இலக்கிய இணைய இதழ்
04 நவம்பர் 2007 - இதழ் எண் : 69

அன்புடையீர். வணக்கம்,

ம.இலெ. தங்கப்பா அவர்கள் தெளிதமிழ்ப் பற்றாளர். மழலையர்களுக்காக அவர் எழுதியுள்ள பாடல்கள், சிறுகதைகள் வணங்குதற்குரியவை. அவர் அன்போடு அளித்த 'எங்கள் வீட்டுச் சேய்கள்' என்ற நூலிலிருந்து சில பாடல்களை இங்கே வெளியிட்டுள்ளோம். அவரது Stories form tamil literature என்ற நூலில் தமிழ் உணர்வு மிக்க குழந்தைகளுக்கான சிறுகதைகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள இக்கதைகளைத் தமிழ்ப்படுத்த அவற்றை நம் தமிழ் மழலையர்களுக்குக் காட்சிப் படுத்த தமிழம் வலை விரும்புகிறது. குழந்தைகளுக்கான நடையில் மொழிபெயர்ப்பு செய்ய விருப்பம் உடையவர்கள் எங்களோடு தொடர்பு கொள்ளவும். இந்த இதழில் உள்ள சித்தர் பாடல்கள் மண்மொழி இதழில் வெளிவந்தவை. தரமாகச் சிந்தித்த சித்தர்களை நம் மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு அவர்கள் பற்றிய செய்தியே வெளிவராமல் இருட்டடிப்புச் செய்திருப்பது வேதனைக்குரிய செயலே. நல்ல கருத்துகளை வெளிப்படுத்துவோம். பார்வையாளர்கள் அனுப்பி உதவவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
04 - 11 - 2007




யானை
யானை வந்தது யானை
யானை வயிறு பானை
தூணைப் போன்ற கால்தான்
துடைப்பம் போன்ற வால்தான்
முறம்போல் காதை ஆட்டும்
முன்னே கையை நீட்டும்
மணி அடிக்க நடக்கும்
ஆற்றில் சென்று கிடக்கும்


மயில்
அண்ணா இங்கே வாராய்
ஆடும் மயில் பாராய்
இனிதாய்த் தோகை விரிக்கும்
ஈந்தின் ஓலைபோல் தெரியும்
உச்சிக் கொண்டை நீலம்
ஊடே பச்சைக் கோலம்
எடுப்பாய் நீண்ட கழுத்து
ஏந்தும் வாழைக் குருத்து
ஐந்து வண்ணம் இறகு
ஒளிரும் அழகின் மாட்சி
ஓங்கும் இன்பக் காட்சி
ஒளவைப் பாட்டி சொன்னதாம்
அஃதே உலகில் உள்ளதாம்,


பூனை
எங்கள் வீட்டுப் பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
தாவி எலியைப் பிடிக்கும்
தயிரை நக்கிக் குடிக்கும்
நாவால் முகத்தைத் துடைக்கும்
நாற்கா லிக்கீழ்ப் படுக்கும்,


குதிரை
குதிரை இது குதிரை
குதிக்கும் நல்ல குதிரை
மதுரை நகர் வீதியில்
வண்டி இழுக்கும் குதிரை
தாவித் தாவிப் பாயும்
தழைத்த புல்லை மேயும்
சீவி விட்ட தலைபோல்
கழுத்து மயிர் திகழும்
குதிரை இது குதிரை
குதிக்கும் நல்ல குதிரை


எண்கள்
ஒன்று இரண்டு மூன்று
உலகில் புகழுடன் தோன்று
நான்கு ஐந்து ஆறு
நல்ல சொற்கள் கூறு
ஏழு. எட்டு. ஒன்பது
இரங்க வேண்டும் அன்பது
பத்து நூறு ஆயிரம்
பசியாது உண்டால் நோய் வரும்,


மின் வண்டி
தட தட தட தட தட என்றே
தண்ட வாளம் மீதினிலே
மிகவும் விரைவாய் வருகுது பார்
மின்சா ரத்தால் ஓடுது பார்,
கரியும் இல்லை. புகை இல்லை
கடிதாய் ஓடும் தொடர் வண்டி
சிறிதும் உடையில் அழுக்கின்றிச்
செல்வோம் ஏறு மின் வண்டி.


திருவிழா
எங்கள் ஊரில் திருவிழா
எல்லா ருக்கும் மகிழ் விழா
தங்கத் தேரில் ஊர்வலம்
தக தகக்கும் ஒளி மயம்
யானை முன்னே நடக்குமாம்
கொம்பு தாரை ஊதுமாம்
வான வெடி வெடிக்குமாம்
வண்ண ஒளி சிதறுமாம்
பொய்க் குதிரை ஆட்டமாம்
பொம்ம லாட்ட பாட்டடமாம்
மொய்க்கும் மக்கள் கூட்டமாம்
முடிந்த பின்னே வாட்டமாம்,


உழைப்பு
வாருங்கடா வாங்க
வயலுப் பக்கம் போவோம்
ஏரும் காளை மாடும்
இருக்கும் பக்கம் போவோம்
படம் பார்த்துப் பார்த்துப்
படித்த தெல்லாம் போதும்
உடம்பு நோக வெயிலில்
உழைப்பவரைப் பார்ப்போம்
கூழைக் கொஞ்சம் குடித்துக்
கொழுக் கலப்பை பிடிப்பார்
பாழும் புதர் நிலமும்
பண்படுத்தித் தருவார்
சோற்றில் தழை மிதிப்பார்
சேர்ந்து களை பறிப்பார்
நாற்று நடும் அழகை
நாமும் கொஞ்சம் பார்ப்போம்
கொழு கொழுத்து நாமும்
குந்துவதை விட்டே
உழுது பயிர் செய்யும்
உழைப்பில் பங்கு கொள்வோம்,


ஊஞ்சல்
ஊஞ்சல் ஊஞ்சல் ஊஞ்சல்
உயரே போகும் ஊஞ்சல்
சாய்ந்தே ஆடும் ஊஞ்சல்
தாவி ஏறும் ஊஞ்சல்
தோப்புக் குள்ளே ஊஞ்சல்
தொட்டில் போலே ஊஞ்சல்
பாப்பா ஏறும் ஊஞ்சல்
பார்த்து மெல்ல ஆடுடு
ஊஞ்சல் ஏறி ஆடுவோம்
முன்னும் பின்னம் சாடுவோம்
சேர்ந்து பாட்டுப் பாடுவோம்
சிரித்து விளையாடுவோம்.


புகை வண்டி
கட கட கட கட கட கட வண்டி
கடிது செல்லும் புகை வண்டி
தட தட தட தட தட வண்டி
தண்டவாளத்தில் போம் வண்டி
குப் குப் குப் குப் குப் என்றே
குமுறிப் புகையைக் கக்கிவிடும்
அப்புறம் இப்புறம் நகராமல்
அழகாய் நெளிந்து சென்றிடுமே
சிக் புக் சிக் புக் என்றிடுமே
சிறுவர் மகிழ வந்திடுமே
அக்கம் பக்கம் ஊர்களுக்கே
அழைத்து நம்மைச் சென்றிடுமே,


பொங்கல்
எங்கள் வீட்டுக் காளை
இதற்குப் பொங்கல் நாளை
கொம்பில் வண்ணம் தீட்டிக்
குளத்தில் குளிப்பாட்டி
மஞ்சள் நன்றாய்ப் பூசி
மாலை கழுத்தில் மாட்டி
சல் சல் சல் சல் என்னும்
சலங்கை காலில் பூட்டித்
தேரைப் போல வண்டி
தெரு முழங்க ஓட்டி
ஊரைச் சுற்றி வருவோம்
உண்ணப் பொங்கல் தருவோம்.


அழகு
பொன்னும் மணியும் அழகில்லை
புன்சிரிப்புத்தான் அழகு.
பின்னல் கொண்டை அழகில்லை
பேனை ஒழிப்பதுதான் அழகு,
பட்டுச் சட்டை அழகில்லை
பணிவாய் இருப்பதுதான் அழகு
பொட்டு வைப்பதில் அழகில்லை
பொறுமை. அமைதிதாம் அழகு.
கண்ணில் மையும் அழகில்லை
கனிந்த பார்வைதான் அழகு
அன்ன நடையில் அழகில்லை
அன்பாய் நடத்தல்தான் அழகு.


மழையே மழையே வா வா
மழையே மழையே வா வா
மண்ணில் விளையாட வா
புழுதி யான தெருவிலே
புதிய மணம் கமழ வா
பயிர்கள் செழிக்க ஓடிவா
பசுமை கொழிக்கப் பாடிவா
உயிர்கள் பிழைக்க ஓடிவா
உலகம் தழைக்கப் பாடிவா
தெருவில் வெள்ளம் பெருக வா
திரிந்து நாங்கள் ஆடவா
கரையில் நின்று கால்வாயில்
கப்பல் விட்டு மகிழ வா
ஏரி குளம் பொங்க வா
எங்கள் கிணறு நிரம்ப வா
நிரைக் கையால் அள்ளியே
நின்று நாங்கள் குளிக்க வா,


தக்காளி
திமுக்குத் தக்கா திமுக்குத் தக்கா
திமுக்குத் தக்கா டி
சின்னப் பாட்டி தோட்டத்திலே
சிவப்புத் தக்காளி
சமைக்கு முன்னே தொண்டைக்குள்ளே
நீர் சுரந்தாச்சு
சக்கை பிழிந்து போட்ட இடத்தில்
விதை முளைச்சாச்சு.


நிறங்கள்
இலைகள் பச்சை கொடிகள் பச்சை
இனிதாய்ப் பேசும் கிளியும் பச்சை
வானும் நீலம் கடலும் நீலம்
வண்ண மயிலின் கழுத்தும் நீலம்
காகம் கறுப்பு யானை கறுப்பு
கண்ணின் உள்ளே மணியும் கறுப்பு
பஞ்சு வெள்ளை கொக்கு வெள்ளை
பாப்பா குடிக்கும் பாலும் வெள்ளை
இரத்தம் சிவப்பு குங்குமம் சிவப்பு
இனிக்கும் கோவைப் பழமும் சிவப்பு.
பழுப்பிலை மஞ்சள் பாகற்பூ மஞ்சள்
பழுத்த வாழைப் பழமும் மஞ்சள்.


வட்டரங்கக் காட்சி
வட்டரங்கக் காட்சி வந்திருக்கு நகரிலே
கொட்டு முழக்கம் கேட்டியா குரங்கு போனது பார்த்தியா?
யானை இரண்டு காலால் ஏணிமேலே ஏறுதாம்
கோணல் மூஞ்சிக் குரங்கு குல்லாப் போட்டு நடக்குதாம்
வேங்கைப்புலி முதுகில் வெள்ளாடு தாவுதாம்
பாங்குடனே கரடி பந்து விளையாடுதாம்
கத்தி வீச்சு நடக்குதாம் கம்பி மேலே நடனமாம்
ஒற்றை ஆளின் மார்பிலே உந்து வந்து ஏறுதாம்
கோமாளி வேடிக்கை குலுங்கக் குலுங்கச் சிரிப்பாம்
நாமம் போட்ட குரங்கு நடுவில் வந்து போகுதாம்
அப்பாவிடம் கெஞ்சி அழைத்துப் போகச் சொல்லுவேன்
தப்பாமல் நீயும் வா தங்கையையும் கூட்டிவா.


வெளியிடு
பொன்மொழிப் பதிப்பகம்
இடைக்கட்டு. உள்கோட்டை (அஞ்)
கங்கைகொண்ட சோழபுரம் (வழி)
பெரம்பலூர் மாவட்டம்



சித்தர்களின் கலகக்குரல்

இருக்கு நாலு வேதமும்
எழுத்தையுற ஓதினும்
பெருக்க நீறு பூசினும்
பிதற்றினும் பிரானிரான்!
உருக்கி நெஞ்சை உட்கலந்திங்
குண்மைகூற வல்லிரேல்
சுருக்க மற்ற சோதியைத்
தொடர்ந்து கூடலாகுமே. ( பாடல் 36 )


பறைச்சி யாவ தேதடா ?
பனத்தி யாவ தேதடா ?
இறைச்சி தோலெ லும்பிலும்
இலக்கிமிட் டிருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ ?
பனத்தி போகம் வேறதோ ?
பறைச்சி யும்ப னத்தியும்
பகுத்து பாரும் உம்முலோ ! ( பாடல் 38 )


கறந்த பால்மு லைப்புகா!
கடைந்த வெண்ணெய் மோர்புகா !
உடைந்து போன சங்கின்
ஓசை உயிர்கம் உடற்புகா !
விரிந்தபூ உதிர்ந்த காயும்
மீண்டு போய்ம ரம்புகா !
இறந்தவர் பிறப்ப தில்லை !
இல்லை இல்லை இல்லையே ! ( பாடல் 46 )


தூய்மை தூமை யென்றுளே
துவண்ட லையும் ஏழைகாள் !
தூமை யான பெண்ணிருக்க
தூமை போன தெவ்விடம் ?
ஆமை போல முழுகிவந்து
அனேக வேதம் ஓதுறீர் !
தூமையும் திரண்டு ருண்டு
சொற்கு ருக்கள் ஆனதே ! ( பாடல் 48 )

மாத மாதம் தூமைதான்
மறந்து போனதூ மைதான்
மாத மற்று நின்றலோ
வளர்ந்து ரூபம் ஆனது ?
நாத மேது வேத
மேது ? நாற்குலங்கள் ஏதடா?
வேதம் ஓதும் வேதியா !
விளைந்த வாறும் பேசடா ! ( பாடல் 131 )


உண்ட கல்லை எச்சிலென்
றுள்ளெறிந்து பேடுறீர் !
கண்ட எச்சில் கையலோ?
கரும னுக்கும் வேறதோ ?
கண்ட எச்சில் கேளடா !
கலந்த பாணி அப்பிலே
கொண்ட சுத்தம் எதடா ?
குறிப்பி லாத மூடனே ! ( பாடல் 146 )


இட்ட குண்டம் ஏதடா !
இருக்கு வேதம் ஏதடா ?
சுட்ட மட்க லத்திலே
சுற்று நூல தேதடா ?
முட்டி நின்ற தூணிலே
முளைத்தெ ழுந்த சோதியைப்
பற்றி நின்ற தேதடா ?
பட்ட நாத பட்டனே ! ( பாடல் 306 )


ஓதும் நாலு வேதமும்
உரைந்த சாத்தி ரங்களும்
பூத தத்து வங்களும்
பொருந்தும் ஆக மங்களும்
சாதி பேத உண்மையும்
தயங்கு கின்ற நூல்களும்
பேத பேதம் ஆகியே
பிறந்து ழன்று இருந்தவே ! ( பாடல் 460 )


சாத்திரங்கள் பார்த்து பார்த்துத்
தாங்குரு டாவதால்
நேத்தி ரங்கெட வெய்யோனை
நேர்துதி செய் மூடர்காள் !
பாத்தி ரமறிந்து மோன
பத்தி செய்ய வல்லிரேல்
சூத்தி ரப்படி யாவரும்
சுத்தரா வர் அங்ஙனே ! ( பாடல் 525 )


ஓசையுள்ள கல்லைநீர் உடைத்தி
ரண்டாய் செய்துமே,
வாசலில் பதித்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர் !
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும்
நீரும் சாத்துறீர் !
ஈசனுக் குகந்த கல்லது
எந்தக்கல் சொல்லுமே ! ( பாடல் 420 )


நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணு முணென்று
சொல்லும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளி ருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சு வைய றியுமோ ? ( பாடல் 497 )



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061