வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 -11- 2003

எச்சரிக்கை - கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றுங்கள்

அக்டோபர் மாதத்தின் மத்தியில் ஒருநாள், சன் தொலைக் காட்சியில் இரவு 8 மணிச் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென்று சிதம்பரம் அருகே மளிகைக் கடையிலிருந்து யுரேனியம் கைப்பற்றப்பட்டது - என்ற செய்தி நம்மை திடுக்கிடச் செய்தது. ஆனால் அந்தச் செய்தியின் காட்சிகளோ நம்மை மிரட்டின.

ஆம், யுரேனியத் தண்டை கையில் வைத்து தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் அதைக் கைப்பற்றிய காவல்துறை அதிகாரி. கதிர் வீச்சானது கொசு போன்றோ, டிராகுலா போன்றோ வந்து நம்மைக் கடிக்காது. அது கண்ணுக்குத் தெரியாது ஊடுருவிப் பாதிப்பது. ஆனால் எந்தவொரு கதிரியக்கப் பாதுகாப்புச் சாதனமும் இன்றி, ஏதோ வெடிகுண்டைப்போல அலட்சியமாகக் கையில் பிடித்திருந்தார் அந்த அதிகாரி.

அந்த யுரேனியத் தண்டை ஆய்வுசெய்த விஞ்ஞானிகளும் அதில் கதிரியக்கம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும். அணுவாற்றல் துறையும் விரைந்து செயல்பட்டு, யுரேனியத் தண்டு வைக்கப்பட்டிருந்த கடையினர். அக்கடைக்கு வந்தவர்கள், அதைக் கைப்பற்றிக் கையில் வைத்திருந்த காவல்துறை அதிகாரி, அதற்கு அருகில் வந்து போன காவலர்கள், யுரேனியத் தண்டுடன் பேட்டியளிக்கப் பட்டபோது அங்கு சென்ற பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள் என அனைவரையும் உடனடியாக மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து, சிகிட்சையளித்துக் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். - அசுரன் -

சுற்றுச் சூழல் புதிய கல்வி - நவம்பர் 2003 இதழ்


பொய்த்தலும்.... ஆதலும்....
தமிழச்சி கவிதைகள்

பெரியானும், பொன்னுச்சாமியும்
பஞ்சம் பிழைக்கப் பட்டணத்தில்
கொத்து வேலைக்குப் போய்விட,
நட்டு வைத்த நாற்பது
தென்னைகளும்
பாளம் வெடித்துப் பிளந்த
மண்ணில்
கும்பி கருகிப், பாளை சிறுத்து
வண்டு குடைந்த வற்றிய
ஓட்டுடன்
அடுப்பெரிக்க மட்டையான
அவலம் மறக்க,
பட்டைச் சாராயமும்,
தொட்டுக் கொள்ள -
ஊராட்சிமுறை
தொலைக்காட்சியில்
புதுப்படமும்.

நன்றி : கணையாழி - நவம்பர் 2003


மூதறிஞர் மா.சு.சம்பந்தனாரின் தமிழ்த் தொண்டு

மூதறிஞர் மா.சு.சம்பந்தனார் இன்று அகவை எண்பதைக் கடந்து ஏறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற இணைஞராவார். இவர் இளமையிலிருந்தே தமிழ்த் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமிழர் கழகம் என்று ஒன்றை ஏற்படுத்தி அதன் வாயிலாகப் பல தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளவர். தமிழ்த் திருமணம் செய்து கொண்டவர். இவரது திருமணத்திற்குப் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், தமிழ் ஒளி முதலிய தமிழறிஞர்கள் வந்திருந்து வாழ்த்தியுள்ளார்கள். இவர் அமைத்துள்ள பதிப்பகத்திற்குத் தமிழர் பதிப்பகம் என்றே பெயர் வைத்துள்ளார். அண்மையில் தினத்தந்தி ஆதித்தனார் பரிசான ஒருலட்சம் உருபாக்களைப் பரிசாகப் பெற்றுள்ளார். இவர் மேலும் நீண்ட நாள்கள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய 'கண்ணியம்' இதழ் வாழ்த்துகிறது - ஆசிரியர்,


நன்றி : கண்ணியம் - நவம்பர் திங்களிதழ் -

(இதழியல் துறையில் நீண்ட அனுபவமும். நுட்பமும். உண்மைத் தன்மையும் உடைய மூதறிஞர் மா.சு.சம்பந்தனார் அவர்களைத் தமிழம் இணைய தளமும் அன்போடு வாழ்த்துகிறது)

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061