வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 13 - 03 - 2005

குறும்பாக்கள்

(o) பொட்டல் காடு
நல்ல விளைச்சல் தந்தது
அடுக்கு மாடிகள்.

மித்ரா - சிதம்பரம்.

(o) மகள் நாற்று சுமக்கிறாள்
பாதி காலியாய்ச் செல்கிறது
பள்ளிப் பேருந்து.

கலை இலக்கியா - ஜெயமங்கலம்.

(o) ஏரிகள் நிரம்பின...
மழையில்லாமல்...
குடிசைகளால்.

அ. மகேந்திரன், சோலையார் பேட்டை.

(o) முந்தானை விரிப்பில்
மரணத்தின் பாதை
சிலந்தி வலை.

க.சி.குறள்வேல் - திருப்பத்தூர்.

(o) அம்மாவுக்கு மகன் அழைப்பு
கனடா வரும்படி
மனைவியின் பேறுகாலம்.

வேலணையூர். பொன்னையா, டென்மார்க்.

(o) நிமிர்ந்த கட்டிடங்கள்
குனிந்தேயிருக்கும்
கட்டியவன் குடிசை.

ஆரண்யன் - வேலூர்.

(o) தூங்குபவனை எழுப்பி
தூக்க மாத்திரை தரும்
செவிலியர்.

செ. அந்தோணிசாமி - கீரனூர்.

(o) தேதியைக் கிழித்த
காலண்டர் கேட்டது
இதுவரை என்ன கிழித்தாய் ?

கோ.மகேசன் - மாத்தூர்.

(o) பட்டாம் பூச்சிகள்
நத்தைகளானது
முதுகில் புத்தகமூட்டை.

சுதா - வடங்கம்பட்டி.

(o) இரத்ததான முகாம்
செத்துக் கொண்டிருக்கிறது
சாதி.

தமிழ்நேசன் - வடக்கு வாயலூர்.

நன்றி : இனிய ஹைகூ இருமாத கவிதை இதழ்
இதழ் எண் : 19 - மார்ச் - ஏப்ரல் 2005


உரைவீச்சுகள்

பீசாப் பிள்ளைகள்

சாணத்தால் மெழுகிய
அத்தை வீட்டுத் திண்ணை
கிரானைட் பளபளப்பாய் மின்னியது.
தீற்றுக் கல்லினால் தேய்க்கப்பட்டதால்.

அவித்த பனங்கிழங்கை
மேல்சட்டை
உரித்துப் போட்டாள் அத்தை.

நுனிகடித்து சர்ரென
கிழங்கைப் பிளக்க
பளீரென வெளிப்பட்டது
இளஞ்சந்தன நிறத்தோடு மணம்.

மெத்தென்ற திசுக்களாய் இருந்தது
முதலில் ருசித்த குருத்து.

உரிக்கச் சுலபமாய் வந்தது.
வரிக்கோடாய் விழுந்திருந்த
மெல்லிய நார்கள்.

திரண்ட கிழங்கை
சடக்கென ஒடித்து
தேங்காய்த் துண்டுடன் மெள்ள
வாய்க்குள் சுவை கூடியது.

இந்த அனுபவம்
எப்படிச் சொல்வது ?
பிசினைக் கடிப்பது போல் இழுத்து
"பீசா" தின்னும்
என் பிள்ளைகளுக்கு.

- கு.ரா -

நன்றி : சுந்தர சுகன் - மார்ச் 2005


முன்பெல்லாம் கரும்பலகையில்
வெள்ளை எழுத்துகள்
இப்போதோ வெள்ளைத் திரையில்
கருப்பு எழுத்துகள்.

இது கலி காலமல்ல..
கணினி காலம்.

பொறி வைத்து எலி பிடித்தது
மலையேறிவிட்டது.
வாயில் விரல் முளைத்த
எலிகள் நாங்கள்
"பொறி" யை ஆட்டி வைப்போம்.

இண்டர்நெட்டில் ஒருவரை ஒருவர்
பார்க்காமலே காதலிப்பவர் கூட
எங்களைப் பார்க்காமல்
காதலிக்க முடியாது.

எங்கள் எழுத்துப் பிழையை
அழித்த அடையாளம் தெரியாமல்
திருத்தம் செய்யலாம்.

எங்கள் படைப்புகளை
எங்களுக்குள்ளே
பசையின்றி ஒட்டவும் முடியும்
கத்தியின்றி வெட்டவும் முடியும்.

மூளை மழுங்கியவர்கள் கூட
எங்களால் பிரகாசிக்கலாம்.
ஆனாலும்
எங்கள் ஞாபகசக்தியை
நீங்கள்தான் சேமிக்க வேண்டும்.

நாங்கள் தலைகுனிவது
நீங்கள் கண்டுபிடித்த
எங்களிடமே
உங்கள் ஜாதகங்களை
கணிக்கும்போது தான்.

உங்களை மட்டுமல்ல -
வைரஸ் எய்ட்ஸ்
எங்களைத் தாக்கமலிருக்கவும்
விழிப்போடு இருங்கள்.

- சோலை இசைக்குயில் -
நன்றி : நறுமுகை - கலைஇலக்கியக் காலாண்டிதழ், சன-மார் 2005.


மனித எறும்புகள்

உணவு உருண்டை
தூக்கிச் செல்லும்
எறும்புகள்.
மதிய சாப்பாட்டைக்
கேரியரில் சுமக்கும்
மனிதர்கள்.

பதுங்கு குழிகள்
பாதுகாப்பானவை
எறும்புகளுக்கும்
யுத்த காலத்தில் மனிதர்களுக்கும்.

புலம் பெயர்தல்
புகலிடம் தேடல்
சேமித்த செல்வத்தை
இயற்கை
நொடியில் அழித்தாலும்
மீண்டும் மீண்டும்
வாழ்வைக் கட்டும்
போராட்ட முயற்சி
எறும்புகளும் மனிதகுலமும்
கடந்த வந்த
வரலாற்றுப் பாதை...

ஒழுங்கும் வரிசையுமான
எறுமபுகளின் வாழ்க்கை.
என்றும் இருக்கும் இப்புவியில்.

- கழனியூரான் -
நன்றி : தமிழ்ச் சிறகு இலக்கிய மலர் - இதழ் எண் 16


பரிதாப முகமூடி.

அடுத்தவனை நசுக்க
ஆயத்தமாகையில்
பயங்கரவாத முகமூடி.

சபல முகமூடி, சாதி முகமூடி,
தமிழ் முகமூடி, கருணை முகமூடி,
இப்படி
முகமூடிகள் கணக்கு
முளைத்துக் கொண்டே இருக்கும்.

சிரிக்க ஒரு முகமூடியும்
அழ ஒரு முகமூடியும்
சில மனிதன்
வைத்திருக்கிறான்.

முகமூடி அணிந்து அணிந்து
முகம் மறந்த மனிதன்
ஏதாவது ஒரு முகமூடியையே
முகமாக்கிக் கொள்கிறான்.

கொடுமை என்னவென்றால்
குழந்தைப் பருவம் மட்டுமே
முகமூடி அணியாத பருவம்.
காந்தி முகமூடி
நேரு முகமூடி என்று
அதற்கும் பல
பொம்மை முகமூடிகளைப்
பொறுத்தி விடுகிறான்

எந்த சகமனிதனும்
எந்த சகமனிதனை
சந்திக்கப் போகையிலும்
முகமூடியில்லாமல் போவதேயில்லை.

எப்போது மனிதன்
முகமூடியைக் கழட்டுவான் ?
இறந்த பிறகா ?

ஆம்.
அந்த முடிவில்தான் மனிதன்
முகமூடியைக் கழட்டி விடுகிறான்.

அவன் உண்மை முகத்தை
முகமூடி அணிந்த மற்ற மனிதர்கள்
பார்த்துப் போவார்கள்.

ஆனால் அந்த நேரத்தில்
எல்லா மனிதர்களும் சேர்ந்து
" நல்லவன் " என்ற முகமூடியை
அவனுக்கு அணிவித்து விடுகிறார்கள்.

- பா. விஜய் -
நன்றி : தமிழ்ச் சிறகு இலக்கிய மலர் - இதழ் எண் 16


மனிதனே சொல்

ஆசை தீர
ஏசி முடித்திருப்பாய்
கொதிப்பு அடங்க
கொட்டித் தீர்த்திருப்பாய்.

கோபக் கணைகளை
வீசிக் களைத்திருப்பாய்
அரக்கனென்று அழைத்து
அகமகிழ்ந்திருப்பாய்.

கடல் மிருகமென்றாய்
பிசாசு என்றாய்
பிணந்தின்னி என்றாய்
பெயர் சூட்டி மகிழ்ந்தாய்.

ந்ல்லது
இப்போது
ஆற அமர
விவாதிப்போம்.

நான் மேகங்களில் பயணித்து
மழைநீரைப் பொழிந்து
உன் தாகம் தணித்து
தானியங்களை விளைவித்தேன்.

ஆனால் நீ
ஆலைக் கழிவு முதல்
மனிதக் கழிவு வரை
அள்ளி வந்து கொட்டி

என்னைச் சீரழித்தாய்
உப்பு முதல் மீன்கள் வரை
உனக்களித்து
உயிர் காத்தேன்.

ஆனால் நீ பணவெறி பிடித்து
கரையோரக் காடுகளை அழித்து
உல்லாச விடுதிகள் கட்டிv எனது புனிதம் கெடுத்தாய்
அரக்கன் நீயா ? நானா?

முத்துக்களையும் பவளங்களையும்
அள்ளிக் கொடுத்தேன்.
கடல்வழிப் போக்குவரத்தில்
உனது வணிகம் பெருக்கினேன்.

அம்மையும் அப்பனுமாக
இருந்துன்னைக் காத்தேன்.
ஆனால் - நீ
செத்த எலி முதல்
சிதைந்த மனிதப் பிணம் வரை
என்னிடம் தள்ளி
கடல் சமாதியாக்கினாய்.
பிசாசு நீயா? நானா?
பூகம்ப உதையினை
என் நெஞ்சில் ஏற்று
வேதனை அதிர்வுகளைத் தாங்கி
உனக்கு சேதாரம் குறைத்தேன்.
நானா பிணந்தின்னி ? சொல்....

- லீமா மேரி -
நன்றி : சுற்றுச் சூழல் புதிய கல்வி - மார்ச் 2005


சங்கமித்ரா விடையளிக்கிறர் இதழில்......

வினா :-
சிற்றிதழ் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன ?
(சே. இளங்கோ - மதுரை 1)

விடையளிப்பவர் சங்கமித்ரா :-

கேள்வியே ஏடாகூடமா இருக்கே. சங்கங்களைக் கேட்கிறீங்களா? சிற்றிதழ்களைக் கேட்கிறீங்களா? ஏதோ ஒரு சங்கம் - கோவை குன்றம் ரமரத்நம் தலைமையில் என்று கேள்வி - அதில் வதிலை பிரபா ஒரு குழு. புதுவை இதழ்கள் தனிக்குழு, கல்வெட்டு பேசுகிறது முகவையார் ஒருபக்கம், வண்ப்பூங்கா இன்னொரு பக்கம் - - - எவ்வளவு ஓட்டை நாற்காலி என்றாலும் அதற்கும் அடித்துக் கொள்ளும் தமிழர்களுக்குக் குறையில்லை. மொத்தத்தில் இப்போதைக்கு சங்கம் தீவிளி பட்டாசு மாதிரி ஆகிவிட்டது. சங்கங்கள் பொதுவாக அதிகார மையமாவது. பணத்தைக் கையாடல் செய்வது. வேண்டாதவனை ஓரங்கட்டி வேண்டியவனைப் போட்டு தனியார் திள்ளு முள்ளுகளை - சங்கப்பலகை வைத்து மறைப்பது. தமிழனின் இந்த இழிந்த குணங்களால் - நான் ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் சங்கத்தில்கூட - உறுப்பினராய் இருந்ததில்லை.
ஊது வத்தி

பூஜை அறையிலும், தியானம் செய்யும் அறையிலும், அவற்றைத் தொடங்கியபின் ஊதுவத்தி ஏற்றி வைக்கக்கூடாது. ஏனெனில் ஊதுவத்தியின் மணம் மனதைக் கவரலாம். உங்களது கவனம் ஊதுவத்தியில் சென்றுவிடும். ஒரு சாதகனைப் பொறுத்தவரை இது தேவை இல்லை. இது ஒருவகையான புலனின்பமாகும்.

புலன்களை அடக்காமல் மனதை அடக்க முடியாது. உணவு, நறுமணம், பெண்களின் அருகாமை ஆகிய பலவும் மனதை திசை திருப்பக்கூடியவை. எந்த இன்பமும் அனுபவிக்க முயன்றால் மேன்மேலும் தூண்டக்கூடியவை. புலன் இன்பங்கள் சூட்சுமமானவை. அவை உள்ளத்தில் வாசனை ரூபத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும். நம்முடைய நினைவின் ஓட்டத்தை சரியான திசையில் திருப்புவதன் மூலம்தான் தியானத்தில் வெற்றி கிடைக்கும்.

நன்றி : கருதகேவலி - மீனம் மார்ச் 2005www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061