வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 13 - 04 - 2004

குறும்பாக்கள்

கைகளைக் கட்டிக்கொண்டு
ஒன்றாம் வகுப்புக் குழந்தை பாடியது....
"கை வீசம்மா, கை வீசு"

- என். மாதவன்.

பள்ளி விட்டதும்
எப்படி முளைத்தன .... ?
குழந்தைகளுக்குச் சிறகுகள்.

- மு. முருகேஷ்.
நன்றி : விழுது மார்ச் 2004பிற உயிராய்ப் பிறக்க ஆசை.

நெருப்புக் கோழிகூட
தன் தலைவனுக்காகத்
தீக்குளிப்பதில்லை.

அழகிய மயில்கள்கூட
அழகிப் போட்டிகள்
நடத்துவதில்லை.

பெண் பூனைக்குட்டிக்குக் கூட
தாய்ப்பூனை கள்ளிப்பாலைக்
கொடுப்பதில்லை.

குரங்குகள் கூட
கூட்டணிக்காக
இனம்விட்டு தாவுவதில்லை.
எனவே.....

பிற உயிராய்ப் பிறக்க ஆசை.

லியோ. கார்த்திக்.
நன்றி : குன்றத்தூர் முரசு,இரகசியம்

உப்போ....
காரமோ......
எப்போதாவது
அளவு மாறிவிடும் போது
வீட்டை ரெண்டு பண்ணிவிடும்
மாமியாரிடம்
சொன்னதேயில்லை !

எப்போதுமே
திருப்தியில்லாத....
அவர்
மகனுடனான
தாம்பத்யம் பற்றி...!

தேனி. கண்ணன்.
நன்றி : செளந்தர சுகன் - ஏப்.2004சரியாகக் கடையவில்லையோ !

கடைந்து வந்த விஷத்தைத்தான்
கழுத்துவரை அவன்
விழுங்கிக் கொண்டானே...
பின் எதற்காகக் கடல்
நீலத்தை நிரப்பிக் கொண்டு
நுரை தள்ளுகிறது ?

- பவ. கனேசு
நன்றி : கவிதை உறவு - ஏப் 2004எப்போது பிறக்கும் ?

தை
பிறந்தால் வழி பிறக்குமாம்
இன்னும் வழியைக் காணோம்.
எந்தத் தை என்று
சொல்லவில்லை என்பதாலா ?

உதைகளும்
வதைகளும் வந்ததே ஒழிய
வழிபிறக்கும் தைமட்டும்
வரவேயில்லை.

விதை போட்ட இடத்தில்
விளைந்ததே ஒழிய
ஏழைத் தொழிலாளியை
வாழவைக்கும் தைமட்டும்
இன்னும் வரவேயில்லை.

- மட்டுவில் ஞானகுமாரன்.
பூவரசு - 13 ஆவது ஆண்டுமலர் - தை 2004எந்தக் கதவு திறக்கும் ?

வேலை தேடுவதே
வேலையாகிப் போன
இளைஞர்களுக்கு இனி
எந்தக் கதவு திறக்கும் ?

பத்து ரூபாய்க்காக..
பத்து வயதிலேயே பழுத்த
தொழிலாளியாகும்
பிஞ்சுகளுக்கு இனி
எந்தக் கதவு திறக்கும் ?

வளங்கள் தொலைத்த நமக்கு
வருங்காலம் வளமானதா ? - இனி
எந்தப் பசுமைக் கதவு திறக்கும் ?

முதுமையிலிருந்து இந்தியா
இளமை நோக்கி நகர்ந்தால்
இலக்குகளைஇமைப் பொழுதில்
எட்டிவிடலாம் - அப்போது
எந்தக் கதவு திறக்கும் ?

- க.விஜயலட்சுமி.
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, திருச்சி.
நன்றி : புதுக்கவிதைப் பூங்கா - ஏப் 2004உட்பதிவுகள்

மழைநீர்பட்டு
மதிப்பெண்கள் கரையாதிருக்க
பொத்தான்கள் துறந்த
சட்டையை விலக்கி
சிலேட்டை மார்பில் புதைத்து
வயிற்றை உட்குவித்து
கூன் முதுகிட்டு
குறைவாகச் சுவாசித்து
பாதுகாத்த மதிப்பீட்டை
அன்னையிடம் காட்ட....

கடிந்ததுடன்
தலை துவட்டி
ஈர உடை கழற்ற
நெஞ்சில் இடம் மாறிய
பதிவுகளைக் கண்டு
துடைத்தாளில்லை
என்னை இறுகத்தழுவியபடி....

- பிரேமபிரபாகருவறை எதிரே
தீபம் வணங்கி
உண்டியலில் காசிட்டு
பிரகாரம் சுற்றி
கோமுகியில் வழியும்
கழிவு நீரில் கை நனைத்து
கண்களில் ஒற்றி நடக்கையில்
உச்சந்தலையில்
எச்சமிட்டுச் செல்கிறது பறவை.

- திருவை குமரன்.

அபுதாபியிலிருக்கும்
கணவன்
ஒவ்வொரு பண்டிகைக்கும்
மறுக்காமல் அனுப்புகிறான்.
எல்லாவற்றோடும்
விதவிதமான பர்தாக்களையும்....?

- திருவை குமரன்.

நன்றி : மன்னுயிர் - ஏப் 2004எந்தன் தோழா

ஒருநிமிடம்.. ஓங்கிய கை
என் கன்னத்தில் பதியுமுன் ஒருநிமிடம்.

வேலைக்குப் போகுமிடத்தில்
எட்டுமணி நேரத்துக்கும் மேலாகவே
வேலை வாங்கி உன்னை உறிஞ்சும்
முதலாளிக்கு முன் நீ கை ஓங்கவில்லையே.

எட்டு தேர்தல் திருவிழா நடத்தி
எத்தனையோ கோடி வாக்குறுதிகள் தந்து
அத்தனையும் காற்றில் பறக்கவிட்ட
பெருந்தலைக்கு எதிராய் நீ கை ஓங்கவில்லையே.

அடுத்தவேளை சோற்றுக்குப் பயந்து
காக்கிச் சட்டையின் பிரம்புக்குப் பயந்து
ரகசியப் பலியாடுகளின் கல்லடிக்குப் பயந்து
உன் மானுடம் குறைபட்டுப் போக அனுமதித்த நீ...
ஒரு குவளை காப்பிக்காக
என் மானுடத்தைக் கறைபடுத்தப் போகிறாயா ?

ஒருநிமிடம்.. ஓங்கிய கை
என் கன்னத்தில் பதியுமுன் ஒருநிமிடம்.

- சுபத்ரா.
நன்றி : தங்கமங்கை - ஏப்ரல் 2004.காட்டாமணக்கு

காட்டாமணக்கு என்னும் வேலிக்காகப் பயன்படும் குறுமரத்தின் விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் டீசலுக்கு மாற்றாகவும். டீசலோடு இணைந்தும் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வரட்சி தாங்கி வளரக்கூடிய இந்த வகை குறுமரத்திலிருந்து ஹெக்டேருக்கு 5000 கிலோவிற்கு மேல் விதைகள் கிடைக்கும் எனவும் இதிலிருந்து 1500 கிலோ கச்சா எணணையும், 3500 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோலவே புங்கமர விதையிலிருந்து கிடைக்கிற எண்ணையும் டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்த இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. " புதியன கண்டு வளம்பெருக்க விவசாயிகள் முயலவேண்டும்"


நனறி : சுற்றுச் சூழல் புதிய கல்வி இதழ் - ஏப் 2004புதுகையில் ஓரு புதையல்.( ஞானாலயா )

திருச்சியிலிருந்து செல்லும் பொழுது, புதுகை மாநகர எல்லையில் திருக்கோகரணம் பகுதியை ஒட்டி புதிதாக உருவாகியுள்ள பழனியப்பா நகரில் அமைந்துள்ள நூலகம் தான "ஞானாலயா" திரு.பா.கிருஷ்ணமூர்த்தி, திருமதி டோரதி தம்பதியர் உருவாக்கியுள்ள இந்த நூலகத்தில் 40,000 தமிழ் நூல்களும், 5000 ஆங்கில நூல்களும் உள்ளன. 1920 க்குப் பின்னர் வெளிவந்த இதழ்களின் சேமிப்பு, எழுத்தாளர்கள் பலருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் எனப் பல அரிய பதிவுகள் இந்நூலகத்தில் உள்ளன.


நன்றி : புதுகைத் தென்றல் இதழ் - ஏப் 2004மென் பொருளில் ஒரு வல்லினம்.

காம்கேர் (COMPCARE) மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநரான திரு.புவனேஸ்வரி மொழிப்புலமை, கணினித் தொழில் நுட்பம் என்கிற இரண்டிலுமே சாதனை படைத்து வருகிறார். மென்பொருள் உருவாக்கம், தொழில் நுட்பப்பயிற்சி, பதிப்பகம், மல்டிமீடியா என இயங்கி வருகிறார். கணினி தொடர்பான புத்தகங்களும், மல்டிமீடியா சிடிரோம்களும் இவரது ஆக்கத்திறனுக்குச் சாட்சியாக உள்ளன.

நன்றி : பெண்ணே நீ இதழ் - ஏப் 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061