இதழ் எண் : 77
21 சூன் 2008


அன்புடையீர். வணக்கம்,

ஈரோட்டிலிருந்து மறைந்த தமிழ்த்திரு ஆறுமுகம் (ஆடிட்டர்) அவர்களது சேமிப்பில் இருந்த நூல்களை (250 நூல்கள்) சிற்றிதழ்ச் செய்தி நூலகத்திற்காகப் பெற்று வந்து விட்டேன். பழந்தமிழ் நூல்களைக் கொண்ட இவ்வரிய தொகுப்பினை ஈரோட்டு நண்பர் அவரது சொந்தச் செலவிலேயே சரக்குந்துவழி அனுப்பி வைத்திருந்தார். இந்த நூல்களை வரிசைப் படுத்தி வருகிறேன். மின் நூல்கள் திட்டத்திற்கு இந்நூல்களை உட்படுத்திப் பாதுகாத்து இனிவரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்த விரும்புகிறேன். இது பற்றி தனியாக ஒரு பக்கத்தினையும் இணையத்தில் தொடங்கியுள்ளேன். (தமிழ் நூல்கள் பாதுகாப்பு - மின் நூல்கள் ஆக்கியதும் ஆக்க வேண்டியதும்)

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
21 - 06 - 2008


சூனியர் விகடன் செய்தியும் எதிர் வினையும்

செய்தித்தாள் படிக்க உதவுகிற 32 அட்டைகள் பற்றியது



30-4-2008 சூனியர் விகடன் 44, 45 ஆகிய இரு பக்கங்களில் தமிழின் நிறம் சிவப்பு என்ற தலைப்பில் நாம் உருவாக்கியுள்ள 32 அட்டைகள் பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

கோவை மாவட்டத்தில் இருக்கிற அரசு மற்றும் அரசு உதவி பெறும் அத்தனை பள்ளிகளிலும் உள்ள ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணர்களுக்கு எளிமையான தேர்வு நடத்தி - அதன் அடிப்படையில் மாணவர்களை 3 பகுதிகளாகப் பிரித்து - அதில் மொழியறிவு குறைவாக இருந்த மூன்றாம் பிரிவினரை - தனியாகப் பிரித்து - பள்ளிக்கு ஒரு ஆசிரியருக்குப் பயிற்சி தந்து - நாம் உருவாக்கி இருந்த 32 அட்டைகளை வைத்து மூன்று மாதங்களுக்குப் பயிற்சி கொடுத்ததன் விளைவாக பின்தங்கிய 90 விழுக்காட்டினர் செய்தித்தாள் படிக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தனர் என்ற அசோகபுரம் ஆசிரியை ஜெயந்தி அவர்களது நேர்காணலாக செய்தி வெளியட்டிருந்தது.

இத்திட்டம் வெற்றிபெற, முனைப்போடு செயற்பட்டவர் - திருமிகு கார்மேகம் - கோவை முதன்மைக் கல்வி அலுவலர். பின்தங்கியுள்ள மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற அவரது துடிப்பும், திட்டமிடுதலும், தொடர்ச்சியும் - போற்றுதலுக்கு உரியவை.

இந்த 32 அட்டைகளைத் தற்பொழுது பயன்படுத்தி வருகிற - சீசெசு தீவின் திருமிகு வ.சிவசுப்பிரமணியம் அவர்களும், இலண்டன் திருமிகு சிவா பிள்ளை அவர்களும், வணங்குதற்குரியவர்களே. உலகத் தமிழர்கள் இணையத்திலிருந்து இந்த 32 அட்டைகளை, குறுவட்டினை விருப்பமுடன் வலையிறக்கிப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் மகிழ்வானதே. 30-4-2008 சூனியர் விகடன் செய்தி பார்த்து - தற்பொழுது தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, காரைக்குடி நண்பர்கள் தொடர்பு கொள்வது மகிழ்வாகவே இருக்கிறது. ஆனாலும் இது தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பயனாக வேண்டும் என்பதே எமது விருப்பம்.


யார் குழந்தைக்குத் தந்தை ( சிறுகதை )

நன்றி : பேணுவோம் பெண்ணுரிமை நூல் - நங்கை குமணன்

பெரும்பாலும் நம் முதியோர்கள் அல்லது நம்மோடு இருக்கும் தாத்தா பாட்டி. எந்த ஒரு காரியம் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதில் உண்மை இருக்கும் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். அல்லது அவர்களைக் கேலி செய்துவிட்டு, உங்களுக்கு ஒன்றும் தெரியாது.. நீங்கள் செய்வதெல்லாம் மூடத்தனம் என்று கூறிவிட்டு இன்று விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மனிதன் சந்திரனில் சென்று தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்து விட்டு வருகிறான் என்றெல்லாம் கூறி, நம் பெரியோர் கூறுவதைப் பின்பற்ற மறந்து விடுகிறோம். ஆனால், அண்மையில் நான் படித்த ஒரு செய்தி உள்ளபடியே எனக்கு வியப்பளித்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் ஓர் இளைஞர் விபத்தில் இறந்து விடுகிறார், இறந்தவருக்கு ஒரு மனைவி, மூன்று வயது பெண் குழந்தை, நண்பகல் வேளை என்பதால் பிணத்தை எடுத்துச் செல்ல ஊரே திரண்டிருந்தது, ஆண்கள் இழவு வீட்டிற்கு வெளியே பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர், ஒரு புறத்தில் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஊரின் வழக்கப்படி நாதசுரமும், மேளச் சத்தமும் ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் பெண்கள் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தனர்.

திடீரென்று மேளச் சத்தம் நின்றது. இழவு வீட்டிற்கு உள்ளிருந்து மூதாட்டி வெளியே வந்தார். பேசிக் கொண்டிருந்த ஆண்கள் பேச்சை நிறுத்தினர். அம் மூதாட்டியின் கையில் தண்ணீர் நிரம்பி வழியும் செம்பொன்று இருந்தது. அந்தச் செம்பை அவர் கூட்டத்தின் நடுவில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

அவருடைய வலது கையில் ஏதோ மடக்கி வைத்திருந்தார். கூர்ந்து பார்த்ததில் அவை உதிரிப்பூக்கள். பிச்சி, முல்லை என்று தெரிந்தது. அவர் கூட்டத்தை ஒரு முறை நிதானமாகத் திரும்பிப் பார்த்தார். பின்னர் கையில் இருந்த பிச்சிப் பூக்களில் ஒன்றைச் செம்பில் நிறைந்த நீரின் மீது இட்டார். கூட்டம் மூச்சடங்கியது போல் அமர்ந்தது. பின்னர் இன்னொரு பூவைச் செம்புத் தண்ணீரில் மேலிட்டார். இரண்டு பூக்கள் செம்பு நீரில் மிதப்பது எல்லோர் பார்வைக்கும் தெரிந்தது. கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் சோகமே கூடிய முகத்தோடு ஒலி எழுப்பினர்.

பின்னர் அம்மூதாட்டி மூன்றாவது பூவையும் செம்பு நீரில் இட்டார், கூட்டம் மறுபடியும் சோகத்தி மூழ்கியது. சில வினாடிகள் கழிந்த பிறகு, அந்த மூதாட்டி நீரிலிட்ட மூன்று பூக்களையும் கையில் எடுத்துக் கொண்டு செம்புத் தண்ணீரை தரையில் கொட்டிவிட்டு விடு விடு வென்று இழவு வீட்டிற்குள் சென்று விட்டார், கூட்டத்தில் மறுபடியும் அனுதாப ஒலியோடு பேச்சும் எழுந்தது. ம்... பாவம்.. என்னத்தைச் சொல்றது,,, என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு வெளியூர்க்காரர் இங்கே இப்போது என்ன நடந்தது, எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று அக்கிராமத்துப் பெரியவரிடம் கேட்டபோது - அவர் கூறிய தகவல். வெளியூர்க்காரரை வியப்படையச் செய்தது. அதாவது இறந்தவரின் மனைவி மூன்று மாதம் முழுகாமல் இருக்கிற விசயததை ஏன் ஊருக்குச் சொல்லணும் என்று கேட்க, இடை மறித்துச் சொன்னார்,,, ஏழுமாதம் கழித்து குழந்தை பெற்றால், நீ கேட்கமாட்டியா? எப்படிக் குழந்தை பிறந்தது என்று ?/ ஆகையால்தான் ஊரார் மத்தியில் இந்தப் பெண் இறந்து போனவனுக்காக வயறு வாய்த்திருக்கிறாள். ஏழு மாதம் கழித்துப் பிறக்கப்போகும் குழந்தைக்குத் தந்தை - இன்றைக்கு இறந்து போனவன்தான் என்று ஊரும், உலகமும், அறிய அந்தச் சடங்கு நடத்தப் பட்டது.

இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது என்றால் - பிறக்கின்ற எந்த மனித உயிரும் தந்தை பெயர் அறியாமல் பூமிக்கு வரக்கூடாது என்று. -


முன்னுரை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

மயிலை சீனி.வேங்கடசாமி
பாரி நிலையம், 59.பிராட்வே. சென்னை 1.
முதற் பதிப்பு - சனவரி 1959

வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த - மறைந்துபோன தமிழ் நூல்கள் - என்னும் புத்தகம்.

அந்நிகழ்ச்சி இது. எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால், எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர் என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயது சிறுவனும், தங்கமணி என்னும் பெயருள்ள ஒன்றரை வயது சிறுமியும் அக்குழந்தைகளாவார். அக்குழந்தைகள், வீட்டுக்கு இரண்டு விளக்குகளாகத் திகழ்ந்தனர். குடும்பச் செல்வங்களாக விளங்கினார்கள்.

ஆனால் அந்தோ! எதிர்பாராத விதமாக அக்குழந்தைகள் மறைந்தனர். மக்கட் செல்வங்கள் மறைந்தன. ஒளிவிளக்குகள் அணைந்தன. சின்னஞ்சிறு அரும்புகள், மலர்ந்து மணம் கமழ்வதற்கு முன்பே பறிக்கப்பட்டன. அது காரணமாக எனது மனத்தில் துன்பம் சூழ்ந்தது. மனவேதனை பெருகிற்று. நிலையாமையைப் பற்றி நாலடியாரில் படித்த ஆணித்தரமான செய்யுள்கள்கூட என் மனத்துன்பத்தை அகற்றத் துணைபுரியவில்லை. காலம் என்னும் நூலினால் செய்யப்பட்ட மறதி என்னும் திரை மூடினால்தான் மனத்துன்பம் மறையும். ஆனால் அந்தத் திரை விரைவில் மூடி மறைப்பதாக இல்லை. அது வரையில் என்ன செய்வது? துன்பத்தை அகற்ற முயன்றேன். முடியவில்லை.

ஏதேனும் நூலைப் படித்துக் கொண்டே இருந்தால் அது மனத்துயரத்தைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும் என்று கருதி எதிரிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். அது யாப்பருங்கல விருத்தி என்னும் நூல். அதனைப் படிக்கத் தொடங்கினேன். அந்நூலின் பழைய உரையாசிரியர் தமது உரையில் பல நூல்களிலிருந்து சில செய்யுள்களை உதாரணம் காட்டியிருந்தார். மேற்கோள் காட்டப்பட்ட நூல்களில் சில இறந்து மறைந்து போன நூல்களாக இருந்தன. என் குடும்பத்தில் இரண்டு அருமைக் குழந்தைகள் மறைந்து விட்டதுபோல, தமிழிலக்கியக் குடும்பத்திலும் சில குழந்தைகள் மறைந்து போனதை அப்போது கண்டேன். என் மனத்தில் அப்போது புதியதோர் எண்ணம் தோன்றியது. தமிழன்னை எத்தனைக் குழந்தைகளை - தமிழ் நூல்களை - இழந்து விட்டாள் என்பதனைக் கணக்கெடுக்க வேண்டும் என்னும் எண்ணந்தான் அது.

இந்தக் குறிக்கோளுடன் யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையையும், ஏனைய உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரை நூல்களையும் படித்தேன். அவ்வுரையாசிரியர்கள் கூறுகிற நூல்களில் எவை எவை மறைந்து போயின என்பதை ஆராய்ந்து எழுதத் தொடங்கினேன். மறைந்து போன நூல்களிலிருந்து எஞ்சி நின்ற செய்யுள்களையும் தொகுத்து எழுதினேன்

இது நிகழ்ந்தது 1952 ஆம் ஆண்டின் இறுதியில் ஆகும். ஆனால் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இடையிடையே வேறு சில நூல்களை எழுதி முடிக்க வேண்டியிருந்தபடியாலும், வேறு அலுவல்களாலும் இந்த வேலை இடையிடையே தடைப்பட்டது. ஆயினும், சமயம் வாய்க்கும் போதெல்லாம் இதனையும் ஒருவாறு செய்து முடித்தேன்.

இதில் சில நூல்கள் மட்டும், செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் வெளியீட்டில் - மறைவுண்ட தமிழ் நூல்கள் - என்னும் பெயருடன் வெளியிடப்பட்டன. அதனைக் கண்ட சில அன்பர்கள், நூல் முழுவதுமு வெளிவருவது தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணை புரியும் என்று கூறினார்கள். ஆகவே இந்நூல் இப்போது புத்தக வடிவமாக வெளிவருகிறது. மறைந்துபோன நூல்களின் முழுத் தொகுப்பல்ல இந்நூல், விடுபட்ட நூல்களும் உள்ளன. அவற்றைப் பிறகு எழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன், இப்போது தொகுத்து முடிந்தவரையில் இந்நூல் முதன் முதலாக வெளிவருகிறது.

இந்நூலுக்கு ஒரு முகவுரை எழுதியருளுமாறு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் அன்புடன் இசைந்து முகவுரை எழுதியருளினமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னைப் புத்தகப் பதிப்பகமாகிய பாரி நிலையத்தின் உரிமையாளர் திரு.அ.செல்லப்பா அவர்கள், இந்நூலை அச்சிட்டு வெளியிட்டமைக்கு அவர்களுக்கு எனது நன்றியுரியதாகும். இந்நூலை விரைவாகவும், அழகாகவும் அச்சிட்டுக் கொடுத்த மங்கை அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரியது.

சீனி. வேங்கடசாமி - மயிலாப்பூர், சென்னை 4, 15-1-1959.


குறும்பாக்கள்

நன்றி : நெல் காலாண்டிதழ்


சுகமான சுமை
தந்தையின் முதுகில்
உப்பு மூட்டையாய் மழலை.


கருத்த இரவில்
வெளிச்ச நடை
என்னவளின் வருகை.

ச.கோபிநாத் - சேலம்


சுழலும் மின்விசிறி
சுகமாய் மனிதன்
சுமையாய்க் கட்டணம்

பி.செயக்குமார் - அந்தியூர்


பொம்மையைச் சுற்றி
தாத்தா
இறந்த பேரன் நினைவு

மு.குணசேகரன் - தாராமங்கலம்


பலபேர் கண்கள் அறியாமல்
என் கண்கள்
சிந்திய கண்ணீர் துளிகள்
பல இரவுகளில்
என் தலையணைக்கு
காணிக்கையாகி இருக்கிறது.

ஆர். செயந்தி - தேவிகாபுரம்


உருகும் விவசாயி
களிப்பில் வியாபாரி
நெல் கொள்முதல்

ம.இராசசேகர் - பாதிரி


ஒயவில்லை வேலைகள்
ஓய்வெடுத்தது
வயிறு

சி. சீனுவாசன் - சிறீரங்கராசபுரம்


சாதிப் பெட்டிக்குள்
அடைப்பட்ட தீக்குச்சிகள்
நாங்கள்
நாளை ஒவ்வொன்றாய்
பொறியாவோம்
அதில் சாதி மதங்கள்
கரியாகும்,

சு.சாபர்கான் - காஞ்சிபுரம்


மாணவி கற்பம்
ஆசிரியர் கைது
பாலியல் கல்வி


ஊதியம் உயர்ந்தது
ஆடை குறைப்பிற்காக
கவர்ச்சி நடிகை


திருட்டுப் பயமில்லை
பத்திரமாய் இருக்கிறது
அடகுக் கடையில் நகை.


மாப்பிள்ளை தேடல்
மிகவும் கவனமாக
தங்கத்தின் விலையேற்றம்


கலைமகள்
விலைமகளாய்
கல்வி நிறுவனங்களில்

அறிவொளி க. வெங்கடேசன்


மனிதர்கள் ஜாக்கிரதை

விந்தன்

அம்மா ஒரு கவளம் அன்னம் இருந்தால் கொடுங்கள் அம்மா

ஐயா ஒரு கவளம் அன்னம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள் ஐயா.

கேட் - டுக்கு வெளியே நின்று, மாறி மாறிக் குரல் கொடுத்துப் பார்த்தான் அந்தப் பிச்சைக்காரன்.

உண்டு என்று சொல்வாரும் இல்லை,

இல்லை என்று சொல்வாரும் இல்லை

கொஞ்சம் துணிந்து மெல்லக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

அவ்வளவுதான்,,,,

புத்தி இருக்கிறதா உனக்கு? இல்லை கேட்கிறேன், புத்தி இருக்கிறதா உனக்கு? - என்று சீறிக்கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்து வந்தார் அந்த வீட்டுக்காரர்.

அவன் சற்றே பின்வாங்கி, கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா, பசி வயிற்றைக் கிள்ளுகிறது, ஒரு பிடி சோறு இருந்தால் போடச் சொல்லுங்கள் ஐயா என்றான். பரக்க விழித்து, பல்லை மிகக் காட்டி.

அவன் சொன்னதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை,

நான் கேட்டதற்குப் பதில் சொல் - புத்தி இருக்கிறதா உனக்கு? இல்லை கேட்கிறேன், புத்தி இருக்கிறதா உனக்கு? என்று மறுபடியும் கேட்டுக் கொண்டே முன்னேறி,,,,,

இங்கே என்ன எழுதியிருக்கிறது? என்று கேட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த சிறு போர்டு ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அவன் பார்த்தான். பார்த்துவிட்டு - நாய்கள் ஜாக்கிரதை என்று தானே எழுதியிருக்கிறது? - என்றான் ஒன்றும் புரியாமல்.

- அதைப் பார்க்காமல் உள்ளே வரலாமா? இல்லை கேட்கிறேன், அதைப் பார்க்காமல் உள்ளே வரலாமா ? என்று இரைந்தார் அவர்.

மன்னியுங்கள், மனிதர்கள் தானே உள்ளே இருக்கப் போகிறார்கள் - என்று நான் நினைத்தது தப்புதான் - என்றான் அமைதியாக.


நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலே லங்கடியோ !

செய்தியும் - புரிதலும் நன்றி : தேமதுரத் தமிழோசை இதழ்


தப்பியோடிய தளையாளியை (கைதி - உருது) விரட்டிச் சென்ற துணை ஆய்வாளருக்கு எளிதான காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவ மனையில் பண்டுவம் பார்த்து வருகிறார் - தினகரன் 3.5.08

அரசு மருத்துவமனை என்னவாயிற்று? அரசப் பணியாளர்களே அரச மருத்துவ மனைகளுக்குப் போக மாட்டார்களா? அத்தனை நம்பிக்கை அவர்களுக்கு,


மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 16,000 மாணவர்கள் மன அழுத்தத்தால் (விரக்தி - சமற்கிருதம்) தற்கொலை - தினகரன் 3.5.08

அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கிப் பாருங்கள், எல்லாம் சரியாகி விடும்.


கருநாடகாவில் தேர்தலுக்காக பெங்களூரில் தமிழில் பரப்புரை செய்த அ.தி.முக வேட்பாளரின் வண்டி கன்னட அமைப்பினரால் அடித்து நொறுக்கப்பட்டது - தினகரன் 1.5.08

இந்திய ஒருமைப் பாட்டைக் குலைக்கும் சதி இது. இதோ, இஙகே பாருங்கள். எங்கள் தமிழ்நாட்டின் தலைநகரில் தேர்தலின்போது இந்தியிலும், பிற மொழிகளிலும் விளம்பரங்கள், துண்டறிக்கைகள் அச்சிட்டு அல்லவா தேர்தல் பரப்புரை செய்தார்கள் மூதறிஞரும் அவர் தம் உலக்கைக் கொழுந்துகளும் (உலக்கைக் கொழுந்து - நன்றி கலைஞர்)


எமக்கு வந்தவை, நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை

()

08-06-2008 கருங்கல்பாளையம், ஈரோடு, தமிழக எல்லைக் காப்பு, எல்லை மீட்பு மாநாடு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். தாயக உரிமைக் களம் வகுக்கத் தமிழகத்தீர் வாரீர். ஒகேனக்கல் மீட்புப் போராட்டக் குழு ம.பொ.சி சுடர் ஏந்திப் பயணம். பேரணி நிகழ்வு இரவு 9.00 மணி வரை

14-06-2008 சென்னை தமிழ்ப் படைப்பாளிகளின் பேரியக்கம், மருத்துவர் அய்யா அவர்களது தலைமையில் படைப்பாளிகளும் தமிழ்ப் பேராளிகளும் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்வு,


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061