வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 01 - 2005

குறும்பாக்கள்

(o) பானை
காலியாக உள்ளது
குயவன் வயிறு.

(o) கள்ளிச் செடி
குரோட்டன்சோடு
சமத்துவம்.

(o) தோப்புக்குள்
கல் வீசியது யார் ?
பயத்துடன் பறவை.

(o) பசி நேரம்
பார்வையாளர்கள் எண்ணம்
பந்தியில்.

(o) ஒலிக்கிறது
தலித்தின் குரல்
அதிரும் பறை.

(o) பள்ளி மூடியதால்
தானாகவே திறக்கும்
அறிவுக்கண்.

பொன். குமார்.உரை வீச்சுகள்

வள்ளல்
பாக்கெட்டிலும்
பாட்டிலிலும்
கேன்களிலுமாய்
தண்ணீரை அடைத்து
தந்திரமாய் காசாக்கும்
வியாபாரபுத்தி
ஒரு நாளும் இல்லை
மேகத்திடம் !

தயாகவிச்சிற்பி

நன்றி : கலை 30 - சன,பிப் 2005இயற்கையின்
சீற்றத்தில்
இரண்டு செய்தி,
ஒன்று
அடங்கிப்போ....
இரண்டு
சவாலுக்கு வா...

சவாலைச் சந்திப்பதே
மானுட இயற்கை
சந்திப்போம்.

அட்டைப்படக் கவிதை

நன்றி : புதிய ஆசிரியன் - சன 2005அறிவுமதியின்
தமிழ் கி.மு.2000 கவிதை


மலை மேய்ச்சலுக்குப் போகும்
கிழக்குச் சீமை
மாடுகளின்
கழுத்து மணியோசைகள்
மறந்த சாலைகள்.
மிரள மிரள அதிரும்
நகரப் பேருந்தில்
"சீனா, தானா"...

கொக்குகள் வந்து எருமைகள்
மேய்ந்த
குளத்தில் முளைத்த
கட்டிடத்தில்
கேட்கும்.
விவேக்கின்
காமடி ! நெடி !!

கும்மி.. தெம்மாங்கு.. நடவுப்பாட்டு
தாலாட்டு, ஒப்பாரிகளுடன்
மொத்தமாய்
செத்த,
பாட்டிக்கு ஆறுதலாய்
விடிய விடிய விடிய
ஓடுமே சின்னத்திரையில்
"வசூல் ராஜாக்கள்"
தமிழ்க் குடிமகன்
என்ற பெயரிலேயே
இந்தியக் குடிமகன்
இல்லைங்கற மாதிரி
இருக்கே ....
என்ற கேள்விக்கு
மிரளுவான்
என் சின்னமகன்
சின்ன தம்பி !!

வாழிய செந்தமிழ் என்பதற்காக
பாரதி !
தமிழுக்கும் அமுதென்று பேர்
என்றதற்காக
பாரதிதாசன் !
இவாகளுக்குள்ளும்
தரப்படுமோ
துரோகிகள் என்கிற
தேசியப் பட்டம்.

மண் தொட்டிக்குள்
குரோட்டன்களாய்
கண்ணாடித்
தொட்டிக்குள்
மீன்களாய்...
பார்த்து
ஆறுதல் அடைய நம்
பேரப்பிள்ளைகளுக்கு
மிச்சமிருக்குமோ,
இரண்டாயிரத்தில்
தமிழ் ! ?

- அறிவுமதி -

நன்றி : சிலம்பொலியின் நெய்தல் நிலாகீதையில் மயங்குவான் பேதை

பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் என்று சொன்ன
பேராசான் வள்ளுவனை மறுத்துக் கூறி
அறப்பண்பைப் பழிப்பதுதான் கீதை யாகும்
அதைப்படித்து மயங்குபவன் பேதை யாகும்
அறம்பொருளோ டின்பத்தில் உலக னைத்தும்
அடக்கிவிட்ட திருக்குறளின் மேலாய்க் கூறும்
திறன்எந்த நூலுக்கிவ் வுலகில் உண்டு ?
தெரிந்திருந்தால் சொல்லுங்கள் ஒன்றே ஒன்று
.
பகுத்தறிவின் துணைகொண்டு பொருளை நோக்கும்
பண்புடைய தமிழர்களை மடைய ராக்கப்
புகுத்துகின்றார் கீதையினைக் கடவுள் சொன்ன
பொன்மொழியே எனச்சொல்லிப் புளுகித் தள்ளி
வெகுநாள்கள் மக்களிடை விலைபோ காது
விளக்கமின்றிக் குழப்புகின்ற கோட்பா டெல்லாம்
வகுத்தானே நால்வருணம் அவனா தேவன் ?
மகத்தான இழுக்கன்றோ மன்ப தைக்கே ?

- இரா. செம்பியன் -

நன்றி : தெளிதமிழ் - சுறவம் தி.ஆ.உ0ஙசுஉங்களுடைய கடன் சுமை ரூ 4,556

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அரசு புள்ளி விவரப்படி, ரூ 5 இலட்சத்து 6 ஆயிரத்து 700 கோடி. ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்குமான கடன் தொகை ரூ 4,556. ஆக, நீங்கள் கடன்காரர்கள். என் நண்பர்களே, என்ன நீங்கள் வாங்காத கடனுக்கு கடன்காரர்களாகிவிட்டீர்களா ? ஆம்.... உண்மைதான். தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது. நிலம் எல்லோருக்கும் பொதுவானது. வான், காற்று, ஒலி, ஒளி, தீ.. அந்த வரிசையில் நம் நாட்டின் அரசு வாங்கிய கடனுக்கும் நாம் சொந்தக்காரர்களாகி விட்டோம். கோபித்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு கசப்பான உண்மைதான்.
தஞ்சை இளஞ்சிங்கம்

செய்தி : நீதிச்சக்கரம் சுழல்கிறது, நன்றி : மக்கள் நெஞ்சம் இதழ் சன 14, 2005வேதனை

படிப்பது இராமாயணம், இடிப்பது இராமர் கோயில் - என்ற பழமொழிக்கு ஏற்ப நம்மை ஆள்பவர்கள் மக்களிடம் மட்காத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. இரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன் படுத்துங்கள் என விளம்பரம் செய்து, பல இலட்சங்கள் சுற்றுச் சூழலை காக்க செலவழித்து வருகிறது.

ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், போன்ற வல்லரசு நாடுகள் தம்முடைய நாட்டு காயாலாங்கடை பொருள்களைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக இந்தியாவைப் பயன்படுத்துகிறார்கள். எதற்கும் பயன்படாத பழைய இரும்பு சாமான்களை ரீசைக்கிளிங் செய்வதற்கான மூலப் பொருள்கள் என்ற பெயரில் இந்தியா விலை கொடுத்து வாங்குகிறது என்பதுதான் வேதனை. தேவையற்ற பொருள்களை அக்குவேறு ஆணிவேராக மாற்றும் தொழிற்சாலைகள் உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகம் என்பது பரிதாபத்திற்குரிய செய்தி.

இவ்வாறு ரீசைக்கிளிங் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுகளால் கடந்த 30 ஆண்டுகளில் 1 இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் புற்று நோயால் இறந்து போனதுதான் மிச்சம். இதுபோன்ற ரீசைக்கிளிங் தொழிற்சாலைகளை மக்கள் நலனில் அக்கறை கொண்டு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் விரும்புவதில்லை.

- நந்தன் -

நன்றி : இரத்தினமாலை - பல்சுவை திங்களிதழ் - சன-2005அறிஞர்கள், பேச்சாளப் பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

உங்களால்தான் நல்ல தமிழை கூடியவரை தனித்தமிழை எளிதாக வளர்க்க இயலும். கரணியம் உங்கள் பேச்சைத் தொலைக்காட்சியிலும், மேடைப்பேச்சுகளிலும் ஏராளமான மக்கள் கண்டு களிக்கிறார்கள். நீங்கள் பலுக்கும் ஒவ்வொரு சொல்லும் எளிய மக்களிடம் போய்ச் சேருகிறது. எனவே புஸ்தகம், கும்பாபிஷேகம், நமஸ்காரம், ஸ்டேசன், பஸ், பிரயாணம், பிரார்த்தனை, பத்மசிறி, பூஜை - போன்ற அன்றாட வழக்குச் சொற்களை - புத்தகம், குடமுழுக்கு, வணக்கம், நிலையம், பேருந்து, சிற்றுந்து, பயணம், வேண்டுதல், தாமரைத்திரு, பூசை - போன்று பேசி, உரையாடி வழக்குக்குக் கொண்டு வாருங்கள். இது நாம் தமிழுக்குச் செய்யும் கடமை என உணர்ந்து செயல்பட்டால் தமிழ்த்தாய் உங்களை வாழ்த்துவாள். மேலும் மேலும் புகழடைவீர்கள் என இந்த எளிய தொண்டர் வேண்டுகிறேன்.

- அருளாளன் -

நன்றி : தமிழ்ப்பாவை 218 - சுறவம்தமிழ் செம்மொழி

உலகில் 2796 மொழிகள் உள்ளன. இவற்றில் இலக்கிய இலக்கணம் பெற்றவை 600 மொழிகள். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகள் தொண்மை வரலாறு உடையவை தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக் என்னும் ஆறு மொழிகளே ஆகும். இதற்கு அடுத்த நிலையில் சமற்கிருதம், பெர்சியன், அரபி, முதலிய மொழிகள் இருக்கின்றன. இவற்றில் இலத்தீனும் ஈபுருவும் செத்துப் போன மொழிகள். ஈபுரு மொழிக்கு உயிரூட்டும் முயற்சியில் இசுரேல் அரசு ஈடுபட்டுள்ளது. கிரேக்க மொழி தற்பொழுது புதுவாழ்வு பெற்று வருகிறது. சமற்கிருதத்திற்கு என்றுமே பேச்சு வழக்கு இருந்தது இல்லை. எழுத்து வழக்கு மட்டுமே உண்டு.

இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் மொழிகள் 1652. இவற்றுள் 22 மொழிகள் மட்டுமே தேசிய மொழிகள் என்னும் சிறப்புப் பெற்று இந்திய அரசமைப்பின் 8 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ் மட்டுமே தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை, தண்மை, மென்மை, தலைமை, அருமை என்னும் பலவகைச் சிறப்புகளை ஒருங்கே உடைய மொழியாக விளங்குகிறது.

இந்திய மொழிகளில் பன்னாட்டு மொழி எனும் தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே உண்டு. இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக ஒளிர்கிறது. மலேசியாவில் நாட்டுமொழி, நாடாளுமன்ற மொழியாகத் திகழ்கின்றது. தமிழில் படித்துப் பட்டம் பெறுவதை கனடா அரசு அங்கீகரித்துள்ளது. உலக அரங்கில் 57 நாடுகளில் உள்ள தமிழர்களால் பேசப்படும் மொழி தமிழ். உலகு எங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழி தமிழ். எனவே, தமிழ் இன்று பன்னாட்டு மொழிகளில் ஒன்று எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளது. தமிழர்கள் ஒரு மொழியினர். பன்னாட்டினர். என்னும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளனர்.

இத்தனைச் சிறப்புகள் உள்ள மொழியாகத் தமிழ் இருப்பதால்தான் 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று ஆய்ந்து அறிந்து நிறுவினார். தமிழ் அறிஞர் பரிதிமாற் கலைஞர் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று 1885 இல் முதன் முதலில் அறிவிக்கக் கோரினார். அவருடைய முயற்சிக்குப் பின்புலமாகவும் பெருந்துணையாகவும் சுயமரியாதைச் சிந்தனையாளர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரை தேவர் இருவரும் இருந்தார்கள்.

மேல்நாட்டு அறிஞர்கள் டாக்டர் எமினோ, அறிஞர் சீகன் பால்கு, ஜார்ஜ் ஹார்ட், கிரியர்சன், கமில்சுவலபில், நோவோம் சாம்ஸ்கி, வின்சுலோ, கிராண்ட், ரெனால், மெட்டில், ரியாச டேவிட் முதலியவர்கள் நடுநின்று வடுவஞசி தமிழ் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் அத்தனையும் உடையதாக இருக்கிறது என்று நிறுவியுள்ளார்கள்.

செம்மொழித் தகுதிக்கு மொழியியலாளர் வகுத்துள்ள 11 தகுதிப்பாடுகள் வருமாறு :

1. தொண்மை (Antiquity)

2. தனித்தன்மை (Individuality)

3. பொதுமைப் பண்பு (Common character)

4. நடுவு நிலைமை (Neutrality)

5. தாய்மைத் தன்மை (Parental kinship)

6. பண்பாடு, கலை, பட்டறிவு, வெளிப்பாடு

7. பிறமொழித் தாக்கமில்லாத தனித்தன்மை

8. இலக்கிய வளம் (Literary Prowess)

9. உயர் சிந்தனை (Noble ideas and ideals)

10. கலை, இலக்கியத் தனித்தன்மை, வெளிப்பாடு பங்களிப்பு

11. மொழிக் கோட்பாடு (Linguistic principles)

மேற்குறிப்பிட்ட அளவுகோலுக்கு ஓரளவு உட்பட்டு வருவனவாகவே இலத்தீன், ஈபுரு, கிரீக் முதலான மேலை நாட்டுச் செம்மொழிகளும் சமற்கிருதம், பாரசீகம், அரபி போன்ற ஆசிய மொழிகளும் அமைந்துள்ளன. இப்போது செம்மொழியாக வழக்கில் இருந்துவரும் மொழிகளுள் அனைத்துத் தகுதிப்பாடுகளும் ஒருங்கே அமையப் பெற்ற செம்மொழியாக எதுவுமே இல்லை.

தமிழ் செம்மொழி என்ற அறிவிப்பின்வழி தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடைபெற வேண்டிய மாற்றங்களை விரைவுபடுத்துவதில்தான் மொழிக்கான முன்னேற்றம் காணஇயலும். இதற்காகச் செம்மொழி பற்றிய ஆவணங்களைப் பண்பாட்டுத் துறையிலிருந்து கல்வித் துறைக்கு மாற்ற வேண்டும் - என்று அறிவியல் அறிஞர் மணவை முஸ்தபா வலியுறுத்துவதை முற்றாக ஏற்க வேண்டும்

மொழி ஒரு சமுதாயக் கலை. சாதி, மதம், நிறம், அரசியல், கட்சி முதலியன கடந்த அனைவரும் போற்றிப் புரந்து பேணிப் பரப்பினால்தான் எமமொழியும் வாழும், வளரும், உயரும்.

பத்துபேர் கேட்டால் கோரிக்கை...பத்தாயிரம் பேர் கேட்டால் கட்டளை.

எனவே தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்தல் வேண்டும். ஒன்றுபட்டு வற்புறுத்தல் வேண்டும். சேர்ந்து செயற்படுத்துதல் வேண்டும். குறை இருந்தால் உரியவர்களிடம் தெரிவியுங்கள். நிறை இருந்தால் நண்பர்களிடம் அறிவியுங்கள். தமிழால் ஒன்று படுவோம். குறளால் வென்று காட்டுவோம்.

வ. வேம்பையன்

நன்றி : மீண்டும் கவிக்கொண்டல் - சன 2005www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061