இதழ் எண் : 73
16 பிப்ரவரி 2008


அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் 276 தமிழ் அறிஞர்களின் புகைப்படப் பட்டியலை உருவாக்கியுள்ளேன். பல மணித்துளிகளை இதற்காகவே செலவிட நேரிட்டது. இருந்தாலும் இது வரலாறு காட்டும் என்று நம்புகிறேன். புகைப்படங்களில் விடுபட்ட தமிழறிஞர்கள் இருக்கலாம். அப்படி இருப்பின் அருள்கூர்ந்து தகவல் தரவும். படங்கள் அனுப்பவும். திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், ஒளவையார், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் - எனத் தற்பொழுது நாம் காணும் படங்கள் அனைத்தும் கற்பனையாக வரைந்தவையே. அவர்களது செயற்பாட்டினை உள்வாங்கி அது வெளிப்படும் வகையில் படம் அமைத்தனர் நம் முன்னோர்கள். ஏனெனில் படங்களைக் காட்டும் பொழுது அவர்களைப் பற்றிய செய்தி படிப்பவருக்குள் கூர்மையாகச் செல்லும். இந்த வரிசையில் சங்ககாலப் புலவர்கள் - மற்றும் விடுபட்ட படங்களையும் வரைய வேண்டும் என்று நினைக்கிறேன். (அணிலாடு முன்றுறையனார் - அணில் நிற்பது போலவும் புலவர் கண்டு எழுதுவது போலவும் படம், காக்கைப் பாடினியார் - காக்கை படத்துடன் பா இயற்றும் பெண்புலவர் படம் - இப்படி நிறைய செய்திகளைத் திரட்ட வேண்டும் - தமிழ் அறிஞர்கள் இதற்கு உதவவேண்டும்)

இதற்கான காலக்கெடு - ஓர் ஆண்டு என நிர்ணயித்துக் கொண்டு இந்தப் பணியைத் தொடங்குகிறேன். தமிழம் வலையின் பார்வையாளர்கள் அருள்கூர்ந்து உதவவும். படங்களை அனுப்பலாம். படம் வரைபவர்களை தமிழம் வலையோடு இணைத்து வைக்கலாம். கருத்துகளை தரலாம்.

ஒரு வாரத்திற்கு முன்பு துபாயிலிருந்து வந்திருந்த நண்பர் வ.பாரத் என்பவரைச் சென்னையில் சந்தித்து உரையாடினேன். தமிழ்ப் பள்ளி தொடர்பாகவும், தமிழர்கள் முன்னேற்றம் தொடர்பாகவும் அவர் கூறிய கருத்துகள் உயர்தரத்தவை. நம் இளைஞர்கள் சிறப்பாகச் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள், அவர்களை நாம் அன்போடு அரவணைத்து வாழ்த்தவேண்டும், அப்பொழுது மிகப் பெரிய வெற்றி நம் தமிழுக்குக் கிடைக்கும்,

தமிழ் நெட்டோடு தொடர்புடைய அமல்சிங் என்ற நண்பர் இலண்டனிலிருந்து பேசினார், தமிழ் கற்பித்தல் தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்டது வாழ்த்துதற்குரியது, நிமிடத்துளிகளில் ஆர்வமுள்ள தொடர்பாளர்களுடன் தொடர்பு கொண்டு இணைக்கும் இவரது பண்பு கிடைத்தற்கரியது. வாழ்த்துகிறேன்,

கணினித் தொழில் நுட்ப நண்பர் கார்த்திக் தற்பொழுது சென்னையில் இருக்கிறார். கைபேசியில் சினிமாப்பாடல்களை பதிவு செய்து செல்லுமிடங்களிலெல்லாம் - பொழுது போக்கை விதைப்பது கண்டு வருந்திய அவர் - கைபேசியில் தமிழுணர்வுள்ள உயர்தரமான பாடல் காட்சிகளை MP4 - தொழில் நுட்பத்தில் பதிவு செய்வது எப்படி என்ற தொழில் நுட்பத்தை அன்போடு விளக்கினார்,

தமிழுக்காக நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் பணியை தமிழம் வலையோடு பகிர்ந்து கொண்டால் நம் அனைவரது செயற்பாடும் மேலும் வீறுகொண்டதாக ஆகும் அல்லவா?

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
16 - 02 - 2008


தமிழ் அலை வழங்கும் - ஒரு குடியின் பயணம் - குறும்படம் - இசாக் -


குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் - நடுவீதித் திண்ணையில் அமர்ந்து கொண்டு அரட்டையடித்து பொழுது போக்கும் கணவன் - ஏழ்மை நிலை - நகரத்திற்குச் சென்று - குழந்தைக்கு வைத்தியம் பார்க்க உரிய நேரத்திற்குச் செல்ல முடியாத வறுமை, சூழல்.....

மருத்துவ மனையில் குழந்தை இறந்து விடுகிறது. நகரத்திலிருந்து தன் வீட்டுக்கு வர ஒரே வழி பேருந்துப் பயணம்தான். பேருந்தில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இறந்த குழந்தையை தோளில் சுமந்து, துக்கத்தை நெஞ்சுக்குழிக்குள்ளேயே அழுத்தி வைத்துக் கொண்டு பயணித்து, ஊர் மண்ணை மிதித்துக் கீழே இறங்கியதும் - குழந்தையைக் கிடத்தி வெடித்துச் சிதறும் தாய் - மறக்க முடியாத காட்சித் தொகுப்பு. துபாய் மண்ணில் பணியாற்றும் நம் தமிழ் இளைஞர்கள் - தமிழ்ச் சூழலில் எடுத்த கிராமிய குறும்படம் இது. வாழ்த்துகள்.

(படத்தை வெட்டி ஒட்டும் பொழுது கவனம் வேண்டும். மருத்துவ மனையில் இறந்ததாகக் காட்டப்படும் குழந்தை - வயிறு அசைந்து மூச்சு விடும் காட்சிக்கான 5 பிரேம்களை வெட்டியிருக்க வேண்டும்)


யாத்தி சிறுகதை

- மீனா முத்து -


பெரிய வீடு அது. வெளி கேட்டில் இருந்து உள்ளே வந்தால் இரண்டு கார்கள் நிறுத்தும் அளவு நீளமான வாசல். வரிசை வீடுகளில் கடைசி வீடு. ஆதலால் வீட்டின் வலது பக்ம் சுற்றிலும் பெரியதாக இடம். தானாக இயங்கும் கருப்பு நிற கேட். அதை ஒட்டி வீட்டின் சுற்றுச் சுவர். கட்டையாக பாசி படிந்த கான்கிரீட் சுவரின் மீது முனைகள் கூறாக வேல் போன்ற வடிவத்தில் கறுப்பு நிறக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் துரு ஏற ஆரம்பித்திருந்தது.

இடப்புறம் பக்கத்து வீட்டுக்கும் இந்த வீட்டிற்கும் பொதுவான சுவர். அதிலும் வலது பக்கத்தில் உள்ளது போல் கம்பிகள். உள்புறத்தில் சுவரை ஒட்டினாற் போல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் பல வண்ணங்களில் பொகைன் வில்லா எனும் காகிதப்பூச் செடிகள். சரியாகத் தண்ணீர் விடாமல் பூக்களெலலாம் காய்ந்து கொட்டியபடி. கேட்டின் ஓரத்தில் ரம்புத்தான் மரம் நிறைய பூ. காய் பழங்களுடன், மரத்தைச் சுற்றிலும் இலைகளும், பூக்களும் பிஞ்சுகளுமாக உதிர்ந்து, எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளமுமாகக் கிடந்தன.

யாத்தி அந்த வீட்டிற்கு வந்தவுடன் அவளின் உழைப்பில் துரு ஏறியிருந்த கம்பிகள் மீண்டும் கறுப்பு வண்ணம் அடிக்கப்பட்டு. பாசி படிந்திருந்த சுவர்கள் வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவப்பட்டு, தினமும் தோட்டம் முழுவதும் கூட்டி, செடிகளுக்குத் தண்ணீர் விடப்பெற்று, இப்பொழுது புதுப் பொலிவுடன் திகழத் தொடங்கின. அந்த வீடும். அதன் சுற்றுப்புறமும். இரண்டரை வருட ஒப்பந்தத்தில் ஏஜென்சி மூலமாகப் பத்தொன்பது வயது இந்தோனேசியப் பணிப்பெண் யாத்தி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது.

***************

வெளியில் துணி காயப்போடுவதற்கென்று கட்டியிருக்கும் கொடியை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள் யாத்தி. பக்கத்தில் துவைத்த துணிகள் கூடை கொள்ளாமல் நிரம்பி வழிந்தன. கயிற்றில் தூசி ஒட்டியிருந்ததால் துணி அழுக்காகி விடுமே. அதனால் தினமும் அதைத் துடைத்த பிறகே காயப் போட வேண்டும் என்பது லிசாவின் கட்டளை.

ரம்புத்தான் மரத்தில் காய்கள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் மாறி விட்டிருந்தன. இன்னும் சில தினங்களில் முழுக்கப் பழுத்துவிட்டால், மரத்தின் கிளைகள் முழுவதும் கைக்கெட்டும் தூரத்தில் கூட, முட்டையின் வடிவத்தில் எலுமிக்சை அளவில் மேல் தோலில் மொசு, மொசுவென்று அதன் முடியுடன் கொத்தக் கொத்தாய் பழுத்துத் தொங்கும் பழங்களின் ரத்தச் சிவப்பு நிறமும், இலைகளின் ஆழ்ந்த பச்சை நிறமும் தெருவில் போகிறவர்களின் கண்களைப் பறிக்கும். இதை ஒரு நாளாவது ரசித்திருப்பாளா இந்த லிசா ?

கேட்டின் அருகே சந்தன நிறத்தில் டவுசரும் வெள்ளை நிறத்தில் மேல் சட்டையும் அணிந்து, சாப்பிடவே மாட்டாளோ என்பது போல் ஒல்லிக் குச்சியாக சிரிப்பை மறந்த முகத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு - என்னடா தவறு கண்டுபிடிப்போம் - என்று உன்னிப்பாய், யாத்தி துடைப்பதையே கவனித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இதையெல்லாம் ரசிக்க எங்கே நேரமிருக்கிறது?

எதிர் வீட்டில் குடியிருப்பவள் லிசா யாத்தியைப் படுத்தும் பாட்டை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இன்றும் அதே காட்சி - இப்படி எங்கேயாவது கொடியை யெல்லாம் துடைத்துகிட்டு இருப்பாங்களா? என்ன கிறுக்கோ இவளுக்கு? - என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். லிசாவுக்கு இவர்களோடெல்லாம் பழகுவதற்கே நேரமிலலை. எத்தனையோ வருடங்களாக அங்கு வசிக்கிறார்கள், என்றாலும் இதுநாள் வரை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் யாருடனும் பழக்கம் இல்லை அவளுக்கு. அப்படியே எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்படி வந்தாலும் அவர்கள் சிநேகபூர்வமாய்ச் சிரிக்க, இவளோ அதைக் கவனிக்கவே மாட்டாள், அடுத்த முறை அவர்கள் இவளைக் கண்டும் காணாத மாதிரி போய்விடுவார்க்ள்.

***************

ரொம்ப நேரமாக அழைப்பு மணியை அழுத்திய தண்ணீருக்கான மீட்டர் பார்க்க வந்த ஆள், சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு, பிறகு உத்தேசமாக ஒரு தொகையை எழுதி, சுவரில் பதித்திருந்த மெயில் பாக்ஸில் போட்டுவிட்டுச் சென்றான்.

அழைப்பு மணியின் சத்தம் அயர்ன் செய்து கொண்டிருந்த யாத்திக்குக் கேட்டு, அவசரமாக வெளியே வருவதற்குள், அவன் அடுத்த வீட்டிற்குள் நுழைந்திருந்தான். குளித்துக் கொண்டிருந்த எசமானி லிசாவுக்குத் தெரிந்தால்? அப்போதே பயம் அவளைக் கவ்விக் கொண்டது.

அவன் போட்டுவிட்டுப் போயிருந்த பில்லை எடுத்துக் கொண்டு திரும்பியவளின் பார்வை, கேட்டிற்கு வெளியே குப்பை லாரி வந்து சென்றதற்கான அடையாளமாக காலியான குப்பைத் தொட்டி ஒரு பக்கமும், மூடி ஒருபக்கமுமாகக் கிடப்பதைக் கவனித்ததும். நல்ல வேலை மேடம் பார்க்கவில்லை - என்று நினைத்துக் கொண்டவளாக பரபரவென்று போய் அதைச் சரி செய்துவிட்டு உள்ளே வந்தாள்.

அப்போதுதான் நினைவு வந்தது. - அய்யோ அயர்ன் பாக்ஸ் - அவசரத்தில் மின்சார இணைப்பைத் துண்டிக்காமல் அப்படியே வைத்து வந்தது நினைவுக்கு வர தலைதெறிக்க ஓடினாள். அதற்குள் பாதி அயர்ன் செய்த நிலையில் லிசாவோட சட்டையின் மார்புப் பகுதித் துணி எரந்து சுருங்கி விட்டிருந்தது.

அந்த நிமிடத்தில் உடல் முழுக்க அச்சம் பரவ சட்டையைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது - ஏய் காலிங் பெல் சத்தம் கேட்டதே யார்? - என்று கேட்டபடி அங்கு வந்த லிசா - பேயறைந்தவள் போல் நிற்கும் யாத்தியைப் பார்த்ததும் - என்னாச்சு ? என்று கேட்டவளின் பார்வை யாத்தியின் கையில் எரிந்து சுருங்கிய நிலையில் இருந்த சட்டையின் மேல் பட்டது.

பதற்றத்துடன் சட்டையைப் பிரித்துப் பார்த்த லிசா, கோபமாக அதை யாத்தியின் முகத்தில் வீசி எறிந்துவிட்டு, யாத்தியின் முகத்தில் ஓங்கி ஓர் அடி வைத்தாள், நிலை தடுமாறி விழப்போனவளைப் பிடித்துப் பக்கத்தில் இருந்த அந்த சூடான அயர்ன்பாக்ஸை எடுத்து - புதுச் சட்டை, அதுக்குள் எரித்துவிட்டாயே - இனிமேல் இப்படிச் செய்வாயா? - என்று சொல்லிக் கொண்டே --- மேடம் --- வேண்டாம் மேடம் --- இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் விட்டு விடுங்கள் --- என்று யாத்தி கதறக் கதற அவளின் சட்டையின் மேல் மார்புப் பகுதியல் வைத்து அழுத்தினாள்.

தோல் பொசுங்கிய வலி தாளாமல் மார்பைப் பிடித்தபடி அந்தப் பெண் துடிக்கத் துடிக்க சூடு வைத்த திருப்தியில் ஏனென்று கேட்காமல் போயே போய் விட்டாள் லிசா.

அன்று இரவும் அடுத்தடுத்த நாட்களிலும் எரிச்சல், வேதனை தாளமுடியாமல், அதோடு சற்றும் ஓய்வில்லாமல் வேலைகளையும் பார்த்துக் கொண்டே யாத்தி பட்டிருக்கும் பாடு பயங்கரம்..

இன்று அந்த சின்னப் பெண்ணின் மார்புப் பகுதி சுருங்கி மாட்டுக்குச் சூடு வைப்பது போல் என்றுமே அழியாத வடுவாக அயர்ன்பாக்ஸின் அடையாளம்.

லிசாவின் இந்தக் கொடுமைகளை யாரிடமும் சொல்வதற்கோ. எதிர்ப்பதற்கோ வழியுமில்லை. தைரியமுமில்லை யாத்திக்கு, லிசாவின் கணவனோ பிசினெஸ் விடயமாகப் பாதிநாள் வீட்டில் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் இதையெல்லாம் அவன் கண்டுகொள்வதே இல்லை. மேலும் அவனும் நல்லவனல்ல. ஆத்திரம் வரும் சமயத்தில் இவளை அடிப்பவன்தான் அவன். அவனிடம் எப்படி இரக்கத்தை எதிர்பார்க்க முடியும் இவள் ?

இந்தோனேசியாவில் இருக்கும் அம்மா அப்பா சகோதரியுடன் தொலைபேசி வழி பேசவும் முடியாது. அதையும் எசமானி பூட்டி வைத்து விட்டாள். கடிதம் எழுதலாம் என்றால் அதையும் படித்துவிட்டுத்தான் அனுப்புவாள். அதனால் இரண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வேலை செய்யும் இந்தோனேசியப் பெண்ணிடம் கடிதம் கொடுத்து அனுப்பியதை லிசா கண்டுபிடித்ததில் இருந்து அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

லிசா தினமும் யாத்தியுடன் சண்டையிட்டுக் கத்துவது அக்கம் பக்கத்து விடுகளில் இருப்பவர்களுக்கு - காலையிலேயே ஆரம்பித்து விட்டாளா? - என்று எரிச்சல் படும் அளவிற்குப் போய்விட்டது.

பலதடவை யாத்தி அழுதுகொண்டே எசமானிக்குப் பதில் சொல்வதுகூட கேட்கும். லிசாவின் குணம் அறிந்திருந்த அவர்கள் வீட்டிற்குள் நடக்கும் கொடுமை தெரியாமலேயே வெளியில் நடப்பதை வைத்து - அதற்கே - பாவம் அந்தப் பெண். இவளிடம் வந்து மாட்டிக் கொண்டது - என்று நினைத்துக் கொண்டார்கள். முழுவதும் தெரிந்தால் இந்த இரக்கமில்லாதவளிடம் இருந்து யாத்தியை யாராவது காப்பாற்றி இருப்பார்களோ? இல்லை --- நமக்கேன் வம்பு என்று இருந்திருப்பார்களோ தெரியவில்லை.

யாத்தியும் அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் மீதம் இருக்கும் ஆறு மாதங்கள் எப்போது முடியும் அதுவரை இவளிடம் எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று இவளிடம் இருந்து விடுதலை கிடைக்கும்? என்று அந்த நாளை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள் யாத்தி.

******************

டைனிங் டேபிள் முன்னே அமர்ந்திருந்தாள் ஜோ. அவன் கையில் இருந்த கிளாசில் கலங்கலான நிறத்தில் தண்ணீர். அதைக் குடித்தவன் கோபத்துடன் கிளாசை நங்கென்று மேசைமீது வைத்தான். இயல்பான சுவை மாறி அலண்டு கிடந்த தண்ணீர்தான் அவனின் இந்தக் கோபத்திற்குக் காரணம்.

வரவர ஒரு வாய்த் தண்ணீர் கூடக் குடிக்க முடியலை, கவனின்னு எத்தனை தடவை சொல்லிட்டேன், ஏய் லிசா,,,ரொம்பவும் விலை உயர்ந்த ஃபில்டரன்னுதானே இதை மாட்டனும்ன்னு சொன்னே? என்ன ஃபில்டர் இது? வாங்கினதிலிருந்தே கழுவலியா? இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை சுத்தம் செய்யணும்னு வேலைக்காரி கிட்ட சொலலி இருக்கியா? என்று சத்தம் போட்டவன் - ச்சேய் - என்றபடி அவன் அமர்ந்திருந்த நாற்காலியைப் பின்புறமாகச் சர்ரென்று சத்தத்துடன் தள்ளி விட்டு எழுந்து போய் விட்டான்.

கணவனுக்கு பதில் சொல்லாமல் விடு விடு வென்று சமையலறைக்குள் வந்த லிசா, அங்கே ஏதோ கழுவிக் கொண்டிருந்த யாத்தியின் தலையில் ஓங்கிக் குட்ட, வலி தாங்காமல் - அல்..லம்மா- என்றபடி சோப் நுரையோடு கையைக் கூடக் கழுவத் தோன்றாமல் தலையைப் பிடித்தபடி திரும்பியவளிடம் --சொல்லச் சொல்லக் கேட்காமல் என்ன செய்கிறாய்? நேத்தே சொன்னேனில்ல -- ஃபில்டரை சுத்தம் செய் என்று... செய்தியா இல்லையா ?

-யா மேம் - என்று கண்ணீருடன் தலையை ஆட்டினாள் யாத்தி.

யாத்திக்கு இதெல்லாம் பழகிவிட்டது. என்றாலும் லிசா தலையில் குட்டும் போது, முகத்தில் அறையும் போது - கையில் என்ன கிடைத்தாலும் அதைக் கொண்டு தாக்கும் போதும் ஏற்படும் வலியின் வேதனையை லிசாவின் மிரட்டலுக்குப் பயந்து அடக்க நினைத்தாலும் அவளையும் மீறி வலி தாங்க முடியாமல் அவ்வப்போது இப்படி கண்ணீர் வந்து விடும்.

- எல்லாத்துக்கும் அழுதின்னா இன்னும் குட்டுவேன், நிறுத்து உன் அழுகையை - என்று லிசா கையை ஓங்க - எங்கே மறுபடியும் குட்டுவாளோ என்ற பயத்தில் சட்டென்று தலையில் இருந்த கையை எடுத்துக் கண்ணைத் துடைத்துப் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் யாத்தி.

பொய் சொலலாதே. நான் பாக்கணும். எப்படிச் சுத்தம் பண்ணியிருக்கேன்னு. இப்பவே திற - என்று கோபமாகக் கத்தினாள்.

யாத்தியின் முகம் பயத்தில் வெளிறியது. அதை அவள் கவனிப்பதற்குள் - பள்ளிக்குக் கிளம்பிய அவளின் மகன் சாம் - மாம் எனக்கு நேரமாச்சு வர்றீங்களா, இல்லையா? என்றபடி அவசரப்படுத்த - இதோ வரேன் - என்றபடி வேறு வழியில்லாமல் - இரு இரு உன்னைத் திரும்பி வந்து பாத்துக்கறேன் - என்பது போல் கண்ணாலேயே யாத்தியை மிரட்டிவிட்டு வெளிறே விரைந்தாள் லிசா.

மாதம் ஒரு தடவை ஃபில்ட்டரை கழற்றி சுத்தம் செய்யணும். இந்த முட்டாள் யாத்தி கழுவாம இருந்துட்டாளோ ? ஒரு வாரமோ, இரண்டு வாரமோ நல்லாயிருக்கு, மீண்டும் அதே கலங்கல். அதே வாடை. இவ ஒழுங்கா கழுவலை. அதுதான். வரட்டும். போற வழியெல்லாம் அதே எண்ணம்தான். வேலைக்காரப் பெண்ணை நினைக்கும் போதே புசு, புசுவென்று ஆத்திரம் பொங்கியது லிசாவிக்குள்.

மகனைப் பள்ளியில் விட்டுத் திரும்பியவள். வீட்டருகே வந்ததும், தன்னிடமிருந்த தானாக இயங்கும் விசையைத் தட்டிக் கதவைத் திறந்து,காரை உள்ளே செலுத்தி நிறுத்திய வேகத்தில் ---யாத்தீஈஈஈ - எனக் கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.

எந்தப் பதிலும் வராதது கண்டு மேலும் ஆத்திரத்தோடு நேராகச் சமையல் கட்டிற்குச் சென்றாள். அங்கும் யாத்தியைக் காணோம். சாமான்கள் கழுவியது போக மீதம் சோப் போட்டபடி... வெளியில் துவைக்கும் மிசினில் இருந்து எடுத்த துணிகள் இன்னும் காயப்போடாமல்.... --ஏய் யாத்தீஈஈஈ - என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டின் எல்லா இடமும் பார்த்துத் தேடிக் கொண்டேவர, அப்போதுதான் அவளுக்கு உறைத்தது வீட்டிள் நிலவிய அமைதி. பகீரென்றது அவளுக்குள். அங்குமிங்கும் ஒடினாள். யாத்தியை எங்கும் காணவில்லை. தொலைபேசியில் ஜோவைத் தொடர்பு கொண்டு உடனே அவனை வரச் சொல்லிவிட்டுப் பதற்றத்தோடு காத்திருந்தாள்.

******************

அழுது கொண்டே இருந்தாள் யாத்தி...

ஊரின் மையப் பகுதியில் எங்கு போவது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தவள் போலீசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தற்பொழுது சிகிட்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். இரண்டு வருடங்களாக அடிபட்டு அடிபட்டு, ஏற்கெனவே உருக்குலைந்திரந்த அவள முகம், அழுததில் மேலும் விங்கி விகாரமாய் இருந்தது. தலைமுதல் கால்வரை உடம்பெல்லாம் காயங்கள். அவளை விசாரித்தபோது -- எசமானி என்னை அடித்துச் சூடு வைத்துச் சித்தரவதைப் படுத்தினாள். எசமானரோ அவர்களின் வயது வந்த பையனின் முன் என்னை அடித்து அவமானப் படுத்துவார். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். இதை விட்டால் எனக்கு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால்தான் அப்படிச் செய்தேன். இது தெரிந்தால் எசமானி என்னை என்ன வேண்டுமானாலும் செய்வாள். அதற்குப் பயந்துதான் வீட்டைவிட்டு ஓடி வந்தேன். எனக்கு எதுவும் வேண்டாம். தயவுசெய்து என்னை என் பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள் - என்ற அவளைப் பார்ப்பதற்கே பரிதாபமாயிருந்தது.

******************

பலவிதமான சந்தேகங்கள். தீடீரென்று எங்கே போயிருப்பாள் ? எப்படிப் போனாள்? முன்பக்கமும், பின்பக்கமும் கதவுகள் பூட்டியபடி இருக்கின்றன. அப்புறம் எப்படி? பின்புற்ம் சென்று பார்த்தாள். தோட்டத்தின் மூலையில் ஒரு ஸ்டூல். அருகே சென்று பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது - அதில் ஏறிக்குதித்து ஓடியிருக்கிறாள் என்று. பின்பக்கம் உள்ள வீட்டில் யாரும் புழககம் இல்லை. குதித்து ஓடும் போது யாரும் இவளைப் பார்த்திருக்க முடியாது. அப்படியே பக்கத்து வீடுகளில் யாரும் பார்த்திருந்தாலும் அதை இவளிடம் சொல்ல மாட்டார்கள் என்பது இவளுக்குத் தெரியாது.

ஏதோ சந்தேகம் வர, ஃபில்டரைத் திறந்துதான் பார்ப்போமே என்று அதன் மேலே இருந்த ஸ்குரூவைக் கழட்டி மேல் மூடியை நீக்கினாள். உள்ளே சுற்றிலும் மெல்லிய வடிகட்டிபோல அமைக்கப்பட்டு அதன் நடுவில் தண்ணீர் ஊற்றுவதற்கென்று கொஞ்சம் பெரிய குவளை ஒன்று மூடியுடன் இருக்கும். அதைத் திறந்து மெதுவாக எட்டிப் பார்த்தவள் அதிர்ச்சியில் ----ஓ மைகாட் ----என இரு கைகளாலும் வாயைப் பொத்தக் கொண்டு செய்வதறியாது அப்படியே சரிந்து விட்டாள்.

அவசர, அவசரமாகத் தனது விலையுயர்ந்த காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு, உள்ளே ஓடினான் ஜோ. லீ சா...லீ சா...என்று கூப்பிட்டுக் கொண்டே பின்புற்ம் ஓடினான். குளியலறையில் இருந்து சத்தம் வர, அங்கு போய்ப் பார்க்கும்போது - உமட்டி உமட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் லிசா. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. லிசா என்ன நடந்தது? நிஜமாகவே ஓடிப்போய்விட்டாளா அந்தக் கழுதை? சொல், என்ன நடந்தது? திரும்பத் திரும்ப அவன் கேட்க, இவளால் பதில் சொல்ல முடியவில்லை. தடுமாறியபடி ஃபில்டரை நோக்கிக் கையைக் காண்பித்தாள். அதை எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

உள்ளே, குப்பென்று முகத்தில் அறைந்த துர்வாடையினூடே கருஞ்சிவப்பு நிறத்தில் மிதந்து கொண்டிருந்தது சானிடரி நாப்கின் ஒன்று.

நன்றி - யுகமாயினி - இதழ் எண் 4 - சனவரி 2008எமக்கு வந்த - நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை


()

27-1-08 திருப்பூர் நிழல் பத்திரிகையும், தமிழ்நாடு குறும்படப் படைப்பாளிகள் சங்கமும் இணைந்து நடத்திய ஆவணப்பட, குறும்படப் போட்டி மற்றும் படங்கள் திரையிடல் நிகழ்வு.

3-2-08 செஞ்சி - தமிழிசையறிஞர் சுரும்பியன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு. தமிழிசையை ஆய்வு நோக்கில் வரையறுத்து பள்ளிகளுக்குப் பாடல் அமைத்துத் தந்த உயரிய தமிழறிஞர்.

9-2-08 மதுரை - தேமதுரத் தமிழோசை இதழின் எட்டாம் ஆண்டு தொடக்கவிழா, பாவாணர் அவையம் தொடக்க விழா, பாவாணர் பிறந்தநாள் விழா, பழ,நெடுமாறன், தமிழண்ணல் கலந்து கொண்ட நிகழ்வு இது.

16-2-08 பொள்ளாச்சி கம்பன் கலைமன்றம் - ஆற்றங்கரை ஊரும் ஓர் ஆசிரியரும் நூல் வெளியீட்டு விழா. எழுதியவர் உடுமலை பழனியப்பன். எழுதப்பட்டவர் சு.தருமராசு ஆசிரியர்


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061