இலக்கிய இணைய இதழ்
31 மார்ச்சு 2007 - இதழ் எண் : 65

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் சங்கீதாவின் நாட்குறிப்பில் கண்டெடுத்த முத்துகளை இணைத்துள்ளேன். மேலும் குமரிக்கடல் இதழில் வெளியான குரங்கு சேட்டை என்ற கட்டுரையையும் மறுபதிப்பாக இந்த இதழில் வெளியிட்டுள்ளேன். படித்துத் தங்களின் கருத்தளிக்கவும். இணையத்தின் பார்வையாளர்கள் தாங்கள் சுவைத்து மகிழ்ந்த படைப்பாக்கங்களை அனுப்பி வைக்கலாம்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
31-03-2007


சங்கீதாவின் நாட்குறிப்பிலிருந்து.....

ஆஈன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமைசாவ
மாஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்க
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்கப்
பாவிமகன் படும்துயரம் பார்க் கொணாதே.

விவேகசிந்தாமணிஊரினைக் கூட்டி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூறையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைவொழிப்பார்களே

திருமந்திரம்பஞ்சிபடா நூலே
பலர் நெருடாப் பாலே
அழுக்கேறாக் கலையே
நிறம்தோயா செந்தமிழே
சொல்விளையும் செய்யுளே

தமிழ்விடுதூது.என்னுயிர்நீ, என்னுயிர்க்கு ஓர் உயிரும் நீ, என்
இன்னுயிர்க்குத் துணைவன் நீ என்னை ஈன்ற
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என்
அரும்பொருள் நீ, என் இதயத்து அன்பு நீ
நன்னெறி நீ, எனக்குரிய உறவு நீ, என்
நற்குரு நீ, எனைக் கலந்த நட்பு நீ, என்
தன்னுடைய வாழ்வு நீ, என்னைக் காக்கும்
தலைவன் நீ, கண்மூன்று தழைத்த தேவே

திருவருட்பிரகாச வள்ளலார்.கந்தையானாலும் கசக்கிக் கட்டு
கசக்கிய பின்
எதைக் கட்டுவது ?

வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்
குழந்தையின் கிறுக்கல்கள்எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் நன்றாய்
முட்டித் ததும்பி முனைத்தோங்கு
சோதியை மூடரெல்லாம்
கட்டிச் சுருட்டிக் கக்கத்தில் வைப்பார்
கருத்தில் வையார்.

பட்டினத்தார்.அவிக்கப்படும் முட்டைக்கு
வலியறிதலில்லை
என்றாலும்
அடைகாக்கப்படுமாயின் பின்னாளில்
அதிலிருந்து வெளிப்படுபவை
கால்கள், சிறகுகள்
கூடுதலாய் ஓர் உயிர்

கரிகாலன் புலன்வேட்டைபுகைப்படமாய்
சட்டங்களுக்குள் இருக்கும் நான்
சிதைவடைந்து வருகிறேன்
கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு
ஒன்று மட்டும் புலனாகிறது
சட்டங்களுக்குள் அடைபட்டிருக்கும் ஒன்றாய்
மற்றதைக்கூட அல்ல
தன்னையே
காப்பாற்றிக் கொள்ள இயலாது

கரிகாலன்.மலர்களை விட எனக்கு
முட்களைப் பிடிக்கும்
ரத்த சம்பந்தம் கொள்வதால்

அப்துல்ரகுமான்சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் கொடை தயவு
நட்பு இவை மூன்றும் பிறவிக்குணம்,

ஒளவையார்மீனுக்கு உயரம் எல்லாம்
அது நீருக்குள் போகும்
ஆழம் தான்

வெறுங்காலுடன் தான்
நடந்து போனாள்
மனசெல்லாம் கொலுசுச் சத்தம்,

சி.கே,ராசாஎன்று வருவான் எமன் என்று எதிர்நோக்கி
நின்று தளர்கின்றேன் நித்தமுமே மன்றில்
நடங்கண்ட ஈசன் நடராசன் பாதத்து
இடங்கண்டு வை நீ எனக்கு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.மண்ணைத் தின்றது புழு
புழுவைத் தின்றது மீன்
மீனைத் தின்றது கொக்கு
கொக்கைத் தின்பவன் மனிதன்
மனிதனைத் தின்றது மண்
மண்ணைத் தின்றது புழு.தேர்வு கருதி
இலக்கியம் பயில்வது
மூக்கின் வழியே
உணவு கொள்வதைப் போன்றது

வைரமுத்துகருவுற்றிருந்தால்
ஒருவருக்கு மட்டுமே
தாயாகி
இருந்திருப்பார்
கருணையுற்றதால்
நம் அனைவருக்கும்
தாயானார்

தெரசா பற்றி பார்த்திபன் கிறுக்கல்களில்எங்கள் தமிழர்கள்
தொடர்ந்து
திரைப்படம்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்த
முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க

அறிவுமதிமரத்தின் மேல் இலைகள் - செய்தி
மரத்தின் மேல் அலைகள் - இலக்கியம்.


குரங்குச் சேட்டை

குரங்கு என்ற விலங்கைப் பற்றி நமக்கு ஒரு பொதுப் புத்தி உள்ளது. குரங்கு மரத்திற்கு மரம், கொப்பை விட்டுக் கொப்பு தாவும். குரங்கு அதிகமாகச் சேட்டைகள் செய்யும் - என்பன போன்ற கருத்தாக்கங்கள் நம் பொதுப் புத்தியில் உள்ளன.

குரங்கின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு பல பழம் பாடல்கள் உருவாகி இருக்கின்றன. குரங்கு என்ற கதாபாத்திரத்தை வைத்து நாட்டுப்புறத்து மக்கள் பல கதைகளைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள். குரங்கை வைத்துப் பல வழக்குத் தொடர்களையும், பல சொல்லடைகளையும் கிராமத்து மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

குரங்கு ஒன்று ஒரு நாள் ஒரு பாம்பைப் பிடித்து விடுகிறது. கழுத்துப் பகுதியில் பாம்பைக் குரங்கு பிடித்து விட்டதால் பாம்பால், குரங்கின் கையில் கொத்தவும் முடியவில்லை. குரங்குக்கு பாம்பைப் படித்த பிடியை விடவும் மனமில்லை. பிடியை விட்டால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் இருந்தது குரங்கு,

குரங்கு பிடித்த பிடியில் சற்று நேரத்தில் பாம்பு செத்தே விட்டது. என்றாலும் குரங்கிற்கு பாம்பைப் பற்றிய பயம் நீங்கவில்லை. பாம்பைப் பிடித்த பிடியை விடவில்லை.

நாள் முழுவதும் குரங்கு உண்ணாமல் உறங்காமல் பாம்பைப் பிடித்தபடியே இருந்தது. மறுநாள் செத்த பாம்பில் இருந்து வீச்சம் வர ஆரம்பித்து விட்டது. அதன் பிறகுதான் பாம்பு செத்து விட்டது என்ற முடிவிற்கு வந்த குரங்கு, பாம்பைப் படித்திருந்த பிடியை விட்டது.

இதைத்தான் குரங்குப்பிடி என்று கிராம மக்கள் சொல்கிறார்கள். சின்னா பின்னமாகிவிட்ட அழகைப் பார்த்து குரங்கு கைப் பூமாலை ஆகி விட்டதே - என்று சொல்லி வருத்தப்படுகின்றார்கள். குரங்குக்கு அழகுணர்ச்சி ஏது? அதன் கையில் பூமாலை கிடைத்தால் அதைப் பிய்த்து எறிந்து விடும். குரங்கின் இத்தகைய சேட்டைகளை மிகக் கவனமாகக் கண்ட மக்கள் பல சொலவடைகளையும் வழக்குத் தொடர்களையும் படைத்து வாய்மொழியாய் உலவ விட்டிருக்கிறார்கள்.

இலங்கைக்குத் தூதாகச் சென்ற அனுமனின் வாலில் துணியைச் சுற்றி இராவணன் உத்தரவின் பேரில் வீரர்கள் தீ வைக்க, அனுமன் அந்தத் தீயைக் கொண்டே இலங்கையின் பல பகுதிகளையும் எரித்த கதை நாம் அறிந்த ஒன்றுதான்.

அந்தக் காட்சி உருவாக்கத்தை நினைவு படுத்தும் விதமாக அமைந்த சொலவடைதான் - குரங்கு கையில் கொள்ளி அகப்பட்டதைக் போல - என்பது. கையில் கொள்ளிக் கட்டையுடன் ஓலை வேய்ந்த வீட்டுக் கூரைகள் தோறும் தாவித் தாவிக் குதித்துக் கொண்டே குரங்கு சென்றால் என்னவாகும்?

அதிகாரம் கிடைக்கக் கூடாதவன் கையில் கிடைத்து அவன் அராஜக ஆட்டம் போடும்போது மக்கள் குரங்குச் சேட்டையை மையமாகக் கொண்ட இத்தகைய சொலவடைகளைச் சொல்லுகிறார்கள்.

குரங்குக்குப் புத்தி சொல்லப் போய் தூக்கணாங்குருவி கூடு இழந்த கதை நாம் அனைவரும் அறிந்ததுதான்.

குரங்கு சும்மாவே அதிகமாகச் சேட்டை பண்ணும். குரங்கு கள்ளும் குடித்து, அதற்குப் பேயும் பிடித்து, தேளும் கொட்டினாற்போல - என்கிறது ஒரு சொலவடை. அப்படிப்பட்ட குரங்கின் நிலையை நினைத்துப் பார்க்கவே துள்ளுகிறது மனம்.

குரங்கு எப்போதும் சதா எதையாவது நோண்டிக் கொண்டே இருக்கும். குரங்கின் கையில் சிரங்கு வந்து விட்டால் என்ன ஆகும். சிரங்கு உள்ள இடத்தைத் தோண்டித் தோண்டி புண்ணைப் பெரியதாக்கி விடும். குரங்கிற்குப் புண் வந்தால் லேசில் ஆறாது.

குரங்குகளின் முகத்தை வைத்து அவைகளின் அடையாள வேறுபாட்டை அறிய முடியாது. குரங்குக்கு முகமெல்லாம் ஒரே முகம் - என்கிறது ஒரு பழமொழி.

சில தலைவர்கள் முதலில் தன் தொண்டர்களில் ஒருவனை அனுப்பி ஊசலாட்டம் பார்ப்பார்கள். பிறகு தான் தலைவரே களத்தில் இறங்குவார். அது போல குரங்கு தன் குட்டியைத் தண்ணீரில் இறக்கி விட்டு முதலில் ஆழம் பார்த்து விட்டுப் பிறகுதான், தாய்க்குரங்கு ஆற்று நீரில் இறங்கும். குரங்கு தன் குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் - என்கிறது ஒரு சொலவடை.

ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு குரங்கு தன் குட்டிகளை ஒவ்வொன்றாகக் கடத்தும். அதைத்தான் - குரங்கு குட்டியைக் கடத்தியது போல - என்கிறது ஒரு வழக்குத் தொடர்.

குரங்கு சக குரங்கிற்கு அழகாகப் பேன் பார்க்கும். குற்றாலத்தில் அந்தக் காலத்தில் பேன் தொல்லை தாங்க முடியாத சில கிராமத்துப் பெண்கள், மலையில் விறகு வெட்டப் போனால் விறகு வெட்டி முடித்த பிறகு, சற்று ஓய்வாக இருக்கும் போது மரத்தில் உள்ள குரங்குகளைப் பேன் பார்க்கும்படி சொல்வார்களாம்.

குரங்கிடம் பேன் பார்க்கத் தலையைக் கொடுத்த பிறகு, தலையை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது. அப்படிச் செய்தால், குரங்கு அப்பெண்ணின் தலைமயிரைப் பிய்த்து எறிந்து விடும்.

இந்த அனுபவத்தின் அடியாகப் பிறந்ததுதான், - குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும், தலை மயிரைப் பிய்த்தாலும் பிய்க்கும் - என்பது. சிலர் நன்கு பழகுவார்கள். பழகிக் கொண்டிருக்கும் போதே ஏறுக்குமாறு ஏதாவது செய்து, அல்லது சொல்லி நட்பை முறித்துக் கொள்ளுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்குப் பொருத்தமானது தான் குரங்கு பேன் பார்க்கும் விதம்.

குறவர்களுக்குச் சுடுகாடு கிடையாது. குறவர்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்கள் முகாமிட்டுத் தங்கி இருக்கும் டென்ட் அடியிலேயே குழியை வெட்டி அதில் புதைத்து விடுவார்கள். குரங்கு தன் கூட்டத்தில் செத்து விட்ட சக குரங்கை எங்காவது கண்காணாத இடத்திற்குக் கொண்டு சென்று வீசி எறிந்து விடும். குரங்கு பிணமும் குறவன் சுடுகாடும் யாரும் கண்டதில்லை - என்கிறது ஒரு சொலவம்.

குரங்கு என்ற விலங்கை மையமாகக் கொண்ட நாட்டார் சொலவடைகளையும், வழக்குத் தொடர்களையும், பழமொழிகளையும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிற பொழுது குரங்கு என்ற விலங்கின் வாழ்வியல் சார்ந்த பல அரிய செய்திகளை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

நன்றி குமரிக்கடல் இதழ் - 16 மார்ச் 2007தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061