வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 12 - 2004

வறுமைக் கோடு

இந்த வருடம்
வீரன் சாமிக்கு
ஒரே நாள் தான்
திருவிழாவாம் !

இரண்டு
பெண் பிள்ளைகளை
ஈன்றெடுத்த
ஏழைத் தாய்க்கு
இரவெல்லாம்
உறக்கமில்லை !

இரண்டு நாள்
திருவிழா வென்றால்
மூத்தவளை
முதல் நாளும்
இளையவளை
இரண்டாம் நாளும்
திருவிழாவிற்கு
அனுப்பலாம் !

ஒரே நாள்
திருவிழாவிற்கு
இரண்டு
பெண்பிள்ளைகளையும்
எப்படி சேர்த்து
அனுப்புவது ?

ஏனெனில் -
இருவருக்கும்
பொதுவாய் இருப்பது
ஒரே தாவணி.

ஆரூர் மனோபாரதி.

நன்றி : பாட்டுப் பயணம் இதழ்கிறிஸ்து ஜெயந்தி 2004

" கிறிஸ்மஸ் காரியங்கள்
களைகட்டியாயிற்று குருவே "
உற்சாகம் பொங்க வந்தான் சீடன்.
கண்கள் எங்கோ மேய்ந்திருக்க
வார்த்தைகள் நழுவின பிரசங்கியிடமிருந்து.

" சீடா கேள் இன்று அனேகமாய்
சிறு பிள்ளைகளின் கிறிஸ்மஸ்
தொந்தி குலுங்கி வரும்
கிறிஸ்மஸ் தாத்தா தரும் பரிசு
என்னவாக இருக்குமென்பதில்.

இளைஞரின் கிறிஸ்மஸ் மின்னும் நட்சத்ரத்தை
உயரக் கட்டுவதில்.
வரிசைகளாய் மினுங்கி ஒளிரும்
வண்ண ஒளிக்குமிழ்களை அமைப்பதில்.
கிறிஸ்மஸ் குடில்களின் அலங்கரிப்பில்.
இன்னும் புதுப் புது கிறிஸ்மஸ் பாடலை
அமைத்துப் பாடி அசத்துவதில்.
பரிசுப் பொருள்கள் பழங்களாய்த் தொங்கும்.
வீட்டினுள் முளைத்திருக்கும் கிறிஸ்மஸ் மரத்தில்.

பெரியவர்களின் கிறிஸ்மஸ் செலவுகளின் அளவுகளில்.
அம்மாக்களின் கிறிஸ்மஸ் ஆடைகளில், பலகாரங்களில்,
கிறிஸ்மஸின் அடையாளம் ஆளுக்கு ஆள் இவ்விதமாய்.
சக்கைகளைப் பிடித்துக் கொண்டு சாரங்களை இழந்துபோய்...."

எனில் குருவே கொண்டாட்டங்களும் வீணே ?
அது தரும் சந்தோசங்களும் மாயையோ?

புன்னகைத்தார் பிரசங்கி
" அன்பின் மகத்துவ வெளிப்பாடல்லவோ அவர் அவனிக்கு வந்தது.
அதை அர்த்த பூர்வமாய் நினைவு கூறல் அருமையல்லவா ?

முக்கிய மற்றவைகளை முக்கியப் படுத்தும்பொழுது
முக்கியமானது மறந்து போக வாய்ப்பாகுமல்லவா !


- சின்ட்ரெல்லா -

நன்றி : உன்னத சிறகுகள் அக் - டிச 2004தமிழ்க் கலைகள் காப்போம்

வெளிநாட்டு மோகத்தால் வெறியை யூட்டும்
வெற்றுடம்பின் அசைவெல்லாம் கலையா யிற்று
களியேற்றிக் காமத்தைத் தூண்டி ஆடை
களைகின்ற ஆட்டமெல்லாம் கலையா யிற்று
ஒளிர்மொழியை இருபொருளில் ஒலிக்கச் செய்தே
ஒழுக்கத்தைக் கெடுப்பதெல்லாம் கலையாயிற்று.

கலையென்றால் வாழ்வுதனை மதிக்கச் செய்து
கண்ணியத்தை வளர்ப்பதென்று முன்னோர் சொன்னார்
அலைபாயும் மனத்திற்கே அமைதி தந்து
அகவுணர்வைச் செம்மையாக்கும் கருவி யென்றார்.
குலையாத பண்பாட்டில் பெண்மை போற்றி
உறவுகளைச் சேர்த்து வைக்கும் வழியாமென்றார்.
இலைமறைவாய்க் காதலினை எடுத்து ரைத்தே
இல்லறத்தைப் பெருமையாக்கிப் போற்றிக் காத்தார்.

புறக்கணிப்பால் மறைந்துவரும் தெருவின் கூத்து
புறமொதுக்கம் கரகாட்டம், மயிலின் ஆட்டம்,
குறத்தியர்தம் ஏலேலோ பொம்மலாட்டம்
குற்றுயிராய் ஊசலாடும் தமிழின் பண்கள்
சிறப்பாகத் தமிழ்த் தொன்மை எடுத்துரைக்கும்
சீர்கலைகள் ! சீரழிய விடுதல் நன்றோ !
வரலாற்றை மாற்றிவிடும் அழியவிட்டால்
வரலாறு நமக்கிருக்க பழமை காப்போம்.

கருமலைத் தமிழாழன்

நன்றி : தேமதுரத் தமிழோசை - டிச -2004பா மேடை

எம்மொழிக்கும் இளையாது இலக்கி யததேன்
இனிதூறும் சுளைச்செறிவால் இயங்கி நாளும்
கொம்மையிள வளமொழியாய்க் குலுங்கி ஞாலம்
கோலோச்சும் புதுமையுடன் நினைத்த வாறே
செம்மையுற உரைப்பதற்கும் விளங்குதற்கும்
சீர்மலியப் பிறமொழிக்கே சொற்க டந்தும்
செம்மொழியாய் வீறுபெற்ற தமிழே, தாயே !
சிந்தையணு நரம்பூறி வாழ்த்து வேனே !!

கரு. சின்னத் தம்பி - போடிபட்டி.369 மொழிகளில் கல்வி கற்பிக்கும் அருஞ்செயல்

இந்தோனேசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே தீவுகளின் தொகுதியாக உள்ள பாப்லா நியூகினியா என்னும் நாட்டின் மக்கள் தொகை50 இலட்சம். சென்னையைவிடக் குறைவான மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் பேசப்படும் மொழிகள் 847. அந்நாட்டு அரசுக் கல்வித்துறை 1933 ஆம் ஆம் ஆண்டு முதல், 3 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை அறிவித்தது. 2001 ஆம் ஆண்டு முதல், தொடக்கப் பள்ளிக் கல்வி முழுவதுமே தாய்மொழியில் தருவதற்கு அரசு முடிவு செய்தது. இதற்காக 369 மொழிகளில் கல்வி கற்பிக்கும் முயற்சி 3,600 பள்ளிகளில் நிகழ்ந்தது. அதாவது குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழியில் பள்ளிக் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்த 369 மொழிகளில் பலவற்றுக்கு எழுத்து வடிவம்கூடக் கிடையாது. இதற்காகப் புதிய வரிவடிவங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு முன்பு அம்மொழிகளில் ஒரு சொல்கூட எழுதப்பட்டது கிடையாது.

அங்கே தாய்மொழிவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு சிறுவர்கள் விரைவாகக் கல்வி கற்பதும், ஆங்கில மொழியை எளிதில் கற்றுக்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறுவர்கள் முன்பைவிட இப்போது மிக்க தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் ( நன்றி : தினத்தந்தி இலவச இணைப்பு 26-11-2004)

நன்றி : தெளிதமிழ் - தி.ஆ.உங0ரு சிலை க


தமிழர்களுக்குத் துணிவு வருமா ?

புகழ் பெற்ற மலையாள எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான சுகுமார் அழிக்கோடு தமிழர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

கோழிக்கோடு நகரில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி உணவு விடுதியின் வளாகத்தைத் திறந்து வைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட பிறகும் இம்மாநில முதலமைச்சர் அதைப புறக்கணித்து விட்டு திறந்து வைத்ததற்க எதிர்ப்புத் தெரிவிக்கப் புதுமையான வழியை சுகுமார் அழிக்கோடு கையாண்டுள்ளார்.

கேரள அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருதை மாநில முதல்வர் உம்மன்காண்டி தனது கையால் சுகுமார் அழிக்கோடு அவர்களுக்கு வழங்கவிருந்தார். ஊழல் போர்வழிகளுக்குத் துணைபோன முதலமைச்சரிடம் அந்த விருதைப் பெற மாட்டேன் என சுகுமார் அழிக்கோடு துணிவோடு அறிவித்தார். புரட்சிகரமான இந்த அறிவிப்பை அவர் வெளியிடும்போது உச்சி நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவருடன் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஆண்டு சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தமிழறிஞர்களான முனைவர் திருமுருகனார், முனைவர் ம.இலெ.தங்கப்பா ஆகியோர் அரசு அளித்திருந்த விருதுகளையும், பரிசுத் தொகையையும் அரசிடமே திருப்பி அளித்த நெஞ்சை குலுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என அரசாணை இருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு உணர்வு பிறக்க வேண்டும்.

அந்தத் துணிவும் தியாக உணர்வும் அவர்களுக்கு வருமா ?

நன்றி : 16-12-2004 தென்செய்தி - தலையங்கம்.

Web: www.thenseide.com email: seide@md2.vsnl.net.in


பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு அவலம்.

உலகநாடுகளில் எங்குமுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழாய்வுகள் நடைபெறுகின்றன.

அவற்றின் நிலை என்ன ?

தமிழ் இருக்கைகள் மூடப்பட்டுள்ள விவரம்.

1. ஜெர்மனி (HAMBURG) : ஆம்பர்க் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த எஸ்.ஏ. சீனிவாசன் 1998 இல் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற இடத்தில் இன்னுமொரு தமிழ்ப் பேராசிரியர் பணி அமர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக அத்துறை இந்தி துறையாக மாற்றப்பட்டு விட்டது.

2. நெதர்லாந்து (LEIDEN): லீடன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கமில் சுவலபில் ஓய்வு பெற்றவுடன் தமிழ் இருக்கை மூடப்பட்டு விட்டது. துணைப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.மேனன் மட்டுமே மிச்சமுள்ளவர்.

3. செக்கோசுலாவியக் குடியரசு (PRAGUE): பிராக் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஜாரோஸ்லாவ் வாசெக் தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் ஆன கலவை இருக்கை பொறுப்பில் உள்ளார். பணி ஓய்வு பெறும் வயதில் உள்ளார். அவருக்குப் பின் தமிழ் ஆய்வுகள் முடிவுக்கு வந்துவிடும்.

4. இத்தாலி (PISA) : இத்தாலியின் பைசா பல்கலைக் கழகத்தில் திராவிட மொழிகள் மற்றும் இலக்கியத்துக்கான இருக்கை உள்ளது. பேராசிரியர் எம்மானுய்லா பானடோனி ஓய்வு பெறும் வயதில் உள்ளார். அவருக்குப்பின் தமிழ் இருக்கை அங்கும் மூடப்படும் நிலையிலுள்ளது.

5. பிரிட்டன் : இங்கிலாந்தில் உள்ள ஸ்கூல்ஆப் ஆப்ரிக்கன் அண்டு ஓரியண்டல் ஸ்டபீஸ் இல் தமிழ்ப் பேராசிரியராக இருந்த டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் ஓய்வு பெற்ற பின் தமிழ் இருக்கை மூடப்பட்டு விட்டது. 6. ஜெர்மனி (COLOGNE): பல்கலைக் கழகம். பேராசிரியர் டய்டர் காஃப் 2006 இல் ஓய்வு பெற உள்ளார். அவர் ஓய்வு பெற்றதும் அங்குத் தமிழ் இருக்கை மூடப்படும் அபாயம் உள்ளது. ஹைடல் பர்க்கில் (HEIDELBURG) உள்ள சவுத் ஆசியா இன்ஸ்டியூட்டில் தமிழ் விரிவுரையாளராக மிச்சமிருப்பவர் டாக்டர் தாமஸ் லேமேன் ஆவார்.

7. கொலோன் பல்கலைக் கழகத்தில் 50,000 தமிழ்ப் புத்தகங்களுக்கு மேல் அரிய நூல்கள் உள்ளன. கொலோன் பல்கலைக் கழக முன்னாள் இயக்குநர் கானர்ட் அரிதின் முயன்று திரட்டிய இந்நூல்கள், தமிழ் இருக்கைகள் மூடப்பட்டால் பயனற்றும் பாழ்பட்டும் போகும்.

8. பிரான்ஸ் : பாரிசில் உள்ள இந்நிறுவனப் பேராசிரியர் பிரான்சுவா குரோ ஓய்வு பெற்றார். 2000இல் அவர் ஓய்வு பெற்றதும் அங்குத் தமிழ் இருக்கை மூடப்பட்டுவிட்டது. அந்த நிறுவனத்தில் மிச்சமிருப்பவர் டாக்டர் அப்பாசாமி முருகையன் என்ற விரிவுரையாளர் ம்ட்டுமே.

9. இதில் மிச்சமிருப்பவர் டாக்டர் எலிசபெத் பர்னார்டு சேதுபதி மட்டுமே.

10. புதுவையில் எக்கோல் பிரான்சே டி எக்ஸ்டீரிம் ஓரியண்ட் என்ற பிரெஞ்ச் அரசின் நிறுவனத்தில் செந்தமிழுக்கான இருக்கையின் தலைவியாக உள்ள டாக்டர். ஈவா வில்டன் அளித்த தகவல்களின் அடிப்படையில் தமிழறிஞர்களுக்கான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் விழிப்பூட்டக் கடிதம் அனுப்பப்பட்டது.

- அ. வந்தியத் தேவன், வெளியீட்டுச் செயலாளர் ம.தி.மு.க.

நன்றி : மக்கள் செங்கோல் - திசம்பர் 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061