அன்புடையீர்

வணக்கம். தமிழம் வலையின் இணைப்பாக - சிற்றிதழ்கள் - என்ற இந்தப் பகுதியானது இணைக்கப்பட்டுள்ளது.

சிற்றிதழ்கள் என்றால் என்ன ?

கருத்துச் செறிவிற்காகவும், தொடர்பிற்காகவும், ஒரு குழுவினரிடமோ, அல்லது மக்களிடமோ, வணிக நோக்கமற்று, ஒன்றிரண்டு இதழ்களே வந்தாலும், தரமான, உண்மையான - மொழி, இனம், நாடு தொடர்பான வரலாற்றுக் கருத்துகளையும், நடப்பியல் நிகழ்வுகளையும் - நுட்பமாகப் பதிவு செய்கிற அச்சு வடிவங்களையே சிற்றிதழ்கள் என்ற வகைக்குள் அடக்கலாம்.

தற்பொழுது வெளிவருகிற இதழ்கள் அனைத்தும் இந்த அளவுகோளின்படி உள்ளனவா? இது மிகப்பெரிய வினாக்குறியே. பொழுதுபோக்கும், பாலியல் விதைப்பும், நேர வீணடிப்பும் உடையனவாக பல்வேறு இதழ்கள் இருந்தாலும், அவற்றுக்கு இடையில் ஒன்றிரண்டு தரமானவையாக வெளிவரத்தான் செய்கின்றன. இவை மிகக்குறைந்த எண்ணிக்கையில் வெளியாகி, மிகக் குறைந்த காலத்திற்குள் மறைந்தும் விடுகின்றன. படைப்பாளிகள் உருவாகப் படிக்கட்டாகவும், பயிற்சிக் களமாகவும் இருக்கிற இந்த இதழ்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையே.

இந்த நோக்கம், விடுதலைப் பறவை என்ற இதழை நான் நடத்தியபோது என்னுள் ஆழமாகப் பதிந்தது. சிற்றிதழ்ச் செய்தி என்ற இருமாத இதழ் நடத்தியபோது கிளைவிட்டுப் பரந்து விரிந்தது. அதன் தொடரியாக இதழ்கள் கண்காட்சியும், இதழ்கள் சேகரிப்பையும் தொடங்கினேன். தொடக்கத்தில் வகைக்கு ஒரு இதழ் என்று சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு அந்த இதழின் முழுமை காட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது, இதழ்களை முழுமையாகத் திரட்ட வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு நெருக்குதல்களுக்கு இடையில் நிறைய இதழ்களைச் சேகரித்தேன். எழுதிக் கொண்டிருந்த நான் எழுதுவதை நிறுத்த வேண்டியதாயிற்று.

இப்படிச் சேகரித்த இதழ்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் திரட்டிய பல இதழ்கள் அவற்றைச் சேகரித்தவரின் மறைவிற்குப் பிறகு அவர்களது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்கு விலைக்குப் போடப்பட்டவை தான். என்னுடைய தொகுப்பும், எனக்குப் பிறகு இப்படி பழைய புத்தகக் கடைக்குச் சென்று விடுமோ என்ற அச்சம் எனக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. எப்படியாவது இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்த வேண்டும் என்ற உணர்வு கனன்று கொண்டே இருந்தது.

உடைந்த நிலையில் கிடைத்த பழைய இதழ்கள், தரமாகத் தொடர்ந்து கருத்து விதைக்கும் புதிய இதழ்கள், என்று குவிந்த, இந்த இதழ்களில் நான் படித்துச் சுவைத்த அருமையான செய்திகள், ஒவ்வொன்றையும் தொகுத்தேன். என் பார்வைக்கு வந்த இதழ்களிலிருந்த கருத்துகளை சுவைத்த பக்கங்கள் என்று இணையத்தில் இணைக்கத் தொடங்கினேன்.

நான் நடத்திக் கொண்டிருந்த அச்சு இதழான சிற்றிதழ்ச் செய்தி நின்று போனதால் (சிற்றித்ழ்ச் செய்தி இதழ்களை நாள் ஒரு நூலில் படவடிவக் கோப்பாகப் பெறலாம்) - இணையத்தில் சிற்றிதழ்ச் செய்தி என்ற தலைப்பில் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கினேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தமிழம் வலையில் வலையேற்றப்பட்ட சிற்றிதழ் தொடர்பான அனைத்துப் பக்கங்களும் முறைபடுத்தப்பட்டு ஒருங்குறியில் சிற்றிதழ்கள் என்ற இந்தப் பக்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். .

இந்தப் பக்கத்தில் இல்லாத இதழ்கள், உங்களிடமோ, உங்கள் நண்பர்களிடமோ இருந்தால் அவற்றை திரட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன் - அவற்றையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்துவோம்.

என்னுடைய இதழ்கள் சேகரிப்பிற்குத் தங்களிடம் இருந்த இதழ்களை அன்போடு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் இயங்க வழி அமைத்த நல்ல உள்ளங்கள் அவை. இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமையாகும்.

தமிழம் வலையை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திப் பயன்பெற ஊக்குவிக்கவும்

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம் வலை,
கைபேசி : 890 300 2071, மின்அஞ்சல் pollachinasan@gmail.com