வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 11 - 2004

உரைவீச்சுகள்

பறவையின் எச்சத்தில்
ஊறிய விதைக்கு
இளகுவதுண்டு
இறுகிய பாறை.

அழுகிய பிணங்களைத்
தின்று விட்டு
அழகிய மலர்களைப்
பூக்கின்றன
இடுகாட்டு மரங்கள்.

அழிந்து போகுமெனத்
தெரிந்தும்
அலைபாயும்
மணல் வெளியில்
என் பெயரெழுதிப்
பார்க்கிறேன் நான்.

நன்றி : கேரளத் தமிழ் - வசந்தகுமாரனின்
கவிதைத் தொகுப்பு விமர்சனத்தில்.


குருதிக்கு விலை உண்டு
வியர்வைக்கு விலை இல்லை.

குருதியை விடவும் வியர்வைக் கிங்கே
விலைகள் அதிகம்
தெரிந்து கொள் - நெஞ்சில்
இறுதிவரைக்கும் உறுதி இருந்தால்
இரவே இல்லை
புரிந்து கொள்.

துருபிடித்து அழிவதைவிடவும்
தேய்ந்து அழிவது
நன்றாகும் - அட
வருவதை எண்ணிக் கொண்டிருந்தால்
வாழ்க்கை இங்கே
சுமையாகும்

தோல்வி தன்னைப் படிக்கட்டாக்கித்
தொடர்ந்து முயன்றால்
வென்றிடுவாய் - நீ
தோல்வி கண்டு தொலைந்து போனால்
வரலாறின்றி
போய்விடுவாய்.

தலைமேல் சோம்பல் குருவி பறப்பதைத்
தடுக்க உன்னால்
முடியாது - ஆனால்
தலையில் கூடு கட்டிடாமல்
தடுக்க இங்கே
தடையேது ?

திறமை மட்டும் இருந்துவிட்டால்
திசைகள் எட்டும்
உன்பின்னால் - உலக
உறவுகள் எல்லாம்
ஓடி வந்திடும்
உன் முன்னால்.

புதுவை தமிழ் நெஞ்சன்

நன்றி : தமிழ்ச் சிட்டு சிறுவர் திங்களிதழ் 2035 நளி


நீ எழமாட்டாயா ?

ஏடா ! நீயும் எழமாட்டாயா ?
இங்குள்ள இழிநிலைக் கழமாட்டாயா
மாடா? இல்லை நீ மரமா என்ன ?
வையம் ஆண்ட தமிழன் நீயா ?
ஏடா கூடமாய் இருக்கின்றாயே !
ஏதோ அரசியல் பண்ணுகின்றாய் !
போடா போ ! உன் கொற்றம் வீழ்ந்து
புதைந்த இடத்தைப் பார்த்து வாடா !

மண்மே டிட்ட இடத்தில் கோட்டை
மதில்கள் அரண்மனை நாடு நகரம்
கண்பார் வையில் தெரிய வில்லையா ?
களம்பல கண்ட கொடியும் இல்லையா ?
புண்ணாய்ப் போனது நெஞ்சம் மானம்
பொசுங்கிப் போனது தானடா மிச்சம் !
கண்ணாய்க் கருத்தாய் நாமிருந்திருந்தால்
கைவிடப் பிறர்கை நம்நிலம் போமா ?

மொழிபே ணானாய் இனத்தைச் சிதைத்தாய் !
மூணே காலாய் அளவில் சிறுத்தாய் !
பழியாய்ச் சாதிகள் படைத்துக் கொண்டாய் !
பழந்தமிழ் முகத்தைக் கெடுத்தும் கொண்டாய் !
கழிவாய் மலமாய் சாய்க்கடை ஆனாய் !
கண்டவர்க் கெல்லாம் அடிமையாய்ப் போனாய் !
அழிவின் விளிம்பில் நிற்கின் றாயடா ?
அதுஉனக் கேனடா தெரியவும் இல்லை !

வெந்த சோறு கிடைத்தால் போதுமா ?
வேட்டியை எவனும் அவிழ்த்திடலாமா ?
குந்திக் குந்திக் காலம் கழிக்கிறாய் !
குரலுன் குரலில் தெம்பும் இல்லையே !
எந்த நினைப்பில் இப்படி இருக்கிறாய் ?
எங்குன் சூடு? சுரணை ? வீரம் ?
மந்தத் தனந்தான் உன்வாழ் வோடா ?
மறத்தனம் காட்ட எழடா ! வாடா !

செத்தாய் விடுவாய் ! அஞ்சுதல் ஏன் நீ ?
செத்துச் செத்துப் பிழைப்பதும் பிழைப்பா ?
செத்துப் போதல் அதனினும் மேலாம் !
செருக்களம் நமக்குப் பழகா இடமா ?
சொத்தைக ளில்லை நாமெனக் காட்டு !
சுடர் முகம் தூக்கு ! நெருப்பைக் கக்கு !
குத்திக் கிழிக்கும் கொம்புக் காளையாய்க்
குதித்துத் துள்ளி எழடா ! வாடா !

ஒற்றுமைப் படடா ! ஒன்றிப் போடா !
உன் தமிழ்ச் சாதியைக் கூட்டிக் கோடா !
பற்றுவைத் தெழடா பச்சைத் தமிழனாய் !
பகையைச் சாய்க்க முழக்கம் இடடா !
பெற்றநம் அன்னைத் தமிழ்வழி அரசியல்
பேசக் கற்போம் ! கற்பிப்போம் நாம் !
உற்றநம் இனவழித் தமிழர் தேசியம்
ஊரைத் திருத்த வாடா ! வாடா !!

பாவரிமா இளஞ்சித்திரன்

நன்றி : தென் ஆசியச் செய்தி - நவம்பர் 2004


புதுசு கண்ணா! புதுசு

எதையெதையோ இலவயமாய்க் கொடுப்ப தாக
இங்கொருவர் அழைக்கவும் நான் என்ன வென்றேன் !
அதையேன் நீ கேட்கின்றாய் ! கலைஞர் வீட்டார்
அரிவையர்க் கோர் இதழ் நடத்துகின்றார் அங்கே
இதையிதை யெல்லாம் இதழை வாங்குவோர்க்கே
இலவயமாய்த் தருவாராம் ! வாங்கச் சொல்லிக்
கதைகதையாய்த் தொலைக்காட்சி விளம்பரத்தில்
காட்டுகின்றார் நாள்தோறும் என்றான் நண்பன் !

குங்குமமாம் ! பேரைப் பார் ! நெற்றிப் பொட்டு
கூடாது ! பெண்களுக்கோர் மூடச் சின்னம் !
எங்கேயோ கேட்டதுபோல் நினைவு ! ஆ ! ஆ !
இது பெரியார் சொன்னதன்றோ ? அவருக்கென்ன !
இங்கிதனை நாம் சொன்னால் பெண்கள் கேளார் !
எனவே நாம் அவர் போக்கில் செல்வோம் என்று
குங்குமமென் றிதழுக்குப் பேரை வைத்தார் !
குழி தோண்டிப் பெரியாரைப் புதைத்து விட்டார் !

பகுத்தறிவை முன்மொழிந்த இயக்கம் ! இன்றோ !
பழமைக்குப் புதுமெருகை ஏற்றும் கொள்கை
வகுத்துக் கொண் டாரதற்குத் தகுந்தாற் போன்று
வாய்ப்புவர ஏந்துகளைப் பெருக்கிக் கொண்டார் !
புகுத்துகிறார் தொலைக் காட்சி வழியே மூடப்
புழுப்புழுத்த முடைநாற்றக் குப்பை யெல்லாம் !
பகுத்தறிவாம் ! பகுத்தறிவு ! மூட்டை கட்டிப்
பரண்மேலே போடினிமேல், பெஸ்டு கண்ணா !

பொறிஞர் - கு.ம.சுப்பிரமணியன்.

நன்றி : இலக்கியம் - நவம்பர் 2004


நமது குடும்பம் தமிழ்க் குடும்பமாக விளங்க....

1. நம்முடைய பெயர் பிறமொழியில் அமைந்திருந்தால் அதனைத் தமிழ்ப் படுத்திக் கொள்வோம்.
2. நம் குழந்தைகளுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்வோம்.
3. எல்லா இடத்திலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம்.
4. அனைத்துக் கல்வித் துறைகளையும் தமிழ் வாயிலாகவே பயில்வோம்.
5. கடவுள் நம்பிக்கையும், வழிபாடு செய்ய விருப்பம் உடையவர்களைத் தமிழிலேயே வழிபாடு செய்ய வற்புறுத்துவோம்.
6. திருமணம் முதலிய இல்லச் சடங்குகளை தமிழிலேயே நடத்துவோம்.
7. பிறமொழிக் கலப்பைத் தவிர்ப்போம். தமிழிலேயே பேசுவோம். எழுதுவோம்.
8. தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்துவோம்.
9. சாதியையும், சாதிப்படங்களையும் தூக்கி எறிந்துவிட்டுத் தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்வோம்.
10. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பெண்ணடிமைத் தனத்துக்கு எதிராகவும் போராடுவோம்.
11. தமிழுணர்வோடு பகுத்தறிவு நெறியில் புதியதோர் பொதுவுடைமை உலகம் படைப்போம்.

தோழர் அரணமுறுவல் மகன் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றவை.

நன்றி : எழுகதிர் - திங்களிதழ் - நவம்பர் 2004


வேலைக்காகப் பதிவு செய்து காத்திருப்போர்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 54 இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

இவர்களில் 11,700 பேர் எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்க்கைக்குத் தடைஆணை இருந்து வருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தகவல் தொழில் நுட்பப் பணிகளுக்கு ஆங்காங்கே நியமனங்கள் நடைபெற்று வந்த போதிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்தபடியே உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 31 ஆம் நாள் நிலவரப்படி வேலைவாய்ப்பு மையங்களில் மொத்தம் 49.85 இலட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 18.29 இலட்சம் பேர் பெண்கள். நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 4,900 பேருக்கு மட்டுமே அரசால் வேலை கொடுக்கமுடிந்தது.

கடந்த ஆறு மாதங்களில் வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து 54,48 இலட்சத்தை எட்டியுள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இது 48.76 இலட்சமாக இருந்தது. பதிவு செய்தோரில் 20,714 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படித்துவிட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரில் 71,000 பேர்கள் பி.இ. பட்டதாரிகள். 12,000 பேர் எம்.இ முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்கல்வி படித்தோரின் நிலையே இதுவென்றால் கலை, அறிவியல் பட்டதாரிகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. வேலை தேடி அலைகிற கலை, அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு லட்சத்ததுக்கும் மேற்பட்ட கலை, அறிவியல் பட்டதாரிகளும் 78 ஆயிரம் பி.காம் பட்டதாரிகளும் வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து வேலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

(நன்றி : தினமணி - திருச்சி பதிப்பு 27-10-2004)

நன்றி : தமிழர் கண்ணோட்டம் திங்களிதழ் - நவம்பர் 2004தவமிருந்து தமிழைத் தொடுங்கள்

மதிப்பு மிக்க லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் 8-11-2004 குமுதம் இதழில் எழுதியுள்ள "தமிழுக்கு இல்லாத தகுதி" எனும் குறிப்புக்கு விளக்கம் தரும் கடிதம் இது.

தகுதியில்லாத தமிழைச் செம்மொழியாக்கி விட்டார்கள் - எனத் தாங்கள் அங்கலாய்த்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அத்துடன் பதினொரு தகுதிகளில் மூன்றாவது தகுதியாகிய " பிறமொழிக் கலப்பின்னை " என்பது தமிழிற்குப் பொருந்தாதென்று அடித்துக் கூறியிருக்கிறீர்கள். நுனிப்புல் மேய்வது என்பார்களே, அது இது தானோ ?

பல்லவர் காலத்தில் வடமொழி, களப்பிரர் காலத்தில் கன்னடம், முகமதியர்கள் மூலம் உருது, அரபு, நாயக்கர்களால் தெலுங்கு, ஆங்கிலேயர் ஆட்சியால் ஆங்கிலம் என்று, பல மொழிகளும் தமிழில் கலந்ததாகக் கூறுகிறீர்கள். தங்களின் வரலாற்றுப் புலமையை ஏற்றுக் கொள்கிறோம்.

இம்மொழிகள் எல்லாம் தமிழில் வந்து கலந்தவையாக இருக்கலாம். ஆனால் அக்கலப்பிற்கு முன், தமிழில் அவற்றிற்குரிய சொற்கள் இல்லாமல்இல்லை. கலப்பினால்தான் தமிழ் வாழ்ந்துகொண்டிருப்பதுபோலத் தாங்கள் இழுத்துச் செல்கிறீர்கள். மக்கள் கலப்பாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள் அதைக் கொண்டு தமிழின் மாண்பையோ, அதன் ஆழமான - அகலமான சொல் வளத்தையோ குறைத்து மதிப்பிடக்கூடாது.

'தமிழில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினாலும், தமிழ் நிலைத்து நிற்கும். ஆனால் பிற மொழிகளில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டால், அவற்றால் நிற்க முடியாது' என்று உறுதிபடக் கூறும் கால்டுவெல் அவர்களின் கருத்தை எண்ணிப்பாருங்கள்.

தண்ணீரில் கலந்த மண்துகள்கள் அடியிற்படிந்து, கண்ணாடி போன்று நீர் மறுபடியும் தெளிந்து தெரிவது போல எத்தனை கலப்பு நேர்ந்தாலும், தமிழின் உயர்தனிச் செம்மொழித் தன்மை குறைந்து போகாது என்பதை உணருங்கள். உலக மொழிகள் பலவற்றிலும் கடனாகப் பெற்ற சொற்களால் இன்று சொல்வளத்தைப் பெருக்கிக் கொண்டுள்ள ஆங்கிலம் போனறதில்லை தமிழ்.

சைக்கிளை மிதிவண்டி என்றும், போனைத் தொலைபேசி என்றும், சிபாரிசைப் பரிந்துரை என்றும், மந்திரியை அமைச்சர் என்றும் கூற மக்கள் பழகாமல் போனார்கள். அவர்களைப் பழக்கப்படுத்த அரசும் ஆசான்களும் இல்லாமற் போனார்கள். இதுதான் நாணுதற்குரியதேயன்றி, தமிழ் தகுதி குறைந்ததன்று.

செளராட்டிரர்களை எடுத்துக்காட்டி, எத்தகைய சூழலிலும் தாய்மொழியிலேயே பேசவேண்டும் எனக் கூறுகிறீர்களே, தாங்கள் துணையாசிரியராகப் பணியாற்றும் "குமுதம்" இதழில் Behind the Scences, VIP, குமுதம் சாய்ஸ், சக்சஸ், சக்கரவர்த்திக்ள, காதல் குஸ்தி, அட்டை டேட்டா, மினிமா, லைட்ஸ் ஆப் பாலிடிக்ஸ், ஃபிளாஷ் பேக், ரெடி ஜூட், பசி டைம் - என்று வாங்கித் தின்னவன் வாந்தி எடுத்தது போல - தலைப்புகளும் தொடர்களும் இடம் பெற்றுள்ளனவே. அட்டையிலேயே 'நம்பர் ஒன் தமிழ் இதழ்' என்று கலப்படம் கண்சிமிட்டுகிறதே இவையெல்லாம் தங்கள் கண்களுக்குத் தென்படவில்லையா ? இச்சொற்களுக்குச் சமமாகத் தமிழில் சொற்கள் இல்லையென்பது குமுதத்தின் முடிவா ? அல்லது தங்களின் தாய்மொழி தமிழ் இல்லையா ?

இப்போது கூறுங்கள். தமிழ் கலப்படமாகிப் போனதற்கு யார் காரணம்? நீங்களும் குமுதமும் அல்லவா? தமிழ் வளங்குறைந்ததா ? தகுதியில்லையா ? தகுதியைக் குறைத்தவர்கள் தாங்களாவே இருக்க, வீர தீர சபதம் எல்லாம் எதற்காக ?

தமிழைத் தொடுவதானால் தவமிருந்து தொடுங்கள் - எடுத்தேன், கவிழ்த்தேன் - என்று தாங்கள் எதையாவது எழுதித் தமிழுள்ளங்களைப் புண்ணாக்க வேண்டாம்.

அன்புடன்,

தமிழ்ப்பெரியசாமி.

நன்றி : அன்பு வணக்கம் இதழ் - தி.ஆ.2035 (துலை-நளி) நவம்பர் 2004துப்புமில்லை..., வக்குமில்லை...,

"ஒரு பெண் எனப்படுபவள் யார் ?"

'திரட்சியான சதை போர்த்திய மிருதுவான, வெண்மையான சருமம். அதைப் பேணிப் பராமரித்து எப்போதும் இளமையோடேயே வைத்துக் கொள்ளத் துடிக்கும் இயல்பும், அதற்கான உபாயங்களை அறிந்து வைத்திருக்கும் அறிவும் கொண்டவள். நீண்ட பளபளப்பான, கருமை நிறக் கூந்தல், எப்போதும் கவர்ந்திழுக்கிறபடியான கண்களும் பல்வரிசையும் அமைந்தவள். மொத்தத்தில் பெண் எனப்படுபவள் ஆண்களின் இச்சை தீர்க்கும் இரண்டாம் தரப்பிறவிகள். அவர்களுக்குத் தரப்படும் கல்வியறிவு, வாய்ப்பு - வசதிகள் எல்லாமே ஆணின் இன்பத்தை முன்னிட்டே, இவையன்றிப் பெண்ணுக்கு வேறு தனித்தன்மையும் இல்லை'

- இவைதான் இந்த நவீன அறிவியல் யுகத்திலும் பெண் குறித்த நமது ஊடகங்களின் முன்வைப்புகள்.

ஊடகங்கள் எனில் சினிமா, தொலைக்காட்சி என்று எல்லாம் தான். ஏதும் விதிவிலக்கில்லை. சினிமாவையும் விட தொலைக்காட்சி பல வகையில் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. ஏனெனில், அது நம் நடு வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இரவு - பகல் எல்லா நேரமும், பெரியவர், குழந்தைகள் எல்லோரையும் தங்கு தடையில்லாமல் தாக்க அது எப்போதும் தயார் நிலையிலிருக்கிறது.

இந்த ஆபத்து மட்டுமா? மெகா தொடர் தொடங்கி, சினிமாக் காட்சிகள், பாடல்கள் என்று பண்பாட்டுச் சிதைவுக்குப் பல்லாண்டு பாடிக் களிக்கின்றன. நமது தொலைக்காட்சிச் சேலன்கள். பெண்ணை அழவிட்டு, கண்ணீர் வெள்ளத்திலேயே கரையவிடும் தொடர்கள் ஒருபுறமென்றால் மறுபுறம் குலுங்கிக் குலுங்கியே நம் பண்பாட்டை உலுக்கச் செய்கிற சினிமாப் பாடல்கள்.

விடியுமட்டும் வீணாப்போனாள் -
விடிந்த பின்னே காணாப்போனாள்.

- என்று சினிமா இலக்கியம் பெண்களைப் பெருமை செய்கிறது.

புத்தகமின்றிச் சொல்லித் தாரேன் வா,
கட்டணமின்றிச் சொல்லித் தாரேன் வா.

- என்று இலவசக் கல்வி அல்ல, கலவிக்கு அவள் அழைக்க சினிமா - சிறுமை செய்கிறது.

சிறுமையும் அபத்தமும் பணம் பண்ணும் வெறியினால் விளம்பரங்களையும் விட்டு வைக்கவில்லை. விளம்பர இடைவேளைகளிலாவது பிழைத்திருப்போமா என்று ஏங்கவும் வழியில்லை.

சோப்பு வாங்கப் போன மகள், குறிப்பிட்ட அந்த சோப்பை வாங்காமல் வந்துவிட்டால் என்னவாகும் ? பதறித் துடிக்கிறாள் தாய்.

ஐயய்யோ...மகளின் தோலில் அரிப்பு வருமே..முகத்தில் பரு உண்டாகுமே.,. என்று அரற்றத் தொடங்கி இறுதியாக அவளுக்குக் கல்யாணமே ஆகாமல் போய்விடுமே - என்று பீதியோடு நடுங்குகிறாள் அந்தத் தாய். அவளது மகளுக்கு என்ன வயதிருக்கும்? அவள் ஒரு சின்னஞ் சிறுமி. ஒரே ஒருமுறை ஒரு சோப்பைத் தவறாக மாற்றி வாங்கி வந்துவிட்டால் என்றோ பல வருடங்களுக்குப் பிறகு நடக்க வேண்டிய திருமணம் கூட நின்று போகும் என்று நம்மை மிரட்டுகிறது இந்த விளம்பரம்.

இன்னொரு சோப் விளம்பரத்தில் அதை உபயோகித்த இளம் பெண் சொல்கிறாள் - பாய்ஸ் லுக் ஜாஸ்தியாயிருச்சு - பாய்ஸ் லுக்கிற்காகவேதான் பெண்கள் என்று பெண்களையே நம்பவைக்கிறது விளம்பரம் இது.

இப்படி விளம்பரங்கள் என்ற பெயரில் அபத்தங்கள் ஏராளம். அபத்தங்கள் மட்டும்தானா? ஆபாசத்திற்கும் பஞ்சமில்லை.

வேறு வேறு திசைளிலிருந்து இரண்டு பேர் - ஒரு ஆணும் ஒரு பெண்ணும் - ஒரு நீண்ட பெஞ்சின் விளிம்புகளில் வந்து உட்காருகின்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறார்கள். இளைஞன் கையை விரிக்கிறான். ஆணுறை பாக்கெட். யுவதி புன்னகைக்கிறாள். இருவரும் ஒரே திசையில் கைகோர்த்து நடக்கிறார்கள். முன்பின் தெரியாத ஆணும் பெண்ணும் ஆணுறை தரும் பாதுகாப்பில் கூடுவதாகக் காட்டுவது, அதுவும் தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டுவது சமுதாயத்தைச் சீரழிக்கிற முயற்சியில்லாமல் வேறென்ன ?

யார் எக்கேடு கெட்டால் என்ன ? எங்கள் குறி ஒன்றே ஒன்றுதான். அது பணம், பணம், பணம் மட்டும்தான். - என்பதே இன்றைய உலகமயம் உச்சரிக்கும் மந்திரமாக உள்ளது.

கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட இளம் பெண் ஒருத்தி ஒரு மிட்டாய் வாசனையில் தன்னை பறிகொடுத்து, அந்த மிட்டாயை வாங்கித் தின்னவனோடு சைக்கிளில் ஏறி ஊரைவிட்டே ஓடிப் போகிறாள். இந்த விளம்பரத்தை ஒரு சினிமாவினூடாக குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொண்டு பார்க்க நேர்ந்தது. அப்போதுதான் அந்த அதிர்ச்சியும் அவமானமும் ஏற்பட்டது.

இந்த விளம்பரம் முடிந்த மறுவிநாடியே ஆறு வயது மகள் மடியில் உட்கார்ந்தபடி இப்படிக் கேட்டாள் வியப்பு மேலிட...

" என்னப்பா இவன் பெண்டாட்டி, அவன் கூட சைக்கிள்ள உட்கார்ந்துட்டுப் போறா ? " ....

குழந்தையின் கேள்வியில் வினயமில்லை. பெரியவர்களிடமே காணக் கிடைக்கிற குசும்புமில்லை, குயுக்தியுமில்லை. அது நேர்படக் கேட்கிறது. தன் அறியாத்தன யத்தனிப்பில் கேட்கிறது.

ஆனால்... அது வெறும் கேள்விதானா ? அந்தக் குழந்தைக்கு, அவளைப் போன்ற இந்த சமுதாயத்தின் அடுத்த தலைமுறைத் தளிர்களுக்கு நேர்மையோடு பதில் சொல்ல நமக்குத் துப்பிருக்கிறதா ? வக்கிருக்கிதா ?

வணிகத்திலும் கூட அறத்தை வலியுறுத்திய மண் இது. இதை மண்மூடச் செய்யலாகுமோ ?

- சோழ. நாகராசன் -

நன்றி : புதிய ஆசிரியன் - நவம்பர் 2004www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061