இலக்கிய இணைய இதழ்
02 டிசம்பர் 2007 - இதழ் எண்: 70

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் திரு கார்மேகம் அவர்கள் படித்து மகிழ்ந்த கவிதைகளை இணைத்துள்ளோம். படிப்பதோடு மட்டுமல்லாமல் ஏற்றுக் கொண்ட கருத்தைச் செயற்படுத்த வேண்டும் என்ற துடிப்போடு இயங்குகிற திரு. கார்மேகம் அவர்களை அன்போடு வாழ்த்துகிறோம். கவிதை வரிகள் படிப்பதற்கு, மகிழ்வதற்கு, மேடையில் பேசி கைதட்டல் வாங்குவதற்கு மட்டுமல்ல... இவை நெம்புகோல்களாக இருந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்பதே நம் தமிழ்ப் பாவலர்களின் எதிர்பார்ப்பு. திரைப்படப் பாடல்களும், கவியரங்கம் மற்றும் பட்டிமன்றப் பாடல்கள் மக்களின் பாலியல் உணர்வைத் தூண்டி வணிகம் செய்வது வருந்துதற்குரியதே. வினை விதைத்தால் வினைதான் கிடைக்கும்.

நீங்கள் படித்து மகிழ்ந்த நல்ல பாக்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இணையத்தில் இவற்றை வலையேற்றுவதன் மூலம் நல்ல கருத்துகள் உலகம் முழுவதும் பரவலாகட்டும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
02 - 12 - 2007
கார்மேகம் - படித்து மகிழ்ந்தவை

நீர்ப்பரிட்சை
நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது.

மானம் காக்கத்
தன் விரத ஆடையைக்
களைந்தெறிந்தான் இராமன்.

தாகம்
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே !
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்

உடலுக்கு ஒரு வேகம்
சுதந்திரம் எனது
பிறப்புரிமை என்றது
சிறைக்கூடம்
உள்ளே இருந்த
ஆயுட்கைதி
சிரித்துக் கொண்டான்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
பேர்லி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி.

இறப்பு எங்கள் பிறப்புரிமை
ஆலகாலத்திற்கே
பாற்கடல் கடைந்தோம்
அமுதம் வந்தது
அவசரமாய்க் குடித்து
விக்கிச் செத்தோம்.

சுட்ட பழம்
தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது
கனியோ
விட்டிலை உண்டது.

கலை
இமைப் பீலிகளின்
கையெழுத்துப் பிரதியை
அச்சுக் கோக்க
நட்சத்திரங்களை அடுக்கி
அடைப்புக் குறிகளுக்காக
மேக அறையெல்லாம்
இன்னொரு பிறைக்குத்
துளாவும்
மன விரல்கள்.

மெழுகுவர்த்தி
ஒற்றை நெருப்பு உதட்டின்
வாசிப்பில்
புல்லாங்குழலே
உருகுகிறது.

உங்களைத்தான்
உங்களைத்தான்
தீபமேனகைகளின்
நடனத்தை நிறுத்துங்கள்
இரவின் மாதவம் முதிரட்டும்
இந்திரன் ஆசனம் அதிரட்டும்.

மின்னல்
வான உற்சவத்தின்
வாண வேடிக்கை

முகிற்புற்று கக்கும்
நெருப்புப் பாம்புகள்

கறுப்பு உதட்டின்
வெளிச்ச உளறல்

இடிச்சொற்பொழிவின்
சுருக்கெழுத்து.

வீழ்ந்த தேவதைகள்
வரங்களே
சாபங்கள்
ஆகுமென்றால்
இங்கே
தவங்கள் எதற்காக

ஞாபக முடிச்சு
என்னில் சுரந்து
தேங்கும் இக்கவிதைகள்
என்னைப் பிரதிபலித்து
மோகம் மூட்டிக்
கொன்று விடும்.

இங்கே.. ஒருநாள்
மரணத்தைக் குடித்து
மலரும் ஒரு பூவாக
என்னைக் காண்பீர்கள்

அந்தத் தருணத்திற்கு
இது
ஒரு ஞாபக முடிச்சு.

பார்வை நிழல்
வெளிச்சம் போதித்த பிறகும்
பகலுக்கு இருக்கும்
சந்தேகங்களாய்
இந்த நிழல்கள்...

இவற்றில்
உன் பார்வைகளை
ஞாபகங்கொண்டு
உறைந்து போகிறேன்

உன் நிழல்களைத்
தாகவெறியோடு அனுபவிக்க
தகிக்கும் வெயிலில்
சில யுகங்கள்
நான் புழுங்கித் துடிப்பேன்

பிறகு -
உன் கருமிக் கண்கள்
என்னைக்
கண்ணீராகச் சேமித்துக் கொள்.

வினையாட்டு
யதார்த்தப் பகலில்
குறளாய்க் கொடையிரந்து
ஏகாந்த இரவில்
விசுவரூபம் கொண்டு
என்னையே புதைக்கும்
நிழல் நீ.

கொடியவளே!
உன் நினைவுகளில்
நீந்த இறங்கியவனை
மீனாக்கி விட்டாயே.

கலியுக இதிகாசம்
தீபங்கள்
தலைகீழாய்த் தொங்கும்
இந்த யுகத்தில்

அவதார வாசல் தோறும்
சிவப்பு முக்கோணக்
கம்சர்கள்

காமத்தின்
தர்மார்த்த மோட்சங்களை
உபதேசிக்கும்
புத்தலைத் தொடர்கதையை
உலோகத் தந்தம்
பொறித்து வர
வாய் மலர்ந்தருளுகிறார்
வியாச பகவான்

பெயர் துறந்த இளங்கோக்கள்
பத்தினிப் பெயர் அணிந்து
சிவப்பு விளக்கு வீதியெங்கும்
சீத்தலைச் சாத்திகளை
மோப்பம் பிடித்தலைகின்றனர்

கண்ண பெருமான்களின்
பொன்மாளிகைச் சுலோகங்களில்
மயங்கி
இருக்கும் அவலையும்
பறிகொடுக்கிறார்கள்
குசேலர்கள்.

எண்ணிக்கையே தர்மமாகிய
குருசேத்திரத்தில்
வெற்றிகளெல்லாம்
கெளரவர்களுக்கே
போய்ச் சேர்கின்றன.

அவர்கள் விருந்து மண்டபத்தில்
காபரே ஆடுகிறாள்
பாஞ்சாலி

பாரங்களைத் துறந்து
சுய ஆரண்யங்களில்
சூர்ப்பணகைகளுடன்
அம்மணமாய்த் திரியும்
இராமர்கள்

மாயமான்களின் மோகத்தில்
இராவணர்களிடம்
சோரம் போகும்
சீதைகள்.

விற்க எதுவும் இல்லாததால்
கண்ணகிகளைப்
பேரம் பேசும்
கோவலர்கள்.

கோவலரின் படுகொலையை
மூடி மறைக்க
உயிரோடு கொளுத்தப்படும்
கண்ணகிகள்.

உதய குமரர்களுக்குத்
தங்கள் உடல்களையே
அட்சய பாத்திரமாக்கித்
தம் வயிற்றுப் பசியைத்
தணித்துக் கொள்ளும்
மணிமேகலைகள்.

இவர்களே
இந்த யுகத்தின்
இதிகாசப் பாத்திரங்கள்.


நன்றி பால்வீதி நூல் - அப்துல் ரகுமான்.


பொள்ளாச்சி - வெ.சிவநேசன் பாக்கள்

தமிழே தமிழே நீ வாழ்க
தண்டமிழ் மொழியே நீ வாழ்க
தேனே கலையே நீ வாழ்க
தென்றல் காற்றே நீ வாழ்க
பொதிகை பிறந்த பூந்தமிழே
பூமகளே நின் புகழ் வாழ்க
இமயம் போலே நீயுயர்ந்து
என்றும் புகழாய் வாழியவே.


அன்னையைத் தொடுதல் இன்பம்
ஆசையைத் தவிர்த்தல் இன்பம்
இன்னிசை கேட்டல் இன்பம்
ஈதலே உலகில் இன்பம்
உருபசி களைதல் இன்பம்
ஊக்கமே செயலுக் கின்பம்
எளிமையாய் வாழ்தல் இன்பம்
ஏற்பது தவிர்த்தல் இன்பம்
ஐயத்தை ஒழித்தல் இன்பம்
ஒற்றுமை உயர்விற் கின்பம்
ஓதுதல் மனதிற் கின்பம்
ஓளவையின் கவிகள் இன்பம்
இளமையில் கற்ற இன்பம்
இடைவிடா துழைத்தல் இன்பம்
பலகலை கற்று வாழ்வில்
பாரினில் உயர்தல் இன்பம்.


காக்கையக்கா காக்கையக்கா
கா... கா... கா...
கருமைநிறம் கொண்டவளே
வா... வா... வா...
பசுமைநிறக் கிளியவளே
கீ... கீ... கீ...
பவழவாய்ப் பேரழகி
நீ... நீ... நீ....
கூடுமாறி முட்டையிடும்
கூ... கூ... கூ....
குயிலினது குரலினிமை
பூ... பூ.... பூ....
காடுவாழும் காடையக்கா
கை.... கை.... கை...
கடின வேடன் மீது பார்வை
வை... வை... வை....
கூவிக் கூவித் துயிலெழுப்பும்
கோ.... கோ.... கோ....
கொண்டைச் சேவல் நீயும் தூரப்
போ... போ.... போ....


பாட்டி எங்க பாட்டி
பாயில் காலை நீட்டி
கற்பனையைக் கூட்டி
கதைகள் சொல்லும் பாட்டி
பாட்டி எங்க பாட்டி
பல்லில்லாத பாட்டி
பருப்பு சோறு ஊட்டி
பாசம் காட்டும் பாட்டி
அணைத்துக் கொள்ளும் பாட்டி
பட்டில் உடை மாட்டி
பள்ளி அனுப்பும் பாட்டி


வானம் பொழிவது மழை மழை
வயலில் இருப்பது களை களை
கடலில் தெரிவது அலை அலை
கதையும் பாட்டும் கலை கலை
மீனைப் பிடிப்பது வலை வலை
முந்திரி காய்ப்பது குலை குலை
சிற்பி வடிப்பது சிலை சிலை
சிகரம் என்றால் மலை மலை
ஆடு தின்பது தழை தழை
ஆசைப் படுவது பிழை பிழை
எலிகள் வசிப்பது வளை வளை
எல்லாப் பிரிவும் கிளை கிளைபீளமேடு - மு.இராசகோபால் பாக்கள்

அறிவை வளர்ப்பது கல்வி
ஆற்றலைத் தருவது கல்வி
நெறியை வளர்ப்பது கல்வி
நேர்மை தருவது கல்வி
பெருமை தருவது கல்வி
பேணி வளர்ப்பது கல்வி
இன்னல் தவிர்ப்பது கல்வி
இணைய உலகின் கல்வி


எனக்குத் திறமை இருக்கிறது
எல்லாம் கற்றுத் தேர்ந்திடவே
எனக்கு விருப்பம் இருக்கிறது
எல்லாத் தொழிலும் செய்திடவே
எனக்கு ஆற்றல் இருக்கிறது
எண்ணில் புதுமை படைத்திடவே
எனக்குத் துணிவு இருக்கிறது
எவர்க்கும் நன்மை செய்திடவேதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061