வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 01 -12- 2003

முதிர் கன்னி

பேதை - 7
பெதும்பை - 9
மங்கை - 12
மடந்தை - 16
அரிவை - 18
தெரிவை - 20
பேரிளம் பெண் - 32
முதிர் கன்னி ?

புதுவை தமிழ் நெஞ்சன்.
நன்றி: மன்னுயிர் - நவம்பர் 2003


குறும்பாக்கள்

சுமை தூக்கும் தொழிலாளி முதுகின்
வியர்வையைத் துடைத்தது,
அடுத்த சுமை.


உழைத்தால் முன்னேறலாம்
நான் உழைத்தேன்.
முன்னேறினார் முதலாளி !

- காவனூர் ந.சீனிவாசன்.

எத்தனை கண்கள் கொள்ளை அடித்தன
விரலின் வருடலிலும் நிதானமாக நிற்கிறாய்.
பொதுநூலக நூல்கள்.

- விக்னா பாக்கியநாதன் - ஜெர்மனி,
நன்றி: மனிதநேயம் - நவம்பர் 2003


தலைக்கறியும் குலதெய்வமும்

வெட்டறிவாள் மீசையோடு
கட்டபொம்மன் தோரணையில்
வீச்சரிவாளோடு நிற்கும்
நாட்டுப்புற சாமிகளை

கண்கண்ட தெய்வமென்று
எண்ணியெண்ணி பயந்து நின்ற
ஏமாளித் தமிழா !

மாமிசம் சாப்பிட இந்தச்
சாமிகளுக்கெல்லாம் ஆசைவந்தால்...

கறிக்கோழிக் கடைகள்,
கழிவுகள் கொட்டகின்ற தெருக்கோடி,
பகுதிகளைச் சுற்றி வருமா ?
முனியாண்டி ஓட்டலுக்குத் தண்ணி வண்டி ஓட்டுமா ?

தனக்குக் கடா வெட்டத்
தடைபோட்ட மனிதர்களின்
மயிரைப் பிடுங்கக்கூட உயிரில்லாத
உருவங்களை நீ
உண்மையென்று நம்பலாமா ?

- தோழன்
நன்றி : கல்ஓசை - நவம்பர் 2003


சூது தெளிந்தால் நமக்கு வாழ்வு

எங்கும் ஆங்கிலவழிப் பள்ளி - தமிழ்
இனத்தை அழிக்க வந்த கொள்ளி !
சங்கத் தமிழரது நாடா - இது
தமிழைப் புதைக்கும் இடுகாடா
எங்கும் எதிலும் தமிழ் வேண்டும் - என்று
எழுச்சி பெற்றிடவே தூண்டும்!
பொங்கும் தமிழுணர்ச்சி கொள்வாய் - மாற்றார்
போலித் தனங்களை நீ வெல்வாய்.

சின்னஞ்சிறு மழலை பேசும் - அயற்
சொற்கள் செவிகளிலே கூசும் !
கன்னித் தமிழ் மெல்ல மாறும் - ஒரு
கலப்பு மொழி உருவாகும்
என்ன இல்லை தமிழ் மொழியில் - பிள்ளை
ஏன்படிக்க விலைதமிழ் வழியில் ?
இன்னும் தமிழ்நாட்டில் தூக்கம் - தட்டி
எழுப்பத் தலைவரில்லா ஏக்கம் !

- தணிகைச் சிலம்பன்
நன்றி : மீண்டும் கவிக்கொண்டல் , நவம்பர் 2003.

நம் குழந்தைகள்

பல தப்புத் தவறுகளினால்
நாம் குற்றவுணர்வடைகிறோம்
உண்மையில்
நமது பெருங்குற்றம் எதுவெனில்
குழந்தைகளைக் கைவிடுவதுதான்.
பீறிட்டெழும் அவர்களது எண்ணங்களை
ஒதுக்கித் தள்ளவதுதான்.

நமது தேவைகளுக்காக
நம்மால் காத்திருக்க முடியும்
ஆனால், குழந்தை காத்திருக்காது
அவனது எலும்புகள்
உருக்கொள்ளும் நேரமிது.
இரத்தம் பொங்கிப் பெருகி
அறிவு வளரும் தருணமிது.

அவனுக்கு பதில்
"நாளை" அல்ல
"இன்று"

- காப்பிரிலா மிஸ்டிரல்
நேபல் பரிசுபெற்ற சிலி நாட்டுக் கவிஞர்.
நன்றி : தலித் முரசு - நவம்பர் 2003.


உணர்ச்சி வசப்படும் தமிழனே நீ
அறிவு வசப்படுவது எப்பொழுது ?

- பேராசிரியர் சுந்தர் -

......தலைவர்கள் இறந்தால் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு
உணர்ச்சி வசப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமே. மரணசோகம் மற்ற
மக்களையும் தாக்கவில்லையா ?.. அறிவு என்ற கடிவாளம் போடாமல்
தமிழர்கள் எதனையும் உணர்ச்சி வழியிலேயே தீர்மானித்தல்
பெரும்பாலான தமிழர்களின் வாழ்க்கை முறையாகிவிட்டது. தமிழ்
மக்களை உணர்ச்சி வயப்படுத்தி அவர்கள் ஆற்றலை எளிதில்
வீழ்த்த முடியும். கவர்ச்சி, அனுதாபம், கோபம்போன்ற உணர்ச்சிக்
கனல்களைத் தூண்டிவிட்டு புத்திசாலியான ஒருவர்
தமிழ் மக்களை வசப்படுத்த முடியும். மேற்படி உணர்ச்சிகளை
ஒருவர் தூண்டும் வண்ணம் பேசுவதாலேயே தமிழ் மக்கள்
அந்த உணர்ச்சிகளில் ஆழ்ந்துபோய், மகுடிகேட்ட நாகம்
போலப் பேசுபவனுக்கு அடிமையாகிறார்கள். பேசுபவரின்
பேச்சு உண்மைதானா என்று அலசி ஆராயும் அறிவு
பலருக்கு இருப்பதில்லை....

நன்றி : அந்தமான் முரசு வாரஇதழ்


திருவள்ளுவர் கூறும் எழுமை

- பொறிஞர் இ.அகன் -

(காப்பியங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், உலகின் பெயர்,
காற்று, பொருள்கள், நிலம், நிலத்திணை, கிளை,
நிலத்திணையின் வகை, இளம் நிலை, இலையின் வளர்நிலை
இலை வகை, பூ வகை, வித்து வகை, காய் வகை, ஒளி வகை
என ஒவ்வொன்றையும் ஏழாகப் பிரித்துக் காட்டுவது தமிழின்
சொல்வளத்ததைக் காட்டுகிற உயரிய செயல்)

எடுத்துக்காட்டாக,,,,

நிலத்திணையாம் மரத்தின் கிளையின் ஏழுவகை.

1. அடிமரத்தினின்று பிரிவது கவை
2. கவையினின்று பிரிவது கொம்பு
3. கொம்பினின்று பிரிவது கிளை
4. கிளையினின்று பிரிவது சினை
5. சினையினின்று பிரிவது போத்து
6. போத்தினின்று பிரிவது குச்சு
7. குச்சினின்று பிரிவது இனுக்கு

நன்றி : நீலகிரி டுடே - 26.11.2003 இதழ்


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061