடி சித்தப்பா உனக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னாரே, சொல்லலையா?" என்றார் கடவுள் முக்காலமும் உணர்ந்தவராக.

"ஆமா, அட அது நீங்க தானா, ஒருத்தர் வருவார்னு போன் பண்ணினார். ஆனா எப்போ வருவார்னு ஒண்ணும் சொல்லலை. சரி, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்"

"இல்லப்பா, நாம அப்புறம் போகலாம், சரி. கவிதையைக் கிழிச்சு எறிஞ்சுட்டியே, மத்தவங்களுக்குப் புரிய மாதிரி எழுதினா அது கவிதை இல்லைன்னே நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா நீங்கள்ல்லாம்?"

"ஆமா, மத்தவங்களுக்குப் புரியற மாதிரி, 'வடு மாங்கா ஊறுதுங்கோ, தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ' ன்னோ, இல்லை, உங்கப்பன் தங்க முத்து, உங்கம்மா அங்க முத்து ரெண்டு முத்தும் சேர்ந்துப்புட்டா கும்மாங்குத்து' ன்னோ எங்களை மாதிரி ஆளுங்களுக்கு எழுதத் தெரியாது, எழுதவும் முடியாது. என்ன பண்ணச் சொல்றீங்க" என்றான் ஆத்திரத்துடன் காத்தாடிப் பிரியன்.

"சரி தான்பா, கோபப்படாதே, அது சரி ஏன் உனக்கு காத்தாடிப் பிரியன்னு பேரு, அதை நான் தெரிஞ்சுக்கலாமா?"என்றார் கடவுள்.

"அது ஒண்ணுமில்லைங்க, சின்ன வயசுலேருந்து எனக்கு காத்தாடி அது தான் பட்டம் விடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் பட்டம் மாதிரி வானத்துல பறந்து திரியணும்ங்கறது என் ஆசை. அது தான் என் புனைப் பெயரா வச்சுக்கிட்டேன்."

"ஓகோ, ஜாலியா இருக்கணும். எந்தப் பொறுப்பும் எடுத்துக்கக் கூடாது. ஆனா எல்லா வசதியோடவும் வாழணும். ம். சரி தான். இதெல்லாம் எங்க போய் முடியப் போவுதோ, எனக்கு ஒண்ணும் புரியலை" என்றார் கடவுள்.

"நீங்க ஏன் எல்லாத்தையும் நெகடிவா பாக்குறீங்கண்ணு எனக்குப் புரியலையே, உங்களுக்கு பெர்சனலா ஏதோ பிரச்னை இருக்குன்னு நினைக்கிறேன். சரி, சரி, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்"

"இல்லப்பா, உனக்கு நான் ஏதாவது நல்லது பண்ணணும்னு ஆசைப்படுறேன். அதான் உன்னைப் பார்க்க ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கேன்." என்றார் கடவுள்.

'சரிதான், அப்போ டாஸ்மாக் போலாம் வர்றீங்களா?'

"ஓ பேஷா போலாமே, ஆமா அது எங்கே இருக்கு, அங்க என்ன விசேஷம்?"

'யோவ், மெய்யாலுமே நீ என்ன லூசா, இல்லை சும்மா எதுனா பத்திரிகை, டி.வி. பேட்டிக்காக என்னை சத்தாய்க்கிறயா? உண்மையைச் சொல்லு, இல்லே, அவ்ளோ தான் நீ' என்றான் காத்தாடி எழுந்து நின்று உணர்ச்சிவசப்பட்டவனாக.

'உண்மையைத் தான் சொல்றேன், நான் உனக்கு ஏதாவது நல்லது பண்ணியாகனும், அது தான் விதி..' பதில் சொன்னார் கடவுள்.

"சரி, அப்படின்னா வா சேட்டு கிட்ட போலாம், புதுசா ஒரு பத்திரிகை ஆரம்பிச்சு, பணம் எல்லாம் நஷ்டமாயி, வீட்டு நகை, பாத்திரம் எல்லாம் சேட்டு கிட்ட அடமானமா இருக்குது, பணத்தைக் கொடுத்துட்டு மீட்டுக்கிணு வரலாம். வா, வா, பணம் கொடுத்து உதவி செய்."

"சரி சரி, தாரளமா உதவி செய்யுறேன், ஆமா, எவ்ளோ பணம் தேவைப்படும்?"

"ம். என்ன, ஒரு லட்ச ரூபாய் வேணும் இருக்குதா உன்னாண்ட?"

"என்னது ஒரு இலட்சமா?" கடவுள் தனது பையைத் திறந்து பார்த்தார், அதில் சில நூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன. "இல்லை" என்பது போல் சோகத்துடன் உதட்டைப் பிதுக்கினார்.

"பின்ன, என்னமோ பெரிசா சாதிக்கப் போற மாதிரி அல்ட்டிக் கிட்ட, ஒண்ணுக்கும் லாயக்கில்லையே, அடக் கடவுளே, நீ நம்பள ரொம்ப சதாய்க்கிறப்பா"

"ம், ஆமா, மா, ஹி.. ஹி.." என்றார் கடவுள்.

திடீரென்று காத்தாடியின் செல்போன் ஒலித்து.

"ஹாங்.. யாரு.. எங்கே.. சேத்துப்பட்டுலயா.. அப்படியா.. எத்தனை மணிக்கு.. ஓகோ, நிச்சயம் வர்றேன். நம்ம நண்பர் ஒருத்தரையும் கூட்டிக்கிட்டு வரேன். கலக்கிடலாம். கவலைப்படாதீங்க. சந்திப்போம்." என்றபடி போனை வைத்தான்.

"ம், சரி வாங்க போகலாம். ஆமா, உங்க பேரு என்னனு நீங்க சொல்லவே இல்லையே."

"ம், எனக்கு ஊருக்கு ஒரு பேரு. எதைச் சொல்றது. சும்மா, சாமின்னே நீங்க கூப்பிடலாம்."

"ம், சாமினா எங்களுக்கு வேற ஒருத்தர் தான் ஞாபகத்திற்கு வருவார். சரி, விடுங்க சாமி, நாம போகலாம்." கூறிய காத்தாடி, கடவுளை அழைத்துக் கொண்டு ஒரு மதுபானக் கடை நோக்கி அழைத்துச் சென்றான்.

"ம், இந்தக் கடற்கரையை விட்டுப் போகவே எனக்கு மனசு இல்லை. ஒரு விதத்துல சொல்லப் போனா எனக்கு கூத்தாடணும் போல இருக்கு" என்றார் கடவுள் திடீரென்று.

"அய்யோ, சாமி, அதெல்லாம் இங்க பண்ணப்படாது, பண்ணினா போலீசுல புடிச்சுக்கிட்டு போய்டுவாங்க. கூத்தாடறதுக்கெல்லாம் இங்க தனி இடம் இருக்கு."

"அப்படியா, நிஜமாவா! என்னை அங்க கூட்டிக்கிட்டு போறிங்களா?. நான் நல்லா கூத்தாடுவேன் தெரியுமா உங்களுக்கு?"

சாரி சாமி, உங்களையும் என்னையும் அங்க உள்ள விட மாட்டாங்க, எல்லாரும், ஆணும், பெண்ணுமா ஜோடி ஜோடியாத் தான் போவணும். அதுவும் இந்த மாதிரி வேஷ்டிய எல்லாம் கட்டிக்கிட்டு போனீங்கன்னா, வாசல்ல வச்சே அட்ச்சுத் துரத்திடுவாங்க."

"அப்படியா, அய்யோ, திடீர்னு புது டிரசுக்கும் ஜோடிக்கு இப்போ நான் எங்கே போறது?" சோகமானார் கடவுள். "சக்தியை அழைத்தாள் வருவாளா?" யோசனையில் ஆழ்ந்தார்.

" ஆமா ஏதோ கெட்ட வாடை வருதே காத்துல அது ஏன்" வினவினார் கடவுள் மூக்கைத் தேய்த்தவாறே!

"அதுவா, அதோ அங்க பாருங்க! எல்லாரும் மீன் பிடிச்சுட்டுக் காய வச்சிருக்காங்க, வலையெல்லாம் காயப் போட்டிருக்காங்க அது தான், மீன் வாசனை தான் எல்லாம்"

"எனக்கு என்னவோ வயத்தைக் குமட்டுதே.. "

"சரி தான் சாமி, உங்களால கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்க முடியலையா?. அவ்வளவு சுகவாசியா நீங்க?" கிண்டலாகக் கேட்டான் காத்தாடிப் பிரியன்.

"இல்லப்பா! கோவிச்சுக்காதே, சந்தனம், சாம்பிராணி பன்னீர்னு ஒரே வாசனையோடே இருந்துட்டேனா அதான் ஒண்ணும் முடியலை"

"என்னவோ போங்க! நீங்க சொல்றது ஒண்ணுமே எனக்குப் புரியலே"

"எனக்கும் தான் எதுவுமே புரியலே" என்றார் கடவுள்.

அதற்குள் டாஸ்மார்க் வந்து விட்டிருந்தது.

"குவார்ட்டரா, ஹாஃபா, புல்லா" என்றான் காத்தாடி.

"என்னது?"

"நீங்க என்ன சாப்பிடுவீங்க, என்ன வேணும் உங்களுக்கு?"

"நானா... நான் சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை, வெண்பொங்கல்... சில சமயம் விசேஷம்னா லட்டு, களி, கொண்டக்கடலை சுண்டல்னு கொடுப்பாங்க, என் கைல என்ன இருக்கு, என்ன கொடுக்கறாங்களோ அதைச் சாப்பிட வேண்டியது தான், என்ன நாம் சொல்றது? " என்றார் கடவுள்.

"அப்போ, சரியான தண்டச் சோறுங்கறதை நீங்களே ஒத்துக்கறீங்களா?, கஷ்டகாலம், காட்டான்கறது சரியா இருக்கு" காத்தாடிப் பிரியன் தலையில் அடித்துக் கொண்டவாறே கடையினுள் நுழைந்தான்.

கடவுள் உடன் உள் நுழைந்து சுற்று முற்றும் பார்த்தார். சிலர் குடித்துக் கொண்டிருந்தனர். சிலர் பெருங்குரலில் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். ஒருவன் கீழே விழுந்து கிடந்தவாறே ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். கடவுளுக்கு எல்லாம் மெல்லப் புரிந்தது.

"எனக்கு எதுவும் வேண்டாம். நான் வெளில இருக்கேன்" கூறிய கடவுள் கடையை விட்டு வெளியில் வந்தார். பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது. அதில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. வாசனையால் கவரப்பட்டு மெல்ல அந்த இடம் நோக்கி நகர்ந்த கடவுள், பெரிய கியூவில், நடுவில் போய் நின்று கொண்டார்.

"யோவ், பாத்தா பெர்ய மன்சனாட்டம் கீறே, தபா, ஷோக்கா உள்ளார பூர்றியே நைனா, இன்னா, நாங்கள்லாம் நிக்கறது தெர்ல!" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"என்ன சொல்றீங்க நீங்க, எனக்கு எதுவுமே புரியலையே" என்றார் கடவுள்.

"ஆங்! எதுவும் புரியாமத் தான் சைடுல வார்ரீயா நைனா, போ, போ, அந்தாண்ட, கடைசில போய் நின்னுக்கோ, முன்சாமி அண்ணாத்தேக்கு வழி விடு"

கடவுள் தள்ளாத குறையாகத் தள்ளப்பட்டுக் கடைசியில் போய் நின்றார். கூட்டம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

"அடக் கடவுளே! என்னங்க இது?" கடவுளைத் தேடிக் கடைசியில் கண்டுபிடித்த காத்தாடிப்பிரியன் கவலையுடன் அருகில் வந்தான்.

"பரவால்லை, ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் கடைசியாவே நின்னுக்கறேன்" கடவுள் சோகமான குரலில் சொன்னார்.

"அட, என்ன சாமி நீ, பசிக்கிதுணு சொல்லி இருந்தா, எதுனா ஹோட்டலுக்குப் போயிருக்கலாம் இல்ல, என்னவோ போ, சரி, சரி, வாங்க ஹோட்டலுக்குப் போயி சாப்பிடலாம்."

"அது இருக்கட்டும், நீ என்னப்பா குடிச்சுட்டு கோயிலுக்குள்ள வரயே, இது தப்பில்லையா?"

"ம். தப்பு தான் சாமி. நான் ஒத்துக்கறேன். உங்க கிட்ட மன்னிப்பும் கேட்டுக்கறேன். ஆனா, நான் உங்களைத் தேடித்தானே வந்தேன்! சாமி இருக்குற கருவறைக்குள்ளயா போய்ட்டேன்?. அதுமட்டுமில்லை, நான் சாதாரண ஆளு, கடவுள் நம்பிக்கை இல்லாதவன். இது வெறும் வெளி மண்டபம் தானே, அதோ சாப்பிட்ட எச்சில் எலை எல்லாம் கோயில் வாசல்லயே எறிஞ்சிருக்காங்க, இந்த பக்கம் புல்லா செருப்பாக் கிடக்கு. அதோ அந்தப் பூசாரியைப் பாரு, பான்பராக்கப் போட்டு கோயில் உள்ளயே எச்சி துப்புறாரு, இதெல்லாம் யாரும் கேட்கமாட்டீங்க, ஏன், சில பெரிய ஆளுங்க, பூசாரிங்களே கூட குடிச்சுட்டு, இன்னும் என்ன என்னவோ பண்ணிட்டுக் கோயிலுக்குள்ளாற போயிருக்கறதா டிவில காண்பிக்கறாங்களே! அதுக்கு என்ன பதில் சொல்றீங்க?" காட்டமாய் வினவினான் காத்தாடிப் பிரியன்.

"ம், என்னத்த சொல்றது, படிச்சவன் பாவம் பண்ணினா அய்யோன்னு போவான், அய்யோன்னு போவான்." என்றார் கடவுள் ஆத்திரத்துடன்.

இருவரும் அருகில் உள்ள ஒரு உணவு விடுதிக்குச் சென்று உணவை முடித்தனர்.

பின்னர் காத்தாடிப் பிரியன் ஒரு ஆட்டோவைப் பிடிக்க, ஆட்டோ சேத்துப்பட்டை நோக்கி விரைந்தது.

கடவுள் டிரைவரைப் பார்த்து சற்று ப(வ்)யத்துடன், "தம்பி, கொஞ்சம் மெதுவாப் போங்க, எனக்கு வண்டியில எல்லாம் போய்ப் பழக்கம் இல்லை" என்றார்.

"என்னது? சைக்கிள்ல கூடவா போனதில்லை", என்றான் காத்தாடி ஆச்சர்யத்துடன்.

"ஆமா, ஆமா"

"அப்புறம் எப்படி, வெளில எங்கேயாவது போகணும்னா என்ன பண்ணுவீங்க?, நடந்தா போவீங்க?"

"இல்லை, இல்லை, எல்லாம் நந்தி தான், வாகனம் தான்"

"என்னது உளர்றீங்க! நந்தி, வாகனம்னுக்கிட்டு"

"இல்ல, இல்லை, நடை தான், வாகனம் தாங்கிறதைத் தப்பாச் சொல்லிட்டேன்"

"சரக்கு அடிச்சது நான், உளர்றது என்னமோ நீங்க, ஹா.. ஹா.." காத்தாடி பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.

" ஆமா, சாமி உனக்கு என்ன ஒரு 50 வயசு இருக்குமா, பசங்க எல்லாம் என்ன பண்றாங்க?" வினவினான் காத்தாடி.

"அவங்களைப் பத்திப் பேச்சே எடுக்காத, ஆமா, எனக்குக் கெட்ட கோபம் வரும். எல்லாம் தகப்பனுக்கு மீறினதுங்க!"

"ஒகோ, கோபத்துல நல்லது. கெட்டதுன்லாம் வேறே இருக்கோ"

கடவுள் 'திரு திரு' என்று முழித்து விட்டு அமைதியானார்.

ஆட்டோ, பள்ளம் மேடு எல்லாம் ஏறி இறங்கியது.

"அய்யோ, எனக்கு வயத்தைக் கலக்கற மாதிரி இருக்குது" என்றார் கடவுள்.

"சாமி, கொஞ்சம் அடக்கிக்குங்க, இங்கல்லாம் அதுக்கு வழியில்லை" என்றான் காத்தாடி.

"இல்லப்பா, வழியெல்லாம் ஒரே குண்டும் குழியுமா இருக்கு. அது தான் சொன்னேன்."

"ஒகோ, உங்க ஊர் ரோடு ரொம்ப நீட்டா இருக்குமோ?, சரி, இந்த சென்னை என்ன உங்க ஊர்னு நினைச்சீங்களா?. மாட்டுவண்டி, சைக்கிள்ன்னு இஷ்டம் போல சுத்தறத்துக்கு, இது மாநிலத் தலைநகர் சுவாமி, மாநிலத் தலைநகர்!"

"என்ன நகரோ, ஆனா நான் பார்க்கறவரைக்கும் எதுவுமே சரியில்லையே!, வழியெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு. எங்கே பார்த்தாலும் ஒரே சாக்கடை. குப்பை, கூளம். கோயில் கிட்டயே, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம அசிங்கம் பண்ணி வச்சிருக்காங்க! பக்கத்துலயே சாராயக் கடை வேற,. கிராமமே தேவலாம் போல இருக்கே!"

"ஏன் சாமி, உங்க கண்ணுல நல்லதே படாதா, எப்போ பார்த்தாலும் தீவீர சிந்தனையாவே இருக்கீங்களே!"

"ஆமா, ஆமா... இல்லை, இல்லை,.... குரங்கு கைப் பூமாலையாப் போய்டுத்து இந்த பூமி, அதான்!. ஆமா, இதென்ன.... தேரோட்டி கிருஷ்ணர், அம்மன், மாதா இப்படியெல்லாம் வரைஞ்சு அழகா, பெரிசா ரொம்ப உயரத்துக்கு நிறுத்தி வச்சிருக்காங்களே, பார்க்கவே ரொம்ப அழகாயிருக்கு, மக்கள் கிட்ட பக்தி ஜாஸ்தியாயிருச்சோ?"

"அடக் கஸ்மாலமே, மெய்யாலுமே உனக்கு ஒண்ணும் தெர்லயே, சரியான கிராமத்தான் தான் நீ. இதெல்லாம் அரசியல்வாதிங்களோடகட் அவுட்டுங்கய்யா, அவங்க குண்டர்கள்.. சாரி, தொண்டர்கள் பக்தி ஜாஸ்தி ஆயி வச்சிருக்காங்க."

"அப்படியா?" என்றார் கடவுள் அப்பாவியாய் விழித்தவாறு..

"அப்படித்தான், சரி, நாம இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு, வாங்க" ஆட்டோவை கட் செய்து விட்டு, கடவுளை லிப்ட் மூலம் மூன்றாவது மாடிக்கு அழைத்து வந்தான் காத்தாடி.

அந்த இடம் நாற்காலிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கூட்டம் ஒன்றும் அதிகமில்லை. மேடையில் நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் மூவர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் காத்தாடியைப் பார்த்து கையசைத்தார். காத்தாடியும் கை அசைத்ததுடன், இரகசியமாக ஏதோ சைகை செய்ததைக் கடவுள் கவனித்தார்.

சிறிது நேரத்தில் நான்காமவர் வந்தமர, கூட்டம் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லக் கூட்டம் சேர்ந்து ஹால் நிரம்பியது.

இப்பொழுது மேடையில் அமர்ந்திருந்த, காத்தாடியைப் பார்த்து கை அசைத்த நபர் எழுந்து பேச ஆரம்பித்தார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, திடீரென்று காத்தாடி மேடை நோக்கி விரைந்தான்., கடவுளையும் கையோடு இழுத்தவாறே.

"நிறுத்துங்கள், முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு பின்னர் பேசுங்கள்" என்றான் காட்டத்துடன்.

சபை ஸ்தம்பித்தது. 'என்ன, என்ன' என்றார் பேச்சாளர். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

காத்தாடி பேச ஆரம்பித்தான். "உங்கள் சமீபத்திய நாவலான "காட்டுக்கோழி"யில் ஒரு கதாபாத்திரம், மற்றோரு கதாபாத்திரத்திடம், "நீ ஏன் காத்தாடி மாதிரி சுத்திக்கிட்டு இருக்கே, உருப்படவே மாட்டே" என்று கூறுவது போல் உள்ளது. அது என்னை இழிவு படுத்துவது போல் உள்ளது. நீங்கள் வேண்டுமென்றே என் பெயரைப் பயன்படுத்தி, என்னைக் கிண்டல் செய்துள்ளீர்கள். "காத்தாடி" என்ற புனைப் பெயர் கொண்டவன் இங்கு நான் மட்டுமே. எனவே நீங்கள் இதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்" என்று கர்ஜித்தான்.

"ஆமாம், ஆமாம் " மன்னிப்புக் கேட்க வேண்டும். காத்தாடிக்கு ஆதரவாக சபையில் சில கண்டனக் குரல்கள் எழுந்தன.

பேச்சாளர் தொடர்ந்தார். "நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அது இயல்பான வார்த்தை தான். நான் யாரையும் புண்படுத்தவில்லை. வேண்டுமானால் மறு பதிப்பின் போது அந்த வார்த்தையை நீக்கிவிட்டு 'பட்டம்' என்று மாற்றி விடுகிறேன்" என்றார்.

சபையில் சப்தம் அதிகரித்தது. பிடிக்காத எதிர்கட்சி உறுப்பினரைத் தாக்க முற்படும் சட்டசபை உறுப்பினர்களைப் போல கூட்டம் மெல்ல பேச்சாளரை நோக்கி கூச்சலுடன் முன்னேறத் தொடங்கியது.

அப்பொழுது தான் அது நடந்தது.

திடீரென காத்தாடி, கடவுளின் வேஷ்டியை அவிழ்த்து, பேச்சாளரின் மீது எறிந்தான். 'அய்யோ..அம்மா..' பேச்சாளர் என்னவோ பயங்கர ஆயுதத்தால் தாக்குண்டது போல் மயங்கிச் சரிய, பேச்சாளருக்கு ஆதரவான வெறி கொண்ட கூட்டம், கடவுளையும் காத்தாடியையும் அதே வெறியுடன் துரத்தத் தொடங்கியது.

காத்தாடி அங்கும் இங்கும் ஓடி. ஒரு ஆட்டோவில் ஏறித் தப்பிக்க...

ஒன்றும் புரியாத கடவுள் "அய்யோ.. அம்மா.. காப்பாத்துங்க" என கோடு போட்ட தனது அண்டர்வேரை ஒரு கையால் பிடித்தபடி அச்சதுடன் தலை தெறிக்க ஓடினார்.

"அம்மாவா..?? அய்யா காப்பாத்துங்கன்னு சொல்லுங்க", விடாமல் துரத்திக் கொண்டே ஒருவர் கமெண்ட் அடித்தார்.

சாலையில் அண்டர்வேருடன் வேகமாக ஓடிவரும் கடவுளையும், துரத்திக் கொண்டே சிலர் ஓடி வருவதையும் கண்ட மக்கள், "ஏதோ ஷூட்டிங் நடக்குது போல" எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இறுதியாகக் கடவுள், வேறு வழியில்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

************ **

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி, மாலை செய்தித் தாளில் கடவுளின் அண்டர்வேர் அணிந்த படங்களுடன், அவர் கைது செய்யப்பட்டதாக விஷயம் சிறப்புச் செய்தியாக வெளியாகி இருந்தது. மேலும் மயக்கம் போட்டு விழுந்த பேச்சாளரின் "காட்டுக் கோழி" புத்தகம் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது எனவும் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டு இருந்தனர்.

************ **

கடவுளின் மீது பல குற்றச்சாட்டுக்கள் போலீசாரால் சுமத்தப்பட்டிருந்தன. கூட்டத்தில் கலவரம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, கடவுள் சிறையில் அடைக்கப்பட்டார்.

************ **

சிறையில் கடவுள் கம்பிகளைப் பார்த்து வெறித்தவாறு, "உமா, உமா, பார்வதி, சக்தி, நீ வர மாட்டியா, என்னக் காப்பாத்த மாட்டியா?" என தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க, காத்தாடிப் பிரியனின் செல்போனுக்கு ஒரு இரகசிய sms வந்திருந்தது. "Thanks for your kind help" என்று.

************ **

மறுநாள் காலை, காவல் நிலையமே பரபரப்பாக இருந்தது. பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சிகள் எனப் பலரும் குழுமி, தங்களுக்குள் கூட்டமாக கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். விஷயம் இது தான்...

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கடவுளைக் காணவில்லை. மாறாக அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சிறிய சிவலிங்கமும் ஒரு துண்டுக் கடிதமும் காணப்பட்டது. அதில்..."மனிதர்களுடன் கிட்ட இருந்து வாழ்வது மட்டுல்ல; எட்ட நின்று வரம் கொடுக்கவும் இனி இயலாது என்பதைப் புரிந்து கொண்டேன். நன்றி!" -கடவுள் என்று எழுதியிருந்தது.

************ **

பின் குறிப்பு: கதையின் நோக்கம் வாழ்வின் அவலங்களையும் யதார்த்தத்தையும் விமர்சிப்பதே அன்றி, யாரையும் புண்படுத்துவதல்ல. அன்புடன்
அரவிந்த் செல்லையாதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061