இலக்கிய இணைய இதழ்
28 அக்டோபர் 2006 - இதழ் எண் : 59

அன்புடையீர். வணக்கம்,

சிற்றிதழ்ச் செய்தி நூலகத்தில் பழைய இதழ்களுக்காகத் தேடிக்கொண்டிருந்த பொழுது புதுச்சேரியிலிருந்து வெளிவந்த பாவாணர் நினைவுச் சிறப்பிதழ் "புயல்" கிடைத்தது. தமிழ் மொழியின் வரலாறு குறித்து மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒரு கட்டுரையையும், ஒரு பாவினையும் இந்த இதழில் வெளியிடுகிறேன். நம் தமிழரிடையே பரப்புரை செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. அவற்றை நாம் தொகுத்து காட்சிப்படுத்த வேண்டும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
28 - 10 - 2006தேவ நேயப் பாவாணர்.

ம. இலெ. தங்கப்பா.

தமிழ் வடமொழிக்கு மிகுந்த கடன் பட்டுள்ளது என்று காட்டுவதிலே இங்குள்ள சிலருக்கு மிகுந்த மிகிழ்ச்சி. "தமிழர் கலையெல்லாம் வடமொழிக் கலைகளினின்று எடுத்துக் கொள்ளப் பெற்றவை. தமிழர் நூல்களெல்லாம் வடநூல்களை அடிப்படையாகக் கொண்டவை. தமிழின் அடிப்படைச் சொற்கள் கூட வடமொழியினின்று கடன் வாங்கப் பெற்றவை" என்று இவர்கள் கூறி வந்தனர்.

உண்மையாயிருந்தால் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாம். அதில் பிழை இல்லை. உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தால் தான் என்ன? நாம் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது நிலைநிற்கத் தான் போகின்றது. போலிப் பெருமைக்காக உண்மையை மறுக்கத் தேவையில்லை.

ஆனால், மேற்சொன்னவை உண்மையா? இல்லை. பச்சைப் புளுகுகள்! தமிழனை ஏமாற்றும் தந்திர வேலைகள்.

தமிழில் பல வடசொற்கள் உட்புகுந்துள்ளன. இது உண்மையே, ஆனால் இவை ஏன் புகுந்தன? எப்படிப் புகுந்தன? என்பவற்றை வெளிப்படுத்தும் பொழுது தான் மேற்கண்ட புளுகுகள் வலிவிழந்து போகின்றன.

தமிழ்க் கலைகள் பல இன்று வடமொழிப் பெயர் வைத்து அழைக்கப் படுகின்றன. கருநாடக சங்கீதம், பரதநாட்டியம், சிற்பம் ஆகிய மூன்றை மட்டுமே எடுத்துக் காட்டுகளாகக் கொள்வோம். இவை வடமொழித் தேய்வாக்கப் பட்டிருப்பது உண்மையே. இந்தப் பெயர்களை வடமொழிக் கலப்படைந்திருப்பது ஒன்று. இக் கலைகள் வடக்கே சென்று கலைச் சொல்மாற்றம் பெற்று வந்திருப்பது மற்றொன்று. இக்கலைகளை அடிப்படையாகக் கொண்டு வடமொழியில் நூல்கள் பல எழுதப்பட்டது இன்னுமொன்று. இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு இன்னுங்கூடச் சிலர் இவையெல்லாம் வடக்கிருந்து வந்தன என்று நிலைநாட்டுவதே வேலையாகக் கொண்டுள்ளனர்.

வரலாறு கூறுகின்றது, தமிழ் முந்தியது. வடமொழி பிந்தியது என்று. பல நூற்றாண்டுகளாக இதை மறுத்தனர். இப்பொழுது மறுக்க முடியாத அளவுக்கு வரலாற்று உண்மைகள் வெளிப்பட்டு விட்டன.

இங்குள்ள கலை, அறிவுச் செல்வங்களை வந்தவர்கள் வாரிக் கொண்டனர். தமிழ்க் கலைகளை வடமொழியில் பெயர்த்துக் கொண்டு சுவடு தெரியாதவாறு தமிழ் நூல்களை அழித்து விட்டனர். இதுவும் வரலாற்று உண்மையே. யாராவது மறுக்க முடியுமா?

மரைகள் (ஒருவகை மான்கள்) நிறைந்த காடு மரைக்காடு. பழைய பெயர். அதுதான். மரைக்கும் மறைக்கும் வேறுபாடு தெரியாத வடமொழிவாணர் அதை மறைக்காடு என்று நினைத்து வேதாரணியம் என்று வடமொழியில் பெயர்த்துக் கொண்டனர். அது மட்டுமா? வேத முனிவர் வந்து அக்காட்டில் வேதம் ஓதி வேள்வி புரிந்தனர். அதனால் அக்காடு வேதாரணியம் என்று பெயர் பெற்றது என்று புளுகுக் கதை பரப்பினர். நாமும் இன்று அதை நம்பிக் கொண்டு, நம் அரை குறைத் தமிழ்ப்பற்றின் காரணமாக அவ்வூரைத் திருமறைக்காடு என்று அழைத்து வருகிறோம்.

தமிழைப் பற்றி இத்தகைய நூற்றுக் கணக்கான உண்மைகளை எடுத்துரைத்தவர் தேவ நேயப் பாவாணர்.

கருநாடக சங்கீதம், பரதநாட்டியம் என்பவை பெயர் மாறியுள்ள பண்டைத் தமிழ்க் கலைகளே என்பதை அவ்வக் கலை நுணுக்கங்களைப் பற்றிய நூற்றுக் கணக்கான சான்றுகளோடு நிறுவும் கலைப் புலமை யுடையவர் பண்ணாராய்ச்சி வல்லுநர் குடந்தை சுந்தரேசனார் அவர்கள்.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி யின் முதல்வரும் தலைசிறந்த கல்தச்சுக் கலைஞருமாகிய திருவாளர் கணபதி அவர்கள் தமிழரின் கல்தச்சுக் கலையே பெயர் மாறிச் சிற்ப சாத்திரமாகியுள்ளது என்பதை அக்கலைநுணுக்கப் புலமையைக் கொண்டு நிறுவும் திறம் பெற்றவர். அவர், இன்று வடமொழியில்தான் சிற்ப சாத்திரம் உள்ளது. அக்கலை பயில்வேர் கலைச் சொற்களாக வடசொற்களையே கற்கவும் பயன்படுத்தவும் வேண்டியுள்ளது. சிற்பம் பயில்வோர்க்கு வடமொழி அறிவு கட்டாயம் தேவை என்னுமளவுக்கு நிலை உள்ளது. ஆனால் இக்கலைச் சொற்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தில் தமிழிலிருந்து வடமொழியல் பெயர்க்கப் பெற்றவை என்பதை அச் சொற்களின் மூல வடிவங்களிலிருந்து நிலை நாட்ட முடியும். அதற்கு நூற்றுக் கணக்கான சான்றுகள் உள்ளன என்று திருவாளர் கணபதி அவர்கள் கூறுகிறார்.

பாவாணரைப் பற்றிக் கூறவந்த இடத்து இவர்களைப் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும் என்றால் அதற்கும் காரணம் உள்ளது.

பாவாணர் மொழிக் கலையில் தேர்ந்தவர். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக மொழி ஆய்வில் மூழ்கித் தமிழ் உண்மைகளை ஒவ்வொன்றாக வெளிப் படுத்தியவர். பாவாணர் இவ்வாறு பல அடிப்படை உண்மைகளைக் கூறிய பொழுது மறுத்தவர் பலர். எள்ளி நகைத்தவர் பலர். தலைகீழான ஆய்வு என்றோரும், குறுகிய தமிழ்ப் பற்று என்றோரும், வடமொழி வெறுப்பு என்றோரும் ஏராளம். பாவாணரை இருட்டடிப்புச் செய்வதன் வாயிலாய் இச் சான்றுகளை மறைத்துவிடலாம் என்று அத்தகையேர் நினைத்தனர். ஆனால் மொழித்துறையில் பாவாணரை மறைத்து உண்மை வெளிவராமல் செய்தாலும், பிற கலைத்துறைகளிலிருந்தும் தமிழின் முதன்மை பற்றிப் பாவாணர் கூறிய உண்மைகள் அவ்வக்கலை யறிவுக்குரிய வலிமையோடு வெளிப்படுகின்றனவே, இனி மறைக்க முடியுமா?

தமிழில் மிக அடிப்படைச் சொற்களாகிய முகம், முத்து, காலம், நீர், நிலையம், உலகம், போலும் - இவை கூட வட சொற்கள் என்ற கருத்துப் பரப்பப்பட்டு வந்தது. அது பொய் என்று தக்க சான்றுகளோடு நிறுவியிருக்கின்றார் பாவாணர். ஆயிரக் கணக்கான அடிப்படைச் சொற்களுள் இவை ஒரு சிலவே.

தமிழை நன்கு அறியாத அரை குறைகள் எல்லாம் தமிழைப் பற்றி எல்லாம் தெரிந்தது போல் கருத்துரைக்கக் காண்கிறோம். வேறு மொழிகளிலிருந்து கடன் பெற வேண்டுமாம். அப்பொழுதுதான் தமிழ் வளம் பெறுமாம். வடசொற்களைப் பயன்படுத்தியதால் தமிழ் வளம் பெற்றுள்ளதாம். வடசொற்கள் வேண்டுமென்றே புகுந்து பெற்றதால் எத்தனை ஆயிரக்கணக்கான அழகிய தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து போயின என்று எடுத்துக் காட்டியவர் பாவாணர்.

தமிழின் சொல்வளம், நுண்மை, கருத்து விளக்கும் ஆற்றல் போன்றவை எத்தகையன என்று மிகத் தெளிவாக விளக்கியவர் பாவாணர்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்ச் சொற்கள் எப்படி அடிப்படையான வேற்சொற்களிலிருந்து குடும்பமுங் குலமுமாய் வளர்ந்து கிளைத்துச் செழித்துப் பரவி வந்துள்ளன என்ற பேருண்மையை மொழியியல் அறிவியல் முறைப்படி ஆய்ந்து நிலை நாட்டியவர் பாவாணர்.

தமிழ் வேர்ச் சொற்கள் பற்றிய உண்மை தெரியாமையும் பொதுவான அறியாமையுமே அறிஞர் எனப்படும் பலரும் தமிழ் வடமொழிக்குக் கடன் பட்டுள்ளது என்ற கருத்தைக் கொண்டிருப்பற்குக் காரணமாகும்.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி என்பது அறிஞர் பலரால் தொகுக்கப் பெற்றிருந்தாலும் பல குறைபாடுடையதாக இருந்ததற்குக் காரணம் இதுவே. இக்குறைகளையெல்லாம் மொழிப் புலமை கொண்டு மறுக்க முடியாதவாறு சுட்டிக் காட்டியவர் பாவாணர்.

தமிழின் உண்மைச் சிறப்புக்களையும் சொல் வளத்தையும், அதன் முன்மை முதன்மையினையும் தமிழ் கற்க விழையும் அனைவரும் ஐயமின்றி உணர்ந்து கொள்ளுதற் கேற்றவாறு "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி" ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் பாவாணர். அப்பணியின் விரிவும் ஆழமும் அதற்கான அரிய உழைப்பும் தனியொருவரின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் வேறு வழியில்லாமையால் தனியொருவராக நின்று பாவாணர் அப்பணியை மேற்கொண்டார். அப்பணியின் சுமையும், அதுவே உயிர் மூச்சாகத் தம் உடல் நலத்தையும் பேணாது அதற்காக உழைத்தமையும், அப் பணியை அவர் முடிக்காதிருக்கும் படிக்குப் பல விடங்களிலிருந்து அவர்க்கு வந்த எதிர்ப்பும் அப்படி உழைத்திருந்தும், அவ்வுழைப்பின் உணமைத் திறமுணராதார் பொறுப்பற்ற முறையில் அவரைக் குறை சொல்லி வயிறு வளர்த்ததும் எல்லாம் சேர்ந்து அவரின் உயிரைக் குடித்தன.

இதுவரை அவர் செய்துள்ள பணிகள் பயன் விளைக்குமாறு அவர் நூல்கள் எங்கும் பரவினாலே போதும். தமிழ்ப் பகைவர் வாய் ஒடுங்கும்.

நன்றி : புயல் - பாவாணர் நினைவிதழ்.- புதுச்சேரிகுண்டு விடு தூது.

மனவாடு என்பதால் மடையனைக் கூடவோர்
மாமேதை என்று காட்டி
மற்றவர் யாருமே மடையர்கள் என்பதோர்
மயக்கத்தை உண்டு பண்ணி
திறமான பேர்களின் உயர்வினை வீழ்த்தவே
தில்லுமுல் லுகளியற்றும்
தீயவை யாவினும் தீயவர் இவர்கள்போல்
திருடர்கள் யாருமுண்டோ.

அதிகார போதையில் அகந்தையில் மமதையில்
ஆட்டங்கள் போடுவார்காண்
ஆர்ப்பாட்டம் செய்வதே அன்றாடம் தம்தொழில்
என்றியவர் கொண்டிருப்பார்
கல்லாத பேர்களை மன்னிக்க லாம்கற்ற
கயவர்களை மன்னிப்பதா
நில்லாது குண்டுநீ நீசரிடம் சென்றவர்
நெஞ்சினைத் தூய்மை செய்வாய்.


நன்றி : புயல் - பாவாணர் நினைவிதழ்.- புதுச்சேரி
படித்த மின் அஞ்சலுக்கான எதிர்வினை

தமிழ்வழியை விட ஆங்கிலவழியே ஏழை மக்களுக்குப் பயனளிப்பது என்பது போல இண்டி ராம் என்பவர் தமிழ் உலகம் (tamil ulagam) குழுவினருக்கு மடல் எழுதியிருந்தார். அவருக்கு எதிர்வினையாகத் தமிழ் உலகம் குழுவிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகள்.

எதிர்வினை - 1

தமிழ் வழி - தாய்மொழிவழி - என இரு கூறுகளையும் நுட்பமாகப் புரியாதவர்கள் - பாமரர்களில் மட்டுமல்ல கல்வியாளர்களிடமும் உண்டு. குழந்தை உளவியலின்படி (Child psychology), குழந்தையின் ஆளுமை, ஆற்றல், கூர்மை, நுட்பம் என அனைத்தும் தாய்மொழி வழியில் தான் கிடைக்கிறது என உளவியல் அறிஞர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழ்வழிக் கல்வி - என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் படிக்க வேண்டிய அணுகுமுறை. இங்கே அரசியலோ, மொழிப்பிரச்சனை என்ற பம்மாத்தோ, வேலை கிடைக்கும் என்கிற மாயையோ நுழைந்தால் அனைத்தும் பாழ்தான். அது தான் தமிழகத்தில் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் மக்கள் மாயையில் மூழ்குவதால் அவர்களால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை. கர்நாடகாவில் கூட கனடமொழி தொடக்க நிலையில் படிக்காமல் ஆங்கிலம் சொல்லித் தரமாட்டார்கள்.

குழந்தை உளவியலை நன்கு புரிந்தவர்கள், தாய்மொழிக் கல்விதான் சரி என்பார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் படிப்பதுதான் சரியான வளர்ச்சி தரும். இதை ஆங்கில எதிர்ப்பு என மாற்றுபவர்கள் ஆங்கில வணிகர்களே. அவர்களுக்கு குழந்தைகளின் மீது அக்கறை இல்லை. தமிழன்தான் ஏமாந்து கொண்டிருக்கிறான்.

6 ஆம் வகுப்பிற்கு மேல் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் சொல்லித்தரலாம். மொழியாகச் சொல்லித் தந்தால், மொழிப்புலமை வளர்க்கச் சொல்லித் தந்தால் சரியாக இருக்கும். இங்கு சுதந்திரத்திற்கு முன்பு போட்ட அதே கல்வி ஆய்விற்கு உட்படுத்தப்படாமல் - அப்படியே இருக்கிறது. இக்கல்வியின்வழி புலமை வராது. மனப்பாடம்தான் வரும்.

ஆங்கிலவழியில் படிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மொழியாகச் சொல்லித் தருவதில்லை. எனவே அவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை வராது. பாடங்களை ஆங்கிலவழி படிக்கிறார்கள். அவ்வளவுதான். இது எதுவும் மக்களுக்குத் தெரியாது. ஏன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக்கூடத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.

பெரும்பாலான ஆசிரியர்கள் குழந்தை உளவியலை பாடமாகப் படித்து மதிப்பெண்கள் பெறுகிறார்களேயொழிய - மக்கள் நலத்தோடு, உள்வாங்கி, ஆசிரியப் பயிற்சியை முடிப்பதில்லை. இன்று தமிழகத்தில் புற்றீசல் போல 300 தனியார் ஆசிரியப்பபயிற்சி நிறுவனங்கள் முளைத்துள்ளன. ஒருவர் ஆசிரியர் பயிற்சிக்கு நுழைய, படிக்க, முடிக்க ரூபாய் 2 லட்சம் வேண்டும். இப்படி வெளிவரும் ஆசிரியர் எந்தக் கலவிக்கூடத்தை நிறுவுவார், பணம் கொழிக்கும் ஆங்கிலவழிப் பள்ளியைத்தானே நாடுவார்.

மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். தாய்மொழிக் கல்வி என்ற கருத்தாக்கம் மக்களால் உள்வாங்கப்பட வேண்டும். இந்த உண்மையைக் கற்று அறிந்த மக்கள் பிறருக்கு உணர்த்த வேண்டும். அப்படியிங்கு நடப்பதில்லை.

இதை எதிர்பார்த்துத் தானோ பாரதி " படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் " - என்றார்......

அன்புடன்
பொள்ளாச்சி நசன்எதிர்வினை - 2

எழுதியதை பிரித்துப் போட்டுக் கருத்துரைக்கும் இண்டிராம் அவர்களுக்கு, இந்த வினாக்களுக்கான விடையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

1) தாய்மொழிவழிக் கல்வி என்றால் என்ன? தமிழ்க் கல்வி என்றால் என்ன?

2) எத்தனை வயதுவரை எந்த வகையான கல்வி தரப்படவேண்டும். தொடக்க நிலைக் குழந்தைகளுக்கு எந்தவகை ஏற்புடையது? எது அறிதிறனையும், ஆய்வுத்திறனையும் தரும்.?

3) ஆங்கிலவழிக் கல்வி என்பதற்கும் ஆங்கில மொழிப்புலமை என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

4) நீங்கள் சொல்லும் ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து ஆங்கில மொழிப் புலமையோடு ஒருவர் வெளிவருகிறாரா?

5) ஆங்கிலப் பள்ளிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கட்டணத்துடன் செயல்படுகிதே அப்படியானால் அவர்களது பாடத்திட்டத்தில், கற்பித்தலில் வேறுபாடுகள் உண்டா? அல்லது ஒற்றை இலக்குடையதா?

6) இன்றைய மாணவர்களில் எத்தனை விழுக்காடு அரசுப் பள்ளியினர்? எத்தனை விழுக்காடு ஆங்கில வழிப்பள்ளியினர். ஆங்கிலவழிப் பள்ளியினர் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனரா? அரசுப்பள்ளியில் படித்தவர்கள் யாரும் செல்லவில்லையா?

7) வெளிநாடுகளுக்குச் செல்ல ஆங்கிலவழிப்பள்ளிதான் கடவுச்சீட்டா? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் படிக்கின்றனர்? எத்தனை பேர் செல்கின்றனர் ?

8) சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப்பிறகும் 1 - 5 வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி, கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி - என்ற இலக்கை அடையமுடியாமல் தடுமாறுகிறோமே. ஆங்கில வழிப் பள்ளிகள் அனைத்தும் தொடக்கநிலை வரையில் இலவசமாகத் தான் கற்பிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டால் இப்பள்ளிகள் ஏற்றுக் கொள்ளுமா? தொடர்ந்து இருக்குமா?

9) 90 விழுகாட்டுப் பெற்றோர் ஆங்கிலவழிப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் உண்மைதான். இது மக்கள் நலம் நாடும் அரசு எனவே ஆங்கிலவழிப் பள்ளிகளை அரசு முழுமையாக ஏற்று இலவசமாகத் தொடக்க நிலைகளில் நடத்தும் என்றால் விட்டு விடுவார்களா? தனியார் பள்ளிகளே இல்லாமல் மறைந்து விடுமா?

கல்வி வணிகமாக்கப்பட்டிருக்கிறது. வணிகர்கள் பொருளைவிற்க பல விளம்பரங்கள் செய்வார்கள். அவற்றில் ஒன்றுதான் வெளிநாட்டுக் கனவும், வேலைவாய்ப்பும்.

பூபதிக்கு என் அன்பு வணக்கங்கள்..

அன்புடன்
பொள்ளாச்சி நசன்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061