வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 10 - 2004

48 வகை நீர்நிலைகள்

1. அகழி (moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர்நிலை.
2.அருவி (water falls) மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது.
3. ஆழ்கிணறு (moat) கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு.
4. ஆறு (river) பெருகி ஓடும் நதி.
5. இலஞ்சி (reservoir of drinking and other purpose) குடிப்பதற்கும் வேறு வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
6. உறை கிணறு (ring well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் அல்லது பைஞ்சுதையினால் வலையமிட்ட கிணறு.
7. ஊறுணி (drinking well tank) மக்கள் குடிப்பதற்கு உள்ள நீர் நிலை.
8. ஊற்று (spring) அடியிலிருந்து நீர் ஊறுவது.
9. ஏரி (irrigation tank) வேளாண்மைப் பாசன நீர்த் தேக்கம்.
10. ஓடை (brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் எப்பொழுதும் பொசித்து வாய்க்கால் வழியாக ஓடும் ஒரு நீர் நிலை.
11. கட்டுக் கிணறு (built in well) சரளை நிலத்தில் வெட்டி கல், செங்கலால் உள்சுவர் எழுப்பிய கிணறு.
12. கடல் (sea) மாபெரும் நீர்ப் பரப்பு.
13. கம்வாய் (irrigation tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு (sluicae with many ventways) ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கம். உடைப்பு எடுக்காமல் முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டு பலவகைகளால் அடைத்துத் திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் (channel) நீரோடும் வழி.
16. கால்வாய் (supply channel to a tank) ஏரி, குளம், ஊருணிக்கு நீர் ஊட்டும் பாய்கால் வழி.
17. குட்டம் (large pond) பெரிய குட்டை.
18. குட்டை (small pond) சிறிய குட்டம். கால்நடை முதலியவற்றை குளிப்பாட்டும் நீர்நிலை.
19. குண்டம் (small pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை.
20. குண்டு (pool) குளிப்பதற்கான சிறு குளம்.
21. குமிழி (rock cut well) நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழும்பி வரச் செய்த குடைக்கிணறு.
22. குமிழி ஊற்று (artesion fountain) அடிநிலத்து நீர் நிலமட்டத்துக்குக் கொப்பளித்து வரும் ஊற்று.
23. குளம் (bathing tank) ஊரின் அருகே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர்நிலை.
24. குளம் (irrigation tank) கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இடங்களில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
25. கூவம் (abnormal well) ஒழுங்கில் அமையாத கிணறு.
26. கூவல் (hollow) ஆழமற்ற கிணறு போன்ற ஒரு பள்ளம்.
27. கேணி (large well) அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
28. சிறை (reservoir) தேக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய நீர்நிலை.
29. சுனை (mountain pool) மலையில் இயல்பாய் அமைந்த நீர்நிலை.
30. சேங்கை (tank with duck weed) பாசிக் கொடி மண்டிய குளம்.
31. தடம் (beautifully constructed tank) அழகாக நான்கு புறமும் கட்டப்பட்ட குளம்.
32. தனிக்குளம் (tank surrounding tank) கோயிலின் நான்கு புறமும் சுற்றி அமைந்த அகழி போன்ற நீர் நிலை.
33. தாங்கல் (irrigation tank) இந்தப் பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.
34. திருக்குளம் (temple tank) கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
35. தெப்பக்குளம் (temple tank with inside pathway along parpet walls) ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடுகிணறு (digwell) ஆற்றின் உள்ளேயும் அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி (large well with steps on one side) இறங்கிக் செல்லும் படிக்கட்டு அமைந்து பெருங்கிணறு.
38. நீராழி (bigger tank with centre mantapa) நடுவில் மண்டபத்துடன் கூடிய பெரும் குளம்.
39. பிள்ளைக் கிணறு (well in middle of a tank) குளம். ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.
40. பொங்கு (well with bubbing spring) ஊற்றுக்கால் கொப்புளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை (lake) தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர்நிலை.
42. மடு (deep place in a river) ஆற்றின் இடையேயுள்ள மிக ஆழமான பள்ளம்.
43. மடை (small with single ventway) ஒரு கண் மட்டும் உள்ள சிறு மதகு.
44. மதகு (sluice with many ventways) பல கண்களைக் கொண்ட ஏரிநீர் வெளிப்படும் பெரிய மடை.
45. மறுகால் (surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் (round tank) வட்டமாய் அமைந்துள்ள குளம்.
47. வாய்க்கால் (small water cource) ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறிய கால்.
48. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

- நன்றி : அறிவியல் முத்துகள் -
- நன்றி : தமிழ்ச் சிட்டு சிறுவர் இதழ் - தி.பி.2035 துலை (அக் 2004)யார் பலசாலி

காட்டில் ஒரு நாய் இருந்தது. தனக்கு ஒரு துணை தேட விரும்பியது. அந்தத் துணை உலகிலேயே மிகவும் பலசாலியாக இருக்கவேண்டும் என்றும் எண்ணியது.
ஓநாய் தான் பலசாலி என்று நினைத்து ஓநாயிடம் சென்றது. அதனுடன் துணையாய் இருந்தது. காட்டில் ஒரு பெரும் ஒலி கேட்டது. உடனே நாய் குரைக்கத் தொடங்கியது. அப்பொழுது ஓநாய் நாயைப் பார்த்து "குரைக்காதே" கரடி வந்து நம்மைக் கொன்றுவிடும் என எச்சரித்தது.
உடனே ஓநாயை விடக் கரடிதான் பலசாலி என்று எண்ணி ஒநாயை விட்டுக் கரடியிடம் சென்றது. அடுத்த நாள் காட்டில் அந்தப் பெரும் ஒலி கேட்டவுடன் நாய் குரைக்கத் தொடங்கியது. உடனே கரடி "குரைக்காதே" சிங்கம் வந்தால் நம்மைக் கொன்றுவிடும் என்றது.
நாய் கரடியை விட்டுச் சிங்கத்திடம் சென்று சேர்ந்தது. வழக்கம் போல ஒலி கேட்கத் தொடங்கியவுடன் நாய் குரைக்கத் தொடங்கியது. சிங்கம் உடனே "குரைக்காதே" மனிதன் வருகிறான் நம்மைப் பிடித்துச் சென்றுவிடுவான் என்றது.
உடனே நாய் சிங்கத்தை விட்டு மனிதனுடன் சேர்ந்து விட்டது. வழக்கம் போல ஒலிகேட்டு நாய் குரைக்கத் தொடங்கியது. உடனே மனிதன் "நன்றாகக் குரை அதுதான் நல்லது" எனக் கூறி நாயைக் குரைக்க அனுமதித்தான். தன்னைக் குரைக்க அனுமதித்த மனிதனே பலசாலி என்று நாய் மனிதனுடனேயே தங்கிவிட்டது.
- இளந்தென்றல் - திருமழப்பாடி - நன்றி : தன்முன்னேற்றம் இதழ்

(மனிதன்தான் இன்று மனிதனைப் பார்த்து "பேசாதே" "பேசினால் உள்ளே போவாய்" என்கிறான்)


பூச்சி அரித்த பொக்குக் கடலைகள்.

கொத்துக் கடலைக்குப்
பொரிகடலை என்ற ஒரு பெயர்
நிலைத்துவிட்டது ஏன் தெரியுமா?
தன்னைச் சுற்றிலும் வெப்பம் ஏறும்போது,
வெந்து வெந்து உள்ளடங்கிவிடாமல்
அது,
வீறி வெடித்துப் பொரிகிறது,
அதன் ஊடே கிடக்கின்றவே
ஒன்றிரண்டு பொரியாக் கடலைகள்,
அவை பூச்சி அரித்த பொக்குக் கடலைகள்.

என் அருமை இளையவனே
இதனாலேதான்
ஒழுக்கக் கேடுகள் உயர்ந்து வரும்போதும்,
வெம்பாமல் குமுறாமல் வெடிக்காமல்
நீவிழுந்து கிடப்பதைப் பார்க்கப் பார்க்க
எனக்குக் கோபம் கோபமாக வருகிறது.

(தமிழர்)பொரியாத பொக்குக் கடலைகளா ?

பேரா. சாலை இளந்திரையன்
நன்றி : யாதும் ஊரே - அக் 2004.கவிதை

ஓடிக் கொண்டிருக்கிறது
ரயில்....
டீ..டீ..டீ... எனக் கத்தும்
குரலிலிருக்கிறது
ஒரு நம்பிக்கை.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் - சொல்லி
நீட்டுகிற உள்ளங்கைகளில்
இருக்கிறது
ஒரு முயற்சி.

வடை..வடை.. என
வளைகிற வார்த்தைகளில்
இருக்கிறது ஓர் உழைப்பு.

பாட்டுப் பாடி பிச்சை
கேட்கும் பிச்சை முகத்தில்
இருக்கிறது வாழ்வின் ஒரு விதை..

வேறு வேறு திசைகளில்
வேறு வேறு இலக்குகளில்
பயணம் ஒருமித்திருக்கிறது
மனசின் ஆழத்திலூன்றிய
களை பிடுங்கித்
தூரமெறிந்த ஒரு பாடலுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்...

கருப்புப் பட்டை மேனி
நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
தொட்டால் சுருள்கிறது.
அடித்துப் போட்டால
நாறுகிறது....
அதனை நோக்கி
வீசும் எந்தக் கேள்விக்கும்
இல்லை பதில் அதனிடம்..

பின் ஏன் வாழ்கிறது
மரவட்டை ?

பின் அதன் வாழ்க்கையை
யார் வாழ்வது ?

- ஹரணி -
நன்றி : கணையாழி - அக்டோபர் 2004.ஈடு
அரசும்
வேம்புமாயிருந்த இடத்தை
அழித்துக் கட்டிய
இந்தச் சிறு வீட்டிற்குள்
மரங்களைத் தேடித்தான்
நிகழ்ந்திருக்க வேண்டும்
உன் வருகை.

எப்படியோ
உன் வம்சவிருத்திக்கான
இருப்பிடம்
எனது வீட்டின் பரணாயிற்று.
அத்தனை இடுக்கிற்குள்
எப்படித்தான் நிர்மாணித்தாய்
உனக்கான கூடொன்றை...

இப்போதெல்லாம்
நீ பாதிக்கப்படுவாயென்று
கொட்டும் வியர்வையிலும்
மின் விசிறியைக் கூட
சுழலவிடுவதில்லை நான்.

உன்னவர்கள் கீச்சொலியால்
மிகுகின்றது ஒற்றைத் தலைவலி
சகிக்கிறேன்...

உன் இணையும் நீயும்
வீட்டிற்குள் என்றில்லாமல்
என் மேலேயும்
எச்சமிட்டுப் போகிறீர்கள்.
பலமுறை...

அதிசுத்தம் பேணும் நான்
அமைதியாய்
சுத்தப்படுத்துவதை
வியப்போடு பார்க்கிறார்கள்.
காரணமில்லாமலில்லை...

அலைந்து திரிந்து நீ
குஞ்சுகளுக்கு
உணவூட்டும் பொழுதுகளில்
உன்னில்
இறந்தயென் தாயை அல்லவா
தரிசிக்கிறேன்.

அன்றியும்
நீ இளைப்பாறும் மரங்களை
அழித்துக் கட்டிய இடத்தில்
குடியிருக்கும்
குற்றத்திற்குப் பிரதியாய்
இப்போதைக்கு
என்னால்
என்ன செய்ய இயலும்
உன் குடியிருப்புக்கு
உன்னை இப்படி
அனுமதித்திருப்பதைத் தவிர.....

பா. உஷாராணி
நன்றி : செளந்தர சுகன் - அக் 2004உயிர் அறுக்கும்
பசி தின்னும் குழந்தைகள்
நாற்பது கோடி

ஒண்ட ஓர் ஓற்றைக் குடிசையின்றி
நடைபாதையில் வாழ்வைப் பரப்பி
நலிவுற்றோர் எத்தனை கோடி

உழைத்துழைத்து ஓடாய்ப் போன
உழைப்போரின் வயிற்றுச் சுருக்கங்களில்
வறுமைவரிகள்
எழுதிப் பார்க்கும் வாழ்க்கை கோடி

பூக்களைத் தொலைத்த பிஞ்சு விரல்களில்
காய்ப்புகளை எடுத்துக் கொண்டு
கந்தகங்களை சுவாசிக்கும்
குழந்தைகள் கோடி கோடி

தண்ணீரற்று விளைய மறுக்கும்
நிலங்களில் செத்து சாயும்
உழவாளிகள் கோடி.

எது எப்படியிருப்பின் என்ன
திருப்பதி ஏழுமலையானுக்கு
காஞ்சி சங்கரன் தந்த
தங்கத் தொப்பி ஒன்றரை கோடி.

காதில் ஒலிக்கிறது
ஈரோட்டுக் கிழவனின்
கடவுளை மற , மனிதனை நினை.

- யாழன் ஆதி -
நன்றி : தலித் முரசு - அக் 2004உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானும் ஓம்புகின்றேன்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

உடல் போற்றுக உயிர் போற்றுக கட்டுரையில்
நன்றி : சுருத கேவலி - அக் 2004சினிமாவில் ஆபாசத்தைவிட மோசமான வன்முறை

புதிய புத்தகம் பேசுது அக் 2004 இதழில்
தியோடர் பாஸ்கரன் அவர்களது நேர்காணலில்...

சென்சார் போர்டு செயல்பாடுகள் பற்றி தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து குறைபாடுகள் சொல்லப்பட்டு வருகிறதே ? சினிமாவின் தாக்கத்தையும் அதன் இயல்பையும் சாத்தியக்கூறுகளையும் புரிந்து கொண்டவர்கள்தான் சென்சார்போர்டு உறுப்பினர்களாக இருக்கவேண்டுமென நினைக்கிறோம். நாம் செக்ஸ் காட்சிகளைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறோம். ஆனால் அதற்கு மேலும் சில விசயங்கள் இருக்கின்றன. செக்ஸைவிட வன்முறை மிகவும் மோசம். செக்ஸ் காட்சிகளைப் பார்க்கிற குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப் படுவதில்லை. ஏனென்றால் குழந்தைகளுக்கு அந்த உணர்வு தீவிரமாகக் கிடையாது. ஆனால் வன்முறையும் அதன் வலியும் குழந்தைகளுக்குத் தெரியும். தலையைத் துண்டிப்பது போலவும், குடலை உருவுவது போலவும் தமிழ்ச் சினிமா வருகின்றன. செக்ஸ் காட்சிகள் கூடாது என்பதில் நாம் காட்டுகிற அக்கறையை வன்முறை கூடாது என்பதிலும் காட்டவேண்டும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061