இதழ் எண் : 75
16 ஏப்பிரல் 2008


அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் நானோ தொழில் நுட்பம் பற்றிய சிறு குறிப்பினை இணைத்துள்ளேன். மேலும் இரட்டைக்கிளவி பற்றி மின்அஞ்சலில் வந்த செய்தியையும் இணைத்துள்ளேன். தங்கக்காசு பரிசு மழை என்று மக்களை ஏமாற்றும் வணிகர்களின் முகத்திரை இந்த இதழில் கிழிகிறது. தன் அருகில் உளள மனிதனையே அடித்துத் தின்ன விரும்பும் மனிதனை என்னவென்று சொல்வது? விலங்கினும் கீழாய் மனித நாகரிகம் தடம் புரண்டு ஓடுவதை உலக அளவில் காணமுடிகிறது. இதற்கிடையிலும் தன்முனைப்போடு நீச்சலிட்டு மேலெழுகிற நம் தமிழ் மக்களை நினைக்கும் பொழுது நெஞ்சு நிமிர்கிறது. தமிழருக்கென்று ஒரு நாடு அமைகிற பொழுது இந்தப் பதிவெல்லாம் வரலாறு ஆக்கப்படும். பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் தமிழன் மேலெழுந்து - பூமிப்பந்தில் - மனிதம் காட்ட வேண்டும் என்பதனையே தமிழம் வலை விரும்புகிறது. இந்த வகையில் அகதிகளாகச் சென்ற போதும் ஈழத் தமிழர்கள் தமிழர்களாக நிமிர்ந்து நிற்கிறார்கள். இந்த எழுச்சி வரலாறாகும். எனவே எம் தமிழினம் மேலெழ அனைத்துத் துறைகளிலும் வழி அமைப்போம்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
16 - 04 - 2008


தங்கக்காசு பரிசு மழைத் திட்டம் - ஓர் அபாய எச்சரிக்கை

சகாதேவன் விஜயகுமார்

கடந்த 14-2-2008 அன்று திருச்சி மாநகரத்தில் தொடங்கப்பட்ட ஒரு பண்பலை வானொலியின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் கவர்ந்திழுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவன் நான். என்னைப் போலவே என் நண்பர்கள் சிலரும் அதில் குறிப்பிட்ட தொகையை இழந்துள்ளார்கள். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பரிசுச் சீட்டுத் திட்டம் பெயர் மாற்றம் பெற்று மற்றொரு வடிவில் விசுவரூபம் எடுத்து வருகிறது.

பரிசுத் திட்டம், தங்கக்காசு பரிசு மழைத் திட்டம் - புற்றீசல்களாய் முளைத்துள்ள தனியார் பண்பலை வானொலிகளால் பகட்டாக அறிவிக்கப்படுகிறது. இவை தமது ஒலிபரப்பைத் துவங்கும் நாளன்று நான் முழுக்க நிகழ்ச்சிகளைக் கேட்டு நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

உதாரணமாக அந்நிகழ்ச்சியின் பெயர். நிகழ்ச்சித் தொகுப்பாளரின் பெயரையும் நேயர்கள் பெயர், முகவரியையும் -

அவர்களால் குறிப்பிடப்படும் சிறப்புத் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு பதிலளியுங்கள். நிமிடத்திற்கு ஒரு தங்கக் காசைத் தட்டிச் செல்லுங்கள் என்ற ஐந்து நிமிடங்களுக்கு ஓர் அறிவிப்பு செய்யயப்படுகிறது. இவ்வாறு காலை 5.00 மணிக்குத் துவங்கி இரவு 11.00 மணிவரை பரிசுப் போட்டிக்கான நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.

சாதாரணமாக கையடக்கத் தொலைபேசியில் ஒரு நிமிடத்திற்கு லேண்ட் லைனுக்கு ரூ1.20 காசு என்றால் வானொலிகளில் குறிப்பிட்ட தினங்களில் வழங்கப்படும் சிறப்பு இலக்க அழைப்பிற்கு விசேடக் கட்டணம் ரூ 6 நிமிடத்திற்கு அரவிடப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட இலக்கத்திற்கு நாம் அழைப்பை ஏற்படுத்தும் போது கணினியில் பதிவு செய்து வைக்கப்பட்ட ஒரு பெண் குரல் ஒலிக்கும். அவர் இவ்வாறு கூறுவார்.

தங்கக்காசு பரிசுப் போட்டியில் கலந்து கொள்ள எண் ஒன்றை அழுத்துங்கள். அழுத்தியவுடன் உங்கள் பெயர், முகவரி, நிகழ்ச்சியின் பெயர் அல்லது நிகழ்ச்சித் தொகுப்பாளரின் பெயரையும், தொடர்பு கொள்பவரின் தொலைபேசி எண் என்பனவற்றை -பீப்- ஒலிக்குப் பின் பதிவு செய்யவும் என்று அறிவுரை கூறி ஒலித்து முடியும். நாம் அறிவுரையை ஏற்று பதிவு செய்து விடுகிறோம்.

அடுத்து நாம் பதிவு செய்தது சரிதானா? என கணினியில் பதிவு செய்யப்பட்டது மீள் ஒலிக்கச் செய்யப்படும். அதைக் கேட்டுவிட்டு நாம் பதிவு செய்தது திருப்தியாக இருந்தால் மீண்டும் ஒன்றை அழுத்துங்கள். திருப்தி இல்லை எனில் எண் இரண்டை அழுத்துங்கள் எனத் தெரிவிக்கும். ( இரண்டை அழுத்தினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அந்நிலை எனக்கு ஏற்படவில்லை) திருப்தியாக இருந்தால் நாம் ஒன்றை அழுத்துவோம். அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் குரலில் நன்றி - தொடர்ந்து எமது வானொலியோடு இணைந்திருங்கள் என்று அவ்வானொலியின் குறியீட்டு இசையை ஒலிக்கும். அந்த இணைப்பை நாம் துண்டிக்க மீீண்டும் ஒன்றை அழுத்துங்கள் எனவும் அறிவுறுத்தப்படும். இணைப்பை நாம் துண்டித்துக் கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நமக்குத்தான் நட்டம்.

இவை யாவும் முடியும் தருவாயில் குறைந்த பட்சம் நாம் எவ்வளவு விரைவாக பேசுபவராயினும் ஒரு நிமிடத்தைக் கடந்து ஒன்றரை நிமிடங்கள் வரை ஆகிவிடும். கையடக்கத் தொலைபேசியில் 59 வினாடிகள் தாண்டி விட்டாலே இரண்டு நிமிடங்களுக்குரிய கட்டணம் அரவிடப்படுகிறது. ஆக இரண்டு நிமிடங்களுக்கு நாம் ரூ 12ஐ இழந்து விடுகிறோம். அடுத்த கட்டம் என்ன ?

நாம் எல்லோரும் அறிந்தது தானே? பதிவு செய்தாயிற்று. அடுத்து சம்பந்தப்பட்ட வானொலியிலிருந்து நம்மை அழைப்பார்கள் என்று நாள் முழுக்க நாம் காத்துக் கிடக்க வேண்டியதுதான். அவர்கள் அழைத்தால்தான் உண்டு. இல்லையேல் நமது காசு யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல சென்றுவிடும். இவ்விடத்தில் மற்றொன்றையும் நான் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதுதான் குறுஞ்செய்தி. குறுஞ்செய்தி மூலமாகவும் நிகழ்ச்சிப் போட்டிகளில் பங்கு பெறலாம் என்று அவ்வப்போது அறிவிப்பு ஒலிக்கும். இதில் குறிப்பிட்ட அம்சம் என்னவெனில் சாதாரணமாக ஒரு குறுஞ்செய்தியைத் தமிழ் நாட்டுக்குள் அனுப்பிப வைக்க 50 காசு என வைத்துக் கொள்வோம். இதுபோன்ற போட்டிகளில் பங்கு கொள்ள ரூ 2ம் இடத்திற்குத் தக்கவாறு ரு 3ம் அரவிடப்படும். இவ்வாறு அனுப்பப் படும் குறஞ்செய்திகளை தொடர்புடையவர்கள் பார்வையிடவாவது செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

குறுஞ்செய்திகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவதாகத் தெரியவில்லை. இதில் குறிப்பிடத் தக்க விடயம் என்ன வென்றால் குறிப்பிடப்படும் நாள் முழுக்கப் பல்லாயிரக் கணக்கில் குறுஞ்செய்திகள் வழங்கும் ஒரு தங்கக்காசு அரை கிராம் எடையுள்ளது மட்டுமே. சுமார் ஆயிரம் தங்கக் காசுகள் அவர்களால் வழங்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அவர்கட்கு ஆகும் மொத்தச் செலவு ரூ50 ஆயிரம் மட்டும்தான். ரூ 60 ஆயிரம் செலவிட்டுவிட்டு அவர்கள் வசூலிக்கும் தொகையோ இலட்சக்கணக்கில் மேலும் தொலைபேசி, குறுஞ்செய்திக் கட்டணங்கள் மூலமாகச் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு பங்குத்தொகை இவ்வானொலிகளுக்குக் கிடைத்து விடுகிறது.

சின்ன மீனைப் போட்டுத் திமிங்கிலம் அளவுக்குப் பெரிய மீனாகப் பிடித்து விடுகிறார்கள். இதனால் நேயர்கள் ஏமாற்றப்படுவதோடு நாள் முழுக்க அவ்வானொலியைக் கேட்கச் செய்வதன்மூலம் குறிப்பிட்ட தினத்தில் விசேடமாக விளம்பரத்தின் மூலமும் பெரிய பெரிய தொகை அவ்வானொலிக்குக் கிடைத்து விடுகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இது பகற் கொள்ளை அல்லவா?

நன்றி : சர்வதேச வானொலி மார்ச்சு ஏப்ரல் இதழ் 2008


நானோ தொழில்நுட்பம்

நன்றி : கே.பி.ஜனார்த்தனன் - அமுதம் - ஏப்ரல் 2008 இதழ்


எரிக் ட்ரெக்ஸ்டெர்

1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எழுத முடியாது? என்று கேட்டார். அதற்கான வழியையும் அவரே சொன்னார்.

குண்டூசித் தலையை 25000 மடங்கு பெரிதாக்கினால் அதில் எழுத இடம் பிறந்துவிடும் - அல்லது என்சைக்ளோபீடியாவை 25000 மடங்கு சுருக்கினாலும் இடம் போதுமானதாகிவிடும். அத்தனை மடங்கு சுருக்கிய பிறகும் கண் பார்க்க முடிகிற ஒரு சிறு புள்ளியில் 100 அணு இருக்கும் - அப்புறம் என்ன? பிளாஸ்டிக்கில் ஒரு மோல்ட் எடுத்து சிலிக்காவில் ஃபிலிம் எடுத்து மைக்ரோஸ்கோப்பில் படிக்க முடியும். அயான்களின் துணை கொண்டு டி.வி.யின் காதோட் கதிர்களைப்போல எழுதவும் முடியும்.

இப்படி உலகின் அத்தனை புத்தகங்களையுமே 3 சதுரமீட்டர் இத்தில் அடக்கிவிடலாம். இது ஒன்றும் புதிதல்ல என்றார் பெய்ன்மேன் - இயற்கையில் நாம் பார்க்கிற அத்தனை சிறிய ஆலவிதையில் எத்தனை செய்தி எழுதப்பட்டிருக்கிறது? மிகச் சிறிய செல்லில் மனித உடலின் அத்தனை செய்தியும் வரையப்பட்டிருக்கு இல்லையா? 50 அணுவில் ஒரு செய்தி என்று டி.என்.ஏ மாலிக்யூல்களால் ஆன எத்தனை சங்கிலிகள் ஒரு செல்லில்? இப்படி படைப்பின் ஏகப்பட்ட விவரத்தை தன்னில் அடக்கிக் கொண்டு, நிறைய பொருள்களைத் தயாரித்தபடியே அங்குமிங்கும் நடமாடும் - பயாலஜி - செல்களைக் காட்டுகிறார் அவர். அது மாதிரி சிறிய இயந்திரங்களை நாம் தயாரிக்க முடிந்தால்???

கம்ப்யூட்டரைவிட ஆயிரம் மடங்கு திறன் படைத்த நம் மூளையின் அளவு சிறியதாக இருப்பதை 1959 இல் சுட்டிக்காட்டி அவர் மிகமிகச் சிறிய அளவில் கம்ப்யூட்டர் வரவேண்டும் என்றார். மிக வேகமாக அவை செயல்பட வேண்டும் என்றால் அவை மிகச் சின்னதாவதைத் தவிர வேறு வழியில்லை என்றார். பொருள் சிறியதாகும் பொழுது இடைவெளி குறைகிறது. ஒரு செய்தியை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செலுத்த முடிகிற அதிக பட்ச வேகம் ஒளியின் அளவுதான். வேகமாகச் செயற்பட - நகரும் நேரத்தைச் சுருக்க அது சின்னதாவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு செயற்கை மினியேச்சர் டாக்டரை ரத்தக்குழாய்குள் செலுத்த முடிந்தால் அவர் அத்தனை எளியதாய். பழுதடைந்த வால்வைக் கண்டுபிடித்து சரிசெய்வார் -என்று அப்பொழுதே கேட்டார். ஒரு புத்தகத்தை 25000 இல் ஒரு பங்கு இடத்தில் பதிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அறிவித்தார். 1959 இல் அவர் கேட்ட அந்தக் கேள்வியின் பதில்தான் இன்றைய நானோ டெக்னாலஜியின் வளர்ச்சி.

அதற்குப்பின் 80 களில் எரிக் ட்ரெக்ஸ்டெர் (இவர் தான் நானோ தொழில்நுட்பத்திற்கு பெயர் சூட்டியவர்) எழுதிய Engines of Creation புத்தகம் ஒரு கலக்கு கலக்கிற்று. பின்னே? இன்னும் சில வருடங்களில் அனேகமாக எதையுமே தயாரித்துவிடக் கூடிய மாலிக்யூலர் இயந்திரங்கள் மள மளவென்று பெருகிவிடும் என்றார்.

மாலிக்யூலர் ? ஆம். இறைவன் படைத்தவற்றில் அணு ஒன்று மட்டும்தான் மனிதனின் கை வைக்க முடியாமல் இருந்தது. இப்போது அதிலும் புகுந்து விட்டோம். கரியின் அணுக்களை கொஞ்சம் கலைத்துப் போட்டால் அதுவே வைரமாகிவிடுகிறது. இல்லையா? அதன் ஆதார அடுக்கில் கார்பனின் அமைப்பில் நானோ அளவில் உள்ள வித்யாசம்தான் கரியை வைரமாக்குகிறது.

இப்படி பொருளை அதன் அணு, டி.என்.ஏ, புரோட்டீன் எல்லாமே அளவில் கையாண்டு கருவிகள் புனைந்து விந்தைகள் புரிவதுதான் நானோ தொழில்நுட்பம். நம் உடல் செல்களை இயற்கையின் நானோ இயந்திரங்கள் எனலாம். எனவே மாலிக்யூல்கள் எந்திரங்களாக வேலை செய்ய முடியும் என்பது இயற்கையிலிருந்தே அறிகிறோம். என்சைம்கள், டி.என்.ஏ, புரோட்டீன்கள் எல்லாமே எந்திரமாகவே செயல்படுகின்றன இல்லையா என்கிறார் எரிக்.

நானோ உலகின் அளவுகள் தலைசுற்ற வைக்கும். ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்குதான் ஒரு நானோ மீட்டர் என்பது (10 ன் ஒன்பது அடுக்கு)

உயிரியல் வினோதங்கள் செயல்படும் உயரிய அளவுகள் அவை. எதுக்கு இப்படி கண்ணைச் சுருக்கிக் கொண்டு சிரமப்பட வேண்டும்? ஆதாயமில்லாமல் அந்த மினியேச்சர் உலகத்தில் நுழைவார்களா நம் ஆசாமிகள்?

உள்ளே நேர்த்தியாகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம். அங்கே பொருள்களின் அளவைவிட, பொருள்களின் இடையே உள்ள தூரம் மிக மிக அதிகம், எடுத்துக் காட்டாக, ஒரு அணுவின் அகலம் சுமார் 1.5 நானோ மீட்டர் என்றால் அதன் உட்கருவின் அகலம் 0.00001 நானோ மீட்டர். ஒரு மில்லிமீட்டர் குண்டூசித் தலையின் அகலம் ஒரு மில்லியன் நானோ மீட்டர். அப்படியானால் அந்த அளப்பரிய பரப்பில் எத்தனை துல்லியமாக பொருள்கள் இயங்க முடியும், பொருள்களை இயக்க வைக்க முடியும் பாருங்கள்? ! ?

அணுக்களும் மாலிக்யூல்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் காரணத்தினால் தானே இணைகின்றன? நானோ இயந்திரங்களைக் கொண்டு அவற்றைத் தனித்தனியே கையாண்டு இணைத்து, வேண்டும் பொருளை வேண்டும் பொழுது உருவாக்குவது தான் நானோ தொழில் நுட்பத்தின் கொள்கை.

தொடர்ந்து, அணுக்களின் அமைப்பைப் படமெடுக்கும் எஸ்.டி.எம் (Scabbubg Tunnelling Microscope) 1981 இல் கண்டுபிடித்தார்கள். அதை வைத்து அணுச் சுவரோவியங்களை எழுத ஆரம்பித்தனர். ஒரு மீட்டரில் பில்லியனில் ஐந்து பங்கே அளவில் ஐ.பி.எம் என்று உலகின் மிகச் சிறிய விளம்பரம் எழுதிக் காட்டினார் எய்க்லெர்.

அடுத்த முன்னேற்றங்களில் ஒன்று தான் இன்று பரவலாக நாமறியும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்.

பலவகையில் பயன்படுததும் எல்.சி.டி இன்னொன்று.

அப்புறம் முறுக்கிக் கொண்டது ஒரே நானோ மீட்டர் அகலமுள்ள நானோ கயிறு.

டிரான்சிஸ்டரிலிருந்து கம்ப்யூட்டர் சிப் வரை அதன் உபயோகம் இருக்கும்.

1990 களில் ஸ்டீலைவிட 6 மடங்கு எடை குறைந்த ஆனால் 100 மடங்கு பலம் கொண்ட கார்பன் நானோ ட்யூப் பிரவேசித்து அதை மிஞ்சிற்று. அதை வைத்து கார், விமானங்களின் எடையைக் குறைக்க நினைக்கிறார்கள். எரிபொருள் மிச்சம். பாதுகாப்பு உச்சம்.

ஒளிபட்டதும் அல்லது தண்ணீர் தொட்டதும் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் கண்ணாடிகள் வந்து விட்டன. புற ஊதாக் கதிரும் கறைகளும் பாதிக்காத, சுருங்காத உடைகள். கிருமிகளை மூச்சிழக்க வைக்கும் வெள்ளி நானோ துகள்களைத் தூவும் பாண்டேஜீகள்.. எடையில் குறைந்து பலத்தில் அதிகரித்த டென்னிஸ் மட்டைகள்.. நானோ பேனாக்கள். நானோ பேட்டரி செல். நானோ கிதார்.... ஆக தொடங்கி விட்டது நானோ விந்தை.

ரத்தத்தினூடே பயணித்து அதை ஒழுங்கு படுத்தும் சிறு சென்ஸர்கள் மட்டுமல்ல., இதய வால்வுக்குள் நுழைந்து அடைப்புகளை எடுத்து விட, மூளைக்குள் புகுந்து ரிப்பேர் பார்க்க... 50 வருடங்கள் பொறுங்கள். எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள்.

மலைக்காதீர்கள்... மரம் போல் தானே வளர்ந்து பூட்டிக் கொள்ளக்கூடிய நானோ கருவிகளும் வந்து விடலாமாம். புரோட்டீன்களையும், வைரஸையும் உள்ளே வைத்து புது நானோ கருவிகளை இயக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

கான்சர் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடுத்து வளராமல் பண்ணிவிடும் நானோ துகள்கள்,

மருந்தோடு உட்சென்று கான்சர் செல்களையே மாற்றி அமைத்து விடக்கூடிய நானோ ரோபோக்கள்,

குறிப்பிட்ட கட்டிக்குள் சென்று வெடிக்கும் நானோ குண்டுகள்,

நுணுக்கமான அறுவைகளை இப்போதைவிட 1000 மடங்கு கூர்மையுடன் சுவடே இன்றி புரியும் நானோ சர்ஜன்கள்,

ஏன் புதிய உடல் உறுப்புகளையே நானோ லெவலிலிருந்து வார்த்து (வளர்த்து) எடுத்தல்,

என்று சுறுசுறுப்பாக ஆராய்ச்சிகள் நடக்கிறது. வைரஸ் கிருமிகளையே காமிரா மேன்களாக்கி செல்களுக்குள் அனுப்ப நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விட்டால் கண், காது, என்று நம் முக அணுக்களையே மாற்றி அழகாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.???

ஆனானப்பட்ட நன்மைகளை அள்ளித்தரவிருக்கும் இந்தத் தொழில் நுட்பம் ஏகப்பட்ட அபாயங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. உலகின் பல ஆதார அடிப்படைகளை மாற்றி அமைக்க வல்லது இது, சட்டைப் பையிலேயே ஒரு தொழிற்சாலையை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் அலைய நேர்ந்தால் என்ன ஆகும்?

எதிர்ப்பாளர்களின் கட்சி என்ன சொல்கிறது? நானோ துகள்களின் நச்சுப் பக்கம் பற்றி நமக்கு என்ன தெரியும்? என்று கேட்கிறார்கள். சின்னஞ்சிறிய நானோ துகள்கள் ரத்த எல்லையைத் தாண்டி மூளைக்குள் புகுந்து ஊறு விளைவித்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறார்கள். தானே பல்கும் நானோ ரோபோக்கள் தடம் புரண்டு அளவுக்கு அதிகமாகப் பல்கத் தலைப்பட்டுவிட்டால் அவை விழுங்கும் கார்பன் காரணமாக உலகின் மொத்தமும் தாரை வார்க்கப்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்கிறார்கள்.


இரட்டைக் கிளவி என்றால் என்ன

எடுத்துக்காட்டுகள்

பொத பொத பன்றியின் வயிறு
வதவத என ஈன்றன குட்டிகள்
கொழுகொழு என்று குட்டி
மொசு மொசு என மயிர்
விக்கி விக்கி அழுதது குழந்தை
நை நை என்றும் அழுதாள்
வழ வழ என்று பேசினாள் கிழவி
லொட லொட என்றும் பேசுவாள்
கிச்சு கிச்சு மூட்டினாள் பேத்தி
மாங்கு மாங்கு என்று உழைப்பார்
கொழ கொழ என்று ஆனது சோறு
லபோ லபோ என அடித்துக் கொண்டாள்
லப லப என்று அடித்துக் கொண்டாள்
சவ சவ என்று முகம் சிவந்தது
நொகு நொகு (நெகு நெகு) என்று மாவை அரைத்தாள்
சுட சுட தோசை கொடுத்தாள்
மொறு மொறு என்று சுட்டாள் முறுக்கு
மொச்சு மொச்சு என்று தின்றார் பாட்டன்
லபக் லபக் என்று முழுங்கினார்
மட மட என நீரைக் குடித்தார்
மடக் மடக் எனவும் குடித்தார்
தொள தொள என சட்டை அணிந்தார்
குளு குளு உதகை சென்றேன்
கீசு கீசு என குருவிகள் கத்தின
சர சர என்று மான்கள் ஓடின
சிலு சிலு எனக் காற்று வீசியது
விசு விசு எனக் குளிர் அடித்தது
கிடு கிடு பள்ளம் பார்த்தேன்
பக் பக் என்று நெஞ்சு அடிக்கும்
கிறு கிறு என்று தலை சுற்றியது
வெல வெல என்று நடுங்கினேன்
சல சல என்று அருவி ஓடியது
சத சத என்ற சேற்றில் விழுந்தேன்
பள பள என்று பாறை மின்னியது
குடு குடு என கிழவர் வந்தார்
மொழு மொழு என்று தலை வழுக்கை
சொர சொர ப்பான தாடி
கர கரப்பான குரல்
கிசு கிசு ஒன்றை சொன்ளார்
குசு குசு என்று அதைச் சொன்னார்
முணு முணுத்தது அவர் வாய்
கிளு கிளு படம் பார்த்தாராம்
விறு விறுப்பான கதையாம்
தக தக மின்னும் மேனி
மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி
துறு துறு என்ற விழிகள்
தள தள என்று ததும்பும் பருவம்
வெது வெதுப்பான நீரில் குளித்தாள்
தை தை என்று தண்ணீரில் ஆடினான்
தட தட எனக் கதவைத் தட்டினான்
கட கட எனச் சிரித்தான்
திக்கு திக்கு என இவள் நெஞ்சம் அடித்தது
பட பட என இமைகள் அடித்தன
திடு திடு என நுழைந்தான்
கம கம என மணந்தது முல்லை
தர தர என்று அவளை இழுத்தான்
நற நற என பல்லைக் கடித்தான்
கும் கும் என்றும் குத்தினார்
பொல பொல என வடித்தாள் கண்ணீர்
குபு குபு என கண்ணீர்
வெட வெட என நடுங்கியது உடல்
வெல வெலத்துப் போனான்
வெடு வெடு என நடுங்கினான்
வட வட என வேர்த்தன கைகள்
மள மள என எலலாம் நிகழ்ந்தது
குறு குறுத்தது குற்ற நெஞ்சம்
பேந்த பேந்த விழித்தான்
திரு திரு என விழித்தான்
மலங்க மலங்க முழித்தான்
திபு திபு என மக்கள் வந்தனர்
சாரை சாரையாக மக்கள் வந்தனர்
பர பரப்பு அடைந்தது ஊர்
கச கச என பேச்சு
மச மச என்று நிற்கவில்லை
பிசு பிசுத்தது போராட்டம்


செல்வியின் உரைவீச்சு

மண்வாசனைகள்


சில்லென்ற காற்றும்
சேறு மணக்கும் வயல்களும்
வியர்வையாலும் இரத்தத்தாலும்
குழைத்துக் குழைத்துக்
கட்டப்பட்டவைகள்...

தான் உதிர்த்த இலைகளையே
தன் வேர்களுக்கு உரமாக்கும்
மரங்களும்...

மழை நின்ற பிறகும்
சொட்டிக் கொண்டிருக்கும்
இலைகளும்...

மாலைக் கருக்கலில்
மல்லிகை விழிதிறந்து
மலர்வதும்...

உதிர்ந்த மலர்களையும், இலைகளையும்
தனது ஒப்பனைக்காக இருபுறமும்
அமர்த்திக் கொள்ளும் ஒற்றையடிப்
பாதையும்...

வெள்ளிக் கொலுசு ஒலிகளுக்கெல்லாம்
தாய் ஒலியாய் சல சலக்கும்
சிற்றருவியும்...

ஏசி தராத சுகத்தைத்
தரும் மரக்கிளை
ஊஞ்சல்களும்...

ஓய்வை விரும்பும் மரங்களை
அசைத்துக் கொண்டிருக்கும்
காற்றும்...

கஞ்சியைக் குடித்தாலும்
அம்மாவின் மூச்சுச் சூட்டில்
வண்ண வண்ணக் கனவுகளுடனான
மழலைகளும்...

யமஹா வண்டி ஓட்டுவதைவிட
ஆனந்தமாய நொங்கு வண்டி ஓட்டும்
சிறுவர்களும்...

அன்பை விதைப்பதும் , புதுப்பிப்பதும்
நெஞ்சில் கொண்ட
மனிதர்களும்...

எம் மண்ணைத்
தலை தடவித் தாலாட்டும்
மண்வாசனைகள்.

நன்றி : செல்வி, சரஸ்வதி தியாகராசா கல்லூரி, பொள்ளாச்சி.
பரிதிப்பாதை இதழ் 4



திருட்டு ( சிறுகதை )

ஜெ. கலைவாணி

பொன்னம்பலம் வீட்டில் திருட்டுப் போய்விட்டது. நான்காயிரம் ரூபாய் பணம், இரண்டு பவுன் சங்கிலி, ஒரு குத்துவிளக்கு, இரண்டு பட்டுப் புடவைகள்.

பொன்னம்பலம் தான் முதலில் பார்த்தார். மனைவி பாக்கியம் காற்று வரவில்லை என்று கதவைத் திறந்து வைத்தது திருடனுக்கு வசதியாகப் போய்விட்டது, கழிப்பறை போவதற்காக எழுந்த பொன்னம்பலம் பீரோ கதவு திறந்து கிடப்பதைப் பார்த்ததும் பணத்தைத் தேடினார். திருட்டு உறுதியாகி விட்டது. பாக்கியத்தை எழுப்பினார். அவள் பட்டுப் புடவையைக் காணவில்லை என்றதும் கத்தி ஊரைக் கூட்டினாள்.

தெருவில் பாதி கூடிவிட்டது. உரையாடலைத் தொடங்கினார். "நகை எத்தனை பவுனு.. ரெண்டா... பவுனு வெல அதிகம் தான். பழைய நகை என்றாலும் ஒரு ஏழு ரூபாய் போகாதோ? ரெண்டேழு பதினாலு. சேல ஒரு நான்காயிரம்... குத்துவிள்க்கு ஆயிரம்...பதினாலு...பதினெட்டு... இருபத்திரெண்டும் ஒண்ணும் இருபத்தி மூன்று ரூவாயின்னு வையுங்க"

"அடக் கணக்கு போடறது அப்புறம் இருக்கட்டும். முதல்ல திருடனைப் புடிக்க முடியுமான்னு பாருங்க..."

"அவன் இன்னும் இங்கயா ஒக்காத்திருப்பான். பஞ்சாப் பறந்துருக்க மாட்டான். போலீசக்குப் போயிர வேண்டியதுதான். ராமசாமி வண்டிய எடுத்திட்டுவா... பெரியவரைக் கூட்டிகிட்டு போலீஸ் ஸ்டேசனுக்குப் போய்... கம்ப்ளைண்ட் குடுத்துரு"

வண்டி கிளம்பியது. வழியில் போலீஸ் நாயைப் பிடித்தபடி போலீஸ்காரர்கள் கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

"பார்த்தீங்களா பெரியவரே.. இந்த நேரத்துல கூட போலீஸ்காரங்க எந்தத் திருடனையோ புடிக்கறத்துக்காக வேகமா போறாங்க பாருங்க" என்றபடி ராமசாமி வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினான்.

காவல் நிலையத்தை அடைந்த போது கூட்டமாக இருந்தது. ராமசாமி விசாரித்தான்.

"அதை ஏன் கேக்கறீங்க.. போலீஸ் ஸ்டேசனுக்குள்ள புகுந்து யாரோ துப்பாக்கியப் பூராவும் தூக்கிகிட்டுப் போய்ட்டாங்களாம்"

"போலீஸ்காரங்க யாரும் இல்லீங்களா? "

"எல்லோரும் இருந்தாங்க... நல்லாத் தூங்கிட்டோம்னு சொல்றாங்க"

ராமசாமி பொன்னம்பலத்தைப் பார்த்தார். வண்டியைத் திருப்பு என்றார் பொன்னம்பலம்.

நன்றி : விகடகவி இதழ் - ஏப்ரல் 2008


எமக்கு வந்தவை, நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை

()

பாரதியார் பல்கலைக் கழகம் - பாரதியார் ஆராய்ச்சி மையம் வழங்கும் - மகாகவி பாரதியார் ஐந்தமிழ் வருதுகள் - தமிழ் மொழிக்கும் தமிழ் பண்பாட்டிற்கும், கலை, இலக்கியங்களின் வாயிலாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் அறிஞர்களைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் 2008 முதல் பாரதியார் பல்கலைக்கழகமும் - பாரதியார் ஆராய்ச்சி மையமும் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ், அறிவியல் தமிழ், ஊடகத் தமிழ் - என்ற ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்க இருக்கிறது. இவ்விருது தொடர்பாக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : முனைவர் தே.ஞானசேகரன், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், 641 046 - அலைபேசி : 94861 28857

21-3-2008 - அம்பத்தூர் - தாய்த் தமிழ் மழலையர் தோட்டம், தாய்த்தமிழ்த் தொடக்கப் பள்ளியின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா. மாணவர்கள் கலைநிகழ்வுடன் எழுச்சியுரை

23-3-2008 - திருப்பூர் - தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளியின் குழந்தைகள் கலைவிழா.

10-04-2008 - பொள்ளாச்சி - மருத்துவர் ஹானிமன் படத்திறப்பு - ஹோமியோ மருத்துவர்கள் கலந்துரையாடல் - மருத்துவ விளக்கம் - இயங்குகிற மருத்துவர்களுக்குப் பாராட்டு பரிசளிப்பு


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061