வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 03 - 2005

குறும்பாக்கள்

சகுனம்

காதல் கடிதத்துடன்
வந்தேன்
பாதி வழியில்
திரும்பிச் சென்றேன்.
கெட்ட சகுனம்
அப்பாவுடன் நீ

- நலங்கிள்ளி -
நன்றி : கவிதை உறவு - மார்ச் 2005


விதிப்பு

ஒன்று
பிழைத்திருக்க வேண்டும்
அல்லது
செத்துப் போய்விட வேண்டும்
வேண்டவே வேண்டாம்
செத்து செத்து
பிழைப்பது மட்டும்

- அ. கார்த்திகேயன் -
நன்றி : கனவு - இதழ் 49,50


ஆழிப் பேரலை

அலைகடலென அனைவரும் வாரீர்
எழுத முடியுமா இனிமேல்
பொதுக்கூட்ட சுவரொட்டியில்...

கிளிஞ்சல் பொறுக்கிய
கடற்கரையில்
ஏன் பொறுக்க வைத்தார்
குழந்தைகளை ?

எமனாய் வந்த கடலை
எதிர் கொண்ட பிறகு
எவனைப் புகழ்வது
கருணைக் கடலென்று ?

எங்கு போய்க்
கரைப்பது கடலால் இறந்தவர்களின்
அஸ்தியை....

- யுகபாரதி -
நன்றி : செம்பருத்தி இதழின் தமிழினி கட்டுரை.


ஆத்தூரான் மூட்டை

ஆத்தூரான் மூட்டை நாம்
அதிசய மென்போம்.

மெழுகுச் சுருணைபோல்
பந்தான கந்தல்
சினிமாச் சுருள்போல
முடிவற்ற துணிகள்
மூட்டை வாய்திறந்தால்
மூக்கை மிரட்டும்
மனிகைக் கடைக் குப்பை
தந்திடும் மணங்கள்.

ஆத்தூரான் மூட்டை நாம்
அதிசய மென்போம்.

ஆத்தூரானுக்குத் தொழில்
ஏதொன்று மில்லை.
பிறைதாங்கும் சிவன்போலப்
பையவே வருகுதல்.
மலர் தூங்கும் மரம் போல
மையத்தில் நிற்றல்
போனால்.
ஓடை போல ஓயாது
லயத்தோடு போதல்.
ஈதன்றித் தொழிலேதும்
அவனுக்கு இல்லை.

இல்லையென் றாலுமோர்
வேலையுண்டு.
கதிரவன் மேற்கைக்
கால்வைத்துத் தாண்டையில்
கருத்தொடு கால்வயிறு
எங்கோ நிரப்பிக்
கோணாது நானாது
திண்ணைக்கு வருவான்.
இடுப்பிலே வேஷ்டியே
இல்லாத இருளன்
தேடிய திண்ணையில்
மூட்டை அவிழ்ப்பான்.
மல்லிகை மெத்தைபோல்
படுக்கை விரிப்பான்.
இந்திரன்போல் கால்நீட்டி
மெத்தையில் படுப்பான்.

காலையின் வாள்வீச்சில்
இருள்மரம் சாய்கையில்
திண்ணைவிட் டெழுவான்.
மெத்தை சுருட்டுவான்.
தொழிலாளி போல
தெருவோடு போவான்
பித்தன் ஆத்தூரான்.

தலையோடு செல்வது
ஆத்தூரான் மூட்டை
ஆத்தூரான் மூட்டை நாம்
அதிசய மென்போம்
இல்லத்து மூட்டையை
என்னவென்று சொல்வோம்.

கந்தல்போல் கண்கொண்ட
ஆயிரம் ஆசைகள்.
காற்றாடி போல வால்
ஆட்டும் உறுதிகள்.
வாழ்வின் வினையேதும்
அறியாத இருளூடே
உலகத்தின் சாலையில்
ஊடாடும் நிழல்கள்
நடைவழி செல்கையில்
குடும்ப கனப்பாரம்
குரல்வளை நெறிக்கும்
கூக்குரல், முனகல்.

ஆத்தூரான் மூட்டையோர்
அதிசய மென்றால்
இல்லத்து மூட்டையை
என்னவென்று சொல்ல ?

- ந. பிச்சமூர்த்தி - 1944 இல் வெளியான கிராம ஊழியன் இதழ்.
நன்றி : அன்பு வணக்கம் இதழ் - மார்ச்சு 2005


மூங்கைப் புலவர்காள் !

பட்டம் தருவார் பதவி தருவார் பணம் கொழிக்கும்
திட்டத் தலைராய்ப் போடுவார் என்று நீர் செத்தொழியு
மட்டும் அமைச்சர் முகம்பார்த்துப் பற்காட்டி வாழ்ந்திருப்பீர் !
வெட்டித் தமிழ்த்தாயை வீழ்த்திடினும் கேட்டிடீர் வீணர்களே !

நாடிய யாவும் கிடைத்திட்ட பின்னரும், நன்றிகாட்டக்
கோடிப் பிழைகள் அரசு செயினும் குறியாது, வாய்
மூடிக் கிடக்கின்றீர் மூங்கைப் புலவர்காள் ! மூச்சிரைக்க
ஓடிப் பொறுக்கிடும் நாய்களும் உம்மின் உயர்ந்தனவே !

- இரா. திருமுருகனார் -
நன்றி : தெளிதமிழ் மீனம் இதழ்


அம்மா

கருத்தரித்த நாள்முதலாய் உள்ளிருந்து
கணந்தோறும் காத்தருள் சுரந்து சுரந்து
உருவெடுக்கும் என்னுயிரால் ருசியிழந்து
உணவுகுன்றி மசக்கையெழ மெலிந்து மெலிந்து

வருந்துகிற கவலைஎழும் வேளைகளில்
வளர்கின்ற பிள்ளைச்சுமை சுமந்து சுமந்து
பெருத்தவலி சூழ்ந்துற்ற காலைதனில்
பிரசவத்தின் சூல்வலிக்கு இரங்கி இரங்கி

திருத்தமொடு பூமிதனில் தவழவிட்டு
சிம்மாசன மடியேற்றி மகிழ்ந்து மகிழ்ந்து
பொறுத்தனை, மலமயம் செய்தகாலை
புன்னகை பூத்துமுகம் மலர்ந்து மலர்ந்து

கருத்தோடு நலம்கோடி தந்தனையம்மா
கடன்சுமை என்னிடத்தே மிகுந்து மிகுந்து
உறுத்துகிற பான்மைதீரப் பதிலெதுவோ
ஒன்றினுக்கு ஒன்றேனும் உவந்து உவந்து

பொருத்தமொடு தீர்த்திட முடிந்திடுமோ
பொற்பாத மலரடிகள் நினைந்து நினைந்து
உருக்கமொடு திருவடிகள் தொழுவதல்லால்
ஒன்றறியேன் அம்மா பணிந்து பணிந்து
மெய்ப்பட வணங்குகிறேன்.

- கே. இராமமூர்த்தி -
நன்றி : புதுகைத் தென்றல் - மார்ச் 2005


உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமைக் கழகத் திறப்பு விழாவில்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உரை.

சந்திர மண்டலத்துக்கு முதன் முதலாக ஆர்ம்ஸ்டாங்கை வைத்து ஏவுகணையை அனுப்பியது அமெரிக்கா. அந்த நாடு இரண்டாவதாக அனுப்பிய ஏவுகணையை வடிவமைத்தவர் பெயர் ஒலியவன் துரைசாமி. அவர் தமிழீழத்தைச் சார்ந்த ஒரு தமிழர்.

ஒரு பள்ளியின் விழாவில் பங்கேற்றேன். பள்ளி விழர் நிகழ்ச்சியில் பன்னிரண்டு வயது சிறுவன் மேடையேறி, பல குரல் நிகழ்ச்சியை நடத்தினான். 'டாக்' எப்படிக் குரைக்கும் தெரியுமா? என்று குரைத்துக் காட்டினான். 'க்ரோ' எப்படிக் கரையும் என்று கரைந்து காட்டினான். 'கேட்' எப்படிக் குரலெழுப்பும் என்று குரலெழுப்பிக் காட்டினான்.

கடைசியாக நான் பேசும்பொழுது, இந்தச் சிறுவன் நாயைப் போலக் குரைத்துக் காட்டினான், காக்கையைப் போலக் கரைந்து காட்டினான். பூனையைப் போல மியாவ் என்றான். கழுதையைப் போல் கத்தினான். ஆனால் தாய்மொழியான தமிழில் பேசமுடியவில்லையே. இந்தக் குறையை இவனுடைய பெற்றோர்கள்தான் போக்கவேண்டும். பல தமிழ்ப் பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய கேவலம் அல்லவா?

நன்றி : ஊற்று - மார்ச் 2005அடையாளங்களை இழந்துவரும் தமிழனே கேள்

தமிழன் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது அடையாளங்களை இழந்து வருகின்றான். நடையுடை பாவனைகளெல்லாம் மாறி வருகின்றன. அயல் மொழியிலும், அயல் நாகரிகங்களிலும், தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகின்றான்.

தமிழினத்தைத் தவிர இப்படி ஓர் இனத்தை உலகில் எந்த நாட்டிலும் காணமுடியாது.
அன்னை மொழி விடுத்து, ஆங்கில மெழியைப் படித்துத் தன் அன்னையிடமும் தந்தையிடமும் ஆங்கிலத்திலேயே பேசும் தமிழ்ப் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளும் பெருகி வருகின்றது.

நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருக்கும் குடும்பங்களிலும்கூட, இப்பொழுது திரைப்பட நடிக, நடிகையர்களின் பெயர்களையும், வடமொழிப் பெயர்களையும் குழந்தைகளுக்குச் சூட்டுகின்ற வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

இன்றைய இளைஞர்களுக்கு வேட்டி கட்டவே தெரியவில்லை. மேலை நாட்டு உடைகளை அணிவதே நாகரிகம் என்று கருதுகின்றனர். அதேபோலப் பெண்கள் புடவை கட்டுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு வருகின்றனர். சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் என்னும் உடைகளையே அணிகின்றனர்....

தமிழுணர்வு கொண்ட தமிழனே ! இந்த அவலங்களையெல்லாம் போக்க என்ன செய்யப்போகிறாய் ?
நன்றி : மீண்டும் கவிக்கொண்டல் இதழ் தலையங்கம்மாமன்னர் ஒருவர், தனது சிறைச்சாலையில் சுயநலத்தாலும், பேராசையாலும் திருட்டுக் குற்றவாளிகளாய் இருந்த இருவரை அழைத்து, "நீங்கள் திருந்தி வாழ ஒரு வாய்ப்புத் தருகிறேன். ஆனால ஒரு நிபந்தனை" என்றார்.

"என்ன?" - என்றனர் கைதிகள்.

" நகரிலுள்ள உங்கள் வீடு இங்கிருந்து 6 மைல் தூரம் இருக்கும். இங்குள்ள இந்த இரண்டு வாளிகளில் தங்கத்தையாவது, மணலையாவது நிரப்பித் தலையில் வைத்துக் கொண்டு கீழே இறக்காமல் வீட்டுக்குக் கொண்டு செல்லவேண்டும். தவறினால் உங்கள் தலை துண்டிக்கப்படும். தங்கம் வேண்டுமா? மணல் வேண்டுமா? எது வேண்டுமோ அள்ளிக்கொண்டு புறப்படுங்கள்" - என்று தங்கக் குவியலையும் மண்குவியலையும் காட்டினார் மன்னர்.

அவ்வளவுதான் ! கைதிகள் இருவரும் ஆனந்தக் கூத்தாடி ஆளுக்கொரு வாளியில் தங்கத்தை அள்ளிக் குவித்துக் கொண்டனர். ஆனால் வாளியைத் தூக்கவே முடியாமல் தவித்தனர். நான்கு சிறைக்காவலர்கள் ஒன்றுசேர்ந்து வாளியைத் தூக்கித் தலையில் வைக்க, சிறைவாசலைக்கூடக் கடக்காமல் கைதிகள் இருவரும் செத்தனர்.

மன்னன் அவர்களது தலையைத் துண்டிக்க வேண்டிய அவசியமே இன்றி தங்கம் அவர்களை நசுக்கிக் கொன்றது.

நன்றி : ஹோமியோபதி மார்ச் 2005
இதழின் தலையங்கத்தில் இதழாசிரியர் வணங்காமுடி.


வகுப்பறை - பொதுக்கழிப்பறை

வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் அரசு விருந்தினராக நம் நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். அவருக்கு நம் நாட்டின் பலவீனங்களை மறைத்து பாராட்டுக்குரியவற்றை மட்டும் காட்டி வந்தனர். அவரை ஆகாயவிமானத்திலே அழைத்துச் சென்று வேலிக்கருவைக் காடுகளைக் காட்டி, எவ்வளவு பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கிறது எங்கள் நாடு பாருங்கள் என ஏமாற்றவும் செய்தனர் நம்மவர்கள்.

அந்த வெளிநாட்டுக்காரரோ, இதெல்லாம் இருக்கட்டும் - எனக்கு இரண்டு இடங்களை மட்டும் காட்டுங்கள் போதும் என்றார்.

அவை எவை எனக்கேட்டபோது, மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறை (கட்டணமில்லாதது) ஒன்று! அதை நான் உள்ளே சென்று பார்த்தால் உங்கள் நாட்டின் இன்றைய நிலையை உணர்ந்து கொள்வேன் என்றார். நம்நாட்டுப் பொதுக் கழிப்பறையில் உள்ளே கால்வைக்க முடியுமா? அங்குபோய் சுவாசிக்க முடியுமா? சுவற்றில் கரியால் கிறுக்கப்பட்டுள்ளவற்றைப் படித்தால் நம் பண்பாடு காற்றிலே பறக்காதா? அந்த சூழல் நம் நாட்டின் அலங்கோலத்தைத் தானே காட்டும்.

மற்றொன்று அவர் பார்க்க விரும்பிய இடம் ஒரு தொடக்கப்பள்ளியின் வகுப்பறை! அதை நான் பார்த்தால் பள்ளி மற்றும் கல்விச் சூழல், கற்கும் கல்வி, கற்பிக்கும் ஆசான் திறன், மாணவனின் அறிவு வளர்ச்சி ஆகியவற்றையும் கணிப்பேன். உங்கள் நாட்டின் வருங்காலம் எப்படி அமையும் என்பதைக் கூறுவேன் என்றார். இன்றைக்கு நம் நாட்டின் கல்விநிலையச் சூழல், வளரும் இந்தியா என்றா சொல்லும்.?

ஒளவை விருது பெற்ற பாவலர் க.மீனாட்சிசுந்தரம் தனது ஏற்புரையில்....
நன்றி : ஆசிரியர் துணைவன் - மார்ச் 2005வ. உ. சிதம்பரனார்.

பன்முகத் தலைவரின் சரித்திரச் சோகம்.

உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நீங்கா இடம்பெற்ற அரசியல் உலகின் அஞ்சா நெஞ்சர் வ.உ.சிதம்பரம் சிறையில் செக்கிழுத்த ஒப்பற்ற் தலைவர் என்பதுதான் நாடறிந்த செய்தி.

ஆனால் அவர் ஒரு இலக்கிய இலக்கணப் புலமை பெற்ற படைப்பாசிரியர். உரையாசிரியர். பதிப்பாசிரியர். மொழிபெயர்ப்பாளர். பண்டைய தமிழ் மரபுக் கவிஞர். அகிலம் போற்றும் அரசியல் தலைவர் ஒரு அறிஞர் பெருமகனார். விடுதலைப் போராட்ட வீரர். இப்படிப்பட்ட பெருமை பெற்ற தலைவரின் இறுதி வாழ்க்கை கடனிலும், கண்ணீரிலும் கழிந்தது என்பதுதான் சரித்திர சோகம்.

இளமை.. வளமை..இனிமை

வ.உ.சிதம்பரம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1872 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் உலகநாதர் பரமாயி அம்மையார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் இவரோடு உடன்பிறந்தவர்கள். வீரப் பெருமாள் அண்ணாவியிடம் தொடக்கக் கல்வியைப் பயின்ற வ.உ.சி அவர்கள் கிருட்டிணன் என்பவரிடம் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். ஓட்டப்பிடாரத்தில் நடுநிலைக் கல்வியைப் பெற்று உயர்நிலைக் கல்வியை திருநெல்வேலி ம.தி.நா.உயர்நிலைப் பள்ளியிலும் தூத்துக்குடியிலும் பெற்றார். திருச்சிராப்பள்ளியில் சட்டம் பயின்று தேறினார்.

இல்லறம் ஒரு இனிய அறம்

ஓட்டப்பிடாரத்தில் வட்டார அலுவலகத்தில் எழுத்தராகத் தன் பணியினைத் தொடங்கியவர். 1895 இல் தூத்துக்குடியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் வள்ளியம்மையை மணந்தார். 1901 இல் முதல் மனைவி மறைந்ததும் மீனாட்சி அம்மையாரை மணந்து கொண்டார். வ.உ.சிக்கு உலகநாதன், ஆறுமுகம், சுப்பிரமணியம், வாலேசுவரன் ஆகிய ஆண்குழந்தைகளும், ஞானாம்பிகை, வேதவல்லி, மரகதவல்லி, ஆனந்தவல்லி ஆகிய பெண்குழந்தைகளும் உண்டு.

அரசியல் அக்னிச் சிறகு

1905 முதல் வ.உ.சி தீவிர அரசியலில் பங்கு கொண்டார். 1906 இல் தூத்துக்குடியில் ஆங்கிலேய அரசை எதிர்த்து சுதேசக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். 1907 இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் அவர் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. 1908 இல் நெலலையில் தேசாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். 1908 இல் சுப்பிரமணிய சிவா அவர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பயணித்து, விடுதலைத் தீயை வளர்க்கத் தொடர் சொற்பொழிவுகள் தந்தார். இதனால் 1908 மார்ச் 12 இல் கைது செய்யப்பட்டார். 1908 ஜூலையில் வெள்ளைக்கார அரசால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். கோவைச் சிறை மற்றும் கண்ணனுார்ச் சிறையிலும் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் வாடினார். 1912 டிசம்பர் 24 ஆம் தேதி விடுதலை பெற்றார். பின் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, திருமயிலை, பெரம்பூரில் ஏழாண்டுகள் (1912-1919) வாழ்ந்தார். அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டார். பின் கோவையில் வாழ்ந்தார். இக்காலத்தில் காங்கிரசின் மிதவாத அரசியல் தலைவர்கள் மீது கொண்ட வெறுப்பினால் தீவிர அரசிய்லிலிருந்து விலகினார். பின் 1922 இல் கோவில்பட்டியில் குடியேறி வழக்குரைஞர் பணியேற்றார். பின் 1927 இல் தீவிர அரசியலுக்குத் திரும்பினாா. பின் தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் நட்பைப் பெரிதும்வளர்த்துக் கொண்டார். தன் இறுதிக் காலத்தில் தூத்துக்குடிக்குக் குடியேறினார். 1936 நவம்பர் 18 ஆம் தேதி வ.உ.சி மரணமடைந்தார்.

வ.உ.சி - உயிலின் உள்ளடக்கம்

தூத்துக்குடி திரு.அ.செ.க.கந்தசுவாமி அவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் எழுதித் தந்த உயில்தான் அவரின் பின்னாள் சோகத்தினை நமக்குத் தெளிவாக்கும். தன் குடும்ப நிலையைப் பற்றிக் கண்ணீர் வடித்து அவர் எழுதிய உயிலின் உள்ளடக்கம் நமது கண்ணீரை வரவழைக்கும்.

சொத்து விபரங்கள்

பம்பாய் எம்பெயர் ஆஃப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ஆயிரம் ரூபாய்க்கும், ஓரியன்டல் லைப் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ஆயிரம் ரூபாய்க்கும், ஆயுள் காப்பீடு செய்திருக்கிறார். இந்த இரு கம்பெனியிலும் ரூபாய் ஐநூறு கடன் வாங்கியிருக்கிறார். கிடைக்கும் லாபம் ரூபாய் ஐநூறு அந்தக் கடன்களுக்குச் சரியாய்ப் போகும். கடைசி பிரிமியமும் கட்டவில்லை. அந்த இரு ஆயுள் காப்பீட்டுச் சான்றிதழ்களைத் தன் மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருக்கிறார். இது தவிர ஓட்டப்பிடாரத்தில் பெரிய புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும், பதினாறு மரக்கால் நஞ்சையும், அதனருகில் கிணற்றுத் தோட்டம் என்ற ஒரு நிலமும், கீழ்க்காட்டில் 13-4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும், 3-4 சங்கிலி கரிசல் புஞ்சை நிலமும் உண்டு.

இரண்டும் மக்களால் பயன்படுத்த முடியாததால் ரூ 500 க்கு விற்பனை செய்ய விரும்பியுள்ளேன். ஓட்டப்பிடாரத்தில் ஒரு காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று உள்ளது. அவற்றை மராமத்து செய்து மனைவி குடியிருந்து வரலாம். ஆத்தூர் பிரமு அம்மாள் வ.உ.சியின் மனைவிக்கு எழுதிக் கொடுத்த அடமான சொத்துப் பத்திரம் பற்றியும் சொல்லியிருக்கிறார். 200 ரூபாய் மதிப்புள்ள சட்டப்புத்தகங்களை விற்பது குறித்தும் சொல்லியிருக்கிறார்.

கடன் பற்றி தகவல்கள்

தூத்துக்குடி நேசனல் பேங்க் ஆப் லிமிடெட்டுக்கு ஐந்து மாத வீட்டுவாடகை ரூ135.
தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ரூ30
வன்னியஞ்செட்டியார் எண்ணெய் கடைக்கு சுமார் ரூ30, மற்றும் சில்லறைக் கடன் ரூ60
இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ20, சோமசுந்தரத்திற்கு ரூ16, வேதவல்லிக்கு ரூ50 - மொத்தம் ரூ86
தனது தம்பி மீனாட்சி சுந்தரத்திற்கு சாப்பாடு கிடைக்க வழி செய்ய விரும்பியிருக்கிறார்.
தனது மகள் ஆனந்தவல்லிக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டிய தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். ரூ500 க்கு நகை, திருமணப்பந்தல் செலவு, சீர் சீராட்டு செய்யும் செலவு பற்றியும் அதற்கு இன்ஸ்யூரன்ஸ் பணத்தைப் பயன்படுத்த வேண்டியும் சொல்லியிருக்கிறார்.

உயிலுக்குப்பின் நிகழ்ந்தவை

உயிலில் குறிப்பிட்ட வீட்டின் மராமத்து பின்னால் நிறைவேற்றப்படவேயில்லை. தமிழக அரசு அவ்வீட்டை விலைக்கு வாங்கி நினைவிடமாக மாற்றியது. உயிலில் குறிப்பிட்ட அவரின் தம்பி மீனாட்சி சுந்தரம் வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கேட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்.

- பேரா. மைக்கேல் -

நன்றி : மனித நேயம் மார்ச் 2005


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061