இதழ் எண் : 81
05 அக்டோபர் 2008


அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் எனக்கு வந்த இதழ்களிலிருந்தும், மின் அஞ்சல்களிலிருந்தும் பெற்ற படைப்பாக்கங்களை, இணைத்துள்ளேன். கருத்துச் சேகரிப்பு என்பது உயரியது. தரமான, நல்ல கருத்துகளை உள்வாங்கத் தொடங்கினால் - அது உள் நுழையும் - நெஞ்சினில் மாற்றத்தை ஏற்படுத்தும் - படிப்பவர்களது செயற்பாடும் ஒழுங்குபடும் - படிப்பின் பயன் இதுதான். படிப்பாளிகளாக மாற வாழ்த்துகள் - எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
05 - 10 - 2008


தமிழ் இலெமூரியா - இதழிலிருந்து பெற்றவை.

கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே - எம்.ஆர்.இராதா

எம்.ஆர்.இராதா பிறந்து நூற்றாண்டுகள் கடந்து விட்டன (14 ஏப்ரல் 1907)

எவருக்கும் பயப்படாத, கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத இராதாவின் தன்மை மற்ற நடிகர்களுக்கு அச்சத்தையே தோற்றுவித்தன. இராதாவின் நடிப்புடன் கலந்த இயல்பான கற்பனை வளம் மக்களிடம் ஒரு செல்வாக்கை வசப்படுத்தி இருந்ததால், அவரைத் தவிர்க்கவும் முடியவில்லை.

நாடகத் துறையில் முன்மாதிரியாகப் பலருக்கு விளங்கிய இராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நிகழ்ந்த போதுதான் பெரியாரும் - குடியரசு - இதழும் அறிமுகம் ஆனது.

இரத்தக் கண்ணீர் தொடக்கத்தில் நாடகமாகவும், 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

ஒருவரே வில்லனாகவும், கதாநாயகனாகவும் வருகிறார். சீர்திருத்தக் கருத்துகளைப் பேசுபவன் இவ்வளவு மோசமானவனாக இருப்பானா? என சுதேசமித்திரன் கேள்வி எழுப்பி இருந்தது,

ஒரு நடிகன் என்ற முறையில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தார். எம்ஆர்இராதா ஏற்று நடித்த எல்லாப் பாத்தரங்களின் மீதும் அவருடைய நடிப்பின் தாக்கம் பதிந்திருந்தது,

மரபுகளின் புனிதத்தை ஒருவிதமான ஏளனத் தன்மையோடு பார்க்கும் இயல்பு அவரிடம் நிலவி வந்தது. இழந்த காதல் என்னும் புகழ்பெற்ற நாடகத்தில் வில்லனாக ஜெகதீஷ் என்ற பாத்திரத்தில் நாடக நடைமுறைகளுக்கு மாறாக, பார்வையாளர்களுக்கு தமது முதுகைக் காட்டியபடி நீண்ட வசனம் பேசினாராம். அந்நாளில் இராதாவின் நீண்ட தலைமுடி கூட நடிக்கும் - என பின்னாளில் நினைவு கூர்ந்தார் இராதர்வுக்கு நடிகவேள் என்ற பட்டம் தந்த கலைஞர் கருணாநிதி,

தன்னுடைய மாட்டுப் பண்ணைக்கு இம்பாலா காரில் வைக்கோலை ஏற்றி, பண்ணையில் வேலை செய்யும் ஆண்களையும் ஏற்றி அனுப்புவார் இராதா. ஆடம்பரத்தின் சின்னமாக அந்தக் காரை வைத்து மினுக்கிக் கொண்டிருந்த பணம் படைத்தவர்கள் இதைக் கண்டு மனம் புழுங்கினர். இதைக் கண்டு சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் அதிர்ச்சியோடு கேட்ட போது - சாயம் பூசிய தகரத்திற்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்கிறீங்களே - என்று அவர்களைப் பார்த்துக் கேலி செய்திருக்கிறார் இராதா.

நாட்டிலே அதிகமாக உழைக்கிறவனுக்குக் கொஞ்சமா கூலி கொடுக்கிறான். கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளைப் பிரதேசம்னா அது சினிமா ஒண்ணுதான் - என்று பொதுமேடையிலேயே இராதா சாடியிருக்கிறார்.

கலை கலைக்காகவேன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதிங்க. அப்படி இருந்தா அது எப்பவோ செத்துப்போயிருக்கும். கலை என்பது வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும் கலையும் சேரும்போது தான் அதுக்கு உயிரே வருது - என்று தனது நாடகத்தில் சேர்க்கப்படும் அன்றாட நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்களைக் குறை சொன்னவர்களுக்குப் பதில் அளித்தார் இராதா.

பாவேந்தர் விருதுப் பாவலர் அ.மறைமலையான் ஒரு நிகழ்வில் பேசும்போது - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் முதல் புரட்சி நடிகர் என்றார். அப்பொழுது எம்ஜிஆர் பற்றாளர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேளையில் - உங்கள் எம்ஜிஆர் மூன்றாவது புரட்சி நடிகர் - எனப் பட்டென்று பதிலளித்தார்.

அப்படியானால் இரண்டாவது புரட்சி நடிகர் யார் - என ஆவலோடு கேட்டனர்.

எம்ஆர்இராதா தான் என்றவுடன் ஆவேசப்பட்டவர்கள் ஆமோதித்தபடி அமைதியாகி விட்டனர்.

கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே - என்று முழக்கமிட்ட இராதாவின் பெயரில் மன்றம் ஒன்று திறக்கப் போவதாகப் பகுத்தறிவுத் தந்தை பெரியார் கூறியபோது - அதைக் கூச்சத்தோடு நிராகரித்திருக்கிறார் இராதா.

சென்னை பெரியார் திடலில் இராதா மன்றம் என்னும் அரங்கத்தைப் பெரியார் திறந்து வைத்துப் பேசியபோது - மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம் மன்றத்தைத் திறந்து வைக்கிறேன் - என்று பேசினாராம்.

சென்னை - சூளையில் இராதா பிறந்தார். மெட்ராஸ் - இராசகோபாலன் இராதா கிருட்டிணன் - எனப்படும் பெயர்களின் சுருக்கமே - எம்.ஆர்.இராதா.

எங்கேயோ கேட்ட குரல்

மீனா - பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா - பிரசன்ட் மிஸ்
புனிதா - பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா ?
நோ! டமில்...? நோ மிஸ் - ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலீஷ் மிஸ்.
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.
தென் ஹூ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?
மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி ! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில்
காதாரக் கேட்ட நிகழ்ச்சி இது.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி - என்றார் மாக்சுமுல்லர்
தமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று என்றார் போப்,
தமிழ் நிறைந்து, தெளிந்து, ஒழுங்காய் வளர்ந்துள்ள மொழிகள் எல்லாவற்றுள்ளும் தலை சிறந்த ஒரு மொழி என்றார் டெய்லர்.
தமிழ் பண்டையது. சிறப்பு உடையது. உயர்வடைந்தது. விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்தியங்க வல்லது - என்றார் கால்டுவெல்
எண்ணுவதற்கும் பேசுவதற்கும் வேறு எந்த ஐரோப்பிய மொழியைவிடச் சிறந்த மொழி தமிழ் மொழி என்றார் விட்டினி.

இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி மேனாட்டுப் பேரறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

தமிழால் முடியும் - ஆனால், தமிழர்களால் முடிவதில்லையே அது ஏன்? சற்றே சிந்திப்பீர்

உரைவீச்சுகள்

பூச்சியங்கள்

ஒன்றைப்
பத்தாகவும்
நூறாகவும்
ஆயிரமாகவும்
இலட்சமாகவும்
கோடியாகவும்
ஆக்கிக் காட்ட உதவும்
வெறும்
பூச்சியங்கள்


அலை

உடைந்த வலையல் துண்டு
குளத்தில்
எறிந்தேன்
அடடே.. எத்தனை வளையல்கள்

அறிவுமதி


பேசு மனமே
நுனி நாக்கு
மொழிப்பேச்சை
ஜீன்ஸ் போட்ட
சிங்காரிகள் பேசட்டும்
தாவணி அணிந்த
நீயாவது
தமிழால் பேசு

சுந்தர்



எமக்கு வந்தவை, நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை

()

17-8-08 காடம்பாறை - மாற்று மருத்துவ கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம் - ஹோமியோபதி மருத்துவம் அறிமுகம் மற்றும் நோயாளிகள் பார்வை

20-8-08 சென்னை - கணித்தமிழ்ச் சங்கம் - சிறப்புக் கூட்டம் - சாந்தோம் கலைத் தொடர்பு மையம், மாதாந்திர விழிப்புணர்வுக் கூட்டம்,

20-9-08 திருவள்ளூர் இரயிலடி - குறளகம் இராதா பச்சையப்பனார் கல்வி அறக்கட்டளை - திருக்குறள் முத்தமிழ்க் கழகம் நடத்துகிற பச்சையப்பனார் 75 ஆவது அகவை நிறைவு பவழவிழா,

22-8-08 தஞ்சாவூர் - தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் படைப்பிலக்கிய ஆய்வுக் கருத்தரங்கம்.
22-8-08 தஞ்சாவூர் - தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்தும் 100 சாதனையாளர்களுக்கு சேவை விருது 2008 வழங்கும் விழா.

24-8-08 கோவை - பெரியார் திராவிடர் கழகம் - வே. மதிமாறனின் பதில்கள் நூல் அறிமுக விழா. சீமான், இராமகிருட்டிணன்

01-9-08 சென்னை - கோ.க.மணி அவர்களது இல்லத் திருமண விழா - மணமக்கள் - ம.தமிழ்குமரன் - ச.சத்யா

13-9-08 சென்னை - அண்ணாமலை மன்றம், மக்கள் நெஞ்சம் இதழின் 9 ஆம் ஆண்டு விழா - நூல்கள் வெளியிடு - ஒடுக்கப்பட்டோர் பேரவையின் 31 ஆம் ஆண்டுவிழா,

சூலை 08 முதல் சூன் 09 வரை - திங்கள் தோறும் - தமிழர் அறிவியக்கப் பேரவை - தொடர் சொற்பொழிவுகள் - இலட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி திருச்சி 2


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061