இதழ் எண் : 72
20 சனவரி 2008


அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் பொற்செழியன் எமக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தினை இணைத்துள்ளேன். இவர் எமக்குத் தந்த Canon Digital Video Recorder பயன்படுத்தி, இந்தத் தைப் பொங்கலில் எமது தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் போட்டி நிகழ்வினை படமாக்கியுள்ளேன். படத்தை வெட்டி ஒட்டவும், தேவையான ஒலியை இணைக்கவும், DVD குறுவட்டுகள் உருவாக்கவும் கற்றுக் கொண்டேன். இனி அறையில் அமர்ந்தவாறு எம்தமிழ் மக்களுக்கான படக்காட்சிக் குறுவட்டுகளை உருவாக்கி இலவசமாகத் தர இயலும். குறும்படங்கள் உருவாக்கி இலவசமாகத் தர இயலும். என்னை இந்த வழியில் ஊக்குவித்த பொற்செழியன் அவர்களுக்கு என் அன்பான நன்றிகளை உரியதாக்குகிறேன்,

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
20 - 01 - 2008


பொற்செழியன் வாழ்த்து


பொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி

தெங்கில்இளம் பாளையைப்போல்
செந்நெல்அறுத் தார்உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர்
சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி

கட்டடித்தே நெல்லளந்தே
கட்டைவண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர்
தோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி

கொட்டுமுழக் கோடுநெல்லைக்
குற்றுகின்ற மாதர்எல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி - பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி

முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக்கருவி
முத்தரிசி பாலில் இட்டார் என்னருந்தோழி - வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி

தித்திக்கும் தேனும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர்
ஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி

எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல்பாடல்
பொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி - நன்கு
பொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி

திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி - துய்ய
இன்பம்நிலை கொள்ள வேண்டும் என்னருந் தோழி

உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த
தமிழர் திருநாள் - பொங்கல் -
திருவள்ளுவராண்டு 2039 -
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
பொற்செழியன், யசோதா, அமுதயாழினி, நம்பி.


ம.ஞானசேகரன் எழுதிய விற்பனைக்குப் புத்தன் நூலில் இருந்து,ஒட்டிய வயிறுடன்
சாலையில் வரைகிறான்
தொந்திக் கணபதிவிரலில் மாட்டியிருந்தது
அதிட்டக்கல் மோதிரம்
துண்டிக்கப்பட்ட கைதந்தை சொல்
மந்திரம்
பெரியார்நான்கே கிழமைகளில்
சிவப்பழகு
நிறக் கொழுப்புகீழிருந்து உடைபடும்
பாறை
ஒற்றை வேர்தூங்குமூஞ்சிக்
கடவுள்
திருப்பள்ளியெழுச்சிஇடஒதுக்கீடின்றி
கிடைத்தது வேலை
வெட்டியான்.குளிர்பான ஆலை
வறண்ட ஆறு
பிணந்தின்னி அரசுகள்.பூசை அறையில்
கொசுவர்த்திச் சுருள்
யாமிருக்க பயமேன்?ஊருக்கு வெளியே
சுடலைமாடன்
சாதித்திமிர்காசுக்குக் குடிநீர்
கட்டணக் கழிப்பிடம்
நாகரிகத் தொட்டில்.கட்டப்பட்டது
வாஸ்து பார்த்து
அறிவியல் மய்யம்.இறக்குமதியாய்
இராமன் இயேசு அல்லா
விற்பனைக்குப் புத்தன்.ஆங்கிலப் பள்ளிகள்
இந்திய வரலாறு
வெள்ளையனே வெளியேறு.உதைபடுகிறாள்
முனியாண்டியிடம்
ஓம் சக்தி.ம.ஞானசேகரன் எழுதிய ஆதிக்குடி நூலில் இருந்து....ஆண் ஆளுமை நாடு
பெண் பிள்ளை மட்டும் ஈனுகின்ற
அரசுத் தொட்டில் கேடு.எங்கும் இல்லை தமிழ்
தமிழ் மண்ணில் அயல்மொழிக் கல்வியா
முகத்தில் காறி உமிழ்.விடுதலை நாடென்று ஆடுவார்
தாய்மொழிக் கல்வியைத் தமிழன் கேட்டால்
தடை வழக்குப் போடுவார்.விதைத்த கைகளில் சேறு
விளைச்சல் எல்லாம் தன்னகம் சேர்த்தே
வீணர்கள் போடுவார் கூறு.எலியைக் கொல்லும் பூனை
தன்னம்பிக்கை மறந்து தும்பிக்கை நீட்டிப்
பிச்சை கேட்கும் யானை.வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு
படிக்க மறந்த பள்ளி மாணவனின்
கல்விச் சுடர் அணைப்பு.தாய்ப்பால் பெருமை போற்றுவார்
தெருக்கள் தோறும் ஆங்கிலப் பள்ளிகள்
தமிழில் நஞ்சு ஊற்றுவார்.அடகினில் கேடயம் வாள்
மார்வாடிகளிடம் மண்டிக்கிடக்கிறது
ஆதிக் குடி தோள்.கனவின் மீதி...


அம்மாவென
குழந்தை திடுக்கிட்டழுதது
கனவெனப்பட்டது.
மிச்சமென்ன சொல்லுங்கப்பா
மிச்சமென்னப்பா....?
நுளம்பின் ரீங்கரிப்பில்
குழந்தையின் சிணுக்கம்
காதைக் குடைகின்றது.
பாருங்கள்
நான் மாட்டிக்கொண்ட நேரத்தை
வெறிச்சென்ற தெருக்களினதும்
தெருவோர கட்டிடங்களினதும்
ஆசுவாச பெருமூச்சை
நெட்டிமுறிப்பை
ஏன் விசும்பலையும் கூட
செவிப்பறையால் உள்வாங்கியபடி
தாண்டித் தாண்டி ஓடிவந்து
படுக்கையில் விழுந்தால்
கொக்கி போடுகிறது குழந்தை.
இஇப்போ எதை நான் சொல்வதாம்
அடி நுனி புரியாது
இஇந்தக் குழந்தைகளிடம்
மாட்டிக்கொண்டாலே இஇப்படித்தான்
திக்குமுக்காடிப் போகின்றது அறிவு.
குளிர் வாட்டி எடுக்கும்
பின்னிரவுப் பொழுது
உணவகத்தில் கையைக் காலை
அடிச்ச களை
கண்ணுறங்கும் அசதி...
அப்பா நாங்க எங்க
பயணம் போறம்?
வீச்சா மேலெழும்பிற்று பிளேன்
தேடித் தேடிப் பார்த்தன்
உங்களைக் காணவில்லையே
நான் பயந்திட்டன்
ஏனப்பா முழிப்பு வந்தது
மிச்சமென்னப்பா
எங்கேயப்பா போனனீங்க
சொல்லுங்கப்பா...
அப்பா...பா...
நனைந்த ஆடைகளைக் கழற்றிக்
கடாசிவிட்டு
கணைகளைத் தொடுத்தபடி
எந்தன் போர்வையுள் குழந்தை.
நாசியில் ஏறுகிறது மூத்திர வீச்சம்
சுள்ளென குண்டியிலொன்று
அல்லது
உயர்த்திய தொனியிலொரு சொல்
இஇது போதும் குழந்தை அடங்க
நான் கொஞ்சம் கண்ணயர
வேண்டாம் அது
பெருவிரலைச் சூப்பி
கதிர்சேர்க்க தலைமயிரைச் சுருட்டி
என் வாய்ச்சொற்களுக்காய்
அகலத் திறந்திருக்கும்
சிறு விழிகள் இரண்டிலும்
சுடரும் தீ
இஇருட்டிலும்....
நான்தான் சொன்னேன் போலும்
வீடுவிட்டு வந்த பயணம்
மீண்டும் போக வேணும்தானே
பிளேன் பறக்க வேண்டுமென்றால்
உந்தி வீச்சா எழும்பும்தானே
வானில் மூட்டம் படிந்திருந்தால்
பயணம் தடைப்படும்தானே
கண்முழிப்பும் வரும்தானே
இஇன்னொருக்கா புறப்படலாம்
இஇப்போ நீ கண்ணுறங்கு.
அப்பா எங்க போனீங்க
அதை இஇன்னும் சொல்லலையே
அதுதானே அதுதானே
நான் எங்க தொலைந்து போனேன்
நானாய்த் தான் தொலைந்தேனா?
உருவற்றுப் போனேனா?
என்னை யாரும் தொலைத்தாரா?
மாயம் என்ன நிகழ்ந்தது
நான் எங்கே?
நான் எங்கே?
எங்கே நான்?
என்னங்க
குழந்தைகளுக்கு நரிவிரட்டுகிற மாதிரி
சுழிக்கிறீங்க சிரிக்கிறீங்க
கனாக் கண்டீங்களா...?
என்ன நானா?
கனவா?
அப்படியானால் மீதி...?


தமிழ் ஆராய்ச்சி குழுமத்தில் வெளியிடப்பட்ட செய்தி இது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழுகிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் அவர்களின் சரியான எண்ணிக்கையை அந்த நாட்டு மக்களின் வழி பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் இது. மின் அஞ்சலில் வந்த பட்டியலை தமிழம் வலை பார்வையாளர்களுக்காக அப்படியே தருகிறேன்,

India: 63,000,000
Sri Lanka: 3,600,000
Malaysia: 1,500,000
Burma: 500,000
Canada: 300,000
Singapore: 250,000
United Kingdom: 150,000
Mauritius: 130,000
Rளூunion: 126,000
Italy: 100,000
United States: 100,000
Germany: 60,000
South Africa: 60,000 True figure 500,000
France: 60,000
Switzerland: 35,000
Australia: 30,000 True figure 100,000
Norway: 12,000
Denmark: 10,000
Sweden: 8,000


பொங்கல் வாழ்த்து


தைமகள் வருகிறாள்- கவிதை
தமிழ்மகள் தருகிறாள்
மைமகள் விழிகளில் - காதல்
மகிழ்வினைப் பெறுகிறாள்

நற்சுவை சேர்த்திடும் - வாழ்வில்
நன்னெறி சூழ்ந்திடும்
சொற்சுவைப் பாட்டினில் - பொங்கல்
சுடச்சுட மணந்திடும்

வள்ளுவர் ஆண்டினைத் - தோழர்
வாழ்த்திக் கொண்டாடுக
தெள்ளிய குறளினைக் - கற்றுத்
தேறி முன்னேறுக.

நம்மின மேன்மையை - மின்னும்
செம்மொழிச் சீரிமையை
அம்புவி சூழுலகு - போற்றி
அணிந்திடும் இனிமையை

காட்டினில் மேட்டினில் - உழைத்துக்
களைத்த்வர் களிக்கவே
மீட்டிடும் இசையெனப் - பொங்கல்
விளைந்திட வருகவே.

காரிருள் போக்கிடும் - காலைக்
கதிரவன் கதிர்களே
சீரருள் தேக்கிடும் - இன்பச்
செந்தமிழ் நெறிகளே

நாள் நீ பெரிதென - நாளும்
நவின்றது போதுமே
தேன்தமிழ் பெரிதென - நன்றே
தெளிந்து நீ ஓதுமே.

ஒற்றுமை நாட்டுக - இனப்
பற்றினை ஊட்டுக
நற்றுணை தமிழெனக் - கொள்கைப்
பொற்புரை சூட்டுக

அன்பொளி ஏற்றுக - தூய
பண்பொளி சாற்றுக
இன்மொழி நம்மொழி - தமிழின்
எழிலினைப் போற்றுக

பொங்குக நல்லறம் - என்றும்
தங்குக புகழ்ச்சரம்
விஞ்சுக தமிழ்மறம் - உலகோர்
கொஞ்சுக தமிழ் ஓர். வரம்.

கி.பாரதிதாசன் - கம்பன் இதழ்


காலம்

அந்தச் செடியில் மொட்டுகள் முகிழ்ந்தன
ஒரு மொட்டு சொன்னது செடியிடம்

"நான் மட்டும் பூக்க மாட்டேன்
பூத்தால் உதிர வேண்டும்
உன்னைப் பிரிய வேண்டும்
மொட்டாகவே விட்டுவிடு என்னை மட்டும்"

பூக்கும் காலம் வந்தது
எல்லாம் பூத்தன
அந்த மொட்டு தவிர....

உதிரும் காலம் வந்தது
எல்லாம் உதிர்ந்தன.
அந்த மொட்டும் உதிர்ந்தது - மொட்டாகவே.

உடுமலை - செந்தில்


வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா ?


வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா
இல்லை போராடுமா?
கன்னி மயிலே நாட்டைப் பார்த்தாடும்மா
நீயும் போராடம்மா.

இசை வேண்டுமா ஈழப் போரையே பாடு
ஈழத்தை நினைத்தே நீ தாளத்தைப் போடு
திசை நாலும் அதிர நீ தீம் தீம் என்றாடு
தேடம்மா உன்மண்ணில் விடுதலை தேடு

கால்களை இழந்தாள் பார் களத்திலே ஓரு மங்கை
கண்ணே சொல் எதுக்கடி உன் காலில் சலங்கை
ஈழம் வாழ் கலைகளைப் படைக்கலன் ஆக்கு
எதிரியை நேர் நின்று தாக்கடி தாக்கு.

கோயிலில் ஆடிய காவடி முன்னே
குண்டுகள் வெடித்தன பாரடி கண்ணே
ஆயிரம் புயலாய் உன் வீரத்தைக் காட்டு
அருந்தமிழ் ஈழத்தின் மானத்தை நாட்டு,

காசி ஆனந்தன்எமக்கு வந்த - நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை


()

(o) 9-12-07 புதுச்சேரி - தமிழ்க் கணினிப் பயிற்சி - இணையதளங்களில் தமிழில் எழுதும் பழக்கமும் தமிழ் மொழியின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வலைப்பதிவுகள் எனப்படும் பிளாக்குகளில் எழுதும் வலைப்பதிவர் சேர்ந்து நடத்தும் - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - அமைப்பின் சார்பில் தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு புதுச்சேரியில் சற்குறு உணவகத்தில் 9-12-07 அன்று நடந்தது. அதில், தமிழில் கணினி எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும். தமிழில் உள்ள கணினி மென்பொருள்கள் மற்றும் இணையதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்றும் விளக்கிப் பயிற்சியளிக்கப்பட்டது. சுமார் 130 தமிழ் கணினி ஆர்வலர்கள் கலந்து கொண்டு நாள் முழுக்க இருந்து பயிற்சி பெற்றனர். முனைவர்கள் மு. இளங்கோவன் மற்றும் நர். இளங்கோ - தமிழா முகுந்த் - க.அருணபாரதி, மா.சிவக்குமார், உபுண்டு ராமதாசு, ஓசைச் செல்லா. பிரேம் குமார். தூரிகா. வெங்கடேஷ் - உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் திரு. இராதாகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு பொன்னவைக்கோ ஆகியோர் கலந்து கொண்டனர், பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழும், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாகத் தமிழ்க் கணினி மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடும் சிறப்பு மலரும் வழங்கப்பட்டன. நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இரா. சுகுமாரன், ம.இளங்கோ, வீரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

(o) 12-1-2008 பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டி - தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா - பேச்சுப்போட்டி - பாட்டுப் போட்டி - ஓவியப்போட்டி - கோலப்போட்டி - ஆகியவற்றை உள்ளடக்கியதாக நடைபெற்றது. பொங்கல் வழங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

(o) 20-1-2008 கோபி - பொங்கல் விழா - திருவள்ளவர் நாள் விழா கோபி தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

(o) 24-1-08 தேனி மலர் மண்டபம்- மணல் கொள்ளைத் தடுப்பு மாநாடு. பங்கேற்போர் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ச.மெல்கியோர், தியாகு, வைகோ, தா.செ.மணி, நிலவன் மற்றும் பலர. தமிழக வளம் காக்கத் தமிழர்களே திரளுவீர் - வரவேற்புக் குழு.

(o) 25-1-08 தஞ்சை - தலைமை அஞ்சலகம் மற்றும் சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் - இடத்தில் த.தே.பொ.க. சார்பில் இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும் - ஆங்கிலச் சொற்களைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061