இலக்கிய இணைய இதழ்
03 மார்ச்சு 2007 - இதழ் எண் : 64

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் மறுபிரசுரம் ஆகியுள்ள, பல்லி பற்றிய கட்டுரை தியோடர் பாஸ்கரன் எழுதியது சிறப்பாக உள்ளது. பள்ளியிலுள்ள சமையல் கூடங்கள் மட்டும்தான் பல்லி கதையைச் சொல்லி தப்பித்துக் கொள்கின்றன. படைப்பாளிகள் தங்களது புதிய படைப்பாக்கங்களை அனுப்பிவைக்கவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
03-03-2007


பல்லி செய்த பாவம்

சு.தியோடர் பாஸ்கரன்

சிற்றுயிர்களைப் புறக்கணிப்பவன் சிறிது சிறிதாக வீழ்வான் - சாலமோன் ராஜா -

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் வாழிடத்தைப் பகிர்ந்து, நம் வீடுகளில் ஒண்டுக் குடித்தனமாக வாழ்ந்து வருகிறது பல்லி. அவ்வப்போது அது எழுப்பும் குரல், ஒரு குறி சொல்லாக மதிக்கப்பட்டு ஒரு சாத்திரமே - கெளலி சாத்திரம் - உருவாகியுள்ளது.

நனைசுவர் கூரை கனை குரல் பல்லி - தன் கணவனைப் பற்றி நல்ல செய்தி ஏதாவது சொல்லுமா என்று காத்திருந்த சங்ககாலப் பெண் ஒருத்தியைப் பற்றி சத்திமுத்தப் புலவர் எழுதியிருக்கிறார். கூரை மற்றும் ஓட்டு வீடுகள் போய், அடுக்குமாடி வீடுகள் வந்த பின்னும், பல்லி நம்முடனேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நமது பாரம்பரியத்தின் ஒரு அங்கமான பல்லிக்கு அண்மைக் காலத்தில் சிலர் அவப்பெயரைக் கற்பித்து வருகிறார்கள். மதிய உணவு பரிமாறப்படும் பள்ளிக் கூடங்களில், ஈயமில்லாத பாத்திரத்தில் சமைப்பதாலும், ஊளை முட்டையை பயன்படுத்துவதாலும், ஊசிப்போன பதார்த்தங்களைப் படைப்பதாலும், சாப்பாடு நஞ்சாகி, நூற்றுக் கணக்கான குழந்தைகள் உயிருக்குப் போராடும் நிலை ஏற்படும்போது, சாம்பாரில் பல்லி விழுந்துவிட்டதால் தான் இப்படி ஆகிவிட்டது என்று காண்டிரக்டர்கள் கதை கட்டி விடுகிறார்கள். அதை தேவ வாக்காக எடுத்துப் பத்திரிகையாளர்களும் கட்டம் கட்டி செய்தியாக அச்சேற்றி விடுகிறார்கள். அச்சில் வருவது உண்மை என்ற மாயைதான் இருக்கிறதே. உணவு வியாபாரம் அதே ரீதியில் இடையூறு ஏதுமில்லாமல் தொடர்கிறது.

உண்மை என்னவென்றால், பல்லிக்கு நஞ்சு கிடையாது. அது உணவில் விழுந்தாலும் எந்த விளைவுமிருக்காது. உடும்புக்கறி சாப்பிட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பல்வி விழும் விபத்துகள் மதிய உணவுக் கூடங்களில் மட்டுமே நடப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பல்லி மீது பழி சுமத்திவிட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகிறார்கள். பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்தும் களையப்படுவதில்லை. உணவு நஞ்சாகும் செய்திகள் அவ்வப்போது தொடர்ந்து வந்த வண்ணம் தான் இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சிற்றுயிர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டாததால் நாம் எவ்வளவு எளிதாக ஏமாற்றப்படுகிறோம் என்று பார்த்தீர்களா?

புதுச்சேரியில் திட்டமிட்டுத் தன் மனைவியைக் கொலை செய்த ஒருவன், அவர் குடித்த பால்குவளையில் ஒரு பல்லி கிடந்தது என்று காவல்துறையிடம் கூறியது பற்றியும், பரிசோதனையில் அப்பெண் சயனைட் விடத்த்ால் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்தது. கணவன் கைது செய்யப்பட்டது பற்றியும் அண்மையில் செய்தி வெளியானதை நாளிதழில் படித்தோம்.

எங்கள் தெருவில் ஒருவர் மோர் அருந்தியபின், அந்தப் பாத்திரத்தில் ஒரு பல்லி கிடப்பதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கிருந்த டாக்டரும், அவருக்கு உப்பு நீர் கொடுத்து வாந்தியெடுக்கச் செய்து, கூட ஒரு ஊசியும் போட்டு, மறக்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டார். பல்லியைப் பற்றிய இந்த ஆதாரம் ஏதுமற்ற தொன்மம் எவ்வளவு ஆழமாக மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அதை வைத்து எத்தனைபேர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

பல்லி என்று நம்மால் அறியப்படும் இந்த உயிரினம் இவ்வுலகமெங்கும் பரவியிருக்கும் ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் மட்டுமே வாழும் ராட்சதப் பல்லியான கம்மடோர் டிராகன்தான் உலகிலேயே உருவில் பெரிய பல்லி. இது மான், முயல் முதலிய விலங்குகளைக் கூட பிடித்து இரையாக உண்ணும். சில சென்டிமீட்டர் மட்டுமே நீளமுள்ள சிறிய பல்லிகளும் உண்டு. பச்சோந்தியும் நம் தோட்டத்தில் காணப்படும் அரணையும் இந்த இனத்தைச் சேர்ந்தவையே. உடும்பு கூட ஒரு பல்லியே (இதன் தோல் தான் கஞ்சிரா செய்யப் பயன்படுத்தப் படுகிறது) கால்களே இல்லாத பல்லிகளும் உண்டு. இவை பார்பதற்கு பாம்பு போலவே இருக்கும்.

உங்கள் கவனத்திற்கு இன்று நான் கொண்டுவர விரும்புவது, மூஞ்சூறு, சிலந்தி, சிட்டுக்குருவி போன்ற உயிரினங்களுடன் நம்முடன் நம்மில்லங்களில் அன்றாடம் வாழும் gecko என்ற ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வீட்டுப் பல்லியைத்தான்.

பகற்பொழுதில் இண்டு இடுக்குகளில் மறைந்திருந்து, மாலையில் இரை தேட வெளிவரும். கரப்பான், விட்டில் பூச்சி போன்றவற்றை இரையாகக் கொண்டு வாழும். சில சமயம் தானும் வேறொரு இரை கொல்லிக்குத் தீனியாவதுமுண்டு. ஒருநாள் மாலை அந்திப்பொழுதில் எங்கள் வீட்டினுள் பறந்துவந்த வெளவால் ஒன்று, சுவரில் இருந்த பல்லியை லாவகமாகக் கவ்விச் சென்றதை நாங்கள் வியப்புடன் பார்த்தோம். அந்த வெளவால் மட்டும் பல்லியின் வாலைப் பிடித்து இருந்தால், அது உயிர் பிழைத்திருக்கும். தற்காப்பு வியூகமாக, வீட்டுப் பல்லியின் வால் தானாக அறுந்து விழுந்துவிடும் தன்மையுடையது. அறுந்துபோன இடத்திலுள்ள ரத்தக் குழாய்கள் தாமாக உடன் மூடிக்கொள்ளும். பின் நாளடைவில் புதிய வாலொன்று முளைத்துவிடும்.

வீட்டுப் பல்லிகளிலும் பல வகை உண்டு. அசாம் மாநிலத்தில் சில்ச்சார் அருகில், வனத்துறை சார்ந்த தங்கும் இல்லம் ஒன்றில் ஓரடி நீளமுள்ள டுக்.... டூ.... பல்லியைப் பார்த்திருக்கிறேன். இது எழுப்பும் டுக்.... டூ.... என்ற ஒலி வெகுதூரம் கேட்கும்.வீட்டுப் பல்லிகளிலேயே உருவில் பெரியது இதுதான். இவற்றில் எந்தப் பல்லிக்கும் விஷம் இல்லை என்பதையும், வீட்டுப் பல்லிகள் நம்மிடையே வாழ்வது பற்றி மனித இனம் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வீட்டினுள் கூட இது ஒரே பகுதியில்தான் வாழும். வீடு முழுவதும் சுற்றித் திரியாது. பல்லுயிரியத்தின் ஒரு பரிமாணமான வீட்டுப் பல்லிகளைப் பாதுகாக்க, அவற்றிற்காகப் பேச ஒரு பன்னாட்டு அமைப்பு செயற்பட்டு வருகிறது. வேறெங்கே அமெரிக்காவில்தான்.

வீட்டுப் பல்லி சுவரில் செங்குத்தாக ஊர்வது. கூரையில் தலைகீழாக நகர்வது. இவற்றை அவதானித்த உயிரியலாளர்கள், தனது பாதங்களை அழுத்தி வெற்றிடத்தை உருவாக்குவதால்தான் இத்தகைய அதிசய சலனம் பல்லிக்குச் சாத்தியம் ஆகிறது என்றனர். நான் தாராபுரம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது எங்கள் அறிவியல் ஆசிரியர் கூறியதும் இதுதான்.

ஆனால் இன்று உயிரியலாளர்களின் புரிதலே வேறு. அதன் பாதங்களிலுள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மயிரிழைகளால் தானிருக்கும் தளத்தின்மீது உராய்வு ஏற்படுத்தித் தான் பல்லி நகர்கிறது என்கின்றனர். இந்த முறையில் பல்லி கண்ணாடி மீதுகூட நிலை கொண்டு நகர முடியும்.

எல்லோராலும் புறக்கணிக்கப்படும் கழுதைக்காகப் பரிந்து பேச வந்த ஒளவையார் - கர்த்தபந்தான் ஏதபராதம் செய்தது? - என்று கேட்டார். அதே கேள்வியை இன்று நாம் பல்லிக்காக எழுப்பினால், வீட்டுப் பல்லிகள் மட்டுமல்லாது, பள்ளிப் பிள்ளைகளும் பயன் பெறுவார்கள்.

நன்றி : தினமணிக் கதிர் (31-8-2003)
நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் - பிப்ரவரி 2007.


காலனியாதிக்கத்திற்கு எதிராக....

(போராட மனவலிமைதான் வேண்டும்)

நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன் 1760 - 61 இல் தோல்வியுற்றுத் தலைமறைவு ஆகிறார். அதற்குப்பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. வெள்ளையர்களின் வரிவசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்திய பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரர் பூலித்தேவன் 1750 களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்தது. சங்கரங்கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக விளங்கியது.

1767 - 69 இல் ஹைதர் அலி தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்திரவுப்படி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஒவியம். அதனைக் கீழ்க் கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி.

நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்?

1782 இல் ஹைதர் அலி இறந்தபின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவுக்கு வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயரைத் துடைத்தெறிந்து விடவேண்டும் என்ற வேகத்துடன் போர் தொடுத்தவர் திப்பு. 1784 இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலேயப் படைத் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் திப்புவால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானந்தான் ஆங்கிலேயரின் குலை நடுக்கத்தின் தொடக்கம்.

செப்டம்பர் 1, 1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணித் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பிக் கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பார்மென். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மெனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இரண்டே ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை, 60,000 மக்கள் கூடிநின்று ஆறே நாள்களில் கட்டி யெழுப்பி, மீண்டும் போர் தொடங்கியிருக்கிறார்கள். அது வெள்ளையனே அதிர்ச்சியுற்ற மக்கள் வெற்றி.

சைகைகளாலேயே படை நடத்தினார் வாய் பேசமுடியாத ஊமைத்துரை. அன்றே கொரில்லாப் போர் முறையைக் கையாண்டு ஆங்கிலேயர் படைகளை அலைக்கழித்து அழித்தார் சின்ன மருது.

திப்பு சுல்தான் தோற்ற பிறகு ஒன்றரை இலட்சம் பேரை அணிதிரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தினார் அவரது படை வீரர் தூந்தாஜி வாக்.

ஆயுள் முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, 73 வயதில் தூக்குமேடை ஏறினார் விருப்பாட்சி கோபால நாயக்கர் எனும் கிழச்சிங்கம். மருதுவும் அவரது குடிவழியும் வீரர்களுமாக 500 பேர் ஒரே நாளில் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

பிடிபட்ட பின்னும் எதிரியின் கையால் சாக விரும்பாத தீரன் சின்னமலையும் அவரது தளபதிகளும். தம் கைகளாலேயே தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்ட துணிவுக்கு சங்ககிரி மலை சாட்சியாய் நிற்கிறது.

தம்முடைய அரியணையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் இந்த வீரர்கள் யாரும் போராடவில்லை. ஆங்கிலேயரை இந்த நாட்டைவிட்டே விரட்ட, இந்தக் கிளர்ச்சியை தென்னிந்தியா முழுவதும் ஒருங்கிணைத்திருந்தனர்.


தமிழ் அழிப்பு வேலைகள்

அ) சென்னையில் ஓர் ஆங்கிலப் பள்ளியின் அறிவிப்பு

If the students speak in non-English inside the campus. they will be punished with Rs.5 and it will be noted in the progress report.

இதனால் அந்தப் பிஞ்சு உள்ளங்கள் தமிழில் பேசுவது ஒரு கீழ்த்தரமான செயல். தமிழ்மொழி அடிமைகளின் மொழி. சூத்திரமொழி எனத் தம்நெஞ்சில் பதித்துக் கொள்ளும் அல்லவா? இளமையில் விதைக்கப்படும் இத்தீமை வாழ்நாள் முழுவதும் தொடரும் அல்லவா? இவ்வுள்ளமுடைய பிள்ளைகள் பின்பொரு காலத்தில் தாமும் பெற்றோர் ஆகும்பொழுது, தமிழை மேலும் இழிவுபடுத்திப் புறக்கணித்து, அதனால் நம் செவ்வியல் மொழி, ஒன்று கலப்படமொழியாகவோ சமற்கிருதம் போலப் பேச்சு வழக்கற்ற மொழியாகவோ ஆகாதா? இத்தொலைநோக்கு நம் தலைவர்களிடமும் கைகால் பிடித்து இன்புற்று வாழ்பவர்களிடமும் இன்றைய பெருவாழ்வுப் பெருமுதலாளிகளிடமும் இம்மியளவும் காணப்படாதது ஏன்? இவை போல்வன தமிழுக்கு மரணஅடி ஆகுமெனில் தவறாகுமா?

ஆ) மதுரையில் ஓர் அறிவியல் கண்காட்சி நடத்திய ஆங்கிலவழிப் பள்ளி, காண வருபவர்களிடம் மாணவர்கள் ஆங்கிலத்திலேயே விளக்க வேண்டும் என்றும்,தவறினால் நூறுரூபாய் தண்டம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஓராண்டிற்கு முன் அங்குச் சென்ற மதுரை வானொலி நிலைய இயக்குநர், அம்மா நீ ஆங்கிலத்திற் சொல்வது எனக்கு விளங்கவில்லை. உனக்கும் விளங்கிற்றா என்று தெரியவில்லை என்று கூறிய போது - அந்தப் பெண் தண்டம் பற்றிய விவரத்தைக் கூறினாள். கண்காட்சி அறிவியல் பற்றியது. காண வருவோரில் தமிழ்மட்டும் அறிந்தவர்களே பெரும்பான்மையர். இருந்தும் இந்த உத்தரவும் கட்டுப்பாடும் தண்டமும் தகுமா? இதற்கு மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் காரணமா? ஒரு கவிப்பேரரசர் இந்தக் கொடுமை நீடிக்கும் Take it easy என்று ஒரு மேடையில் கூறினார். இதனால் மேன்மேலும் அவரால் உயரமுடிகிறது. தமிழ் என்ன ஆகும்? என்று கேட்டால் அது தவறா?

இ) கோவையில் ஓர் ஆங்கிலப் பள்ளி பெற்றோர்களுக்கு வீட்டு முகவரிக்கு ஒரு மடல் எழுதி, இனி உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆங்கிலத்திலேயே உங்கள் குழந்தையுடன் பேசுங்கள். வீட்டில் தமிழும் பள்ளியில் ஆங்கிலமும் என்று இருப்பதால் குழந்தைகள் குழம்பிப் போகிறார்கள் என அறிவுறுத்தியது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து மழலையர் வகுப்புல் சேர்த்த பெற்றோர்க்கு இவ்வறிவுப்பு, அவர்களால் இயலாவிட்டாலும், முயலவேண்டும் என்ற தூண்டுதலைத் தருமல்லவா? தமிழைப் பேச்சுவழக்கற்ற பொழியாக்கிவிடும் முயற்சியல்லவா இது? தமிழுக்கு இது மரண அடி ஆகாதா?

ஈ) திருச்சியிலும் பல ஊர்களிலும் பெற்றோர்க்கு ஆங்கிலம் தெரியுமா? அவர்கள் பட்டம் பெற்றவர்களா ? என்று கேட்டு நேர்காணல் நடந்த பிறகே பிள்ளைகள் சேர்க்கப் பெற்றனர். இதற்குப் பெயர்தான் இடஒதுக்கீடா?

- முனைவர் தமிழண்ணல்- தொடர் கட்டுரையில்

நன்றி : தெளிதமிழ் - சுறவம்


புது மரியாதை.

மூன்று லட்சம் ரொக்கமும்
மூவாயிரம் ஓய்வூதியமும்
எனக்குப்பின் உனக்கு
எளிதாய்க் கிடைக்குமென்றாலும்

வெள்ளைப் புடவை வெறுத்து
வெற்று நெற்றி ஒதுக்கி - என்
ஆன்மா அழுது கேட்கும்
ஆசை நிறைக்க
பழைய மரபை மீறி

நெற்றியில் குங்குமமும்
நீள்கழுத்தில் பொன்ஆரமும்
கருங்கூந்தலுக்கு அழகழகாய்
கலர்கலராய் கனகாம்பரமும்

கடைகடையாய் நாம் ஏறி
கடைசியில் பார்த்து வாங்கிய
வண்ணவண்ணச் சேலைகளை
வகை வகையாய் உடுத்தி யென்றும்

வாழ்கின்ற நாளெல்லாம்
வலம்வந்தால் மறுபடியும்
வாழ்ந்திடுவேன் உன்னோடு
கல்லறையிலும் மகிழ்வோடு.

- சொ. வேல்முருகன் -
தெருவோரப் பூக்கள் நூலில்ஆக்கிரமிப்பு.

காலங்காலமாய்
மக்களுக்கு நம்பிக்கை
கொடுப்பனவாக இருந்தன
கடவுள்கள்
கல் எனினும்
காப்பாற்றும் என
கரையா நம்பிக்கை
கொண்டிருந்தனர்.
அவசியம் கருதி
ஊருக்கொரு கோயில்
உருவாக்கி வைத்திருந்தனர்.
தற்பொழுது தெருவெங்கும்
தோன்றியுள்ளன.
அதிகபட்சமாய்
அரசு நிலத்தையே
ஆக்கிரமித்திருந்தன.
சுயநலக்காரர்களின்
சூழ்ச்சியாகவுமிருந்தது.
அரசுக்கு அருள் வந்து
அகற்றத் தொடங்கின
ஆக்கிரமிப்புகளை.
இதற்குள்
அய்யனாரும் அடக்கம்
விநாயகரும் விதிவிலக்கல்ல.
சிலைகள் தகர்க்கப்படும் வேளை
மெல்ல அசைந்தது
மக்கள் நம்பிக்கை.

பொன். குமார்.
நன்றி : புதிய பூங்குயில்


வெல்கிறான் எல்லாளன் !

தமிழாலயன்

தூயதமிழ்ச் செம்மொழியைத் தோற்றுவித்த செவ்வியர்தாம்
போயழவோர் நாடுமிலை தோழி - அவர்
போக்கிலியாய்த் தானலைவார் தோழி.

நேயமிலா மாந்தர்களே நீளலைகள் சூழுலகே
ஞாயமிலை நாணமிலை தோழி - செந்
நாய்களுமோ நரிகளுமோ தோழி.

வாயலற நெஞ்சுருக வாழ்நிலைகள் தேடிவரும்
வாயிலிலே குண்டுமழை தோழி! - இவர்
வருவதற்குள் சாவுவரும் தோழி.

தாயுமிலை தந்தையிலை தன்னுறவு யாருமிலை
சேயழுகை கேட்கலையோ தோழி! - கொடும்
செவிடர்களோ ஊருலகம் தோழி.

யார்குடியைக் கெடுத்தார்கள் யாருணவைப் பறித்தார்கள்
யார்யார்க்கும் உறவலவோ தோழி! - கொடும்
செவிடர்களோ ஊருலகம் தோழி.

போர்மூட்டும் புத்தன்நிலம் புதைவதற்கோ தமிழருடல்
யார் வருவார் யாரிருப்பார் தோழி - நாளும்
யாமத்திலும் தூக்கமில்லை தோழி.

அன்புநிலை சொல்லவிலை ஆசைகளை வெல்லவிலை
துன்பநிலை கள்விளைத்தார் தோழி - இவர்
தொடர்கொலை கள்படைத்தார் தோழி.

பண்புகளைக் காணவிலை பாசநிலை பேணவிலை
பெண்புணர்வை வன்புணர்வாய்ப் பாவி! - இவர்
பிள்ளைகளைக் கொலைபுரிவார் தோழி.

வீடெல்லாம் கற்பழிவு வீதியெலாம் தமிழருடல்
நாடெல்லாம் பதைபதைப்பு தோழி - இவர்
நாட்டாண்மை கொலை குவிப்பு தோழி.

படுத்துறங்கப் பொழுதில்லை பாவிமக்காள் தினந்தினமும்
அடுத்துவரும் சாவோலம் கேட்கும் - உயிர்
அடங்குமுனே பதுங்குகுழி வேட்கும்.

கொல்லாமை தான்புத்தம் கோடாமை தான்புத்தம்
வல்லாண்மை யாபுத்தம் தோழி - உயிர்
வளையாமை தான்குற்றம் தோழி.

விடியட்டும் தமிழீழம் விண்முட்டும் புலிக்கொடியே
முடியட்டும் போர்வெறிதான் தோழி - கொடும்
புத்தர்களும் போயழிவார் தோழி.

ஈழம்ஒரு நாள்விடியும் எல்லாளன் தம்பிதுரை
தோழமையில் நாடுவரும் தோழி - அவன்
தோற்பதில்லை நம்பிஇரு தோழி,

நன்றி : தென்செய்தி - பிப்ரவரி 2007தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061