இதழ் எண் : 76
24 மே 2008


அன்புடையீர். வணக்கம்,

இந்த முறை ஈரோடு மற்றும் சேலம் செல்ல வேண்டி பணிக்கப்பட்டேன். ஆனால் அந்த இரண்டு பயணமும் வாழ்வில் மறக்கமுடியாத பயணங்களாகின.

ஈரோடு சென்ற பொழுது.. இணையத்தில் உலாவியில் தொடர்பு கொள்ளும் நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். அவரது அப்பா, அம்மா, மகன் - மூவருமே அன்பாக. உறவாக பேசியது நெஞ்சைவிட்டு அகலாதது. அம்மாவின் அப்பா - தமிழ் விரும்பி என்றும் - அவர் பயன்படுத்திய நூல்களைப் பாருங்கள் என்றும் ஒரு பேழையைத் திறந்து காட்டினார். அரிய நூல்கள் அவை.

மறுநாள் காலை அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றோம்.அங்கே மாடியில் ஒரு அறை அந்த அறையில் நான்கு பேழை நிறைய புத்தகங்கள். திருமணம் செய்யாதவர் அவர். ஈரோட்டிலே புகழ் பெற்ற ஆடிட்டர். நான்கு மொழிகளில் நூல்கள் இருந்தன. படிப்பு படிப்பு, நுட்பமான, ஆழமான படிப்பு, அவர் இறந்ததும் அந்த நூல்கள் அவர் நினைவாக அந்த அறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பல நூல்கள் செல்லறித்துச் சிதைந்து விட்டனவாம். என் நெஞ்சம் வெடித்தது. தன் நெஞ்சுக்குள் தமிழை ஏற்றி வாழ்ந்தவர்கள் எத்தனை பேர், தமிழியச் சிந்தனையோடு வாழ்ந்த இவர்களது பதிவுகள் எங்கும் இல்லை. யாருக்காகவும் வாழாது, கொண்ட கொள்கைக்காக இறுதிவரை வாழ்ந்த இவர்களது வாழ்க்கை வணங்கப்பட வேண்டியதே. நெஞ்சிலேற்றி வணங்கினேன்.

சேலம் சென்றபொழுது நண்பர்களான ஏகலைவன், பொன்.குமார், உதயகுமார் - என இயங்குகிற நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஏகலைவன் மாற்றுத்திறன் உடைய வாழ்த்துதற்குரிய பாவலர். பொன்.குமார் அருமையான கவிஞர். உதய குமார் கல்வி நுட்பங்கள் உணர்ந்த நல்ல நண்பர். இவர்களோடு கலந்துரையாடியது மறக்க முடியாதது.

இந்த முறை புதிய சிற்றிதழ்கள் நிறைய வந்துள்ளன. மணல்வீடு இதழ் 1 (குட்டப்பட்டி அஞ், சேலம்), பருத்தி இதழ் 1 (ஒடையகுளம்), மைத்துளி இதழ் 4 (கோ.ம.பட்டனம்), உதவிக் கரம் ஏழாமாண்டு முதல் இதழ் (சென்னை), தமிழ்த் தென்றல் நான்காமாண்டின் முதல் இதழ் (சென்னை), மாற்றுத்திறன் மக்களின் குரல் இதழ் 1 (சென்னை), அன்பு பாலம் இதழ் 2 (சென்னை), புகழச் செல்வி (தமிழுணர்வு இதழ்),(சென்னை), உயிர்த்துளி (சேலம்) ஆகியன.

இந்த இதழில் இரண்டு சிறுகதைகளை இணைத்துள்ளேன். ஒரு கதை 2008 இல் வெளியானது, மற்றொன்று 1985 இல் வெளியானது. படிததுப் பாருங்கள்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
24 - 05 - 2008


வைகறை நூலிலிருந்து....

கே.எஸ். ரமணா


வேலையில்லாப் பட்டதாரி

வாங்கிய பட்டத்தைப்
பறக்கவிட வேண்டும்
என்றால் கூட
நூலுக்கு
மானியம் கோரும்
நிராயுத பாணிகள்.


குளிர்ச்சி

மனிதன்
உள்ளே
புழுங்கிக் கொண்டு
வெளியே
குளிர்ச்சியாய்
தெரிகிறாள் - ஆனால்
குளிரூட்டும்
சாதனமோ
உள்ளே குளிரூட்டி
வெளியே புழுங்குகிறது


சுமை

அய்யிரண்டு
மாதமாய் தாய்க்குச்
சுமை

பிள்ளையாய்ப் பிறந்த பின்
பெற்றோருக்குச்
சுமை

பள்ளிக்குச் சென்றால்
புத்தகப் பை
சுமை

படித்தபின் செய்யும்
வேலையே
சுமை

மணந்தபின் மனைவி
மக்கள், உற்றார், சுற்றார்
சுமை

குடும்பச் சுமையை
சுமந்த உடலுக்கு
நோயே சுமை

சுமையாய் இருந்து
சுமையாய் வாழ்ந்து
இறந்த பின்
சுமக்கும் அந்த
நால்வருக்கும்
சுமையாய்த் தோன்றும்
மனிதா
இருக்கும் போதே
இறவாதன
செய்வாய்.


வரமா ? சாபமா ?

இரண்டாவதும்
பெண்ணாய்ப்
பிறந்தால்
சாபம் என்றனர்
சிலர்

இரண்டு
ஆண் பிள்ளைகளைப்
பெற்ற
இறுமாப்புடன்
இருந்த
எதிர் வீட்டுக்காரர்
இருப்பதோ
முதியோர் இல்லத்தில்
நானோ என் வீட்டில்.


தமிழே உலக மொழிகளின் தாய்

சாத்தூர் சேகரனார்

1) தமிழே உலக மொழிகளின் தாய் என்ற உண்மையை அரங்கேற்றுவது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் முன்னிலையிலும் தமிழ்தான் உலகின் முதன் மொழி என்ற கருத்தைப் பரப்புதல்

2) சமற்கிருதம் ஒரு நாள் ஒரு பொழுது கூட உலகில் எந்த மூலையிலும் பேசப்படவில்லை என்பதை அறிவார்ந்த மக்கள் மத்தியில் நிலை நிறுத்துதல்

இவ்விரண்டு இலக்குகளையும் முன்வைத்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட சாத்தூர் சேகரனார் அவர்களது செயல் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இலண்டன் நகரில் இக்கருத்து பரப்பலுக்காக அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் தமிழறம் வழி காண நேர்ந்தது. தமிழக அரசும், தமிழாய்ந்த அறிஞர்களும் செய்ய வேண்டிய செயலை - தனியொரு மனிதராக நின்று - உறுதியுடன் செயல்படுத்தும் இவரது செயல் கண்டு மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.

நன்றி : தமிழறம் இதழ் - ஏப்ரல் மே 2008


புரியாத போக்கு ( சிறுகதை )

மானா பாசுகரன்.

மழைக்காலத்தின் மந்தமான சாயுங்காலம்.

கடைசி இழுப்பையும் இழுத்து விட்டுப் பீடியை எறிந்த பழனி தனது இழுமிதிவண்டியை மிதிக்கத் தொடங்கினான். கண்களில் ஏராளமான ஏக்கம். யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புகளை மட்டும் அவன் மனதைப் போலவே அவன் வண்டியும் சுமந்து கொண்டிருந்தது.

சாலையில் இளம் இணையர் வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அருகில் வந்த அவர்களைப் பார்த்து,

புதுசா திருமணமானவங்க போல இருக்கு, நம்ம வண்டிக்குத்தான் வருவாங்க - என்றெண்ணிய பழனியின் ஏக்கக் காந்தங்களுக்கு அந்த இரும்பு நெஞ்சங்கள் மசியத்தான் செய்தன.

ஏறியமர்நத இணையின் இளைஞன்,

பைரவி திரையரங்கம் போப்பா - கட்டளையிட்டான்.

மனிதக் கடலில் இவன் ஒரு மாலுமி ஆனான். இவனால் இந்திய சாலைகளைத் திட்டத்தான் முடிந்தது. வழி நெடுக வண்ணங்களில் சுவரொட்டிகள் அரை உடைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

ஏய் அங்கே பாரேன்

ஒரு மலையாளப் படத்தின் சுவரொட்டியை அந்த இளைஞன் காட்டினான்.

சே.. ரொம்ப மோசம் நீங்க...

பெண் இணையின் பொய்யான வெட்க மறுப்பு..

ஆற்றுப்பாலம் தாண்டி இறக்கத்தில் இருந்த உடுப்பி உணவகத்திற்கு அருகில் இளைஞனின் கட்டளைக்கு அடிபணிந்து அந்த இழுமிதிவண்டி நின்றது. இருவரும் இறங்கி,

இதோ வந்துடுறோம் - என்று சொல்லி உணவகத்தில் நுழைந்தனர்.

கால் மணி நகர்த்திவிட்டு திரும்பி வந்தனர். மறுபடியும் வண்டி பயணித்தது. சிறிது தொலைவு சென்றவுடன் வண்டியிலிருந்த இளைஞன்,

வண்டிய அந்தப் பூக்கடை ஓரமா நிறுத்து... என்றான். வண்டி நிறுத்தப்பட்டது. இரண்டு ரூபாய்க்குப் பூ வாங்கினான். பழனி தன் மனைவிக்கும் இப்படி வாங்கிச் செல்ல வேண்டும் என்று தான் நினைப்பான். பொருளியல் அதைத் தடுத்துவிடும்.

வண்டி திரையரங்க வாசலில் நின்றது. வாயிலில் யாரோ ஒரு நடிகர் அட்டையில் உயரமாய் வளர்ந்திருந்தார். அந்த அட்டை நடிகருக்கு சுவை மாமணிகள் போட்ட பெரிய மாலை கருகத் தொடங்கியிருந்தது.

உள்ளே நுழைபவர்களின் தலையைத் தாழவைக்கச் சுவைஞர் மன்றங்களின் வாழ்த்துகளும், நன்றிகளும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

வண்டியிலிருந்து இறங்கியதும் இளைஞன் ஒரு சிறு நாட்டிய அசைவோடு தன் இறுக்கமான கால் சட்டைப் பையிலிருந்து இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

என்னங்க ரெண்டு ரூபா தர்றீங்க... பழனியின் பண்பு வாயால் இப்படித்தான் கேட்க முடிந்தது.

இதுவே அதிகம். இளைஞன் சொற்கள் எகிறின.

இல்லைங்க நாலு ரூபா வழக்கமான கூலி. அதையே குறைச்சா எப்படிங்க... எத்தன எடத்துல நின்னு நின்னு.. கூலி பேசாமல் ஏற்றிக் கொண்டதற்கு உள்ளங்குமறியது.

அதெல்லாம் முடியாது. அதற்க மேல தர மாட்டேன்.

அந்த இளைஞனின் கண்டிப்பான சொற்கள் பழனியின் வாயடைத்தது. இவன் கவலை உணராத அவர்கள் உள்ளே சென்றனர்.

அந்த வாயில்லாப் பூச்சி இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

எதிரே வந்த ஒருவன்.

சீட்டெல்லாம் வித்துப் போச்சு... இருபது ரூபா கொடு, ரெண்டு சீட்டுத் தரேன் என்றான்.

பேரம் பேசாமல் இருபது ரூபாய் கொடுத்து சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே விரைந்தனர் அந்த வேடிக்கை மனிதர்கள்.

நன்றி : இயற்றமிழ் இதழ் - 15-8-1985 மே


கவுச்சி ( சிறுகதை )

சேகுவேரா

யோவ் வாத்தி... வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தான் சூசை முத்து. ஒன்றாம் வகுப்பு வாத்தியார் கருப்பன் குரல் வந்த திசையை பார்த்தார்.

கையிலே தன் குழந்தையைப் பிடித்துக் கொண்டு சூசைமுத்து நின்ற கோலம் பார்க்கவே கருப்பனுக்குக் கலக்கத்தைத் தந்தது. நான் உங்க மகன ஒன்றும் பேசலையே.. என்றார் வாத்தியார் கருப்பன்.

யோவ் வாத்தி நீ பேசினாக் கூட பரவாயில்லை. காலனிக்கார பயக்கூட எம்மவன் உக்கார வச்சியம்ல... மாட்டுக்கறி திங்கற பயலோட எம்மவன உக்கார வச்சா எம் மவன் மேலயும் வீசாதாய்யா??. எனச் சிறய சூசை முத்துவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினர் கருப்பன் வாத்தியார்.

கொஞ்சம் சுதாரித்துத் தயங்கியபடி அய்யா... பள்ளிக் கூடத்தில எல்லோரும் சேர்ந்து ஒண்ணா படிக்கராக, ஊரக்காரவ, காலனிக்காரவனு தனிவரிசை போட்டா நல்லா இருக்காதய்யா... சின்ன சிறுசுக மனசுல அது தாக்கத்த உண்டு பண்ணிடும். அது மட்டும் இல்லய்யா...

நம்ம புள்ள கொஞ்சம் படிப்பு ஏற சிரமப் படுது, காலனிக்கார புள்ளய்யானாலும் முனியன் நல்ல படிப்பான்யா, ரெண்டு புள்ளயும் சேர்ந்து இருந்தா ரெண்டுமே நல்லா படிக்குமேன்னு நான் உக்கார வச்சேன்.. என்ற கருப்பனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சூசைமுத்து, அறையும்போது எழுந்த ஓசையில் ஆதிக்க சாதியின் திமிர் இருந்தது.

நாளக்ககு பஞ்சாயத்து கூட்டி ஊருக்கார புள்ளைகளோட காலனி புள்ளைகள ஒக்கார வக்காம தனியா வகுப்பு நடத்தப் போரேன்யா.. அதுவரை எம்புள்ள மட்டும் இல்ல ஊருக்கார புள்ளக ஒன்னுமே பள்ளிக்கூடம் வராது. நாத்தம் புடிச்ச புள்ள சாதிகளோட எங்க புள்ளகளும் சேர்ந்து ஒக்கார கெரகமாயா...புடிச்சி ஆட்டுது. என்று கத்தியபடி வேகமாக வெளியேறினான் சூசைமுத்து.

முனியனுக்கு ஒன்றும் புரியல. கலங்கிய கண்களோடு இருந்த வாத்தியாரின் முகத்தை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தை தன் பெயரை ஏன் சொன்னார்கள் என்ற வெவரம் தெரியல.

மறுநாள் மரத்தடி உச்ச நீதிமன்றம் மமதையோடு கத்தியது. சேரி பய முனியன் இனிமே பள்ளிக்கூடம் வரக்கூடாது. சேரி பயலோட சேந்து உக்காரவச்ச வாத்தியார் கருப்பன் முன்னூறு ரூபாய் தண்டமா பஞ்சாயத்துக்குக் கட்டனுமுன்னு இந்த பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லுது.

டேய்.. நிறுத்துங்கடா ஒங்க தீர்ப்ப.. பெரிய்ய மயிரு தீர்ப்பு சொல்லறானுங்க... என்று கத்திய முனியனின் அம்மா - இருசம்மா - முகமே பஞ்சாயத்துல இருந்த எல்லோரின் மனங்களையும் திகிலடையச் செய்தது.

தோ... பாரு புள்ள பொம்பளயாச்சின்னு பாக்குறம் - என்ற ஊர்த் தலைவரு இராயப்பனின் குரலைக் கேட்டு கூட்டும் முழுவதும் அதிர்ந்தது.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த இருசம்மா, இலலேன்னா .. என்னடா .. புடுங்கிடுவீங்க... என்று கேட்ட போது, மொத்தக் கூட்டமும் அடங்கிப் போனது. நேராக சூசைமுத்து இருந்த இடத்திற்கு வெறி கொண்டவள் போல் ஓடிய இருசம்மா அவனின் சட்டையைப் பிடித்து மையப் பகுதிக்கு இழுத்து வந்தாள்.

ஏலே... எங்கூட படுத்தியே அப்போ... எம்மேலே வாடை வரலியா? நான் மாட்டுக்கறி திங்கறவன்னு ஒனக்குத் தெறியாம போச்சா. நான் கர்ப்பமா இருக்கேன்று தெரிஞ்சதும் ஓடிப்போய் பட்டணத்துல ஒளிஞ்சிகிட்ட பொட்டப் பய நீ. உன்னால உண்டான புள்ள தாண்டா முனியன். ஏண்டா ஒம்புள்ள மேலே உன்னுடைய கவுச்சி வாட வராம என்ன வாட வரும்... இல்ல தெரியாமத்தான் கேக்குறன் உம்மனசுல என்ன நெனச்சே... நீ ஓடி ஒளிஞ்சதும் வயித்துப் புள்ளய கழுவிப்புட்டு வேற ஒருத்தனை கட்டிகிட்டு குடும்பம் நடத்துவ... நாம ஒன்னும் தெரியாத புள்ள மாறி சீரு கொடுக்கற புள்ளைய கல்யாணம் கட்டிகிட்டு நல்லா இருக்கலாமுன்னு தானே?... எனக் கூறியபடி தன்வாயில் சேமித்த மொத்த எச்சிலையும் ஒன்று திரட்டி காறி அவன் முகத்தில் துப்பிவிட்டு முனியன கையில புடிச்சிகிட்டு வேகமாகக் கூட்டத்தைவிட்டு வெளியேறினாள் இருசம்மா..

நன்றி : மானுட நம்பிக்கை ஏப்ரல் 2008


பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்குத் தீங்கானது

நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் மே 2008

பாட்டில் தண்ணீரில் பூச்சிக் கொல்லிகள் கலந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தண்ணீரில் இருக்கும் பூச்சிக் கொல்லி. பாட்டில் தண்ணீரிலும் இருக்கிறது. ஆனால் பாட்டில் தண்ணீரை சேமிக்கும் பாட்டிலே ஒரு நச்சுப் பொருள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜெர்மெனியில் உள்ள ஹைடல் பார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷோடிக் எனும் ஆராய்ச்சியாளர் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் பாட்டில் தண்ணீரில் ஆன்டிமோனி எனும் நச்சுப் பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். ( நிலத்தடி நீரில் இது இல்லை)

இநத ஆன்டிமோனி மனிதர்களுக்கு உடல் சோர்வு, மனஅழுத்தம் போன்றவற்றை தரக்கூடியதாகும். இதன் அளவு அதிகமானால் வாந்தி முதல் மரணம் வரை சம்பவிக்கக்கூடும்.

நெகிழிப் பாட்டிலை தயாரிப்பதற்காக ஆன்டிமோனி பயன்படுத்தப்படுகிறது. இது பாட்டிலில் இருந்து தண்ணீருக்குப் பரவுகிறது. எவ்வளவு அதிக நாட்களுக்குத் தண்ணீர் பாட்டிலில் இருக்கிறதோ, அவ்வளவு அதிக அளவு ஆன்டிமோனி கலக்கிறது. அதாவது பாட்டில் தண்ணீரில் தொடர்ந்து ஆன்டிமோனி கலப்பது அதிகமாகிறது. மூன்று மாத காலத்தில் இதன் அளவு பாட்டில் தண்ணீரில் இருமடங்கு அதிகமாவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் பேராசிரியர் வில்லியம் ஷோடிக் - தனது வாழ்நாளில் இனி ஒருபோதும் பாட்டில் தண்ணீரைக் குடிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

( சென்னையில் விற்கப்படும் குடிப்பதற்குத் தகுதியற்ற புட்டித் தண்ணீர் வகைகள் - சரவணா ஸ்டோர்ஸ், அக்வா சிட்டி, சூர்யா, பாலார், சிரினர்ஜியா, அக்வா டாப், வேவ், பாலாஜி ரிப்பிள், அஸ்கர், விஜிஆர், அக்வர் ஃபா!ட், சில் அவினாஷ், நிலா, அக்வா முகில், மேகம், கிரீட் ஹெர்பல் வாட்டர், ரியல் பிரெஷ், சூப்பர், அர்சூன், ஹைடெக், யோகா, ஸ்பைஸ் அக்வா, சிக்லெரி, மேஜிக், கூல் ப்ரிஸ், டால்பின் மேஜிக், பிரைம் லைஃப், ஜஸ் டச், லிங்கம், ஈகிள், ஹிட்டாக்ட், பிஸ்லி, பிரின்ஸ், டிரஸ்ட் அக்வா, மானஸா, சிட்டிசன், அப்பல்லோ, ஸனோபால், டெய்லீ, க்ளாஸ், அக்னி, கபில், ஆல்பா, அபூர்வா, டிரினிடா, அக்வா, குரு, அக்வா ஸ்னோபேர்ட், சுக்ரா)


தண்ணீருக்காகக் கையேந்த வேண்டுமா?

நன்றி : குமரிக் கடல் - மே 2008

தமிழ்நாட்டில் போதுமான மழை பெய்யவில்லையா? ஆறுகளில் நீரோட்டம் இல்லையா? ஏரிகளில் தண்ணீர் தேங்கவில்லையா? குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாதா?அணைகளில் தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியாதா? நிலத்தடியில் தண்ணீர் உறுஞ்சப்பட்டு பாதுகாக்கப்படவில்லையா? எது முடியாது தமிழ் நாட்டில் ?

பாலாறு, சொய்யாறு, பெண்ணையாறு என எத்தனையோ ஆறுகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு ஆறும் தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிநது செல்வதைக் காணலாம். இது தமிழ் நாட்டிற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம்.

ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் தமிழகத்தில் பெய்யும் மழையின் அளவு நம் தேவைக்கு அதிகமாகவே உள்ளன. ஆனால் அத்தண்ணீரை நாம் உரிய முறையில் சேமித்து வைக்கத் தவறி விட்டோம், மிகக் குறுகிய நாட்களில் அளவுக்கு அதிகமாக மழை யெய்து, அதிக அளவு தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

மழைநீர் அதிக அளவு தேங்கும் இடங்களில் ஏரிகளையும், குளங்களையும் அமைத்துத் தண்ணீரைத் தேக்கி வைக்கத் தமிழக அரசு முயல வேண்டும். ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி நீர் தேங்க வைத்து அங்கெல்லாம் நிலத்தடி நீர்வளம் பெருக்கவேண்டும்.எமக்கு வந்தவை, நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை


()

04 - 05 - 2008 சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம், காரை மைந்தனின் ஆளுமை வளர்ச்சி நூல் வெளியீட்டு விழா.

17 - 05 - 2008 கோவை எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழா - நாத்திகர் விழா - கொளத்தூர் மணி, சீமான், விடுதலை இராசேந்திரன், திருச்சி செல்வேந்திரன், கு, இராமகிருட்டிணன் அமைப்பு - பெரியார் திராவிடர் கழகம், கோவை.

20 - 05 - 2008 திருவெறும்பூர், மிகுமின் ஆலை (பெல்) வாயில். இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுப்பு. தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர். நடத்துவது தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி.

24 - 05 - 2008 பொள்ளாச்சி புலவர் ஆதி அவர்களின் தொல்காப்பியம் ஓர் இலக்கியப் பார்வை இலக்கியச் சொற்பொழிவு.

30 - 05 - 2008 மற்றும் 31 - 05 - 2008 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக இலக்கியத் துறையும், தமிழ்த் தாய் அறக்கட்டளையும் இணைந்தும் நடத்தும் கலைஞரின் படைப்பிலக்கிய ஆய்வுக் கருத்தரங்கம்.


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061